rudrateswarar

rudrateswarar

Tuesday, September 30, 2014

தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்களின் திருமுறை இசை தொடர் சொற்பொழிவுகள்


                                ஓம் நமசிவாய


தேவார இசைப் பேரறிஞர் கலைமாமணி 
சிவ .தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்களின் திருமுறை இசை தொடர் சொற்பொழிவுகள் 


1999 ஆண்டு முதல் தேவார இசைப்பேரறிஞர் கலைமாமணி தருமபுரம் சிவ .சுவாமி நாதன் அய்யா நிகழ்த்திய திருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் (103 பாகங்கள்)
(தமிழ் இசை சங்கம் சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் )  

எண்ணற்ற திருமுறைப்  பாடல்களை  பொருளுடனும் பண்ணுடனும் இசைத்து ஏராளமான விளக்கங்களுடன் அடுத்த தலைமுறை உய்வு பெறும்பொருட்டு நமக்கு அருளிய தருமபுரம் சிவ .சுவாமிநாதன் அய்யா அவர்களின் பொற்பாத மலர்களை வணங்கி இதை வெளியிடுகிறோம்  

மேற்காணும் சிவசிந்தனையின் ஒலிப் பதிவுகளை , நமது மெய்யன்பர்கள் திருவரங்கம் சிவத்திரு.ஸ்ரீதரன் ஐயா மற்றும் சென்னை சிவத்திரு. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள் சீர்படுத்தி ஒலிப்பேழைகளாக அடியார்களுக்கு அளித்து வருகிறார்கள்.

அதை இணையத்தில் நமது தோழமைக்குரிய கணினிப் பேராசிரியர் சிவ.சுரேந்திரன் அய்யா அவர்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என எல்லோரும் தேவாரத்  திருமுறை இன்பம் பெற இறையருளால் ஏற்றிக்  கொடுத்துள்ளார்கள் . அடியார் பெருமக்களுக்கு நன்றிகள் பல .

கீழ்காணும் இணைய முகவரியில் 1999 ஆம்  ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 103 பகுதிகள் பதிவேற்றப்பெற்றுள்ளது சொற்பொழிவுகளை பதிவிறக்கம் கீழ்காணும் லிங்க்கில் செய்துகொள்ளவும். 


1999 ஆம் ஆண்டு நிகழ்வுகள்https://www.mediafire.com/folder/865grj5em8x0c/1999 https://www.mediafire.com/folder/865grj5em8x0c/1999 ( 7 பாகங்கள்)
2000 ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/18d082733xzey/2000 https://www.mediafire.com/folder/18d082733xzey/2000 (12 பாகங்கள்)
2001  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/06i0psf80q2ex/2001https://www.mediafire.com/folder/06i0psf80q2ex/2001  (12 பாகங்கள்)
2002  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/tvq6w65lod30q/2002https://www.mediafire.com/folder/tvq6w65lod30q/2002 (11 பாகங்கள்)
2003  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/hp0e403hf61l8/2003https://www.mediafire.com/folder/hp0e403hf61l8/2003   ( 12 பாகங்கள்)
2004  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/82tvdio1h4bii/2004     https://www.mediafire.com/folder/82tvdio1h4bii/2004  (11 பாகங்கள்)
2005  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/2ig47a2r3bt2d/2005 https://www.mediafire.com/folder/2ig47a2r3bt2d/2005   (12 பாகங்கள்)
2006  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/nr97thg17nenh/2006 https://www.mediafire.com/folder/nr97thg17nenh/2006  (12 பாகங்கள்)
2007  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/ufnes6lwoyvdk/2007https://www.mediafire.com/folder/ufnes6lwoyvdk/2007   (11 பாகங்கள்)
2008  ஆம் ஆண்டு நிகழ்வுகள் https://www.mediafire.com/folder/mvo3stoj6cjmu/2008  https://www.mediafire.com/folder/mvo3stoj6cjmu/2008    (3 பாகங்கள்)

  
கண்ணுறும் மெய்யன்பர்கள் தேவார இன்பம் பெற்றுய்ய சிவம் அருள்புரிவாராக 
                              

                          போற்றி ஓம் நமசிவாய



                                திருச்சிற்றம்பலம்  

 

Sunday, August 10, 2014

வருங்கால வைப்பு (சேமநல ) நிதி

                                                    
                               ஓம் நமசிவாய
  

வருங்கால வைப்பு  (சேமநல )  நிதி


இவ்வுலக வாழ்வில் நாம் வாழும் சிறிது காலத்திற்கே வைப்பு நிதி சேம நலநிதி என்ற சேமிப்பு தேவைப்படுகிறது . அதுவும் ஐம்பத்தியெட்டு வயது முதிர்ந்த பின் நமக்கு அற்ப காலத்திற்கே பயன் தரும் .ஆனால் அழிவில்லாத இந்த உயிருக்கு நாம் என்ன சேம நலநிதி  (செல்வம்) ஈட்டுகிறோம். இப்புவியில் நாம் ஈட்டும் எதுவும் இவ்வுடலோடு நின்று விடகூடியது  . 

உயிருடன் கூட வருவது எது ? அப்பர் சுவாமிகள் அருளியது போல உற்றார் ஆருளரோ ? உயிர்கொண்டு போம்பொழுது குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ ? .  அப்படி இருக்க பிறவிதோறும் நமக்கு அருள்புரியும் எம்பெருமானைத் தவிர வேறு யார் துணை . யார் துணையோ அவரைத் தவிர நமக்கு வேறு யாரால் உயிருக்கு நன்மை செய்ய முடியும் ? 

சிவபெருமானின் திருவடியும் திருநாமமும் அவன் திருப்பணியும் திருமுறைகளும் திருத்தொண்டும் தரும் சிவபுண்ணியங்களே  நமக்கு சிறந்த வருங்கால சேமநல நிதியாக இருக்க முடியுமே தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது .

நம் அருளாளர் பெருமக்கள் அருளிய சில தேவார அமுதுகள் அதை நமக்கு உணர்த்துகின்றன .


1.சம்பந்தர் தேவாரம்

வைத்த நிதியே மணியே யென்று வருந்தித் தம்
சித்தம்  நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே    
2-64-5


சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களை யும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்க்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்


2.அப்பர் தேவாரம்

அச்ச மில்லைநெஞ்சே அரன் நாமங்கள்
நிச்ச லும் நினையாய் வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே
   5-60-2


நெஞ்சமே  அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக  உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்


3.சுந்தரர் தேவாரம்


பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
    பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
    நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
    மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
    புறம்ப யந்தொழப் போதுமே
    7-35-2


அறியாமை இருள் சூழ்ந்த மனமே, நாம் வாழ்கின்ற ஊரும், மணந்த மனைவியும், பெற்ற மக்களும், இன்ன பிற சுற்றத்தாரும், தேடிய பொருளும், அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினர்  அல்லர் . அதனால், என்றும் உடன் தொடர்ந்து வாரா . ஆதலின், அவர்களைப் பற்றிக் கவலை ஒழி. இனி நாம், சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும், மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்.  புறப்படு. 



ஒன்றலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு
    உடல் தளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
    இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
    கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே 
7-64-5


உள்ளமே, ஒரு பொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து, அந் நினைவின் வழியே, மெய் வருந்த, அரிய பெரிய பொருள் ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும்  என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்கு உரைத்தானும் பொய் என்பதனை நினை. மனமே, மலைபோலும் தோள்களை உடையவனும், பல கூத்துக்களில் வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளி இருக்கின்ற, நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை, சென்று அடைவாயாக. 


இனியாவது நாம் நுனி நாக்கு ருசி போல உள்ள உலக இன்பங்களை அளவோடு வைத்து உண்மையான நிலையான வருங்கால சேம நல நிதியை சேர்த்துவோம் . என்றும் இன்பம் பெருக்குவோம் .




                        போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம்

Monday, June 30, 2014

சகலகலாவல்லி மாலை

                                                       ஓம் நமசிவாய 


சகலகலாவல்லி மாலை


குமரகுருபர சுவாமிகள் அருளியது




வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1



நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2



அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3



தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4



பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5



பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6



பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7



சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8



சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9



மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10



         போற்றி ஓம் நமசிவாய 

            திருச்சிற்றம்பலம்   


Saturday, April 12, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்


                                ஓம் நமசிவாய

புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ் கூறும் நல்ல உள்ளங்களுக்கு சிவனை சிந்தையில் வைத்து நாளும் அவன் தாள் வணங்கும் அடியார் பெருமக்களுக்கும் சிவநேய செல்வங்களுக்கும் இந்த சிறியேன் சிவனடிமையின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்



                             திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே 
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
 
 
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 
 
 
வையம் நீடுக மாமழை மன்னுக 
மெய் விரும்பிய அன்பர் விளங்குக 
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக
தெய்வ வெண் திருநீறு  சிறக்கவே


வான்முகில் வழாது பெய்க
            மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க
           குறைவிலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க
           நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி
           விளங்குக உலகமெல்லாம் 



எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் பேரருள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் 


அடியேன் 
சிவனடிமை வேலுசாமி


                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்  

தொகையடியார்கள் குருபூசை


                                  ஓம் நமசிவாய

தொகையடியார்கள்  குருபூசை



பங்குனித் திங்கள் இறுதி நாளில் எட்டுத்  தொகையடியார்கள் குருபூசை  நடைபெறும் 


1.பொய்யடிமை இல்லாத புலவர் 

2.பத்தராய்  பணிவார்

3.பரமனையே பாடுவார் 

4.சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

5.திருவாரூர்ப் பிறந்தார் 

6.முப்போதும் திருமேனி தீண்டுவார் 

7.முழு நீறு பூசிய முனிவர் 

8.அப்பாலும் அடிசார்ந்தார்


மற்ற எந்த நாளில் எந்த குருபூசைக்கும் சென்று கலந்து கொள்ளாதவர்கள் கூட இந்த நாளில் சென்று வணங்க அனைத்து அடியார்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கப்பெறும் .இந்த தொகையடியாரில் அடங்காத சிவனடியார்கள் இருக்க முடியாது. எனவே மாகேச்வர பூசை எனும் அடியாரை வணங்கும் குரு பூசை பங்குனி இறுதி நாளான 13-04-2014 ஞாயிறு அன்று வருகிறது .


அது போலவே முதல் தொகையடியாரான தில்லைவாழ் அந்தணர் குருபூசை  சித்திரை முதல் நாள் நடைபெறும் அன்று சித்ரா பௌர்ணமி நாளும் கூட .இறைவனே அடியெடுத்துக் கொடுத்த இறைவனே அடியாருள் ஒருவனாகியும் இருந்த தில்லைவாழ் அந்தணர் குருபூசையிலும் கலந்து கொள்வோமாக
  

அடியாரை வணங்குவோம் 
அரனடி சேர்வோம்



                        போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்

பிரதோஷத் திருமுறை பாடல்கள்


                                 ஓம் நமசிவாய


பிரதோஷத் திருமுறை பாடல்கள்

திருமுறை -1

ஆலக் கோலத்தின்  நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்தளித்தான் தன்மையால்

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்

காலல் காய்ந்தானூர் காழிந் நகர்தானே


திருமுறை-2

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா  என்றுள்கித்
தொண்டாய்த் திரியும்  அடியார் தங்கள் துயரங்கள்
அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்டாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே 


திருமுறை -3    


ஆலநீழலுகந்த திருக்கையே ஆன
          பாடலுகந்த திருக்கையே
பாலின் நேர்மொழியாள் ஒரு பங்கனே 

          பாத மோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார் 

          மன மேவிய பூதனே
ஆலநஞ்சுஅமுதுண்டகளத்தனே 

         ஆலவாயுறை அண்டர்கள் அத்தனே

திருமுறை -4

ஆலலால் இருக்கையில்லை அருந்தவ முனிவர்க்கு அன்று
நூலலால் நொடிவதில்லை நுண்பொருள்  ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுதமில்லை ஐயன் ஐயாற னார்க்கே 


திருமுறை -5

ஆலமுண்டடு அழகாயதொர் ஆனையார்
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலமாய கொழுஞ் சுடர் ஆனையார்
காலவானை கண் டீர் கடவூரரே 


திருமுறை -6

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை
ஆலதன்கீழ்அறம்நால்வர்க்கருள்செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்

பைங்கரும்பாய்அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே



திருமுறை -7

ஆலந்தான் உகந்தமுது செய்தானை
        ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
         சிந்திப்பார்  அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
         காணக் கண் அடியேன் பெற்றவாறே 


திருமுறை -8

கோலாலமாகிக் குரைகடல்வாய்   அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான்  என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ 


திருமுறை -9 (திருவிசைப்பா)

கோலமே மேலை வானவர் கோவே
           குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
           காலகாலா காமநாசா
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
           கோயில் கொண்டாட வல்லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
           தொண்டனேன் நணுகுமா நணுகே. 


திருமுறை -9 (திருப்பல்லாண்டு )

சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
           தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டில் சிதையும் சில தேவர்
           சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு
           விடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதம் கடந்தானுக்கே
            பல்லாண்டு கூறுதுமே 


திருமுறை -10 

அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே


திருமுறை -11

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு 


திருமுறை -12

விண்ணாள்வார் அமுது உண்ண
            மிக்கபெரு விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே  

           கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்திங்கு
           யான்காண எழில் பவள
வண்ணா கண்ணளித்து அருளாய்
           என வீழ்ந்து வணங்கினார் 




                      போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம்  

Friday, April 11, 2014

மகாபிரதோஷம் 26-04-2014

      
                                            ஓம் நமசிவாய 



மகாபிரதோஷம் 26-04-2014




பிரதோஷ நேரம்  என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த நேரம்  சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை . இது சிவனை வழிபட ஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்தும் உய்வு  பெறவும் புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டும்  மகாதேவர்  நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் . உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால் அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்து வணங்கிப் பேறு பெறுகின்றன . எனவே அரிய மானுடப் பிறப்பாகிய நாமும் சிவனையும் நந்தியெம்பெருமானையும்  அபிஷேகித்து, அர்ச்சித்து ,ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்ய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்ச பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிக்கிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது  பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்

பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்

பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு சமமானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ?

செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா?


செய்யத்தகாதவை 


 

1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் .

 

2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )

 

3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  

4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக் கூடாது    

 

5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்

  

6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்

  

7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 

 

8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது கொடிமரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்கவேண்டும் 

 

9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.

எந்நேரமும் சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்

 

10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   

 

11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை அந்த நேரத்தில் செய்யகூடாது
12.ஆலயங்களில் உள்ள மூர்த்தங்களைத்  தொட்டு வணங்க கூடாது .குறிப்பாக நந்தியின் காதுகளில் சொல்வதை தவிர்க்க வேண்டும் .ஆணவமலமுள்ள அசுத்த மாயா காரியமான நம் பூத உடம்பின் எச்சில் வாயால் ஞானவடிவான நந்தியின் காதில்  வேண்டாதவற்றை கோரிக்கை என்ற பெயரில் சொல்வது கொடிய பாவசெயல் எனவே இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று .        



செய்யத்தகுந்தவை  

 

1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ள சுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.

 

2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.

 

3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 

 

4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்

 

5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 

 

6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய பரம கருணா மூர்த்தியின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய   சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 

7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்

 

8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 

 

9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  

 

10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  

 

11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        


இந்த பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில்  உலக உயிர்கள் மீது சிவபெருமான் கொண்ட கருணையின் காரணமாக இரண்டு சனி பிரதோஷங்கள் தொடர்ச்சியாக வருகின்றன . (12-04-2014 , 26-04-2014) அதை நாம் சரியாக பயன்படுத்தி நமது தீ வினைகளால் படும் அல்லல் தீர்ப்போம் சனிப்பிரதோஷ புண்ணிய வேளையில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக
                           

 

                      போற்றி ஓம் நமசிவாய 



                                                    

                          திருச்சிற்றம்பலம்

Saturday, April 5, 2014

சிவசிவ

                                                       ஓம் நமசிவாய

சிவசிவ 


திருமுறை பாராயணமோ அல்லது ஐந்தெழுத்து மந்திர ஜெபமோ நித்தமும் செய்ய இயலாதவர்கள் தினமும் கீழ்கண்ட பத்தாம் திருமுறை பாடலை 12 முறை ஓத வேண்டும். ஓதினால் என்ன கிடைக்கும் என்பது அப்பாடலிலேயே கருத்து வெளிப்படை  


சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.



இப்பாடலில் எண்ண சிவ எனும் மந்திரசொல் 9 முறை வருகிறது , 12 முறை சொல்ல 
9 X 12=108 வரும் .இதை நாள்தோறும் மிக எளிமையாக சொல்ல பாடலில் கூறியவாறு கிட்டும் என்பது திண்ணம் என்று திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் அவர்களின் அருள்வாக்கு. கிடைத்தற்கரிய இம்மானுடப்பிறவியை கடைத்தேற்றவும் 
இனி வரும் பிறவிக்கும் வருங்கால வைப்பு நிதியாகவும் இருக்கும் என்பது திண்ணம் .


                      போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம் 

திருமுறை பாராயணம்

                                                             ஓம் நமசிவாய


திருமுறை பாராயணம்


திருமுறை பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு ஒரு நடைமுறை உள்ளது அதன்படி பாராயணம் செய்தால் ஓராண்டுக்குள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி பாராயணம் செய்யமுடியும் .

வரும் புத்தாண்டில் சித்திரை முதல் தேதியில்  பாராயணம் தொடங்கி பிறப்பிலியாகிய எம்பெருமானை சேர்ந்து நாமும் அப்பேறு பெறுவோம்


1 ஆம் திருமுறை -சித்திரை முதல் தேதி 

2ஆம் திருமுறை -வைகாசி முதல் தேதி 

3ஆம் திருமுறை -ஆனி முதல் தேதி 

4ஆம் திருமுறை -ஆடி முதல் தேதி 

5ஆம் திருமுறை -ஆவணி முதல் தேதி 

6ஆம் திருமுறை -ஆவணி  20ஆம்  தேதி 

7ஆம் திருமுறை -புரட்டாசி 20ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி 

9ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி 

10ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி 

11ஆம் திருமுறை -மார்கழி முதல் தேதி 

12ஆம் திருமுறை - தை முதல் தேதி


குறித்த தேதி முதல் அடுத்த திருமுறைக் கான துவக்க தேதி வரை ஒரு திருமுறை ஓதும் காலமாகும் தினமும் சராசரியாக 5 பதிகங்கள் ஓத வேண்டும் . தொடங்கும் தினம் அனுசரித்து மொத்த பதிகங்களை கருத்தில் கொண்டு பிரித்து ஓதலாம் 

திருமந்திரமும் பெரியபுராணமும் தினம் சராசரியாக 100 பாடல்களுக்கு குறையாமல் ஓதினால் ஓராண்டில் பன்னிரு திருமுறை களையும் பாராயணம் செய்துவிடலாம் . கற்றதினால் ஆய பயன் பெறலாம் .



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம் 

 

Monday, March 24, 2014

திரு நந்திதேவர் திருக்கல்யாணம்

                                                ஓம் நமசிவாய


திரு நந்திதேவர் திருக்கல்யாணம்  



பங்குனி 24 ஆம் நாள்  07-04-14  திங்கள்கிழமை 
 

நந்தியெம்பெருமான் சைவ குரு பரம்பரைக்கு முதல் குருநாதன் ஆவார் திருக்கயிலை வாயில் காப்பாளராகவும் இருப்பவர். இவர் பூலோகத்தில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஐயாறப்பரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி, "முனிவரே, நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப் படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறுதான்' என்று கூறியது.

அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது.  அவர்தான் செப்பேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. 

செப்பேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம்தான் பூலோகத்தில் இருப்பார் என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது.

இதனை அறிந்த செப்பேஸ்வரர், திருவையாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும் தவம் புரிந்தார். காலம் கடந்தது. செப்பேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான், "என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக வாழ்வாய்' என்று அருளியதுடன், செப்பேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் திரும்பிய செப்பேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் சிலாத முனிவர் .
வசிஷ்ட முனிவரின் பேத்தியும்  வியாக்ர பாத முனிவருடைய மகளும்  உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயசாம்பிகையை   தன் மகனாகிய செப்பேஸ்வரருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.

பிறகு, செப்பேஸ்வரர் ஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. சிலாத முனிவர் பூமியை உழும்போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்' ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

அன்று மாலை திருவையாற்றில் நந்திக்கு பட்டாபி ஷேகம் நடைபெறும். மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயசாம்பிகை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். அப்போது அந்த ஊரே வாழைமரம், தோரணங்கள்  கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும்.சப்த தானங்களில் இருந்து பூக்களும் பழங்களும் பட்சணங்களும் உணவு வகைகளும்  சீர் வரிசைகளும் கொண்டு செல்லப்பட்டது . 

திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார்கள். நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.

இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்கு செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை, போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்.

திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.இந்த விழாவின் தொடர்ச்சி தான் திருவையாறு சப்த ஸ்தான விழா. திருவையாற்று ஐயாறப்பர், நந்தி சகிதமாக திருப்பழனம், திருச்சோற்றுத்துறை,திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.

திருமணத்தடை உள்ளவர்கள் நந்தி கல்யாணத்தை தரிசித்தால், தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. 


வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி 
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி 
அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும் 
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்



                                          போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம் 

பழமொழிப் பதிகம்

                                                         ஓம் நமசிவாய


பழமொழிப் பதிகம்


நான்காம் திருமுறையில் ஐந்தாவது பதிகமாக இந்த பதிகம் அமைந்துள்ளது . திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய இந்த பதிகத்தில் பாடல்  தோறும் ஒரு பழமொழி வைத்து அருளியுள்ளார் .நாவுக்கரசு என்று இறைவரால் பெயர் சூட்டப்பெற்றது எத்துணை சால பொருத்தமானது 

                            
                           திருச்சிற்றம்பலம் 


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த 
              மேனியான் தாள்தொ ழாதே
உய்யலாம்  மென்றெண்ணி உறிதூக்கி 

              உழிதந்தென் உள்ளம்விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ 

              மயில் ஆலும் ஆரூ ரரைக்
கையினால் தொழாதுஒழிந்து 
கனியிருக்கக்    
              காய்கவர்ந்தகள்வ னேனே.  


என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு 
           என்னையோர்  உருவம்  ஆக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு  

           என்னுள்ளம்  கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு  

           அருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் 

            காக்கைப்பின் போன வாறே.   


பெருகுவித்துஎன்பாவத்தைப்பண்டெலாம்       
             குண்டர்கள்தம்  சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தி னுள்ளிருந்த                     கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு                      
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறம் இருக்க                  
றம்விலைக்குக் கொண்ட வாறே. 


குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார்
           நகைநாணாது உழிதர் வேனைப் 
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில் 
           தெளித்துத்தன் பாதம்காட்டித் 
தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல் 
            அருள்செய்யும் ஆரூரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீரால் 
             பாவைசெயப் பாவித் தேனே  


துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் 
           சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரி தந்து ஈங்கு  இருகையேற்று  

           இடஉண்ட ஏழை யேனான்
பொன்னாகத்து  அடியேனைப் புகப்பெய்து 

            பொருட்  படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு  

             ஆதனாய்  அகப்பட் டேனே. 


பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொரு 
             தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்துஎன் உ ள்ளத்தின்  

             உள்ளிருந்து அங்கு  உறுதி காட்டி
அப்போதைக்கு  அப்போதும்  அடியவர்கட்கு  

             ஆரமுதாம்  ஆரூ ரரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் 

              மலடு கறந்து  எய்த்த வாறே. 


கதியொன்றும்  அறியாதே கண்ணழலத் 
          தலைபறித்துக் கையில்  உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண 

          நகைநாணாது  உழிதர் வேற்கு
மதிதந்த ஆரூரில் வார்தேனை 

          வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்க 

           மின்மினித்தீக் காய்ந்த வாறே.  


ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்  
           ஓரம்பின் வாயில் வீழக்
கட்டானைக் காமனையும்  காலனையும்  

           கண்ணினெடு காலின் வீழ
அட்டானை  ஆரூரில்  அம்மானை 

           ஆர்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க 

           அவஞ்செய்து தருக்கி னேனே. 


மறுத்தான் ஓர் வல்லரக்கன்  ஈரைந்து 
           முடியினொடு தோளும்  தாளும்
இறுத்தானை  எழின்முளரித் தவிசின்மிசை

           இருந்தான்றன் தலையில்  ஒன்றை
அறுத்தானை ஆரூரில்  அம்மானை 

           ஆலாலம்  உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க 

           இரும்புகடித்து எய்த்த வாறே.  


                            திருச்சிற்றம்பலம்


                      போற்றி ஓம் நமசிவாய