rudrateswarar

rudrateswarar

Thursday, May 30, 2013

கழற்சிங்க நாயனார் புராணம்

                                                    ஓம் நமசிவாய


கழற்சிங்க நாயனார் புராணம்

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"
அவதார தலம் - திருக்கச்சி (காஞ்சி )
முக்தி தலம்     - திருக்கச்சி (காஞ்சி )
குருபூசை திருநட்சத்திரம்-வைகாசி  பரணி 
      ( 06-06-2013 வியாழக்கிழமை )


கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர் முக்கண்  பரமனடி அன்றி வேறு ஒன்றையும்  அறிவிற் குறிக்கோளாகக் கொள்ளாது   சேனைகளுடன் நல்லாட்சி புரிந்து வந்தார் 


படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்றறி வினிற் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பர்  


 வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று  நாடாண்ட வேந்தராகிய இவர் அரனார் ஆலயங்கள் பலவுஞ் சென்று ஆராத அன்புடன் பணிந்து நித்திய நைமித்தியங்கள் அமைத்து திருத்தொண்டு புரிந்து வந்தார் 

ஒரு நாள் சிவலோகம் போன்ற திருவாரூரை அடைந்தார்  திருக்கோயிலை சுற்றி வந்து பிறப்பை ஒழிக்கும் பிறைமுடிப் பெருமானை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருகி தரிசித்துக் கொண்டிருந்தார் . 

அவருடைய பட்டத்து நாயகி கோயிலை வலம் வந்து கோயிலின் பெருமைகளை
தனித்தனியே  கண்டு களிப்புற்றாள் அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள்.  அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்கு வந்த செருத்துணை நாயனார்  என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் இது சிவாபராதம் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். 

உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணை நாயனார்  'அரசரேறே இவள் எம்பிரானுக்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோர்ந்தாள்  அதனாலே இதை  நானே செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரைப்பணிந்து , 'இக்குற்றத்திற்கு தக்க தண்டனை தந்தீரில்லை பூவை எடுத்த கையே முதல் குற்றவாளி.கை எடுக்காமல் இருந்தால் 
மூக்கு முகராது ஆதலால் கையை முதலில் வெட்டுதல் வேண்டும் என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையை வெட்டினார் . 

கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்
தொட்டுமுன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்பதென்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவியான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந்துணித்தாரன்றே

இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க பல காலம் அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

இந்த குரு பூசை திருநாளில் நாமும் சிவத்தொண்டு சிவாபராதம் எது என அறிந்து மற்றவர்களுக்கும் அதை உணர்த்தி கடைப்பிடிப்போமாக.



                           போற்றி ஓம் நமசிவாய



                                திருச்சிற்றம்பலம் 

Tuesday, May 28, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை-10

                                 ஓம் நமசிவாய 

ஐந்தெழுத்தின் மேன்மை-10


பத்தாம் திருமுறை -தந்திரம்.3 - 18 கேசரியோகம் பாடல்-11


ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப்பருகி சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க காற்றும்  நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -20
   

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.


செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைக்கும் பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும்செம்பொன் மயமான  திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -22


வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.


ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும் தொடர்ந்து ஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லை. அதற்கு முன்னே அவ்வாறு ஓதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாம் தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -29


கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே

இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்கு மாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.


                              திருச்சிற்றம்பலம்

 
                           போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி 



                                  

Thursday, May 9, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை -9

                                              ஓம் நமசிவாய

  
ஐந்தெழுத்தின் மேன்மை-9


திருமுறை 4 பதிகம் 94 பாடல் 5 திருப்பாதிரிப்புலியூர் 


வைத்த பொருள் நமக்காம் என்று 
                 சொல்லி மனத்தடைத்துச்
சித்தம்  ஒருக்கிச் சிவாய 
                  நமவென்று  இருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் 
                  அவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ 
                  அறிவிலாப் பேதைநெஞ்சே


அறியாமையை உடைய மனமே !நமக்கு சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லாது, திருப்பாதிரிப் புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?



திருமுறை 4 பதிகம் 94 பாடல் 6 திருப்பாதிரிப்புலியூர் 



கருவாய்க் கிடந்துன் கழலே 
              நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் 
              பயின்றேன்  உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய 
              நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா  
             திரிப்புலி யூர் அரனே.


 திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்தபோது உன் திருவடிகளையே  தியானிக்கும் கருத்து உடையவனாய் இருந்தேன். மண்ணுலகில் பிறந்து உருவம் கிட்டிய பிறகு உன் அருளால் உன் திருநாமம் அறியப்பெற்றேன்  சிவாயநம எனும்   திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப்பொழுது அணியப் பெற்றேன். சிவகதி தருவீராக
  

திருமுறை 5 பதிகம் 43 பாடல் 6 திருநல்லம்





அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நம என்று
நல்லம் மேவிய நாதன்  அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.


ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும், திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை  சிவாயநம  என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும். 


திருமுறை 6 பதிகம் 61 பாடல் 8 திருகன்றாப்பூர் 


திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
          திகையாதேசிவாயநமவென்னுஞ்சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
            கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
            பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.



மன உறுதியால் ஐம்பொறிகளால் ஈர்க்கப்படாது  வென்று  சிவாயநம எனும் திருவைந்தெழுத்தைத் தியானித்தலால் துன்பம் நீக்கி , சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறிநாதரைக் காணலாம்


                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம் 

சிவனடிமைவேலுசாமி 


Monday, May 6, 2013

மங்கையர்க்கரசியார் பிறந்த மண்ணில்

                                               ஓம் நமசிவாய


மங்கையர்க்கரசியார் பிறந்த மண்ணில்


பழையாறை இது மானி என்ற இயற்பெயர்   கொண்ட திருஞானசம்பந்தர் பெருமானால் மங்கையர்க்கரசி என்று புகழப்பெற்ற சோழ இளவரசியும் பின் பாண்டிமாதேவியுமான மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த புண்ணிய பூமி 
இவர் தந்தை  மணிமுடி சோழர். சோழ மன்னர் களின் தலைநகர்களில் ஒன்றாக இருந்த தலம். பட்டீச்சரத்திலிருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது  

தான் பிறந்த சோழ வம்சத்திற்கும் புகுந்த
வீடான பாண்டியர் குலத்திற்கும் பெருமை சேர்த்து உலக மங்கையர் அனைவருக்கும் அரசி ஆனவர் .

இவர் பிறந்து சிறந்த சிவபக்தையாக சிவநெறி நின்று தான் புகுந்த பாண்டியநாட்டை சமண இருள் நீக்கி சைவ ஒளியேற்றிய மாதரசி ஆவார்

இந்த மாதரசி சிறு பிராயத்தில் வழிபட்ட பிறந்த மண்ணில் பழையாறையில் உள்ள சிவாலயம் மாடக்கோயில் ஒருகால பூசை
கூட  சரிவர நடக்காமல் பிரதான கோபுரம் சிதிலமடைந்து சுற்றுசுவர் இடிந்து பார்ப்போர் கண்ணிலிருந்து உதிரம் சிந்தும் அளவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது  இராசேந்திர சோழனை குந்தவைப பிராட்டியார் இவ்வூரில் தான் வளர்த்துள்ளார் சோழர்கள் வாழ்ந்த ஊர் சோழன் மாளிகை எனப்படுகிறது இராசராச சோழன் இறுதிக்காலத்தை பழையாறையில் கழித்தபோது மரணமடைந்து  உடையாளூரில்  சமாதி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.நமது நாயன்மார்களில் ஒருவரான   அமர்நீதி நாயனாரின் அவதார தலமும் இதுவே 
இதற்கு அருகில் திருநாவுக்கரசு சுவாமிகள் உண்ணாநோன்பிருந்து சமணர் மறைத்த இறைவரை வெளிக்கொணர்ந்த வடதளி பாடல் பெற்ற தலமும் அமைந்துள்ளது  
http://palayaarai.blogspot.in/ மேலும் படங்கள் இந்த வலைப்பூவில் காணலாம்  

இறைவர் -சோமேசர் சோமநாத சுவாமி 
இறைவி  -சோமகலாம்பிகை 
தீர்த்தம்    - சோம தீர்த்தம் 

  பாண்டிய சாம்ராஜ்ஜியத்தையே சைவ விளக்கேற்றி வாழ வைத்த அந்த மாதரசி பிறந்த மண்ணில் ஆலயம் சிதிலமடைந்துள்ளது உண்மையான வருத்தமான விஷயம். அடியேன் கடந்த வாரம் அங்கு சென்று உள்ளூர் அன்பர்களிடம் விசாரித்த போது எங்களால் திருப்பணி செய்ய பொருளாதாரம் இல்லை, யாராவது முன்னின்று செய்தால் முழுமையான  ஒத்துழைப்புடன் இனி நல்ல நிலையில் பார்த்துகொள்வோம்  என்று கூறினார்கள்

அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள் இவ்வளவு சிறப்பு பெற்ற ஆலயம் இம்மண்ணுலகம் உள்ள மட்டும் மங்கையர்க்கரசியார் பெயர் சொல்ல வேண்டும். சைநெறி கலங்கரை விளக்காக வழிகாட்ட வேண்டும் . அதற்கு சிவநேயச் செல்வர்கள் யாராவது முன்னெடுத்து புனரமைப்பு செய்தால் அவர்கள் பாதம் கழுவி பாத பூசை செய்ய தயாராக உள்ளேன். அந்த புண்ணியவான் மிக விரைவில் கிட்ட மங்கையர்க்கரசியார் குருபூசை கொண்டாடும் வேளையில் இறைவனிடம் பிரார்த்திப்போம் 

மேலும் இவ்வாலயம் ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமி மலை சுவாமிநாதர்  ஆலய நிர்வாகத்திற்கு உட்பட்டது இந்து அறநிலைய துறை மனது வைத்தாலும் இந்த கோயில் புனரமைப்பு செய்யலாம்   
கோயிலைப்  பற்றி வேண்டுகோளுடன் ஒரு ப்ளெக்ஸ் போர்ட் (FLEX  BOARD) வைத்தாலே அதைக் கண்ணுறும் மெய்யன்பர்கள் யாராவது திருப்பணி செய்ய அமைவார்கள் திருப்பணிக்கென ஒரு குழு அமைத்து பிள்ளையார் சுழி போட்டாலே எல்லாம் அவனருளால் முடியும் ஊர் கூடினால் தேர் தானாக வரும். செய்வோமா? சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .கே அன்பழகன் அவர்களும் தன்னால் இயன்ற உதவிகளை நல்குமாறு கேட்டுக்கொள்வோம் .



                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம் 
  



Sunday, May 5, 2013

சைவ காலண்டர் - வைகாசி

                                                ஓம் நமசிவாய

சைவ காலண்டர் - வைகாசி
15-05-2013 - 14-06-2013

வைகாசி 

1ம் நாள் 16-05-2013-வியாழன்   சஷ்டி 

8ம் நாள் 22-05-2013-புதன்  பிரதோஷம் 

10ம் நாள் 24-05-2013-வெள்ளி  வைகாசி விசாகம், பௌர்ணமி 


13ம் நாள் 27-05-2013-திங்கள் திருஞானசம்பந்தர், முருகர், திருநீலநக்கர், திருநீலகண்டயாழ்ப்பாணர் நாயன்மார்கள்  குருபூசை 
  
17ம் நாள் 31-05-2013-வெள்ளி  தேய்பிறை அஷ்டமி

22ம் நாள் 05-06-2013-புதன்  பிரதோஷம் 

23ம் நாள் 06-06-2013-வியாழன் சிவராத்திரி, கிருத்திகை, கழற்சிங்க நாயனார் குருபூசை  

25ம் நாள் 08-06-2013-சனி  அமாவசை 

29ம் நாள் 12-06-2013-புதன் சேக்கிழார்பெருமான் ,நமிநந்தியடிகள் நாயனார் குரு பூசை 

30ம் நாள் 13-06-2013-வியாழன்  சோமாசிமாற நாயனார் குருபூசை   
 

Saturday, May 4, 2013

விறன்மிண்ட நாயனார் புராணம்

                                  ஓம் நமசிவாய 


விறன்மிண்ட நாயனார் புராணம்

"விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்" 

அவதார தலம் - செங்கண்ணூர்  
முக்தி தலம்     - திருவாரூர் /வண்டாம்பாளை 
குருபூசை திருநட்சத்திரம்-சித்திரை மாதம்    
 14-05-2013 செவ்வாய்கிழமை         திருவாதிரை                                                               

மலைநாடாகிய சேரநாட்டில் வளமை மிக்க பழமையும் பெருமையும் மிக்க  ஊர் திருச் செங்குன்றூர் அத்திருநகரில் வேளாண் குலத்தில் விறன்மிண்ட நாயனார் அவதரித்தார். விறலும் மிண்டும் திருவருள் நெறியில் இவருக்கு இருந்தமையால் விறன்மிண்டர் எனப்பெற்றார் அளவிட்டு சொல்லமுடியாத சிறப்பினை  உடைய சிவபெருமானது திருவடிகளை பற்றி ஏனைய பற்றுக்களை அறவே களைந்தவர் . முடிவில்லா அன்புடையவர் உண்மையான அடியார்களிடம் திண்மையான அன்பு பூண்டவர் தணியாத காதலுடன் ஐந்தெழுத்தை ஓதி திருநீறும் கண்டிகையும் பூண்டு சிவபக்தி செய்து வருவார். நதியும் மதியும் சூடிய பெருமான் விரும்பி அமர்ந்திருக்கும் பதிகள் தோறும் சென்றுவழிபடுவார் .அவ்வாறு வழி படும் போது சிவனடியார் திருக்கூட்டத்தை முதலில் தொழுது பின்னே  பரமேசுவரனைத்  தொழுவார் 
மலைநாட்டைகடந்து ஏனைய நாடுகளில் சென்று அங்குள்ள திருக்கூட்டத்தினரைத் தொழுதும்சிவாலயங்களைச் சேவித்தும் விரிசடை விமலர் வாழும் திருவாரூரை அடைந்து பணிந்து புகழ்ந்து போற்றினார் 

சிவலோகம் போல் திகழும் தேவாசிரியன் மண்டபத்தில் அடியார் திருக்கூட்டத்தை பணிந்து அக்கூட்டத்தில் தாமும் ஒருவராக விறன்மிண்டர் இருந்தார் 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாள்தோறும் பூங்கோயில் சென்று புற்றிடங்கொண்ட திருமூலநாதரை  வழிபடும் நியதி கொண்டவர் அதன்படி அன்று திருக்கோயில் உட்புகுந்து செல்லும்போது தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருக்கும்திருக்கூட்டத்தினரைப்பார்த்து  இத்திருத் தொண்டர்கட்கு என்னை அடியேனாகச் செய்யும் நாள் எந்நாளோ? என்று இறைவரச் சிந்தித்து நேரே கோயிலினுட் புகுந்தார் அதுகண்ட விறன்மிண்டர் திருக்கூட்டத்தை அடைந்து தொழுது உட்செல்லாது ஒருவாறு ஒதுங்கிபோவது என்ன முறை என்று வெகுண்டார் .அடியாரை வணங்காது ஒதுங்கிசெல்லும் வன்தொண்டன் அடியார்க்கு புறகு அவனை வலிய ஆட்கொண்ட சிவபெருமானும் புறகு என்றார் 

அதுகேட்ட சுந்தரர் அஞ்சி ஆலமுண்ட நீல கண்டரைச் சிந்தித்து நின்றார் .சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்தருளினார்.ஞாலமுய்ய நாம் உய்ய சைவ நெறியின் சீலமுய்ய நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகையைப் பாடி திருகூட்டத்தினரை வணங்கினார் . அதை கேட்ட விறன்மிண்டர் அளவற்ற மகிழ்ச்சியடைந்து சுந்தரர் உள்ளம் அடியாரிடத்தில் பதிந்திருக்கின்றது என்று அருள் புரிந்தார் இவ்வாறு திருத்தொண்டத் தொகை பாட காரணமாயிருந்த விறன்மிண்ட நாயனாரை அவரது அளவற்ற அடியார் பக்தியை கண்டு மகிழ்ந்து சிவகணங்களின் தலைவராக திகழுமாறு அருள்புரிந்தார் 

அடியவர் பக்தியை விளக்குவது விறன்மிண்ட நாயனாரது வரலாறு சிவா பக்தியினும் அடியவர் பக்தியே திருவருளைப் பெறுவதற்கு எளிய வழி.பசுவின் பால் பெறுவதற்கு கன்றின் துணை வேண்டுவதைப்போல சிவபெருமான் திருவருள் பெற அடியவர் துணை அவசியமானது



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்           

மங்கையர்க்கரசியார் புராணம்

                                   ஓம் நமசிவாய 


மங்கையர்க்கரசியார் புராணம்
   
 “வரிவளையாள் மானிக்கும் (நேசனுக்கும்) அடியேன்”  


அவதார தலம்- பழையாறை 
முக்தி தலம்    - மதுரை 
குருபூசை திருநட்சத்திரம்-சித்திரை, ரோகிணி 
12-05-2013 ஞாயிற்றுகிழமை 



மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார்.அவரது இயற்பெயர் மானி .மங்கையரில் அரசி என்று சமய முதற்குரவரான சம்பந்தர் பெருமானால் 
மங்கையர்க்கரசி என்று போற்றப்பெற்றவர் அது போதாதென்று சேக்கிழாரடிகள் மங்கையர்க்குத் தனியரசி என்கிறார்   

அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.
பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்திருந்தான்  சமணகுருமாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர்.
அரசவையில்  குலச்சிறையார் என்னும் ஒரு  அமைச்சர் தவிர மற்றையோரெல்லாம் சமண சயத்தவராகவே இருந்தனர்.இவ்வாறு  சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். சைவர்களைப் பார்த்தாலே கண்டுமுட்டு என்றும் ஐந்தெழுத்தை கேட்டாலே கேட்டுமுட்டு என்றும் தீட்டு என்ற அளவில் சைவம் இருந்தது .அந்த நேரத்தில் அவர்  பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற பேரவாவுள்ளவராய்
இருந்தார்.இவ்வாறிருக்கும் பொழுது அப்பரும்  திருஞானசம்பந்தப்பிள்ளையார் அவர்களும்   பாண்டிநாட்டுக்குஅருகில்உள்ள திருமறைக்காடு   வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்த  நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக்களிப்புற்றார்  சம்பந்தப்பிளையார் தொலைவில்இருந்தாலும் அவர் தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார். அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப் பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பி வைத்தார். பரிசனத்தார் சென்று சம்பந்தரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக்  கூறினார்கள். சம்பந்தப் பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார்.அப்போது சமணர்களின் துன்மதியை எடுத்துகூறி அப்பர்சுவாமிகள்  இப்போது நாளும் கோளும் கூட சரியில்லை தங்களின் பாண்டிநாட்டு பயணத்தை பரிசீலிக்கவேண்டும் என்று சம்பந்தரிடம் கூறினார் .அப்போது பிள்ளையார் அவர்கள் நாளும் கோளும் அடியாரை என்ன செய்யும்  என்று கோளறுபதிகம் பாடியருளினார். சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகளையும் வணங்கி மதுரையை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நற்சகுனங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்திகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்த வள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.
ஆலவாயமர்ந்த பிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தருக்கு எதிர் செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில்முன் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன் சென்றார் . பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வரும் இவரே பாண்டி மாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாதத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியாரைப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க நானும் என் கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது என வாய்குழறிக் கூறி நின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.
பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது குருமாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ யான் அதனை ‘கேட்டு முட்டு’ எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.
அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார்  தங்கியிருந்த திருமடத்துக்குத் தீ வைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இப்படி  வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதில் புகுந்த அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’எனப் பணித்தான்.அரசியார்  அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு வெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத் திருவுருவாயும்,வேதகாவலராகவும்,மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும்,அரனாரது  சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்து அவர் திருவடிகளில் வீழ்ந்து அழுதரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. அப்பிணி தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனவேண்டினார் . ஆளுடைய பிள்ளையார் ‘நீர் ஒன்றும் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.

சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள அரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் குரைத்தனர்.ஏராளமானோர் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக்கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவரா என வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என அனைத்திலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டியமன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகர மாந்தரெல்லாம் மங்கல திருநீறணிந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன்,அமைச்சர் குலச்சிறையார்  ஆகியோரோடு அங்கயற்கண்ணி உடனமர்ந்த திருஆலவாய் அண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.

சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை  வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார். மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல முற்பட்டனர். பிள்ளையார் அவர்களின் பேரன்பிற்கு கட்டுப்பட்டவராயினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடைய பிள்ளையாரின்ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடைபெற்று சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறி பற்றி போற்றி இருந்தனர்.
அப்பர் சுவாமிகள் திருவாலவாய் இறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் கணவரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். 

மன்னனுக்கு நெடுங்காலம்  சைவவழித் துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
             வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
             தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
             இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
            போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.


தெய்வச் சேக்கிழார் தென்னர் பழி தீர்த்த தெய்வப்பாவை என்று பாடினார் என்றால் அவர்தம் பெருமையை யார் அளவிட முடியும் 


                       போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம்  

சிறுத்தொண்டர் நாயனார் புராணம்

                             ஓம் நமசிவாய 


சிறுத்தொண்டர்நாயனார் புராணம்

"செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்"


அவதார தலம் - திருசெங்காட்டாங்குடி 
முக்தி தலம்     - திருசெங்காட்டாங்குடி 
குருபூசைதிருநட்சத்திரம்-சித்திரை மாதம்
 09-05-2013 வியாழக்கிழமை                 பரணி 

கணபதீச்சரம் சிவனாரை விநாயகப்பெருமான்  பூசித்த ஆலயம் அவ்வாலயம் அமைந்துள்ளது வளம்பொருந்திய திருசெங்காட்டங்குடியாகும்
சிறப்புடைய இத்தலத்தில்  மாமாத்திரர் குலத்திலே பரஞ்சோதியார் என்பார் சிறப்புற்று இருந்தார் 

பரஞ்சோதியார் மருத்துவ, வடமொழி நூல்கள் 
எண்ணற்றன கற்று போருக்குரிய பயிற்சியும் 
பெற்று வல்லவரானார் .கலைகள் கற்றதோடு 
காலனை உதைத்த பெருமானை கருத்தினில் 
கொண்டு நாளும் சிவத்தொண்டாற்றி வந்தார் 

சோழ மன்னனிடம் நெருங்கிய சேனைதளபதி   என்ற சிறப்புடன் யானை மீது சென்று வெற்றி வாகை சூடிவருவார். ஒருமுறை வாதாபி சென்று யாரும் வெல்லமுடியாத அம்மன்னனை  வென்று நவமணிகளையும் பொற்குவியலையும் கவர்ந்து வந்ததை கண்டு மன்னன் அதிசயித்தான். அருகில் இருந்த அமைச்சர்கள் இவர் சிவபெருமான் திருவருள் நிரம்பப்பெற்றவர் அருள் வல்லமையும் திருத்தொண்டின் திறமும் பெற்றதனால் இவருக்கு இணையாரும் இல்லை என்று கூறினார்கள் 
அதுகேட்ட மன்னன் பதறி ஈசனடியாரை என் ஏவலுக்கு வைத்தேனே என்று வருந்தி,
இனி தாங்கள் என்னிடம் பணி செய்யலாகாது தங்கள் ஊர் சென்று திருத்தொண்டைத்தொடர வேண்டும் என்று கூறி வேண்டிய பொன்னும் பொருளும் நிலமும் கொடுத்து அனுப்பினான் 

கணபதீச்சரம் சென்று இறைவரை வணங்கி 
திருத்தொண்டு செய்துவரும் நாளில் திருவெண்காட்டுநங்கை என்பாரைத் திருமணம் புரிந்தார் இருவரும் மனமொத்து திருத்தொண்டாற்றி வரும்வேளையில் இல்லறத்தின் ஆணிவேராக அம்மையார் கருவுற்றார் .கரு முதிர்ந்து ஒரு நன்னாளில்
சீராளதேவர் என்ற மைந்தர் அவதரித்தார் 
பரஞ்சோதியார் அடியவர்களை திருமுன்பு 
மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொள்வதால் 
சிறுத்தொண்டர் எனும் திருநாமம் பெற்றார் 

சீராளதேவர் வளர்ந்து மூன்றாவது ஆண்டில் முடியெடுத்து ஐந்தாம் ஆண்டில் பள்ளியில் சேர்த்தார்கள்.அந்நாளில் சம்பந்தர் பெருமான் 
திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார்
சிறுத்தொண்டர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பூசித்து அனைவருக்கும் திருவமுது படைத்தார். சிறுத்தொண்டரின் 
திருத்தொண்டினை சிறப்பித்து பாடினார் 

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இவரின் பற்றற்ற தொண்டின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தி உய்விக்க  திருவுளங் கொண்டார்.அவ்வாறு திருவுளங்கொண்ட 
மகாதேவர் வைரவ சந்நியாசி வேடம்கொண்டு செங்காட்டங்குடியை அடைந்தார் 
நாள்தோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் 
அன்னமுண்ணும் மனையில் அன்றுஒருவரும் வரவில்லை நாயனார் வருத்தமுற்று தமது விரதத்திற்கு இடையூறு நேர்ந்து விடக்கூடாது 
என்று அடியாரைத்தேடி சென்றார் 
அப்போது வைரவராக வந்த எம்பெருமான் மிகுந்த பசியுடையவர் போல சிறுத்தொண்டர் மனை எங்கே என்று கேட்டுக்கொண்டு அவருடைய திருமாளிகை முன் வந்து அழைத்தார் மனைக்குள் சந்தன நங்கை என்ற வேலைக்கார அம்மையார் பெருமானைத் தொழுது நாயனார் அடியார்களை  தேடி சென்ற விவரம் கூறி உள்ளே வந்து அமருங்கள் 
என்றார் வைரவர் அம்மாதின் முகம் நோக்கி 
பெண்கள் தனித்திருக்கும் இடத்தில்யாமிருக்க மாட்டோம் கணபதீச்சரம் கோயிலில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறோம் அவர் வந்தவுடன் நாம் இருக்குந்தன்மையை கூறுவீர் என்றார் 
சிறுத்தொண்டர் அடியவர் ஒருவரையும் தேடி 
கிடைக்காது வருந்தி திருமாளிகை முன் வந்தார்.  திருவெண்காட்டு நங்கையார் கணவரைத் தொழுது வைரவர் வந்த விவரம் கூறி அவரை அமுதுண்ண அழைத்து வாரும் என்றார் அதுகேட்டு மகிழ்ந்த நாயனார் சென்று 
ஆத்திமரத்தின் அடியில் வைரவரைக்கண்டு 
அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நின்றார் .
நின்ற தொண்டரைப்பார்த்து சிறுத்தொண்டர் 
என்பது நீர் தானோ? என்று கேட்டருளினார் 
நாயனார் தொழுது அடியேன் தவத்தினால் தங்களைக்கண்டேன் தாமதிக்காமல் மனைக்கு எழுந்தருளி அமுதுசெய்ய வேண்டும் என்றார்.அதற்கு வைரவர் நாம் இருப்பது உத்தராபதி எமக்கு அன்புடன் அமுதூட்ட உம்மால் முடியாது அது உமக்கு அறிய செயலாகும் என்றார் சிறுத்தொண்டர் உரைத்தருளும் சுவாமி சிவனடியார் முயற்சி செய்தால் இல்லாததுவும் கிட்டும் என்றார்
வைரவர் அன்பரீர் நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்போம் அதுவும் பசு வதைத்து உண்போம் அதற்குரிய நாள் இன்று .அது உம்மால் இயலாது என்றார். நாயனார்  அடியவராகிய தங்கள் அமுதுக்கு இன்னவகை பசு என்று கூறினால் காலந்தாழ்த்தாமல் அமுது தயாரிக்க ஏதுவாகும் என்றார் 
வைரவரோ உமது அன்புக்கு மகிழ்ச்சி,நாம் உண்பது நரப்பசுவாகும் அதுவும் ஐந்து வயதுக்குள் அங்கம் பழுதில்லாமல் ஒருகுடிக்கு ஒருமகனாக இருக்கவேண்டும் 
தாயார் மடியில் தலை வைத்துப்பிடிக்க தந்தை மனமகிழ்ச்சியுடன் அரிந்து குற்றமின்றி அமைத்த கறி நாம் உண்பது என்றார்.
சிறுத்தொண்டரோ தேவரீர் அமுது செய்ய எதுவுமே அரிதில்லை சற்று இரும் தாங்கள் விரும்பியபடி அமைத்து வந்து அழைப்பேன் என்று கூறி சென்றார் 
சிறுத்தொண்டர் தமது திருமனை அடைந்து தமது மனைவியாரிடம் நடந்ததை கூறினார் 
ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு தேடுவோம். அப்படியே பொருள் கொடுத்து வாங்கினாலும் 
மகிழ்ச்சியோடு எந்த தாய் தந்தையும் அரிந்து தரமாட்டார்கள் எனவே நாம் பெற்ற புத்திரனை அழைப்போம் என்றார். கணவர் கூறக்கேட்ட அந்த உத்தமி அவ்வண்ணமே நம்மைக்காக்க வந்த மாமணியை பள்ளியினின்று அழைத்து 
வாரும் என்றார்  நாயனார் பள்ளிக்கு  சென்றதும் அழைக்காமலே பாதச்சலங்கை ஒலிக்க பிள்ளை ஓடிவந்து தந்தையை தழுவிக் கொண்டது திருப்புதல்வரை அழைத்து வந்து திருமஞ்சன நீராட்டி ஆடை அணிகலன் அணிவித்து கணவன் கையில் கொடுத்தார் அம்மையார்.குற்றமில்லாத அடியவர்க்கு அமுது செய்ய உரிய உடம்பு என்று உச்சி மோர்ந்தாரில்லை முத்தமிடவில்லை .தனது திருமாளிகையில் உலகார் அறியாவண்ணம் ஒருபுறத்தில் கொண்டுசென்று தாயார் பிடிக்க சீராளதேவரோ சிவனடியார் அமுது செய்ய இந்தசெயல் நடக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சியுற்றார் மகனின் மனநிலை அறிந்த நாயனார் வாள் கொண்டு ஒப்பற்ற மகனின் தலையை அரிந்தார்.புத்திரன் என்ற சொல்லின் பயனை இவன் நமக்களித்தான் என்று அகமும் முகமும் மலர அமுது தயார் செய்தார்கள் தலையின் இறைச்சி அமுதுக்கு ஆகாது என்று கருதி வேலைக்காரி சந்தனநங்கையிடம் கொடுத்து புதைத்து விடக்கட்டளையிட்டார். வகைவகையாக உணவு தயாரானதும் சென்று அடியவரை அழைத்து வருமாறு கணவனிடம் கூறினார்திருவெண்காட்டம்மையார் .நாயனாரும் 
வைரவர் உரைத்தவாறு அமைத்து முடித்ததை அளவற்ற மகிழ்ச்சியடைந்து திருக்கோயில் சென்று அவரின் திருவடி வணங்கி காலம் தாழ்த்தாமல் வந்து அமுது செய்யும் என்றார் 
வைரவரும் எழுந்து நடக்கலுற்றார்.அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த அம்மையார் எதிர்வந்து அழைத்து ஆசனத்தில் அமர்த்தி மாகேஸ்வர பூசை செய்தனர் .இலையிட்டு  அன்னமும் கறிகளும் படைத்தார்கள் .அதைப் பார்த்த வைரவர் நாம் சொன்னபடியே நரப்பசு
கொண்டு எல்லாம் அமைத்தீரோ? என்று கேட்டார். திருவெண்காட்டம்மையார்,தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என்று அகற்றினோம் மற்றவை யாவும் கறியமுது அமைத்துள்ளோம் என்று பகன்றார். அதுவும் கூட உண்போம் அதனையும் படையுங்கள் என்றார் அதுகேட்ட சிறுத்தொண்டர் நடுநடுங்கினார் அய்யோ கெட்டேன்  இத்தனை செய்தும் இப்பயிரவர் அமுது செய்யத் தடை நேர்ந்ததே ,சிவபெருமானே இனி என் செய்வேன் தலைஇறைச்சியையும் இவர் உண்பார் என்பது தெரியாமல் போயிற்றே என பலவாறு நினைந்து வருந்தினார் அம்மையாரும் செய்வதறியாது திகைத்தார் 
அதுசமயம் அமுத சஞ்சீவி வந்து உதவியது போலசந்தன நங்கை என்ற தாதியார்,தாங்கள் வருந்த வேண்டாம் தாங்கள் தலையை புதைக்க கொடுத்தபோது ஒருக்கால் வைரவர் 
தலையிறைச்சி  கேட்ககூடுமோ? என்று எண்ணி தனியே சமைத்து வைத்திருக்கிறேன் இதோ இருக்கின்றது என்று கொடுத்தார் . அம்மையாரும் நாயனாரும் களிப்புற்று வைரவர் முன் இலையில் படைத்தார்கள் .
அப்போது வைரவர் அன்பரே நாம் தனித்து உண்ணமாட்டோம் உடன் உண்ண ஒரு அடியாரை அழையும் என்றார். எந்தையே   இன்று எங்கும் அடியார் ஒருவரும்
காணப்பெற்றேனில்லை .அடியவரைக்கண்டு அடியேனும் திருநீறு பூசிகொண்டிருக்கிறேன் 
என்றார்.வைரவர் நல்லது,நல்லது நீரே அருகில் அமர்ந்து எம்முடன் உண்ணும் என்று 
அருளி இலை போட்டு பரிமாறச் சொன்னார் 
திருவெண்காட்டம்மையாரும் அன்னத்தில் பாதியும் இறைச்சியில் ஒரு கூறும் வயிரவர் ஆணைப்படி பரிமாறினார் .அதை நாயனார் உண்ணத்துவங்கும் போது தடுத்து நான் ஆறு மாதத்திற்குஒருமுறைஉணவுஉண்ணுகிறேன்  நானே உண்ண ஆரம்பிக்கவில்லை நீர் அதற்குள் உண்ண ஆரம்பித்துவிட்டீர்? நம்முடன் உணவு உண்ண உங்கள் மைந்தனை அழையும் என்றார்.இறைவரை நோக்கி எந்தையே அவன் இப்போது உதவான் என்றார் 
வைரவர் சிறுத்தொண்டரே நாம் உமது புதல்வன் வந்தால் தான் உண்போம் இப்போது உதவான் என்கிறீர் அவன் எப்போதும் உதவுவான் நீர் சென்று நாடி அழையும் என்றார் சிறுத்தொண்டர் மனைவியுடன் வெளியே சென்று மைந்தனை அழைக்கின்றார். பரமேஸ்வரன் திருவருளால் பள்ளியினின்று வருவார்போல சீராளதேவர் காலில் சதங்கை ஒலிக்க தளர்நடையிட்டு ஓடி வந்தார். பெற்றோர் மகிழ்ந்து இனி சிவனடியார் உண்ணப்பெற்றோம் என்று உவகை கொண்டனர் திருமகனை உச்சி மோந்து உள்ளே சென்றனர் வைரவராக வந்த முதல்வர் மறைந்தருளினார் அவரைக்காணாது சிறுத்தொண்டர் சிந்தை கலங்கி அடியற்ற மரம் போல் வீழ்ந்தார் மறைந்த அப்பரமபதி அன்னை உமையோடும்முருகக்கடவுளோடும்   வெள்ளை விடைமேல் வானிடை காட்சி 
கொடுத்தார் இனிய கறியமுது படைத்த 
அடியார்க்குத் திருவருள் தந்தருளினார் . சிறுத்தொண்டர் மனைவி மகன் மற்றும் சந்தன நங்கை ஆகியோருடன் மண்மிசை வீழ்ந்து வணங்கி திருவருளை எண்ணி கண்ணீர் வடித்தார் அந்நால்வரையும் உடன் அழைத்துக்கொண்டு இறைவர் சிவலோகத்திற்கு எழுந்தருளினார் .இறைவன் 
முழு நம்பிக்கையும் அன்பையும் பக்தியையும் காட்டினால் நாமும் நற்கதி பெறலாம் என்பதே சிறுத்தொண்டர் புராணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம்                         
 
            

Thursday, May 2, 2013

நமக்குள்ளே மிருகம்

                                   ஓம் நமசிவாய

நமக்குள்ளே மிருகம்

ஒரு யுகத்தில் நல்லசக்தியும் தீயசக்தியும்  வேறு வேறு லோகத்தில் இருந்து சண்டை யிட்டுக்கொண்டன உதாரணம் கந்தபுராணம் . பத்மாசூரனுக்கும் தேவர்களுக்கும் நடந்த போர் அடுத்த ஒரு யுகத்தில் ஒரே லோகத்தில் வேறு வேறு திசையில் இருந்து சண்டையிட்டுக் கொண்டன உதாரணம் இராமாயணம் அடுத்த ஒரு யுகத்தில்இந்த நல்லசக்தியும் தீயசக்தியும்  ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் இருந்து சண்டையிட்டுக் கொண்டன உதாரணம் மகாபாரதம் .அடுத்த நாம் வாழும் இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளேயே நல்லசக்தியும் தீய 
சக்தியும் ஒன்றோடு ஒன்று  போரிட்டுக் கொண்டுள்ளன.பல சமயங்களில் நல்ல சக்தியும் சில சமயங்களில் மிருக சக்தியும் வெற்றி பெறுகின்றன.

நல்ல சக்தி என்பது என்ன? நாம் செய்யும் அறச்செயல்கள் யாவும் நல்லசக்தியால் வந்தவை.தீயசக்தி மிருகசக்தி அசுரசக்தி என்பது பாவம் செய்வதையே முழுமுதலாக 
செய்பவை .  

முன் உள்ள யுகங்களில் இருந்து கடவுள் நேரில் தோன்றி வழிகாட்டுவதை  படிப்படியாக குறைத்து விட்டார் மக்களின்  தேடல் வளரட்டும் ஆன்மாவை தானே மீட்டுக் கொள்ள  பக்குவம் கொடுத்துள்ளார் . அந்த பக்குவம் பிராப்தம் நம்மை அடைய நிறைய தடைகளையும் உண்டு பண்ணி கஷ்டப்பட்டால் மட்டுமே கிடைக்கும்  என்ற எதார்த்தத்தில் மக்களை வழி  நடத்துகிறார். அதற்குள் தான் நாம் எத்தனை புல்லுருவிகள் போலிகள் எல்லாம் தாண்டி ஆத்மகுருவை நாடி நம்மைக் கடைத்தேற்ற வேண்டும் 

நமக்குள்ளே உள்ள நல்லசக்தி என்பது கடவுள் நம்மோடு இருக்கும்வரை வேலை செய்யும். கடவுள் நம்மோடு எப்போதெல்லாம்இருப்பார் . நாம் அவரை துதித்து வணங்கி தியானித்து இருக்கும்போதெல்லாம் இருப்பார். நல்ல சிந்தனை அப்போது தலை தூக்கும், செய்யும் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.கடவுளை மறுக்கும் உன்மத்தர்கள் நன்றாகத்தானே உள்ளார்கள் என்று கேட்பது புரிகிறது .சாக்கிய நாயனார் தினம் கல்லால் சிவலிங்கத்தை எறிவார் என் தெரியுமா?அவருக்கு கடவுளை ஈசனை எப்படி வணங்குவது என்று தெரியாது?
அதன் மூலமும் அவருக்கு முக்தி கிடைத்தது 
ஏனென்றால் செய்வன திருந்த செம்மையாக 
செய்தார்  
இந்த சோம்பேறி நாத்திகனும் அப்படியே தான் வணங்க வழிபட அதன் வழிமுறை பற்றி அறிந்து கொள்ள சோம்பல் வேறொன்று
மில்லை அவனுக்கு அருள் கிடைக்க காலம் 
இருக்கிறது அதுவரை டைம்பாஸ் செய்ய அவனுக்கு ஒரு டாபிக் தான் நாத்திகம் அப்போது அவனுக்கு கழிவறையும் ஒன்று தான் சாப்பாட்டுகூடமும் ஒன்றுதான் ,அது அதுக்கு உரிய மரியாதை தெரியாதே? தேனின் சுவையை சாப்பிட்டவரால் மட்டுமே உணர முடியும் தேன் சாதாரணமாக கிட்டுமா? அது 
போல தான் ஆன்மீகமும் வழிபாடும் .     

தீயசக்தி எப்போதெல்லாம் தலை தூக்கும்?
அதுவும் நம்மாலேயே வரும் நல்ல வார்த்தைகள் வராது சிந்தனையும் நன்றாக இருக்காது ச்சீ சனியனே நாசமாபோனவனே
போன்ற அமங்கலவார்த்தைகள் நம்மில்வரும்  செய்யும் செயல்கள் அப்படியே நடக்கும். உள்ளத்தில் உள்ளது உதட்டில் வெளிப்படும் . இவ்வாறு சிந்தனை செயல் நன்றாக 
இல்லாத மனிதன் நிலை எப்படி இருக்கும்? 
கஷ்டம் தானாகவே வரும். அவனை எல்லா கெட்ட காரியங்களும் செய்ய வைக்கும். மிருகங்களுக்கு  சிந்திக்க தெரியாது, அது சிந்தித்தால் அது பாவம் செய்யாது. அதனால் தான் சிந்தித்தும் நல்ல செயல் செய்யாத மனத்தை மிருகத்துடன் ஒப்பிடுகிறோம். நம்மிடத்தில் அந்த அசுரசக்தி மிருகசக்தி பலம்  இழந்து விலக நாம் பக்தியுடன் சிரத்தையுடன் பற்றற்ற  பகவானை பற்றுவதே சிறந்த வழி
அதுவே நம் முன்னோர்கள் பெரியோர்கள் காட்டிய அற்புதமான வாழ்வியல் நெறி வாழ்ந்து காட்டிய நெறி .அவர்கள் மிக்க அறிவாளிகள் இல்லையென்றால் அந்த ஜீன்களில் வந்த நாம் அறிவாளியாக இருக்க முடியாது.

தனக்குள்ளே உள்ள மிருகத்தை வெற்றி கொள்பவனே வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்தி வெற்றி கொள்கிறான் 


                       போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம்            
  

Wednesday, May 1, 2013

சர்வபிணி நீக்கும் மருந்து பதிகம்

                               ஓம் நமசிவாய

சர்வபிணி நீக்கும் மருந்து பதிகம்

                                               திருச்சிற்றம்பலம் 

பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 2

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 4

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 5

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 6

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 7

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் திருநீறே.

பாடல் எண் : 9

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.

பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே.

பாடல் எண் : 11

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
                                                   திருச்சிற்றம்பலம் 
                                              போற்றி ஓம் நமசிவாய  
  

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -3

                                                 ஓம் நமசிவாய 


திருநாவுக்கரசுநாயனார் புராணம்-3

அப்பூதியடிகளுக்கு அருள்புரிதல் 
பல புண்ணிய தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார் 
அங்கு திருநாவுக்கரசரை குருமூர்த்தமாக கொண்டு மக்கள் சாலை குளம் கிணறு தண்ணீர்பந்தல் பாடசாலை என அனைத்திற்கும் அவருடைய பெயரை வைத்து  அவரையே சதா நினைத்து பக்தி செய்து கொண்டிருந்தார் அப்பூதியார் அவர்கள் .அது கண்ட அப்பர் அங்கிருந்தவர்களிடம் கேட்டு அவர் திருமாளிகை சென்றார் .அவரை தொழுத அப்பூதியாரிடம் நீர் அமைத்த அறச்சாலை முதலியவற்றிற்கு நும் பேர் வைக்காமல் வேறொரு பேர் வைத்தது ஏனோ?
என்று வினவினார்.அது கேட்ட அப்பூதியடிகள் 
சிவபெருமானின் திருவருள் முழுதும் பெற்ற எமது ஆண்ட அரசு திருநாவுக்கரசரின் பேர் வேறொரு பேரோ? நீர் உரைத்தது தவறு, அவரை அறியாதார்அவனியில் யாருளர்?நீர் யார்? என்று சிறிது கோபத்துடன் கேட்டார் .
வாகீசர் இறைவரால் சூலைவலி தந்து சமண சமயத்தில் இருந்து வந்த அடியேன் என்று கூறினார்.அதுகேட்ட அப்பூதியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து குடும்பத்துடன்  வணங்கி  அவரை தன மனையில் உணவு செய்யுமாறு
வேண்ட அரசுகள் இசைந்தார்.விருந்துக்கு வாழைஇலை பறித்து வர தனது மூத்த மகன் 
மூத்த திருநாவுக்கரசை பணித்தார். சிறுவனும் மகிழ்ந்து தோட்டத்தில் வாழைகுருத்தை அறியும்போது கொடியநாகம் தீண்டியது. தாயிடம் இலையைக்கொடுத்து விடம் தீண்டியதை உரையாமல் வீழ்ந்து மாண்டான் 
அதுகண்ட அப்போதியடிகளும் அவர்தம் மனைவியாரும் ஆண்ட அரசு அமுதுசெய்ய தடையாகுமே என்று மகனின் உடலை மறைத்து மலர்ந்த முகத்துடன் வாகீசரை அழைத்து திருவடி விளக்கி அமுது செய்ய அழைத்தனர்.திருநாவுக்கரசர் தமது உள்ளத்தில் திருவருளால் தடுமாற்றம் ஏற்பட
மூத்த திருநாவுக்கரசர் எங்கே?என்று வினவினார்.அப்பூதியார் அவன் இப்போது இங்கு உதவான் என்றார் .நாயனார் உள்ளதை உரைப்பீர் என்ன அப்பூதியார் நிகழ்ந்ததை யுரைத்தார்.நன்று செய்தீர் இங்ஙனம் யார் செய்வார் என்று கருணைகூர்ந்து மகனது சவத்தை திருக்கோயிலின் முன் கொணரச் செய்து 

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே. 

என்றதிருப்பதிகம்பாடினார். இறைவன்   திருவருளால்மைந்தன்உயிர்பெற்றான்.பின்   உணவுஅருந்திதிருப்பழனம்சென்று அப்பூதியடிகளைசிறப்பித்துபதிகம் பாடியருளினார் 

படிக்காசு பெற்றது 

திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தருடன் 
ஆளுக்கொரு மடம் அமைத்து தங்கியிருந்த காலத்தில்பஞ்சம்ஏற்பட்டது.மக்கள் வறுமை  பட்டினியால் வாடினார்கள் .வீழிமிழலை இறைவர் இருவரின் கனவிலும் எழுந்தருளி 
படிக்காசுதருவோம் மக்கள் பசியாற்றுங்கள் 
என்று அருளி பீடத்தில் காசு அருளினார்.அது 
கொண்டு மக்கள் பசியாற்றி பதிகம் பாடி பணிந்தனர்.

வேதங்கள் பூட்டிய திருக்கதவந்திறத்தல் 
அப்பரும்சம்பந்தரும்மறைகள்திருக்காப்பிட்ட
வரலாறு கேட்டு சம்பந்தர் ,அப்பரே தாங்கள் 
திருவாயிலைத்திறக்கபதிகம்பாடியருளுங்கள்
என்றார்.அன்பின் பெருக்கால் காழி மன்னர் கூற கேட்டு வாக்கின் வேந்தார் பாடலரானார் 


பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ 
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ 
கண்ணினாலு மைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே 

வாகீசர் பாடி திறக்க சம்பந்தர் பாடி சாத்தவும் முறைபடுத்தினர்  

கயிலை காண விழைதல்
 திருக்காளத்தியில் இறைவனை தரிசனம் கண்டு பரவசம் பெற்று கயிலை சென்று மணிகண்டரைவணங்கும்பெருவிருப்பத்துடன் வடதிசைநோக்கி புறப்பட்டார் ,திருப்பருப்பதம் 
தலம் சென்று மல்லிகார்ச்சுனரைக்கண்டு  தமிழ்ப்பதிகம் பாடினார்அங்கிருந்து காசியை அடைந்து உடன்வந்தவர்களை அங்குவிடுத்து
வடதிசை நோக்கி நடந்தார் .மனிதர்கள் செல்ல முடியாதஅடர்ந்த கானகத்தில் நடந்து
தசைகள்  தேய்ந்தன இருந்தும் அன்பு தேயாதவராகி கரங்களால் தவழ்ந்து செல்வாராயினர் கரங்களும் தேய்ந்து மார்பினால் தவழ்ந்தார் மார்புந் தேய்ந்து சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன அப்போதும் மனம் தளராமல் புரண்டு புரண்டு சென்றார் பரமேசர் அவர் மேலும் உலகில் இனிய செந்தமிழ் பாடல் பாடும் பொருட்டு கயிலைக்கு சேர அருளாதவராகி முனிவர் வடிவில் சென்று விவரம் அறிந்து கயிலையை காண தேவர்களாலும் இயலாது நீர் செய்வது வீண் முயற்சி ,நீர் திரும்பி செல்வதே சரி என்றுஅருளினார்.அப்பரோஆளும்நாயகனைக் கயிலையில் காணாமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்றார் அவரின் உறுதி கண்ட உம்பர் நாயகன் விண்ணில் மறைந்து நின்று நாவுக்கரச எழுந்திரு என்று அருளி தேய்ந்தஉடம்புபழையஉருப்பெற்று செழிப்புற்றுஇருக்கபணித்தார் .இத்தடாகத்தில் மூழ்கி நமது திருக்கயிலாயக் காட்சியை திருவையாற்றில் காண்பாய் என்று மலர்ந்தருளினார் .அப்பர் ஐந்தெழுத்தை ஓதி அப்புனித வாவியின் கண் மூழ்கினார் திருவையாற்றில் எழுந்தார் அங்கு 
சிவசத்தி ரூபமாக கயிலை காட்சிகண்டார் 

திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப்பணிசெய்தார்.அங்குவந்த சம்பந்தரின் பல்லக்கு சுமந்தார்.பொன்னையும் 
மணியையும்கற்களுக்குநிகராகதடாகத்தில்      
எறிந்தார் .அவருடைய பக்தி வைராக்கியத்தை 
மன்பதர்கள்அறியும்வண்ணம் அரம்பையர் களை அனுப்பி மயக்கும்வண்ணம் செயல் புரிந்தும் சிறிதும் சித்தம் திரியாது இருந்தார்.
தாண்டகவேந்தர் எனும் அளவில் யாரும் பாட 
இயலாத அளவுக்கு திருத்தாண்டகங்கள் 
புனைந்தார்.உழவாரப்பணியின்முன்னோடியாக  
திகழ்ந்தவர் 

இறைவனடி சாரும் இன்பநிலை எய்துவதை 
திருவருட்குறிப்பினால் உணர்ந்த அப்பர் 
பூம்புகலூர் மேவிய புண்ணியரிடம் வேண்டி 


எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ
            எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
            கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
            ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
            பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

என்ற பதிகம் பாடி சித்திரை மாதம் சதயம் 
நட்சத்திரத்தில் நண்ணரிய சிவானந்த ஞான வடிவாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட 
அரசு அமர்ந்து இருந்தார் பேரின்பப்பேறு 
வாழ்வைப்பெற்றார்.

இறைவன் சூலை கொடுத்து ஆட்கொண்டார் .
அவரே சம்பந்தன் தன்னைப்பாடினான் 
சுந்தரன்பொன்னைபாடினான். நாவுக்கரசனோ என்னைப் பாடினான் என்று பெருமையாக 
உரைத்தபெருமைக்குரியவர்.அப்பர் சுவாமிகளின் ஒவ்வொரு பதிகமும் பாடலும் 
உள்ளம் உருக்குவதாயும் நம்மை நம் ஆன்மா 
பழவினை நீக்கம் பெற உதவுவதாயும்
உள்ளது.அந்தஞானகுருவின் குருபூசையில் கலந்துகொண்டு இறைவனால் நமக்கு
அருளப்பெற்ற அருபெரும் பதிகங்களை நாள்தோறும் ஓதி பயன்பெற குருவருளும் 
திருவருளும் துணை நிற்கட்டும் 


                         போற்றி ஓம் நமசிவாய


                              திருச்சிற்றம்பலம்