rudrateswarar

rudrateswarar

Saturday, July 11, 2015

சிவநாம மகிமை

                          ஓம் நமசிவாய

சிவநாம மகிமை

 

சிவப்பிரகாச சுவாமிகள் அருளியது 


                               கலிவிருத்தம்

 
வேதம் ஆகமம் வேறும் பலப்பல 
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின் 
சோதி காண் இருள் போலத் தொலைந்திடும் 
தீதெ லாமும் சிவசிவ வென்மினே.       

புல்ல ராயினும் போதக ராயினும் 
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு 
நல்ல வாகு நவையென்று அகற்றிய 
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே.       

நாக்கி னானும் நயனங்க ளானும் இவ் 
ஆக்கை யானும் அருஞ்செவி யானுநம் 
மூக்கி னானும் முயங்கிய தீவினை 
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.      

சாந்தி ராயணம் ஆதி தவத்தினான் 
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப் 
போந்த பாகத மேனும் பொருக்கெனத் 
தீந்து போகும் சிவசிவ வென்மினே.      

வில்லி தென்ன விளங்குந் திருநுதல் 
வல்லி பங்கன் மலரடி காணிய 
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ் 
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.      

தீய நாளொடு கோளின் செயிர்தவு 
நோய கன்றிடும் நூறெனக் கூறிய 
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் 
தீய தீருஞ் சிவசிவ வென்மினே.       

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை 
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே 
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் 
திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.      

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென 
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் 
வந்த தீவினை மாற்றுவன் ஆதலால் 
சிந்தை யோடு சிவசிவ வென்மினே.      

நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வான் 
நீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் 
நீச ரேயென் றியம்புறு நின்றுஉப 
தேச நூல்கள் சிவசிவ வென்மினே.       

எண்ணி நெஞ்சில் சிவசிவ வென்பவர் 
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும் 
உண்ண டுங்குவன் ஒண்திறல் கூற்றுவன் 
திண்ண மீது சிவசிவ வென்மினே.       


 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

இழிவுறுபுன் கருமநெறியினன் எனினும் கொலை
       வேடன் எனினும் பொல்லாப் 
பழிமருவு பதகன் எனி னும்பதித னெனினு
       மிகப் பகரா நின்ற 
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்று 
      ஒருமுறைதான் மொழியி லன்னோன் 
செழியநறு மலரடியின் றுகளன்றோ 
       எங்கள்குல தெய்வ மென்ப.        
 
 
 
 
 
           போற்றி ஓம் நமசிவாய 
 
 
              திருச்சிற்றம்பலம் 

Thursday, July 9, 2015

பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம்

                                                          ஓம் நமசிவாய



பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம்

நாம் இறைவனிடம் எவ்வளவோ விண்ணப்பங்களை வைக்கிறோம் 
ஆனால் நந்தி எம்பெருமான் இறைவனிடம் வைக்கும் விண்ணப்பமாக திருவையாற்றுப் புராணத்தில் வருவதை இங்கு அடியேன் பகிர்கிறேன். அன்பர்களும் இவ்விண்ணப்பத்தை நித்தம் இறைவனிடம் வைத்து பேறு பெற வேண்டுகிறோம் 

 
திருச்சிற்றம்பலத்துள் உறையும் சிவக்கொழுந்தே !
நின் பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு வின்ணப்பம்-அது தான்
மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம்புலன்களுக்கு ஏவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனப் பேதையர் தம்மொடு பிணக்கும்
உறுதி நல்லறம் செய்பவர் தங்களோடு உறவும்
யாதும் நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாதவத்தினர் ஒறுப்பினும் வணங்கிடும் மகிழ்வும்
ஓதும் நல்லுபதேச மெய்யுறுதியும் அன்பர்
தீது செய்யினும் சிவச்செயலெனக் கொளும் தெளிவும்
மனமும் வாக்கும் நின் அன்பர்பால் ஒருப்ப்டு செயலும்
கனவிலும் உனதன்பருக்கு அடிமையாம் கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்
தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடும் திறனும்
வாய்மையாகவே பிறர்பொருள் விழைவுறா வளனும்
ஏமுறும் பரதாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்மை நெஞ்சில் யான் எனது எனும் செருக்குறாத்துறவும்
துறக்க மீதுறையினும் நரகில் தோய்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக் கொழுந்தணி சடைப்பெரும ! இவ்வரம்
மறுத்திடாது எமக்கு நீ வழங்கல் வேண்டுமால் 

                  
           போற்றி ஓம் நமசிவாய

              திருச்சிற்றம்பலம்

Thursday, May 14, 2015

தூபம் காட்டும் போது பாடும் பாடல்கள்

                                                       ஓம் நமசிவாய

 
தூபம் காட்டும் போது பாடும் பாடல்கள்






தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருள்  அற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே

தொங்கலும் கமழ்சாந்தும் அகில்புகையும்

           தொண்டர்கொண்டு
அங்கையால் தொழுதேத்த அருச்சனைக்கு 

          அன்றருள் செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங்

         குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்

        கணபதீச்சரத்தானே

எந்தமது சிந்தைபிரியாத பெருமான்

          எனஇறைஞ்சி இமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு

         தீபமலிவாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்

         செய்யஅமர்கின்ற அழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு 

          மேவுபதி சண்பைநகரே

கோங்கு செண்பகம்  குருந்தொடு பாதிரி

            குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை

            உறைவானைப்
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் 

           பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில்

           தலைப்படும்  தவத்தோரே

பெரும்புலர் காலை மூழ்கிப் 

              பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு

            ஆர்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதி 

            யினால்  இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் 

           கடவூர்வீ ரட்ட னாரே

வாம தேவன் வளநகர் வைகலும்
காமம்  ஒன்றிலராய்க்  கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வார்  எதிர் செல்லலே

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு 

           இசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம்

           என் நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யில் பலி கொண்டுழல்வாய் உடலுள்

          உறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 

         வீரட்டா னத்துறை அம்மானே




             திருசிற்றம்பலம் 



         போற்றி ஓம்நமசிவாய

திருவிளக்கு(தீபம்) ஏற்றி வழிபடும் பாடல்கள்


           ஓம் நமசிவாய

திருவிளக்கு(தீபம்) ஏற்றி வழிபடும் பாடல்கள்



இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே


உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய்அட்டிஉயிரெனும்திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொளஇருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழல் அடி காணலாமே

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
    பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே

விளக்கினார் பெற்றஇன்பம் மெழுக்கினால்  பதிற்றியாகும்
துளக்கில் நன்மலர்தொடுத்தால் தூயவிண்ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞான மாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்து
ஊனை விளக்கி உடனிருந் தானே

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே


              திருசிற்றம்பலம் 


          போற்றி ஓம் நமசிவாய
 

Thursday, February 26, 2015

சிவபுண்ணியம் செய்ய எளிய வாய்ப்பு

                                                         ஓம் நமசிவாய

சிவபுண்ணியம் செய்ய எளிய வாய்ப்பு   

சிவநேய செல்வங்களே அஞ்செழுத்தோதி அரனை வழிபடும் அடியார் பெருமக்களே , சிந்தையில் சிவனை வழிபடும் சிவபூசை செல்வர்களே உண்மைநெறி மெய்யன்பர்களே உங்களுக்கு சிவபுண்ணியம் செய்ய ஒரு  எளிய வாய்ப்பு 

இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ ?

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்துமுந்துமினே.


விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கில் நன் மலர்தொடுத்தால் தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில் கீதஞ் சொன்னார்க்கு அடிகள் தாமருளு மாறே


ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே 

 
உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ அல்லது எங்காவது வெளி ஊரிலோ தங்களுக்கு தெரிந்த வகையில் ஒரு கால பூசை கூட  இன்றி  பராமரிப்பின்றி சிதிலமடைந்தோ விளக்கேற்றப்படாமலோ ஏதாவது சிவாலயமோ அல்லது  சிவலிங்கத் திருமேனியோ இருக்குமானால் அதை தக்க முகவரியுடன் தெரியப்படுத்தி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சிவபுண்ணியம் பெற்றுய்யுமாறு  தங்கள் திருவடி தாழ்ந்து வணங்கி கேட்டுக்கொள்கிறோம்

 
அலைபேசி எண் - 9965533644 ,9865020489

sivanadimaivelu@gmail.com 

d.surendran@gmail.com


                     போற்றி ஓம் நமசிவாய 

                          திருச்சிற்றம்பலம்