rudrateswarar

rudrateswarar

Tuesday, April 30, 2013

பிறவி என்னும் பிணி

                                               ஓம் நமசிவாய

பிறவி என்னும் பிணி 

பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய் வியாதி என்ற பொருள் சொல்வோம் ஆனால் இலக்கியத்தில் உள்ள பிணி என்பதன் 
பொருள் வேறு. எப்படி?

வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை ஆனால் பிணி என்பது தீராதது மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு தீரும் ஆனால் திரும்ப குறித்த காலத்தில் உடனே திரும்ப வரும் அது என்ன?
ஒன்று பிறப்பு இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணிஎன்றேகூறுகிறது  பசிப்பிணி தீர்க்கஅட்சயபாத்திரம்பெற்றாள் மணிமேகலை  என்பது இலக்கியம்.பசியானது உணவு உண்டதும் போய்விடும் ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும்  அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே ஏனெனில்இப்போது இருப்போம் இறப்போம். மீண்டும் பிறப்போம் மீண்டும் இறப்போம் அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர் 
திரும்ப திரும்ப வரும் இந்த பிறவிப்பிணியை தீர்க்க ஐந்தெழுத்து மந்திரமும் திருநீறுமே மருந்தாகும் கூன்பாண்டியனின் வெப்புநோய்   மட்டுமல்ல கூன் நிமிர்த்தியதும் இந்த அருமருந்தாம் திருநீறே .பல சிவாலயங்களில் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து என்று திருநீற்றுக்கோயில் வைத்துள்ளார்கள்   


பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்


என்று சம்பந்தர் 3ஆம் திருமுறையிலும்  

 மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே
 
8ஆம் திருமுறை நீத்தல்விண்ணப்பம் பாடல் 18


தாதாய் மூவே ழுலகுக்குந்
      தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே


8ஆம் திருமுறை புணர்ச்சிப்பத்து பாடல் 9 

என்று மாணிக்கவாசக சுவாமிகள் 8ஆம் திருமுறையிலும் பாடியுள்ளார்கள். ஆகவே தீராத இந்த பிணியை தீர்க்கும் அருமருந்தை  நாம்  வருமுன் எடுத்துக் கொண்டு  காப்போம்



                         போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்  



திருநாவுக்கரசு நாயனார் புராணம் -2

                                ஓம் நமசிவாய

திருநாவுக்கரசுநாயனார் புராணம்-2

நீற்றறையிலிடுதல்
பல்லவன் பாயுடுத்த பாவிகளைபார்த்து அவனை என் செய்வோம் சொல்லும் என்றான் 
அறம் துறந்த அவர்கள் நீற்றறையில் இடுமாறு கூறினார் அவ்வண்ணம் மன்னனின்
ஆணைப்படி நீற்றறையின் உள்ளே ஆளுடைய அரசை உள்ளே வைத்து காவல் புரிந்தனர் . அவரோ அம்பலத்தில் ஆடும் திருவடி நிழலை
தலைமேல் கொண்டு ஈசனடியார்க்கு இடர் 
உளதோ?என்று கருணைக்கடலாகிய  கண்ணுதற் கடவுளையே தொழுதிருந்தார், அதனால் அந்த நீற்றறை இளவேனில் பருவத்தில் தென்றல் வீச, தடாகத்தின் குளிர்ச்சி, யாழின் கானம் போல குளிர்ந்தது
அப்போது அடிகள் அருளிய பதிகம் 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏழு நாட்கள் கழித்து நீற்றறையை திறந்து 
ஊனமின்றி இருந்த திருநாவுக்கரசை பார்த்து
அதிசயித்தனர் 

நஞ்சூட்டுதல்  
அரசன்பால் அணுகி இவன் நமது சமயத்தில் 
இருந்தபோது அறிந்துகொண்ட சாதகத்தால் 
உயிர்தப்பினான்.எனவேவிடம்ஊட்டிகொல்ல
வேண்டும் என்றனர் அரசன் அனுமதி தந்தான் 
பாவிகள் நஞ்சு கலந்த பாலன்னத்தை உண்ண
கொடுத்தார்கள் ஆலமுண்ட நீலகண்டப் பெருமானுடைய அடியார்களுக்கு விடம் அமுதாவதில் என்ன ஆச்சரியம்?

மதயானையை ஏவுதல் 

நஞ்சு அமுதமானதை கண்ட அமணர்கள் அஞ்சி இவன் பிழைத்தால் நமக்கெல்லாம் 
இறுதியே என்று கருதி அரசனிடம் சென்று 
நம் சமயத்தில் கற்றுக்கொண்ட விடந்தீர்க்கும் மந்திரத்தினால்தப்பித்துகொண்டான் அவனை
மதமேறிய யானையை விட்டுக்கொல்வோம்
என்றார்கள் .மன்னனும் அனுமதிக்க கூற்று வனைப்போல யானை சென்றது அதனை திருநாவுக்கரசரை நோக்கி சமணர்கள் செலுத்தினார்கள்.அதுகண்ட அடிகள் ஆனையுரித்த அன்னலை நினைத்து 

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பாட அந்த மதயானை யாவரும் காண அவரை 
வலம் வந்து வீழ்ந்து வணங்கியது அதுகண்ட 
சமணர்கள் மீண்டும் அவர்மீது ஏவ அது பாகன்களை கொன்று சமணர்களை தாக்கியது 

கடலிடை விடுத்தல்  
மன்னனிடம் சென்று நமது சமயத்தில் கற்றுக் கொண்ட முட்டி நிலையினால் நாம் ஏவிய 
யானயைக்கொண்டே நமது கீர்த்தியை அழித்து விட்டான் இனி கல்லில் கட்டி கடலில் வீழ்த்துதல் வேண்டும் என்றனர் மதிகெட்ட 
மன்னனும் அதற்கிசைந்தான் ஏவலரும் அவ்வாறே கல்லைக்கட்டி கொண்டுபோய் கடலில் விட்டு வந்தார்கள் .அடிகளோ என்ன 
செய்தாலும் எந்தையை ஏத்துவேன் என்று 
நமசிவாயப்பதிகம் பாடினார் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

அந்தப்பெருங்கல்லே தெப்பமாக அதன் மீது 
வீற்றிருந்தருளினார் பிறவிப்பெருங்கடலை 
கடக்கவைக்கும் ஐந்தெழுத்து இந்த ஒரு கடலைக்கடக்கவைப்பதில்ஆச்சர்யம்இல்லை
வருணன் வாகீசரை திருப்பாதிரிபுலியூரில் 
கரைசேர்த்தான் அங்குள்ள அடியார்கள் அவரை போற்றி ஹரஹர என்று முழக்கம் இட்டார்கள் 

பல்லவன் சரணாகுதல் 
சமணர் கூற்று பொய் என்று பழவினை பாசம் முறிய சைவசமயம் சார திருநாவுக்கரசு சுவாமிகளை தொழுது நின்றான் சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் என்ற திருக்கோவிலை கட்டினான் 

இலச்சினை பெறுதல் 
 மனம் வாக்கு காயம் என்று முக்கரணங்களாலும் இறைவனை வழிபட்டு வந்தாலும் அவருக்கு சமண சமயத்தில் தொடக்கத்தில் இருந்த உடலுடன் வாழ விருப்பம் இல்லை தூங்கானைமாடம் எனும் திருக்கோவிலில் இறைவனிடம் இந்த உடலுடன் உயிர் வாழமாட்டேன் வாழ்வதானால் இலச்சினை இட்டு அருளுவீர் என்று வேண்டி பொன்னார் திருவடிக் கொன்றுண்டு எனத்தொடங்கும் செந்தமிழ் பதிகம் பாடினார் பரம கருணாநிதியாகிய எம்பெருமான் திருவருளினால் ஒரு சிவபூதம் யாரும் அறியாவண்ணம் திருநாவுக்கரச ருடைய திருத்தோள்களில் சூல முத்திரையும் இடப முத்திரையும் இட்டு அகன்றது

திருஞானசம்பந்தர் சந்திப்பு 
சீர்காழியில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டதையும் உண்டவுடன் இவன் எம்மான் என்று வண்டமிழ்ப் பாமாலை பாடியதும் அடியார்கூற அவரைக்காணும் ஆவல் பெருகி சீர்காழி புறப்பட்டார் அவர் வருகை அறிந்து எதிர் கொண்டு அழைக்க வந்த சம்பந்தரைப் பணிந்தார் பிள்ளையாரும் பணிந்த அவர்கரம் பற்றி தாமும் பணிந்து அப்பரே என்று அழைத்தார்.அரசு அடியேன் என்றார் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.ஏழும் 
எழுபதும் சந்தித்துக்கொண்டது அறிய காட்சி 

திருவடி தீட்சை 
 பட்டீச்சரம் அருகில் உமாதேவியார் பூசித்த 
திருசத்திமுற்றம் மேவிய சிவனை உள்ளங்குழைந்து எம்பெருமானே கூற்றுவன் என் உயிரைப்பற்றுமுன் உமது அழகிய அடிமலரை அடியேன் தலைமேல் வைத்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்து பாட 
நல்லூருக்கு வா என்று பணித்தருளினார் 
திருநல்லூர் சென்று மனமுருகி வணங்கினார் சிவபெருமான் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று சென்னியின் மேல் பாதமலர் சூட்டியருளினார் .தரித்திரர்க்கு தனம் கிடைத்தாற் போல திருவருளை நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து திருப்பதிகம் பாடினார் 


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
             நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
            செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
            இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
             நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
                                              

                                                             தொடர்ச்சி 3இல் 


                        போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 
         

Monday, April 29, 2013

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -1

                                    ஓம் நமசிவாய


திருநாவுக்கரசுநாயனார்புராணம் -1

                       "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
                       திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம்          -திருவாமூர் 
முக்தி தலம்               -திருப்புகலூர் 
குருபூசை திருநட்சத்திரம் -சித்திரை சதயம்
04-05-2013 சனிக்கிழமை 


திருமுனைப்பாடி நாடு வளம் பொருந்திய நாடு  சிவபெருமானின் உண்மை நெறியறத்தை உலகத்திற்கு அருளும் பொருட்டு அப்பர் சுவாமிகளும்  சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருவவதாரஞ் செய்த நாடு 
திருமுனைப்பாடி நாடு அது ஒன்றே போதும் அதன்  பெருமைக்கு 

அந்நாட்டிலேதிருவாமூர் எனும் ஊரிலே வேளாண்குடியில்  புகழனார் மாதினியார் தம்பதிகளுக்குமுதலில் திலகவதி 
என்றபெண் மகவும்  பிறகு மருள்நீக்கியார் என்ற
ஆண்மகவும் பிறந்தனர் 

திலகவதியாருக்குமணமுடிக்க கலிப்பகையார் என்ற 
வேளாண் குலத்தலைவருக்கு நிச்சயித்தனர்
திருமணம் முடிக்க  கருதிய காலத்தில் அந்நிய படையெடுப்பின் காரணமாக போர் செய்ய கலிப்பகையார் 
சென்றார் புகழனாரும்நோய்வாய்ப்பட்டு விண்ணுலகம் 
சேர்ந்தார் .மாதினியாரும் கணவரைத்தொடர்ந்து
விண்ணுலகம் எய்தினார்போருக்குசென்ற கலிப்பகையார் 
வீர சுவர்க்கம் எய்தினார் அது கேட்டதிலகவதியார்தாமும் 
உயிர் விட துணிந்தார் தம்பியார் மருள்நீக்கியார் 
தடுத்தார்சுற்றம் யாரும் இல்லாத தம்பியின் நிலை கண்டு 
மனம் மாறினார்அணிகலன்தவிர்த்து வெண்புடவையுடன் 
எல்லா உயிர்களுக்கும் கருணை புரிந்து சிவசிந்தையுடன் வாழ்ந்தார் 

மருள்நீக்கியார் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சோகங்களால் பாதிக்கப்பட்டார் நிலையாமையை உணர்ந்தார் அறங்கள் புரிந்தார்
இம்மாயவாழ்க்கையை வெறுத்தார் கொல்லாமைக்குள் 
மறைந்துறையும் சமண சமயஞ்சார்ந்தார் பாடலிபுத்திரம் சென்று சமணப்பள்ளியில் சேர்ந்தார் 
அங்குசமணக்கலைகள் பயின்று புத்தர்களை வாதில் 
வென்று தருமசேனர் என்ற தலைமை குருவானார் 

தம்பியின்செயல்கண்டு மனம் வருந்திய திலகவதியார் 
சுற்றம் துறந்து திருவதிகைவீரட்டம் சென்று திருமடம் 
அமைத்து சிவசின்னம் அணிந்து திருத்தொண்டு
புரிந்து வந்தார் நாள்தோறும் இறைவனிடம் தம்பியை 
பரசமய படுகுழியில் இருந்து மீட்டுத்தர விண்ணப்பம் செய்தார் இறைவரும்அவரின் வேண்டுதலுக்கு கருணை
கொண்டு முற்பிறவியில் செய்த நல்ல தவத்தில் சிறிது வழுவிய  தொண்டரையாளும் பொருட்டு  மருள்நீக்கியாருக்கு  சூலை நோய் அருளினார்
சூலையின் கொடுமை தாங்கமாட்டாமல் தவித்தார். 
சமணர்கள் தங்களின் மந்திரதந்திரம் எல்லாம் செய்தும்  முடியாமல் கைவிட்டார்கள்.மனந்தளர்ந்தமருள்நீக்கியார்  தமக்கையின் நினைவு வந்து சமையல்காரன்
மூலம்  தன் நிலையை சொல்லி அனுப்பினார்  திலகவதியாரோ தான்அங்கு சமணப்பள்ளிக்கு வர இயலாது  என்று சமையல்காரனிடம் சொல்லிஅனுப்பினார்  அது கேட்ட மருள்நீக்கியார் திருவருள் கூடும்காலம் 
எய்தியதால் புன்சமயதொடர்பு விடுத்து தமக்கையார் 
தாள்மலர் சாரத்துணிந்தார் .அவ்வெண்ணம் தோன்றியதுமே சிறிது அயர்வு நீங்கியது உடுத்த 
பாயையும் குண்டிகையையும் பீலியையும் ஒழித்து 
வெண் ஆடையுடித்தி தனது அந்தரங்கமானவேலைக்காரன்  தோள் மீது கையை ஊன்றி சமண குண்டர்கள்   அறியாவண்ணம் இரவில் புறப்பட்டு திருவதிகை அடைந்து 
தமக்கையார் திருமடஞ் சேர்ந்து தன் துன்பம் நீக்கியருள 
விண்ணப்பம் செய்தார் 

திலகவதியார்கருணைகொண்டு சிவனருளைபோற்றி 
பணிந்தால் பாவம் தீரும் என்று திருநீற்றை பஞ்சாக்கரம் 
ஓதியளித்தார்அகத்திருளும் புறத்திருளும் நீங்கும் அந்நேரம் 
திருப்பள்ளிஎழுச்சி பாடும் பொழுது புரமெரித்தபுண்ணியரது
திருக்கோயிலை வலம் வந்து வணங்கினார் .
தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள்சாற்றும் உணர்வு  அவருக்கு வந்தது உடனே திருவாய் மலர்ந்தருளி

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன்அதிகைக்கெடிலவீரட்டானத்துறைஅம்மானே
                                

என்றுதிருப்பதிகம்  பாடி திருவருளில் மூழ்கினார் .
அப்போது இனி திருநாவுக்கரசு என்ற நாமத்தால்  ஏழுலகும் ஏத்தப்பெறுவாய் என்று வானில்  ஓர் அமிர்த ஒலி திருவருளால் எழுந்தது

சூலைவலிவிரைந்து நீங்கியது திருநாவுக்கரசர் திருநீறும் 
கண்டிகையும் புனைந்து நெஞ்சு அஞ்செழுத்து நினைக்கவும் வாக்கு தமிழ்ப்பதிகம்  பாடவும் காயம்  உழவாரப்பணி செய்யவும் முக்கரணங்களாலும் சிவத்தொண்டு செய்தார் திலகவதியார் திருவருளை 
நினைந்து தமது தவம் பலித்தது என்று மனம்  மகிழ்ந்து சிவமூர்த்தியை தொழுதார்

சமணர் கொடுமை       

திருநாவுக்கரசர்சிவநெறி சார்ந்து திருவருள் பெற்று இடர் 
நீங்கிய செய்தி சமணர்கள்அறிந்து புன்மையே புரியும் 
அவர்கள் மனம் பொறுக்கவில்லை அனைவரும் ஒன்று கூடி அரசனிடம் சென்று தருமசேனர் தமது 
தமக்கையார் சைவ சமயத்தில் இருப்பதால் தாமும் அதைசார 
வேண்டும் என்று கருதி சூலைவலி என்றும் அது  எதனாலும் தீரவில்லை என்றும் பொய்யாக நடித்து நம் சமயம் விடுத்து சைவசமயம் சார்ந்து தெய்வநிந்தை 
புரிந்தார் என்று கூறினார்கள்  நன்நெறி விலகிய பல்லவமன்னன் இவர்கள் கூறிய  தீயவனை தண்டிக்கவேண்டும்உடனே அவனை இங்கு 
கொண்டுவாரும் என்று அமைச்சருக்கு ஆணையிட்டான்.
அமைச்சர் சென்று மன்னன் ஆணையை கூறஅஞ்சுதல்  இல்லா அடிகள் 

 
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
               நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
                இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
                சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
                கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
என்று பாடினார்.அமைச்சர்கள் அவர் அடிமலர் தொழுது 
கருணைகூர்ந்து எம்முடன் வரவேண்டும் என்று  வேண்டினார்கள் .ஆளுடைய அரசு  இங்குவரும்  வினைகளுக்கு எம்பிரான் துணையுள்ளான் என்று 
அவர்களுடன் சென்றார்
                                                                                          தொடர்ச்சி 2இல்
                                  போற்றி ஓம் நமசிவாய 
                                        திருச்சிற்றம்பலம்       

அர்ச்சுனனே கண்ணப்பர்

                                       ஓம் நமசிவாய


அர்ச்சுனனே  கண்ணப்பர்

கண்ணப்பரின் முற்பிறப்பு அர்ச்சுனர் .அர்ச்சுனர் பெரிய சிவனடியார் சிவத்தல யாத்திரை புரிந்ததும் சிவபெருமானைக் குறித்து மாதவம் புரிந்ததும் இதற்கு சான்று
பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு இறந்த இரவு மகன் மாண்ட காரணமாக வருந்தி சயத்திரதனை கொள்ள சபதம் செய்து கண்ணனுடன் கயிலை போகத்துணிந்து செல்லும்போது சிவபூசை  செய்யாமல் உணவு உட்கொள்ளேன் என்றதும் இதற்கு சான்றுகளாகும் 

பாசுபதம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்தார் அர்ச்சுனர் 
அப்போது ஒரு பன்றியின் காரணமாக இருவருக்கும் சண்டை மூண்டது   அப்போது சிவபெருமானை  வேடன் என்று இகழ்ச்சியாக அர்ச்சுனர் ஏசுகிறார் 
அப்போது போரை நிறைவுறச் செய்ய சிவபெருமான் திருவுருக்காட்டி அருளி என்ன வரம் வேண்டும் 
என்று கேட்கிறார் அப்போது பாசுபதம் வேண்டித் தவம் செய்தாராகிலும் இறைவரை நேரில் கண்டதும் போருக்குரிய கணையை வேண்டாமல் 
இடையறாத இன்பஅன்பைத் தருமாறு வேண்டினார்.
பரமேஸ்வரன் தனஞ்செயனெ நீ முதலில் 
விரும்பிய பாசுபதத்தை இப்போது பெற்றுக்கொள் ,
இப்போது விரும்பிய அன்பையும் அதனால் வரும்  முக்தியையும் மறுபிறப்பில் பெறுவாய், நம்மை  வேடன் என்று குலங்குறித்து இகழ்ந்தமையினால் நீ 
வேடனாகப்பிறப்பாய் இன்று பன்றி காரணமாக போர் நடந்தது அன்று பன்றி காரணமாக நீ வந்து  காளத்தியில் எம்மைகண்டு அருள்பெறுவாய் என்று 
நல்வரம் நல்கி அருள் புரிந்தார்

மேற்சொன்னபுராணத்தை காளத்தி புராணம் கூறுகிறது 
அதுமட்டுமல்ல நக்கீர தேவர் தனது கயிலை பாதி  காளத்தி பாதி அந்தாதியில் பாடியருளியுள்ளார்  கல்லாடதேவ நாயனாரும் கண்ணப்பரைப் பற்றி
பாடியுள்ளார் இவ்விரண்டும் பதினோராம் திருமுறையில் இடம் 
பெற்றுள்ளன மேலும் நக்கீரதேவர் திருக்கண்ணப்பதேவ மறம் என்றே தனி நூலே 
பாடியிருக்கின்றார் 


                              போற்றி ஓம் நமசிவாய 


                                    திருச்சிற்றம்பலம்
        

 

Thursday, April 18, 2013

திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

                                       ஓம் நமசிவாய


திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்
                                                  புராணம்

  "திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்"


குரு பூசை திருநட்சத்திரம்-சித்திரை சுவாதி 
அவதார தலம்-திருக்கச்சி எனும் காஞ்சி 
முக்தி தலம்    -திருக்கச்சி எனும் காஞ்சி

26-04-2013-வெள்ளிக்கிழமை 

அகில உலகத்தையும் ஈன்ற  அன்னை உமாதேவியார் இறைவனை வழிபடும் பொருட்டு தன்னிடத்தே வந்து தவம் செய்ய மாதவம் செய்த நாடு தொண்டை வளநாடு.குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என ஐவகை நிலங்களையும்  தன்னுள்ளடக்கிய எழில் கொஞ்சும் சிவமயமான நன்னாடு .இப்படி எல்லா வளங்களும் பொருந்திய தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சிமாநகரம் எனும் புண்ணிய பூமி 

அந்த புண்ணிய பூமியாகிய காஞ்சீபுரத்தில் வாழ்ந்தவர் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் .அவர் ஏகாலியர் குலத்தில் அவதரித்தவர் .அன்பு நிரம்பிய மனத்தினர் .சிவநெறி நின்ற சீலர் .ஆலமுண்ட அண்ணலின் திருவடிகளில் வழிவழியாக தொண்டு புரிபவர் .அடக்கமும் வாய்மையும் தூய்மையும் உடையவர் .மனத்தினால் இறைவருடைய இணையடித் தாமரைகளை இடையறாது சிந்தித்து ஐந்தெழுத்தை நினைந்து உருகுவார் .வாக்கினால் சிவமூர்த்தியின் திருநாமம் கூறி துதிப்பார் . காயத்தினால் (உடல்) இறைவரை வணங்கி அரனாருக்கும் அரனாரது அடியார்க்கும் தொண்டு புரிவார் 

புண்ணிய உருவங்களாகிய திருதொண்டர்களது குறிப்பறிந்து தொண்டு செய்யும் தன்மையில் உறுதி கொண்டவராக ஒழுகியபடியினால் இவர் 
திருக்குறிப்புத் தொண்டர் என்னும் திருநாமம் பெற்றார் 

இவர் பிறப்பால் ஏகாலியர் என்றாலும் ஊரவர் துணி துவைக்கும் பொது வண்ணார் என்று கூற இயலாது . திருத் தொண்டர்களது ஆடைகளைக் குறிப்பறிந்து துவைத்துக் கொடுக்கும் சிறப்புடையவர் . சிவனடியார்களது உடை அழுக்கை துவைத்து  அகற்றுவதுபோல தன்னுடைய பழவினைகளையும் 
மும்மலங்களையும் பிறவிப்பிணியின் அழுக்கையும் 
அகற்றுவாராயினர் .இவருடைய ஒப்பிலாத அன்பை
அளக்க அன்று எம்பெருமான் திருஉள்ளம் கொண்டார் 

குளிர் மிகுந்தகாலத்தில் வறியவர் போல் 
அழுக்கடைந்த கந்தையுடன் மாலறியா மலரடிகள்  மண் மேல் பட நடந்து திருத்தொண்டர்பால்  வந்தருளினார் அவர் மேனி முழுதும் திருநீறு ஒளி 
செய்ய எழுந்தருளி வரும் அவரை திருக்குறிப்புத்
தொண்டர் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டு 
எதிர் சென்று மண்மீது விழுந்து பணிந்து எழுந்து 
எந்தையே தாங்கள்இங்கு எழுந்தருள அடியேன்  
செய்த தவமோ?என் குலம் செய்த தவமோ?என் முன்னோர் செய்த முடிவிலாத்தவமோ? நானே தவமுடையேன் பிறவிபெருங்கடலினின்று 
கரையேறினேன் என்று கூறி மேலும் தாங்கள் 
திருமேனி இளைத்திருக்கின்றீர் காரணம் யாதோ? கந்தையினை தந்தருளும் கசக்கி தருவேன் என்றார்
இறைவர்  அன்பனே இக்கந்தை மிகவும் அழுக்கேறி 
உடுக்க முடியாத நிலையில் உள்ளது ஆனால் 
குளிரின் கொடுமையால் இதைவிட  முடியவில்லை  மேற்கே சூரியன் மறையும் 
முன் இதனைத்தருவீராகில் கொண்டுபோய் 
தோய்த்து வாரும் என்றார்.அவ்வாறே செய்வதாக 
கூறி கந்தையை  பெற்றுக்கொண்டு போய் குளத்தில் 
தோய்த்து புழுங்க வைத்தார் 
மீண்டும் துவைக்க முயலும்போது கண்ணுதற் 
கடவுளின் கருணையினால் மழைவிடாமல்  பெய்தது . நாயனார் மனம் உடைந்தார் வருந்தினார். 
குளிரால் வருந்தும் தூய முனிவரிடத்தில் என் 
குற்றேவல் தவறிவிட்டதே என்று மயங்கி 
வீழ்ந்தார் .இறைவரிடம் வாக்கு கொடுத்த கால 
எல்லை கடந்தது 

சிறியேன் இப்படி நிகழும் என்று அறியேன் .
முன்னமே துணியை தோய்த்து வீட்டில்
கொண்டுபோய் உலர்த்தி இருக்கவேண்டும் சிறந்த 
தவமுனிவரது திருமேனி குளிரால்துன்புறுமாறு 
தீங்கு இழைத்த எனக்கு இனி வேறு என்ன செய்ய  இருக்கின்றது? செய்யதக்க ஒன்று இதுவே  கந்தையைத் தோய்ப்பதற்கு ஏற்றுகின்ற பாறையின்மீது தலை சிதறுமாறு மோதுவேன் 
என்று துணிந்தார் 
பாறையின்மீதுவேகமாக தமது தலையை 
புடைக்கப் புகுந்த போது பாறைக்கு அருகில் 
இறைவருடைய திருக்கரம் தோன்றி அவருடைய 
தலையை  தாங்கி கொண்டது 

நாயனாரின் உண்மையான அன்புக்கு விடைமேல் 
உமையம்மையுடன் காட்சி தந்தருளினார்  முக்கண்பரமன் .இறைவர் நாயனாரை நோக்கி  உனது அன்பின் திறத்தை மூவுலமும் 
அறியச்செய்தோம் நீ நமது சிவலோகத்தில் 
நம்முடன் பிரியாது இருந்து இன்புறுவாய் என்று திருவாய்  மொழிந்தருளினார்

இப்படியும் இறைவர்பால்ஒருவர்  அன்பு  வைக்கமுடியுமா? என்று நினைக்கும் அளவுக்கு அன்பு கொண்டிருந்தார் திருக்குறிப்புத்தொண்டர் 
நாயனார் அந்த மாறா அன்பு அவருக்கு இறைவரை 
நீங்காத பேறு  பெற்றுக்கொடுத்தது



                                 திருச்சிற்றம்பலம்



                         போற்றி ஓம் நமசிவாய     

    `
  

                         





 


Tuesday, April 16, 2013

இசை ஞானியார் புராணம்

                                                             ஓம் நமசிவாய 



இசைஞானியார் புராணம்



"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"    


குருபூசை திருநட்சத்திரம் -சித்திரைமாதம்-சித்திரை 

அவதார தலம் -ஆரூர் கமலாபுரம் 
முக்தி தலம்     -திருநாவலூர் 
25-04-2013-வியாழன்


திருநாவலூரிலே ஆதிசைவர் மரபில் உதித்த சடையனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக  இருந்தவர் இசைஞானி அம்மையார் அரும்பெரும் தவம் புரிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் புதல்வராகப் பெற்றார் .சிவபக்தியும் பதிபக்தியும் 
பூண்டு வாழ்ந்து முடிவில் முழுமுதற் கடவுளாம் பரமேஸ்வரனுடைய பதமலர் சேர்ந்து பரம சுகமுற்றார்

"ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார்" என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்  குற்றமில்லாத கற்புடைய இவருடைய புண்ணியத்தின் திரட்சியே ஓர் உருவாக திரண்டு வந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார் 
 உலகக் கேடுகளில் முதன்மையானது தீய மைந்தனை பெறுதல், நன்மைகளுள் முதன்மையானது தூய மைந்தனைப் பெறுதல் . ஆகவே திருத்தொண்டத்தொகை பாடி உலகம் உய்வித்த உத்தமப்புதல்வரை ஈன்ற அந்த  உத்தமியார் பெருமையை உரைக்கமுடியுமோ?அது எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காதது அதனை சேக்கிழார் பெருமான் இவ்வாறுகூறுகிறார் 


இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் 
மொழியால் புகழ முடியுமோ முடியாதெவர்க்கும் முடியாதால் 



                                 திருச்சிற்றம்பலம் 


                          போற்றி ஓம் நமசிவாய 

உமாபதி சிவாச்சாரியர் குருபூசை

                                        ஓம் நமசிவாய


உமாபதி சிவாச்சாரியர் குருபூசை 

குருபூசை திருநட்சத்திரம் - சித்திரை -அஸ்தம் 
அவதார தலம்-தில்லை 
முக்தி தலம்    -தில்லை
24-04-2013 புதன்கிழமை 

உமாபதி சிவாச்சாரியர் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.
13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.


மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. இவர் வடமொழியிலும் திறமை பெற்றிருந்ததால், அம் மொழியிலிருந்த பௌஷ்கராகமத்துக்கு, பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார்.
                                                         உமாபதி சிவாச்சாரியார்.jpg
சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து  நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
 
செயற்கரிய செய்தார் பெரியார் என்ற வாக்குக்கிணங்க  அவர்தம் பாதம் போற்றி  வணங்குவோம்.

வாழ்க சைவநெறி  வளர்க சைவ நீதி  
 
 
 
                           போற்றி ஓம் நமசிவாய 
 
 
                                 திருச்சிற்றம்பலம் 

மதமாற்றம் - உஷார்

                                                  ஓம் நமசிவாய


மதமாற்றம் - உஷார்



அடியேனைப் பற்றி பிரஸ்தாபிப்பது கட்டுரையின்  நோக்கம் அல்ல அடியேன்  கோவையில் வசித்து வருகிறேன் . பொறியியல் பட்டதாரி அடியேன் சிறு வயது முதலே பக்தி மார்க்கத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவன் . வாரம்தோறும் ஏதாவது கோவில் செல்வதையும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பாடல் பெற்ற தலங்களுக்கு மற்றும் பிற ஆலய தரிசனம் செல்வதை வழக்கமாககொண்டுள்ளவன் . தவிர தீட்சை வாங்கி சிவபூசையை நித்தமும் செய்து கொண்டு வருபவன். மக்களின் துயர் குறைய திருமுறையின் மூலம் அவர்கட்கு வழிகாட்டி யும் உலக முதல் மந்திரமாம் ஐந்தெழுத்தின் 
மகத்துவத்தை  மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களுக்கு ருத்ராட்சம் முற்றிலும்  இலவசமாக  கொடுத்து அணிய வைத்து சேவை செய்து வருகிறேன்

முன் வினைபயன் காரணமாக அடியேன்
முடக்குவாதம் எனப்படும் (romatoid arthiritis  ) 
நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் .இதற்கு சரியான  வைத்தியம்  கிடைக்கவில்லை . இதனால் அடியேனால்  தொழிலை கவனிக்க பெரும் இடைஞ்சல்  ஏற்பட்டது . அடியேன் இதனால் ஒவ்வொரு முறை  மனம் தளர்ந்ததுண்டு .

ஆனாலும் அப்பர் சுவாமிகளுக்கே சூலை தந்து 
ஆட்கொண்ட எம்பிரான் நமக்கு இதை அருளி யுள்ளார் போலும் என்று வாழ்கிறேன் .
இடையறாது அவன்தாள் வணங்கி சித்தத்தில் 
சிவனை வைத்து வாழ்கிறேன் ஆன்மீகம் பற்றி ஏதோ இறைவன் கொடுத்த சிறு 
ஞானத்தால் பிரசங்கம் செய்வேன் இதனால்  தான் இடுகைகளை அடியேனை இட  முடிகிறது   


எனது தொழில் நிமித்தம் ஒரு கிறித்துவ மத நண்பர் (ஒரு மாதம் முன்வரை ) இருந்தார் அவர் என்னிடம் நீங்கள் மதம் மாறி கிறித்துவனாக மாறினால் உங்கள்  வியாதி தீரும் ,உங்கள் கஷ்டம் தீரும் என்று மிகவும் வற்புறுத்தினார்.மேலும் உங்கள் சமயத்தில்  பேசுவதைப்போல எங்கள் சமயத்தில் வந்து  தீவிரம் காட்டி சமயப் பணியாற்றினால் 
பிரசங்கம் செய்தால் உங்களுக்கு இங்கு  கிடைக்கும் வரவேற்பே தனி , நீங்கள் நல்ல வருமானம் பெறலாம் உங்கள் வாழ்க்கை எங்கேயோ போய் விடும் என்று மூளைச்  சலவை செய்தார் .

நீங்கள் வந்து விட்டால் உங்களை சார்ந்தவர் களும் வந்து விடுவார்கள் என்றும்  உங்களுக்கு மிகப்பெரிய  மரியாதை  கிடைக்கும் என்றார் . அடியேன் அவரிடம்  ஏதோ ஒரு சுகத்தின் பொருட்டு 
( உடல்சுகம்,காசு பணம் ) மதம் மாறி அதன் காரணமாக கிடைக்கும் சுகம் என்பது பெற்ற  தாயை விற்பதற்கு சமம் என்று கூறி அவரை  அன்றிலிருந்து அவரைத் தவிர்த்துவிட்டேன் 

இதை அடியேன் கூற காரணம் என்ன வென்றால் ஏதோ  சிவகிருபையினால்  அடியேனுக்கு சிறிது  தெளிந்த அறிவும்   கொஞ்சம் வசதி வாய்ப்பும் உள்ளது . அடியேனிடமே அவர்கள் இந்த வேலை 
பார்க்கிறார்கள் என்றால் சோத்துக்கும்  
காசுக்கும் கஷ்டப்படுகிறவர்களை எப்படி  மூளைச்சலவை செய்வார்கள்  உங்களுக்கும் அருகாமையில்  இப்படிப்பட்டவர்கள்  இருப்பார்கள் உஷார் .
இப்படி ஆள் பிடிக்கும் அரசியல்வாதி கடவுள் , கடவுளா? அப்படி ஆள் சேர்த்துக் கொடுத்து  ஊதியம் வாங்கி சாப்பிடுவது சோறு தானா?

பகிரங்க சவாலாக கூறுகிறேன் கடவுள் என்றால் அது சிவபெருமான் ஒருவரே 
ஒரு தாயின் கருவில் உருவாகி வந்த எவனும் கடவுளே அல்ல .மதி மயங்கி 
சிற்றினம் சேராதீர்கள் .யாராலும் உருவாக்கப் படாதவன் சிவனே .அதுபோல சைவசமயக் கொள்கையை நமக்கு அளித்தவரும் அவரே .அது தான் ஆகமம். வேதம்  என்று சொன்னால் இந்த நாலும் தான் வேதம் . நீங்கள் மதம் மாறி எங்கள் சொற்களை  காப்பியடித்து செயல்களை காப்பியடித்து செய்வது மிக கேவலம் .வேண்டும் என்றால் உங்கள் கடவுளை புது பார்முலா புது மொழி 
என உருவாக்கி தர சொல்லவேண்டியது தானே? புதிதாக ஒன்றை உருவாக்குவது கடவுளால் மட்டும் முடியும் .எப்படி  செய்வீர்கள் நீங்கள் சொல்லும் ஏசுவே யூத மதத்தில் பிறந்து வளர்ந்து அவர்களுக்கு எதிராக புது மதம் உருவாக காரணம் ஆனவனாயிற்றே
தலைவன் போல தானே இவைகளும் இருக்கும் இங்கிருக்கும்  சகோதரர்களே  3அல்லது 4 தலை முறைக்கும் முன் நீங்களும் இந்து தான் . சைவம் தான் . உங்கள் மூதாதையர்கள் அவர்கள் மதம்  மாறாமல் வாழவில்லையா ? அவர்களுக்கு  நீங்கள் செய்யும் நன்றி மரியாதை  
இது தானா ? இன்னார்  பேரன்  என்று  சொல்லி அடையாளம் மாறுவது  குற்றம்  இல்லை? பிதுர்கடன்  ஆற்றாவிட்டால்  எந்த சமுதாயமும் முன்னேறாது  புதுகடவுள்  சொல்லும் நாகரிகம்,  புத்தி இது தானா ?  ஸ்டைலான  பேர் இந்த சுப்பனுக்கும் குப்பனுக்கும் கான்ராவர்சி இல்லையா? யோசியுங்கள் .இப்பிறவி  தப்பினும் இனி எப்பிறவி வாய்க்குமோ ?



                           போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்

Saturday, April 13, 2013

சிவநேய செல்வர்களுக்கு வாழ்த்துக்கள்

                                     ஓம் நமசிவாய

விஜய ஜெய ஜெய வாழ்த்துக்கள் 

திருமுறை வாழ்த்துப்பா

                  திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயதெல்லாம் அரண் நாமமே 
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
 
 
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 
 
 
வையம் நீடுக மாமழை மன்னுக 
மெய் விரும்பிய அன்பர் விளங்குக 
சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக
தெய்வ வெண் திருநீறு  சிறக்கவே


வான்முகில் வழாது பெய்க
            மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க
           குறைவிலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க
           நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி
           விளங்குக உலகமெல்லாம் 





சமய குரவர் துதி 


பூழியர்கோன் வெப்பொழி்த்த புகலியர்
               கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்த

               பிரா னடிபோற்றி;
வாழிதிரு நாவலூர் வன்

              தொண்டர் பதம்போற்றி;
ஊழிமலி திருவாத வூரர்

              திருத் தாள்போற்றி.


சந்தான  குரவர் துதி 


ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த 
         மெய்கண்டார் இணைத்தாள் போற்றி 
நாராண்ட பல்லடியார்க்கு அருள் புரிந்த 
         அருள் நந்தி நற்றாள் போற்றி 
நீராண்ட கடந்தை நகர் மறைஞான சம்பந்தர் 
          நிழல் தாள் போற்றி 
சீராண்ட தில்லை நகர் உமாபதியார் 
         செம்பதுமத் திருத் தாள் போற்றி 

எல்லாம் வல்ல ஈசன் பேரருளால்
                                         எல்லாம் பெற்று வாழ்க 
                
                                     திருச்சிற்றம்பலம்  


                                                  போற்றி ஓம் நமசிவாய


அடியேன்
               சிவனடிமை வேலுசாமி
 

ஐந்தெழுத்தின் மேன்மை - 8

                                  ஓம் நமசிவாய 


ஐந்தெழுத்தின் மேன்மை - 8

  
திருமுறை. 4 பதிகம் 77 பாடல் 4



சந்திரற் சடையில் வைத்த
            சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான் 
           ஆன் வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய
           ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும்  நோயும்
           வெவ்வழல் விறகிட் டன்றே.


பிறையைச் சடையில் சூடிய சங்கரன்   
சாம வேதம் ஓதுபவர் தேவர் தலைவர்   வெண்ணிறக் காளையை  வாகனமாய் உள்ளவர் திருவைந்தெழுத்தாகிய  நமசிவாய என  ஓதி திருநீற்றை அணிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல  நோய்களும் வினைகளும் வெந்து அழியும்.



திருமுறை 4 பதிகம் 80பாடல் 4
  தலம் -கோயில்


வைச்ச பொருள் நமக் காகுமென்று 
             எண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை 
            அம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
           உந்தியின் மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக்
          கண்கொண்டு காண்பதென்னே.


நமசிவாய என்னும் 
திருவைந்தெழுத்தாகிய  ஒண்பொருளானது  பிற்காலத்திற்கு சேர்த்து வைக்கும் சேமநிதி   என்று எண்ணித் தியானித்தேன்     அச்சம் ஒழிந்தேன். திருவைந்தெழுத்துக்கு 
உரியவரான  தில்லை  சிற்றம்பலத்தில்  கூத்தாடுகின்ற ஈசன் பித்தராகவும்  பிறப்பற்றவராகவும்  விளங்குபவர் நந்தி என்னும் திருநாமம் உடையவர் உந்தியின் மீது அழகிய கச்சு அணிந்தவர்  அப்பெருமானுடைய அழகைக் கண்ட கண்  காண வேண்டிய உயர்ந்த பொருள் யாது உ ள்ளது                


திருமுறை 4 பதிகம் 103 பாடல் 3
திருநாகைக் காரோணம்


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
             வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
            கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய
            என்னும் மஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தருதிகண்
           டாய் எங்கள் சங்கரனே.



தூய மென் மலர் அம்புகளைக் கணையாக தொடுத்து  எய்த மன்மதனை  சாம்பலாக்கிய  ஈசனே  நாகைக்காரோணத்தில் மேவும் சங்கரனே ! உன் திருநாமமாகிய  நமசிவாய என்ற திருவைந்தெழுத்தை அடியேன் உயிர்போகும் பொழுது உரைக்கும் பேற்றினை நல்குவீராக .             



திருமுறை 5 பதிகம் 90 பாடல் 2                  


நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது 
இறைவனுடைய திருவடி மலராகத் திகழ்ந்து 
ஞானத்தையும்  கல்வியையும் வித்தை யையும் நல்கும் சிறப்புடையது.   நமசிவாய  என்று நா கூறியும் உள்ளம் வழிபட்டும்  இருக்கும்.  நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும். 



திருமுறை 5 பதிகம் 97 பாடல் 22                 


நமச்சி வாயவென் பார் உளரேல் அவர்
தமச்சம்  நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக்கொண்டதோர்வாழ்க்கைய
னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.  

நமசிவாய என்று சொல்லும் அடியார்கள் தம் அச்சங்கள் நீங்கித் தவநெறியைச் சார்ந்து  விளங்குபவர் ஆவர்  தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவர்  ஆகிலும்  மீண்டும் பிறக்கின்ற தன்மையை  பெறமாட்டார்கள்   


திருமுறை 6 பதிகம் 93 பாடல்10                



தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
             தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
            மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
            திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
            என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

தந்தை தாய்  உடன் பிறந்தார் தாரம் புத்திரர் தான் என தொடர்புடையவர் வந்த விதம் யாது? போகும் வழி யாதோ?  எனவே  நிலையில்லாத இத்தன்மையில்  மகிழ வேண்டாம். உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண் மின். ஒளிவீசும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தை ஈசனின் திருநாமம்  நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தாகும்  அதை உரைத்து எத்துக வீடுபேற்றை  அடையலாம்.
 

திருமுறை 6 பதிகம் 98 பாடல் 4   
                                                            

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
             உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
             நன்மையாய்ச்சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
             நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
            சுடர்நயனச்சோதியையே தொடர்வுற்றோமே.


சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர். கோவணமும் கீளும் உடுத்தியவர்கள்.  பகைவரும் தாக்க மாட்டார்கள். பிறர் செய்யும் தீமையும் நன்மையை  விளையும் தேன் நிறைந்த கொன்றை மாலையணிந்த சிவபெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை சொல்ல வல்லவர்கள் அவர்கள் .மீனக்கொடியுடைய   மன்மதனை எரித்து  சாம்பலாக்கிய  நெற்றிக் கண்ணுடைய ஈசனையே 
தொடர்ந்தவர்கள்  ஆவார்கள்



                                  திருச்சிற்றம்பலம் 



                            போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி 

சைவ காலண்டர் -சித்திரை

                                       ஓம் நமசிவாய

சைவ காலண்டர் -சித்திரை  
14-04-3013 to 14-05-3013 

14-04-2013 தமிழ் வருடபிறப்பு,சதுர்த்தி,தில்லைவாழ் அந்தணர் குருபூசை  

16-04-2013செவ்வாய் -சஷ்டி 

18-04-2013 வியாழன் -சிவஞான சுவாமிகள் குரு பூசை 

23-04-2013செவ்வாய் -பிரதோஷம் 

24-04-2013புதன் -உமாபதி சிவாச்சாரியார் குரு பூசை 

25-04-2013வியாழன் -சித்ரா பௌர்ணமி ,இசை ஞானியார் குரு பூசை 

26-04-2013வெள்ளி -திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் குரு பூசை 

28-04-2013ஞாயிறு -சங்கட ஹர சதுர்த்தி 

02-05-2013வியாழன் -தேய்பிறை அஷ்டமி,நடராஜர் அபிஷேகம்  

04-05-2013சனி-திருநாவுக்கரசு சுவாமிகள் நாயனார் குருபூசை 

07-05-2013செவ்வாய்-பிரதோஷம் 

08-05-2013புதன் -மாத சிவன்ராத்திரி 

09-05-2013வியாழன்-அம்மாவாசை,சிறுத் தொண்டர் நாயனார் குருபூசை  

10-05-2013வெள்ளி- கிருத்திகை 

12-05-2013ஞாயிறு-மங்கையர்க்கரசி நாயனார் குருபூசை  

13-05-2013திங்கள் -அட்சய திரிதியை 

14-05-2013செவ்வாய்- சதுர்த்தி,விறன்மிண்ட நாயனார் குரு பூசை  




                              போற்றி ஓம் நமசிவாய 



                                 திருச்சிற்றம்பலம்  

 

தில்லை வாழ் அந்தணர் புராணம்

                                                            ஓம் நமசிவாய


தில்லை வாழ் அந்தணர் புராணம்

     "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்"

குருபூசை நாள் -சித்திரை முதல் நாள் 
14-04-2013 ஞாயிற்றுக்கிழமை

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி

செந்தமிழின் பயனாய் உள்ள திருத் தோண்டத் தொகை  பாட வன்தொண்டர்க்கு ஆணையிட்டு அடி எடுத்துத் தந்த திருவாரூர்த் தியாகேசப்பெருமான் தொடக்கம் செய்து தந்த முதல்  அடிதில்லைவாழ்  அந்தணர்  தம் அடியார்க்கும் அடியேன் . அப்படி எம்பெருமானேஅந்தணர்கள் பெருமையை உலகுக்கு உணர்த்த அடியெடுத்துக் கொடுத்தார்
என்றால் அவர்களின் சிறப்பு தான் என்னே

மற்ற தொகை அடியார்கள் குரு பூசை பங்குனி கடைசி நாளாகும்
அதுபோல தில்லைவாழ் அந்தணர் குரு பூசை சித்திரை முதல் நாளாகும்
சித்திரை முதல் நாள்  ஆலயத்திற்கு செல்லும்போது இந்த குரு பூசையில் கலந்துஇறைவன்  அருள் பெறுவோமாக



                              போற்றி ஓம் நமசிவாய 

                                   திருச்சிற்றம்பலம்
 

Friday, April 12, 2013

ஞானப்பழம் -ஏன் ஓம்சிவசிவஓம் ஜெபிக்க கூடாது?

                                     ஓம் நமசிவாய


ஞானப்பழம் ஏன் ஓம்சிவசிவஓம் ஜெபிக்க கூடாது?


நமக்கு பழம் எப்படி கிடைக்கிறது முதலில் அரும்பு விட்டு மலராகி பின் அது காயாகி முற்றிய நிலையில் பழமாக கிடைக்கிறது  ஒவ்வொன்றுக்கும் சில கால இடைவெளி தேவைப்படுகிறது

ஞானப்பழத்தைப் பிழிந்து  என்பது பாடல். ஏன் பழம் தானே அதை ஏன் ஞானப்பழம் என கூறவேண்டும்?
ஞானத்திற்கும் பழத்திற்கும் என்ன சம்பந்தம்?

ஞானம் என்பது இறைவனை அறியும் அடையும் 
நிலையை பெறுவது.
ஞானம் தவத்தினால் கிடைக்கப்பெறும் தவமாவது சிவ பூசையே
தவம் சிவத்தைக்காட்டும் தவம் அல்லாதது அவம் 
ஞானம் பெற்றால் தான் வீடுபேறு அடையமுடியும் 
ஞானம்பெற கிரியைகள் மற்றும் சடங்குகளும் 
அவசியம்

ஆக

 சரியை என்பது அரும்பு -நமசிவய-தூலஐந்தெழுத்து 
கிரியை என்பது மலர்      -சிவாயநம-சூக்கும ஐந்தெழுத்து
யோகம் என்பது காய்      -சிவயசிவ-அதிசூக்குமஐந்தெழுத்து
ஞானம்  என்பது பழம்     -சிவசிவ-காரண ஐந்தெழுத்து 


சரியை -அரும்பு 

ஒருவர் எப்போது சைவராகிறார் சிவத்தோடு சம்பந்தம் உடையவர் சைவர் எப்படி சம்பந்தம் வைத்துக்கொள்வது? .சிவ தீட்சை பெற்று சிவ மூல மந்திரமாம் ஐந்தெழுத்தை முறைப்படி ஓதும் 
அதிகாரம் பெற்று வழிபடுபவர். சமயதீட்சை பெற்ற 
அவர் சமயி எனப்படுவார் .அவருக்கு ஞான  ஆசிரியர் யாகம் செய்து மாணவனது ஆன்மாவை  தூய்மைபடுத்தி உபதேசம் செய்வார்
சிவசம்பந்தத்துக்கு இது ஆரம்பக்கல்வியாகும் 
தினமும் மூல மந்திரம் 108முறை ஜெபிக்கவேண்டும் 
அது கூடவே குருநாதர் சொல்லியவண்ணம்
பிரணாயமம் செய்துவரவேண்டும்
இதன் மறுமைப்பயன் 24 தத்துவங்களுக்கு மேல் பிறப்பு அதிதெய்வம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் 

கிரியை -மலர்

பல நாட்கள் (அ)ஆண்டுக்கு  பிறகு உயர் கல்விக்கு  மாணவன் பக்குவம் அடைந்துவிட்டான் என்று ஞான ஆசிரியர் முடிவு செய்தபின் கிரியை எனும் 
வழிபடும் முறைகளைஉபதேசம் செய்வார் . அப்போது சிவலிங்கதிருமேனி பெற்று தினமும் 
அதற்கு நாள்தோறும் அபிசேகம் தூபம்  தீபம் அமுது மலர் வழிபாடு  கிரியைகள் செய்யவேண்டும்
இந்த தீட்சையின் பெயர்விசேட தீட்சை  இதனை பெற்றவர் புத்திரர் எனப்படுவார் .இப்போது 
மூல மந்திரம் மாற்றிசிவாய நம என்று  குரு உபதேசிப்பார் தினம் 108 முறை ஜெபிக்கவேண்டும்
இந்த சிவலிங்க வழிபாடு தினமும் கண்டிப்பாக 
செய்யவேண்டும்
மறுமைப்பயன் 31 தத்துவங்களுக்கு மேல் பிறப்பு  அதி தெய்வம் அனந்தர்


யோகம் -காய் 

மாணவன் கல்லூரி பட்டம் வாங்க தயாராகிவிட்டார் 
பல நாள் அரனை அர்ச்சிக்க நல்லறிவு சற்று மிகும் . சரியை கிரியை யோகங்களின் பயனாக 
மலபரிபாகமாயிட இருவினை ஒப்பும் சத்தி  நிபாதமும் வரப்பெற்று சிவனை அடைய அவா 
ஏற்பட்டுஅடையும் வழிகளை அறிந்து மந்திரம் ,பதம்,
வன்னம்,புவனம்,தத்துவம்,கலைவழி அத்துவ 
சோதனை செய்யப்பட்டு சஞ்சித கன்மம் அழிய முப்பொருள் இயல்பை உணர்ந்து யாக காரியங்களுடன் 
விசேட தீட்சையில்வழங்கப்பட்ட லிங்கத் திருமேனிக்கு
 தொடர்ந்து பூசைகள் செய்து வர வேண்டும் .
நிர்வாண  தீட்சை பெற்றோர் சாதகர் எனப்படுவார் 
மூலமந்திரம் திரோதானம் ,மலங்களற்ற  சிவயசிவ என்று உபதேசிக்கப்படும்
மறுமைப்பயன் 36 தத்துவங்களைக் கடந்த நிலை 
அதி தெய்வம் சதாசிவர்
 
ஞானம் -பழம் 

கல்லூரியில்முதுகலை பட்டம் பெற்று முனைவர் 
பட்டம் பெற தகுதி எனும்  பொது குருவானவர் ஆசாரிய அபிடேகம் செய்து யா அற்ற சிவசிவ என்ற 
அருள் மந்திரம்  வழங்கப்பட்டு மற்ற சைவர்களுக்கு 
சமயவிசேட நிர்வாண தீட்சை வழங்கும் அதிகாரம் 
அளிக்கிறார் தகுதியான மாணவனைதேர்ந்தெடுத்து  ஆசாரிய அபிடேகம் செய்து வைப்பது 
ஞான குருவின் கடமையாகும்
மறுமைப் பயன் முக்தி அதி தெய்வம் சொரூபசிவன்
இந்த உயர்ந்த நிலை மக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே கோவில்களில் சிவசிவ  என்று எழுதி உள்ளார்கள்

இறைவன் நமக்கு தீட்சா கிரியையின் மூலமாகவே 
பாவ மன்னிப்பு வழங்குகிறான் .
என்ன தவறு செய்தாலும் கூண்டுக்குள் அமர்ந்து 
பாவத்தைசொல்லிவிட்டாலே தீர்ந்து விடாது .
அது இன்னொரு பாவம் செய்ய தூண்டும் செயல் 
அந்த வழி சுலபமாக இருப்பதனால் அதைச் சொல்லியே
ஒரு  சமயம் வளர்க்கிறது 
ஆனால் சைவ சித்தாந்தம் அப்படி கூறுவதில்லை
ஆகவே சைவமே மெய்ச்சமயம்
நாம்செய்த வினைகளை பாவங்களை நாம் மட்டுமே தீர்க்க முடியும் 
புற வாசல் வழியாகஇன்னொருவர் தீர்க்க முடியாது
 நமக்காக இன்னொருவர் கடவுளிடம் பிரார்த்திக்க முடியாது . அந்த ஆன்மாவின் வினையை அதுவே வினையருக்கவேண்டும் 

ஏன் ஒம்சிவசிவஒம் ஜெபிக்க கூடாது  என்று கூறுகிறோம் என்றால் மேல் சொன்ன அரும்பு மலர்ந்து காயாகி கனியவேண்டும் அதனாலேயே 
ஞானத்தை பழம் என்று பெரியவர்கள்   சொன்னார்கள்

ஒரு கோடி நிகழ்ச்சியில் 14 கேள்விக்கு பதில்  சொன்னால் ஒரு கோடி என்றால் அந்த 14வது 
கேள்வியை முதலில் கேளுங்கள் என்பதுபோல் உள்ளது 

திருமூலர் பாடிய எல்லா பாடல்களின் படியும்  நாம்  நடந்தால் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக 
உலகமெல்லாம் என்று நன்றாக இருக்கும். 


                            போற்றி ஓம் நமசிவாய

                                 திருச்சிற்றம்பலம்