ஓம் நமசிவாய
பிரதோஷத் திருமுறை பாடல்கள்
திருமுறை -1
ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்தளித்தான் தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலல் காய்ந்தானூர் காழிந் நகர்தானே
திருமுறை-2
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்டாமரை மேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே
திருமுறை -3
ஆலநீழலுகந்த திருக்கையே ஆன
பாடலுகந்த திருக்கையே
பாலின் நேர்மொழியாள் ஒரு பங்கனே
பாத மோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்
மன மேவிய பூதனே
ஆலநஞ்சுஅமுதுண்டகளத்தனே
ஆலவாயுறை அண்டர்கள் அத்தனே
திருமுறை -4
ஆலலால் இருக்கையில்லை அருந்தவ முனிவர்க்கு அன்று
நூலலால் நொடிவதில்லை நுண்பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுதமில்லை ஐயன் ஐயாற னார்க்கே
திருமுறை -5
ஆலமுண்டடு அழகாயதொர் ஆனையார்
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலமாய கொழுஞ் சுடர் ஆனையார்
காலவானை கண் டீர் கடவூரரே
திருமுறை -6
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை
ஆலதன்கீழ்அறம்நால்வர்க்கருள்செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்
பைங்கரும்பாய்அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
திருமுறை -7
ஆலந்தான் உகந்தமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திருமுறை -8
கோலாலமாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ
திருமுறை -9 (திருவிசைப்பா)
கோலமே மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா காமநாசா
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
கோயில் கொண்டாட வல்லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே.
திருமுறை -9 (திருப்பல்லாண்டு )
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டில் சிதையும் சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதம் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
திருமுறை -10
அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே
திருமுறை -11
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு
திருமுறை -12
விண்ணாள்வார் அமுது உண்ண
மிக்கபெரு விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே
கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்திங்கு
யான்காண எழில் பவள
வண்ணா கண்ணளித்து அருளாய்
என வீழ்ந்து வணங்கினார்
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment