rudrateswarar

rudrateswarar

Thursday, January 23, 2014

திருநீலகண்ட நாயனார் புராணம்


                                                    ஓம் நமசிவாய 

 திருநீலகண்ட நாயனார் புராணம்

                            
                      "திருநீலகண்டத்துக்குயவனார்க்கும் அடியேன்"


அவதார தலம் - தில்லை
முக்திதலம்      - தில்லைப்புலீச்சரம்
குருபூசை திருநட்சத்திரம் - தை , விசாகம்   

25-01-14 -சனிக்கிழமை 


இறைவன் திருநடனம் புரியும், தில்லையிலே குயவர் குடியிலே பிறந்தவர் திருநீலகண்டர் இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோல அடியார்களிடத்து  எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர்.எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும்  நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இவரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். 

இவ்வடியார் , தம் மரபின் ஒழுக்கப்படி ஓடுகளைச் செய்து அடியார்க்கு வழங்கும் சிறந்த தொண்டினை மேற்கொண்டிருந்தார். திருநீலகண்டரின் மனைவியும் கணவனுக்கு ஏற்ற கற்புடைச் செல்வியாய் வாழ்ந்து வந்தாள். இவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் நாளில், ஊழ்வினைப் பயனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அவரது பக்தி உள்ளம் ஒரே ஒருமுறை தவறான பாதைக்குச் சென்றது. பொன்னம்பலவாணரின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகவும் விருப்பம் கொண்டவரானார். பரத்தையின் பால் பற்று கொள்ளவும் தவறினாரில்லை. இதை அறிந்த அவரது மனைவி மனம் வருந்தி கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல் இன்பம் பெருகவே ஊடல் கொள்கிறாள் மனைவி என்றெண்ணினார் நீலகண்டர். ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழுந்தாள்.ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மை தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள் .

நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாக வும் கொண்டிருந்த அடியார்  மனைவி, இவ்வாறு ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம் பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார். தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே எண்ணிப் பார்க்கலானர். எம்மை என்றதனால் மற்ற மாதரையும் என்றன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர் தனது மனைவியைப் பிற மகளிரைப் பார்ப்பது போலவே பார்க்கலானர். முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார். நீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு மிகச் சிறிய வீடுதான். அந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும் முதுமைப் பருவத்தை எய்தினர். 


சிவபெருமான், நீலகண்டரின் பெருமையை உலகிற்கு உணர்த்தத் திருவுளங்கொண்டார் . அதற்காக தமது கோலத்தை மாற்றிக் கொண்டு பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார்.ஓர் சாது போல் வேடமணிந்தார்.அயன், திருமால், இந்திரன் முதலிய தேவாதி தேவர்கள், தனக்குக் குற்றே வல் புரியும் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமான், திருவோடு தாங்கி  தெருவோடு நடந்து வந்து நீலகண்டரின் வீட்டை வந்து அடைந்தார்.

நீலகண்டரும் அவரது மனைவியும் பெருமானை வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். நீலகண்டர் பெருமானிடம், சுவாமி இவ்வடியேன் யாது பணி செய்தல் வேண்டும் ? என பயபக்தியுடன் வினவினார். எம்பெருமான் தன்னிடமிருந்த  திருவோட்டைக் காண்பித்து  நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை சொல்ல முடியாதது. விலை மதிப்பிட முடியாதது. கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டரிடம் கொடுத்தார். நீலகண்டர் பணிவோடு அதனை பெற்று சுவாமி  உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். 


சிவயோகியரும் தில்லை அடைந்து சில காலம் தங்கி பின் ஒரு  நாள் நாயனாரைக் காண முன்போல் வந்தார். திருநீலகண்டர் அடியாரை வரவேற்று, பாத கமலங்களைக்  கழுவி, ஆசனத்தில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டரிடம் திருவோட்டைத் தருமாறு கேட்டார். திருநீலகண்டர் விரைந்து சென்று திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்க்க அங்கு அதனைக் காணாது கலக்கமுற்று  மனைவி யிடம் ஓட்டைச் காணவில்லையே என்றார். ஓட்டை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்தது இருவருக்குமே நல்ல ஞாபகத்தில் இருந்தது. அப்படி இருக்க எப்படி காணாமல்  போகும் என்று இருவரும் நிலை தடுமாறினர்.

கவலை தோய்ந்த முகத்துடன் சிவனடியார் பக்கம் வந்து ஐயனே என்று அழைத்து தயங்கி நின்றார் நீலகண்டர். நாயனாரின் தயக்கத் தையும், பயத்தையும் முக மாற்றத்தையும் கண்ட சிவனடியார் சற்று கடுமையாகவே நீலகண்டரிடம், ஏனப்பா ! இத்தனை தாமதம் ? கொடுத்ததைக் கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் அவசரமாகப் போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் கொண்டு வந்து கொடுத்து விடு என் திருவோட்டை என்றார். அம்மொழி கேட்டுத் திடுக்கிட்ட நாயனார், உண்மையிலே யே அத்திருவோடு காணாமல் போய் விட்டது பெரியீர் என்று பணிவோடு பகர்ந்தார். திருவோடு எப்படி அங்கு இருக்கும் ? திருவோட்டைக் கொடுத்த திருச்சடையானே அதை மறைத்த உண்மையை நீலகண்டர் எப்படி அறிய முடியும்  திருச்சடையையும், நீலகண்டத்தையும், முக்கண்களையும் மறைத்த மறையவர் திருவோட்டையும் மறைத்து விட்டார். நீலகண்டர் உள்ளம் பதறினார். அவருக்கும் அவர் மனைவிக்கும் உலகமே இருண்டது போலக் காட்சியளித்தது அவரது மனைவியோ கண்களில் நீர் மல்க நின்றாள். அடியாரோ பரமசிவனை மனதில் தியானித்தார். பக்தனைச் சோதிக்க வந்த பரமசிவன் நெற்றி கண்ணைத் திறக்காதது தான் குறை! அந்த அளவிற்கு முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. அரனாரது கோபம் கண்டு அஞ்சிய நாயனார் அய்யனே  சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த பிழை பொறுத்தருளல் வேண்டும். திருவோடு மறைந்த மாயத்தை சிறிதும் நான் அறியேன். மன்னித்து விடுங்கள்! மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டுமாயின் தருகிறேன் என்று பணிவோடு இறைஞ்சினார்.

சிவனடியாருக்கு மேலும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ? நன்று நீலகண்டா ! நன்று ஓட்டின் அருமைபெருமை பற்றி நாம் கூறியதனால் அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என்ற சீறினார் செஞ்சடை வண்ணர் . அபச்சாரம் ! ஐயனே ! அபச்சாரம் ! உண்மையாகவே கூறுகிறேன் அடியேன் தங்களது திருவோட்டை திருடவில்லை என்று நீலகண்டர் கூறினார் . அப்படித் திருட வில்லை என்பது உண்மையானால் திருவோட்டை நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என்க  மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி நீரிடை மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும் என்றார் சிவயோகியாரின் ஆணை, நீலகண்டரின் மனத்தை மேலும் புண்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானார். தமக்கும்  மனைவிக்கும் உள்ள பிணக்கை வெளியிட இயலாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் இயலாது என்று முடிவாகக் கூறிவிட்டார் நீலகண்டர். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா  வழக்குமன்றம் செல்வோம் என்று முடிவாகச் சொன்னார் எம்பெருமான். திருநீலகண்டர் அதற்கு சம்மதிக்க எம்பெருமான் முன்செல்ல நீலகண்டரும் அவரைப் பின் தொடர்ந்தார். 


இருவரும் தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவையை அடைந்து அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அம்பலத்தரசர். நீலகண்டரோ, ஓட்டைத் திருடவில்லை என ஒரே முடிவாக மொழிந்தார். அவையோரும்  அங்ஙனமாயில் சிவயோகியார் விருப்பப்படி நீரில் மூழ்கி சத்தியம் செய்வது தானே என்றனர். நீலகண்டர் மனைவியின் கரம்பற்றி , நீரில் மூழ்க மட்டும் சம்மதிக்கவே இல்லை. ஆனால் அவையினரோ, நீரில் மூழ்கிச் சத்தியம் செய்வது தான் முறை என்று தங்கள் முடிவான தீர்ப்பைக் கூறினர்.சித்தம் கலங்கிப் போன சிவனருட்செல்வர், மனைவியைத் தான் உடலால் தீண்டுவதில்லை என்ற விவகாரத்தை கூறாமல் பொருந்திடும் உரிய வகையில் மூழ்கித் தருவேன் என்று கூற அவையோரும் அதற்கு சம்மதித்தனர்.

அடியார் இல்லம் சென்று, தம் மனைவியாரை அழைத்து கொண்டு திருப்புலீச்சுரத்திலுள்ள   பொற்றாமரைக்குளத்தில் மூழ்கி  எழ விரைந்தார். அனைவரும் திருக்குளம் வந்தனர். நேர்மையின் நிறைவான நாயனார், மூங்கில் கழி ஒன்றினை கொண்டு வந்து அக்கழியின் ஒரு பக்கத்தைத் தாமும், மறு பக்கத்தைத் தம் மனைவியையும் பற்றிக் கொள்ளச் செய்தார். அதுகண்ட அரனார் இல்லாளின் கரம் பற்றியே நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என கடுமையாக கூறினார். வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி கழியைப் பிடித்துக்கொண்டார். மனைவி கழியினை மறுபுறம் பற்றிக் கொண்டாள். அவையோரின் சம்மதத்தைக்கூட பாராமல் இருவரும் குளத்தில் மூழ்கினார்கள். திருக்குளத்தில் மூழ்கி எழுந்த நீலகண்டரும், அவரது மனைவியாரும் இறைவன் அருளால் முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். இதுவரை அங்கிருந்து வழக்காடிய சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். விண்ணில் மலர்மாரி பொழிந்தது . அனைவரும் வியப்பில் மூழ்க ஆலயத்து மணிகள் ஒலித்தன ! சங்கு முழங்கியது ! எங்கும் இசை வெள்ளம் பெருகியது! வானத்திலே பேரொளிப் பிரகாசம் பிறந்தது. ஒளி நடுவே மறை முதல்வோன் உமாதேவி  யுடன் விடை மேல் காட்சி அளித்தார். எங்கும், ஹர ஹர சங்கர  என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. திருநீலகண்டரும் அவரது மனைவியாரும் அவையோரும் மற்றோரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஐம்புலன்களையும் வென்ற அடியவர்களே என்றும் குன்றா இளமையுடன் நலமுடன் இருப்பீர்களாக ! அருளினார் எம்பெருமான். திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை மாறாமல், இன்பமுடன் புவனியில் நெடுநாள் வாழ்ந்து அரனாரையும் அவர் தம் அடியார்க ளையும் போற்றி வழிபட்டு நீடுபுகழ் பெற்றனர்










                       போற்றி ஓம் நமசிவாய 




                            திருச்சிற்றம்பலம்

Wednesday, January 15, 2014

சண்டேசுவர நாயனார் புராணம்

                            
                                                        ஓம் நமசிவாய


சண்டேசுவர நாயனார் புராணம்

 " மெய்ம்மையே  திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த 
தாதைதாள்  மழுவினாலெறிந்த அம்மையான்  அடிச்சண்டிப் பெருமானுக்கடியேன் " 


அவதார தலம் - திருச்சேய்ஞலூர்  முக்திதலம்      - திருஆப்பாடி
குருபூசை திருநட்சத்திரம் - தை  உத்திரம்  

21-01-14 -செவ்வாய்கிழமை 

 
திருச்சேய்ஞலூர் சிறப்பு மிக்க பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டில் மண்ணியாற் றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல்லிசையும், பாலிற்கு இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுத் தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றது இத்திருத்தலம் .


முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கிய முருகப்பெருமான் அமரர்களும், பூத கணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகு திருநகரம் ஒன்றை நிர்மாணித்து அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடு செய்தார். சேய் சிவபூசை செய்த இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. 

இந்நகரில் அந்தணருள் ஒருவர் தான் எச்சதத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர் தான் விசாரசருமர் . நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மர் , ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த தேர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்க ளின் உட்பொருள்களில் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்து உள்ள மணம், மலரும் தருணம் வெளிப் படுவது போல், கல்வி பயில ஆரம்பித்த போதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. பரமனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்த அந்தணர் குலக்கொழுந்து!

விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்ப பெற்றோர்கள் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம் ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார். ஒரு நாள் விசாரசருமன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்க அங்கே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்ட சிறுவனுக்குக் கோபம் வந்து , பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரசருமர் திடுக்கிட்டார். அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்று  அவன் பசுவை மேலும் அடிக்காமல்  தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறினார். எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையன அல்லவா ? அரனார் திரு மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமை யும்  ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் தேவியாருடன் எழுந்தருளும்   இடபம் காமதேனு எனும் ஆவின் திருக்குலத் தைச் சேர்ந்ததல்லவா?  பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், நெய் ,மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், ரிசிகளும் , முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத் தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் காப்பதே  நம் கடமை. ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனி இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.

விசாரசருமர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை மறையவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அனுதினமும் விசாரசருமர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விட்டு நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார்.  


பெற்றோர்கள் தாம் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் விசாரசருமர். ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார் . மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு, சமிதை சேமித்துக் கட்டாகக் கட்டிக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவ்வாறு ஆநிரைகளை அன்புடனும், ஆதரவு டனும், பொறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். இவரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன. ஆநிரைகள் விசாரசருமரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் விசாரசருமர் வெயிலில் நின்றால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்கார நிழலைத் தரும். கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் விசாரசருமரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பொழியும் அப்பாலை வீணாக்காமல் பரமனின் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என எண்‌ணினார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அந்த இடத்தில்  கோயில் அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டி கோபுரமும் அமைத்தார். மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உள்ளத்திலே பக்தி வெள்ளம் பெருக பரமனுக்கு பூசையும், அபிஷேகமும் செய்ய எண்ணினார். அருச்சனைக்கு மலர் பறித்து வந்தார்.  பாலை சேமித்து  வேதம் ஓதி அபிஷேகம் செய்தார். மலர்களால் சிவலிங்கத்தை அன்புடன்  அர்ச்சனை செய்தார். சேய்ஞலூர் அரனாரை முருகப்பெருமான்  வழிபட்டாற்‌போல் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு நித்தம் தவறாமல் நடந்து வந்தது. இவர் செய்யும் அபிஷேக பாலும் அர்ச்சனை மலர்களும் சேய்ஞலூர் பரமனின் பாதார விந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார். இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும் ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னை விட அதிக பாலைப் பொழிந்தன. 



ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலி ஒருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே இது அடுக்குமா? என்று கேட்டான். அவன் வார்த்தைகள் இவரது காதுகளிலே விழவில்லை. எப்படி விழும் ? இவர் புலன்களை அடக்கி தவசி போல் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சதத்தனிடம் சென்று விஷயத்தை கூறி மகனைக் கண்டிக்க கூறினர் . எச்சதத்தன் மகனைக் கண்டிப்ப தாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்  மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தார் எச்சதத்தன். மறுநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பசுக் களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். மகன் அறி‌யாமல் பின் தொடர்ந்து மண்ணியாற்றின் கரையை அடைந்த எச்சதத்தன் அங்குள்ள குரா மரம் ஒன்றில் ஏறி மறைவாக அமர்ந்து கொண்டு மகனை கண்காணித்தார் . விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நீறாடி ஐந்தெழுத்தை செபித்து மலர் கொய்து கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் பிரதிஷ்டை செய்து குடங்களில் பாலை வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரசருமர் பக்தியில் பூசையில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌ எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் துவங்கினார் மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவருக்கு அகக்கண் களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்து சினத்தால் பொங்கி எழுந்தார் . மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டு தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கி , கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தார் எச்சதத்தன் விசாரசருமரோ அடிபட்டும்  உணர்வு பெற வில்லை. பூசையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சதத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடாமல் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினார் . எச்சதத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌ கோபத்தை உண்டாக்கியது. பால் நிரம்பிய  பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ள அதுவரை பூஜையில் மெய் மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப்பாலை கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குந்தகமாக நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தை என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டிக்க அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளிய  தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சதத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சதத்தன் உயிரை இழந்தார் . இதுவரை நடந்த ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார். அச்சமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமா தேவியுடன் விடையின் மேல் எழுந்தரு ளினார் . பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சி யளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம் கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் விசாரசருமரை வாரி அணைத்து, உச்சி மோந்து மகிழ்ந்தனர். இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப் பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குலமைந்தர் சிவப்பழமானார். எம்பெருமான் விசார சருமருக்கு அருள் செய்து நம் அடியார்களுக் கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் தந்தோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சதத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையை தன் மகன் கையாலேயே பெற்று, பின் அவனால் பாவம் நீங்கி, சிவலோகபதம் பெற்றார் . விசாரசருமர் பரமேசுவரனின் திருவருள் அணைப்பிலே பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருள் தாளினை அடைந்தார்.








                         போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம் 

Tuesday, January 14, 2014

சைவ காலண்டர் - தை


                              ஓம் நமசிவாய

சைவ காலண்டர் - தை  

தை
1 ஆம் நாள் 14-01-14 - செவ்வாய் -பொங்கல்

2 ஆம் நாள் 15-01-14 - புதன் -பௌர்ணமி

4 ஆம் நாள் 17-01-14 - வெள்ளி - தைப்பூசம்

6 ஆம் நாள் 19-01-14 - ஞாயிறு -சதுர்த்தி

8 ஆம் நாள் 21-01-14 - செவ்வாய் - சண்டேசுவர நாயனார் குருபூசை

11 ஆம் நாள் 24-01-14 - வெள்ளி -தேய்பிறை அஷ்டமி

12 ஆம்நாள் 25-01-14 - சனி -திருநீலகண்ட நாயனார் குருபூசை, தாயுமானவர் குருபூசை 

15 ஆம் நாள் 28-01-14 - செவ்வாய் - பிரதோசம்

16 ஆம் நாள் 29-01-14 - புதன் - சிவராத்திரி

17 ஆம் நாள் 30-01-14 - வியாழன் - அமாவாசை

19 ஆம் நாள் 01-02-14 - சனி - அப்பூதியடிகள் குருபூசை

21 ஆம் நாள் 03-02-14 - திங்கள் - சதுர்த்தி

22 ஆம் நாள் 04-02-14 - செவ்வாய் - சஷ்டி , கலிக்கம்பர் நாயனார் குருபூசை

23 ஆம் நாள் 05-02-14 - புதன் - திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் குருபூசை

25 ஆம் நாள் 07-02-14 - வெள்ளி - கிருத்திகை

28 ஆம் நாள் 10-02-14 - திங்கள் - கண்ணப்ப நாயனார் குருபூசை 

29 ஆம் நாள் 11-02-14 - செவ்வாய் - அரிவாட்டாய நாயனார் குருபூசை 

30 ஆம் நாள் 12-02-14 - புதன் - பிரதோசம் 



                        போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்