rudrateswarar

rudrateswarar

Tuesday, May 31, 2016

சண்டேசுவர நாயனார் பன்னிருதிருமுறை பாடல்கள்

                                                      ஓம்நமசிவாய

சண்டேசுவர நாயனார் பன்னிருதிருமுறை பாடல்கள்

திருமுறை -1

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே


 திருமுறை -2

கூரம் பதுவிலர் போலுங் கொக்கி னிறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலு மாமை யணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே

திருமுறை -3

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே

திருமுறை -4

ஆமலி பாலு நெய்யு மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே

திருமுறை -5

மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென்
ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ

திருமுறை -6

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
    தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
    பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
    குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

திருமுறை -7

எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
              ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசுந் திருமிழலை
 நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
             நேசத்தால் உமைப் பூசிக் கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

திருமுறை -8

 தீதில்லை மாணிசிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன்தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன்திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறுபற்றினவா தோணோக்கம்

திருமுறை -9

தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
     வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
     போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
     தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
     பல்லாண்டு கூறுதுமே

திருமுறை -10

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

திருமுறை -11

இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படையார்கச்சி ஏகம்பரே

திருமுறை -12

அண்டர் பிரானும் தொண்டர்தமக் கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோமஎன்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்


                                     போற்றி ஓம் நமசிவாய

                                             திருசிற்றம்பலம்

சிவனடிமைவேலுசாமி