ஓம் நமசிவாய
வருங்கால வைப்பு (சேமநல ) நிதி
இவ்வுலக வாழ்வில் நாம் வாழும் சிறிது காலத்திற்கே வைப்பு நிதி சேம நலநிதி என்ற சேமிப்பு தேவைப்படுகிறது . அதுவும் ஐம்பத்தியெட்டு வயது முதிர்ந்த பின் நமக்கு அற்ப காலத்திற்கே பயன் தரும் .ஆனால் அழிவில்லாத இந்த உயிருக்கு நாம் என்ன சேம நலநிதி (செல்வம்) ஈட்டுகிறோம். இப்புவியில் நாம் ஈட்டும் எதுவும் இவ்வுடலோடு நின்று விடகூடியது .
உயிருடன் கூட வருவது எது ? அப்பர் சுவாமிகள் அருளியது போல உற்றார் ஆருளரோ ? உயிர்கொண்டு போம்பொழுது குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ ? . அப்படி இருக்க பிறவிதோறும் நமக்கு அருள்புரியும் எம்பெருமானைத் தவிர வேறு யார் துணை . யார் துணையோ அவரைத் தவிர நமக்கு வேறு யாரால் உயிருக்கு நன்மை செய்ய முடியும் ?
சிவபெருமானின் திருவடியும் திருநாமமும் அவன் திருப்பணியும் திருமுறைகளும் திருத்தொண்டும் தரும் சிவபுண்ணியங்களே நமக்கு சிறந்த வருங்கால சேமநல நிதியாக இருக்க முடியுமே தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது .
நம் அருளாளர் பெருமக்கள் அருளிய சில தேவார அமுதுகள் அதை நமக்கு உணர்த்துகின்றன .
1.சம்பந்தர் தேவாரம்
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித் தம்
சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே 2-64-5
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களை யும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்க்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்
2.அப்பர் தேவாரம்
அச்ச மில்லைநெஞ்சே அரன் நாமங்கள்
நிச்ச லும் நினையாய் வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே 5-60-2
நெஞ்சமே அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்
3.சுந்தரர் தேவாரம்
பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
புறம்ப யந்தொழப் போதுமே 7-35-2
அறியாமை இருள் சூழ்ந்த மனமே, நாம் வாழ்கின்ற ஊரும், மணந்த மனைவியும், பெற்ற மக்களும், இன்ன பிற சுற்றத்தாரும், தேடிய பொருளும், அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினர் அல்லர் . அதனால், என்றும் உடன் தொடர்ந்து வாரா . ஆதலின், அவர்களைப் பற்றிக் கவலை ஒழி. இனி நாம், சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும், மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். புறப்படு.
ஒன்றலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு
உடல் தளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே 7-64-5
உள்ளமே, ஒரு பொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து, அந் நினைவின் வழியே, மெய் வருந்த, அரிய பெரிய பொருள் ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்கு உரைத்தானும் பொய் என்பதனை நினை. மனமே, மலைபோலும் தோள்களை உடையவனும், பல கூத்துக்களில் வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளி இருக்கின்ற, நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை, சென்று அடைவாயாக.
இனியாவது நாம் நுனி நாக்கு ருசி போல உள்ள உலக இன்பங்களை அளவோடு வைத்து உண்மையான நிலையான வருங்கால சேம நல நிதியை சேர்த்துவோம் . என்றும் இன்பம் பெருக்குவோம் .
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment