rudrateswarar

rudrateswarar

Saturday, November 23, 2013

மகாபிரதோஷம் - கார்த்திகை

       
                                            ஓம் நமசிவாய 



மகாபிரதோஷம் - கார்த்திகை 



பிரதோஷ நேரம்  என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த நேரம்  சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை . இது சிவனை வழிபட ஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்தும் உய்வு  பெறவும் புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டும்  மகாதேவர்  நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் . உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால் அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்து வணங்கிப் பேறு பெறுகின்றன . எனவே அரிய மானுடப் பிறப்பாகிய நாமும்
சிவனையும் நந்தியெம்பெருமானையும்  அபிஷேகித்து, அர்ச்சித்து ,ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிகிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது  பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்
 
பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்
 
பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு சமமானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
 
இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.
 
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் 

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ? 


செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா?


செய்யத்தகாதவை 
 
1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் .
 
2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )
 
3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  
4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக் கூடாது    
 
5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
  
6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்
  
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 
 
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது கொடிமரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்கவேண்டும் 
 
9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.
எந்நேரமும் சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
 
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   
 
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை அந்த நேரத்தில் செய்யகூடாது        

செய்யத்தகுந்தவை  
 
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ள சுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
 
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
 
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 
 
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
 
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 
 
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய ஏழை பங்காளனின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய  சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்
 
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 
 
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  
 
10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
 
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        

இந்த கார்த்திகை மாதம் உலக உயிர்கள் மீது சிவபெருமான் கொண்ட கருணையின் காரணமாக இரண்டு சனி பிரதோஷங்கள் வருகின்றன .(30-11-2013 , 14-12-2013)அதை நாம் சரியாக பயன் படுத்தி நமது தீ வினைகளால் படும் அல்லல் தீர்ப்போம் சனிப்பிரதோஷ புண்ணிய வேளையில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக

                           
 
                      போற்றி ஓம் நமசிவாய 


                                                    
                          திருச்சிற்றம்பலம்

Tuesday, November 19, 2013

சைவ காலண்டர் - கார்த்திகை

                                                 ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் - கார்த்திகை


17 -11-2013  லிருந்து  15-12-2013 வரை

கார்த்திகை  மாதம் 

01ஆம் நாள் 17-11-13-ஞாயிறு  - மகாதீபம் ,கிருத்திகை ,பௌர்ணமி

02ஆம் நாள் 18-11-13-திங்கள்  - முதல் சோமவாரம் 

05ஆம் நாள் 21-11-13-வியாழன் - சதுர்த்தி 

07ஆம் நாள் 23-11-13- சனி -சஷ்டி 

09ஆம் நாள் 25-11-13-திங்கள் -இரண்டாம் சோமவாரம் , பைரவாஷ்டமி

11ஆம் நாள் 27-11-13- புதன் -மெய்ப்பொருள் நாயனார் குருபூசை 

12ஆம் நாள் 28-11-13-வியாழன் -ஆனாய நாயனார் குருபூசை 

14ஆம் நாள் 30-11-13- சனி -மகாபிரதோசம் 

15ஆம் நாள் 01-12-13- ஞாயிறு -சிவராத்திரி

16ஆம் நாள் 02-12-13- திங்கள் -மூன்றாம் சோமவாரம் ,அமாவாசை 

18ஆம் நாள் 04-12-13- புதன் -மூர்க்க நாயனார் குருபூசை 

19ஆம் நாள் 05-12-13- வியாழன் -சிறப்புலி நாயனார் குருபூசை 

20ஆம் நாள் 06-12-13- வெள்ளி -சதுர்த்தி 

22ஆம் நாள் 08-12-13- ஞாயிறு -சஷ்டி 

23ஆம் நாள் 09-12-13- திங்கள் -நான்காம் சோமவாரம்

28ஆம் நாள் 14-12-13- சனி -மகாபிரதோஷம் 

29ஆம் நாள் 15-12-13- ஞாயிறு - கணம்புல்லர் நாயனார் குருபூசை ,கிருத்திகை 




                       போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்     

Monday, November 4, 2013

பூசலார் நாயனார் புராணம்

    
                                                      ஓம் நமசிவாய

பூசலார் நாயனார் புராணம்


"மன்னிய சீர் மறைநாவல்  நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்"

அவதார தலம் - திருநின்றவூர்
முக்திதலம்      - திருநின்றவூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி , அனுஷம்
05-11-13 செவ்வாய்க்கிழமை  


ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். 


பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தே தான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை, அகத்திலேயாவது  அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா ? என்று தமக்குள் தீர்மானித்தார். அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருகம், தூபி, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , யாக மண்டபம் , அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, ராஜ கோபுரம் முதலிய அனைத்தும் பொலிவோடு உருவாக்கினார்.


அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார். 



நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்ப எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது அகத்தே கோயில் எழுப்ப . எல்லாம் முடிந்த பின் கும்பாபிஷேக நாளை நிச்சயித்தார் . கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய தர்ப்பை , சமித்து , நெய் ,சிருக்கு ,சிரவம் முதலிய அனைத்தும் ஆயத்தம் செய்தார் 

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர்கோன் என்ற பல்லவ மன்னன் ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டினான் . நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியில்  கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் மன்னன். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளி அன்பா ! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். பூசலாரின் அன்பை இவ்வாறு அரசனுக்கு இறைவர் அறிவித்தார் .


நின்றவூர்ப் பூசல் அன்பன்
          நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை 

           நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
           ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
           கோயில் கொண்டருளப் போந்தார்.
 


பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்து  கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வர ஆவல் கொண்டான் மன்னன் . திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுதும் தேடியும் எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூர் அந்தணர்களை வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்ட மன்னன். பூசலாரைக் கண்டு  அவரது அடிகளைத் தொழுது எழுந்தான். அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில்  அமைத்துள்ளதாக வும் , இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். அடியேன், தேவரீர் கட்டி முடித்துள்ள திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன் , அத்திருக்கோயில் எங்குளது? என்று பணிவோடு வணங்கினான் மன்னன். 


மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார். அவர் உள்ளம் மருண்டார் . மன்னனிடம் காடவர் கோமானே அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினாரோ ? இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டேன்.  பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடிய வில்லை , அகத்திலாவது  கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டி , இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார். 


மன்னவன் உரைப்பக் கேட்ட
         அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
          எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
           மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து 
           எடுத்தவா றெடுத்துச் சொன்னார்



அடியார் மொழிந்தது கேட்ட மன்னன் மருண்டான். உள்ளக் கோயிலின் பெருமையையும் அதில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையையும் எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில்  இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான். பின் மன்னன் தன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினான் 

பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் ஆறு காலமும் ஆகமநெறி வழுவாமல் உள்ளக் கோயில் முக்கண் பெருமானை வழிபட்டு வந்த நாயனார் முடிவில் அம்பலவாணருடைய அடிமலர் சார்ந்து ஆராவமுத இன்பம் எய்தினார் 




                           போற்றி ஓம் நமசிவாய 




                             திருச்சிற்றம்பலம் 

Sunday, November 3, 2013

மெய்கண்டதேவர் குருபூசை

                                          
                            ஓம் நமசிவாய


மெய்கண்டதேவர் குருபூசை

" ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த 
  மெய்கண்டார் இணைத்தாள் போற்றி "

அவதார தலம் - பெண்ணாடம் 
முக்தி தலம்     - திருவெண்ணெய் நல்லூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி ,சுவாதி 
03-11-2013 ,ஞாயிற்றுகிழமை  

  
சைவசமயத்தில் சமயக் குரவர்கள் நான்கு பேர் . அது போல சந்தான குரவர்கள் நான்கு பேர் . 

சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்றவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். அதனால் இது சந்தான பரம்பரை என்று 
கூறப் பட்டது . சந்தானகுரவர்களால் சைவ சித்தாந்த சாத்திரங்கள் சொல்லப்பட்டன . அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர் அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், அவரின் சீடர் உமாபதி சிவம்.
 

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திர மரபும், சைவ சமயத்துக்கான குரு மரபும் தோற்று வித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் (கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே) பெண்ணாடம் என்னும் ஊராகும். 13ஆம் நூற்றாண்டில் அச்சுதக்களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக்கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. தம் குலகுருவான சகலாகம பண்டிதரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகம் பாடல் கிடைத்தது.

 

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு 
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே


என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ள நினைவா யினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்ற இந்த வரிகளை சுட்டிக்காட்டி  பிள்ளைப்பேறு உறுதி என்று ஆறுதல் கூறி திருவெண்காடு சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும் கவலை வேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுதக்களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று  சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய மூன்றிலும்  நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபட்டார் . ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுதக்களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் ஞானசம்பந்தனைப் போன்றதொரு மகன் பிறப்பான்.” என்று அருளினார்.


அவ்வாறேஅச்சுதகளப்பாளருக்கு  ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திருவெண் காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்று திருநாமம் சூட்டி வளர்த்தனர் . குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்தி மிகக்கொண்டு விளங்கிற்று. குழந்தைக்கு இரண்டு வயதில்  ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கயிலையில் நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற எட்டுபேருள் சனற்குமாரரும் ஒருவர் அவருடைய ஞானப்புதல்வர் சத்திய ஞான தரிசினி இவரிடம் ஞான உபதேசம் பெற்றவர் பரஞ்சோதி முனிவர் .அவர் கயிலையில் இருந்து அகத்தியரை சந்திக்க ஒளியையே விமானமாக்கி பொதிகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய் நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவரின் ஒளி விமானம் வானவீதியில் செல்கையில் திருவெண்ணெய் நல்லூரை அடைந்ததும் மேலே செல்ல முடியாமல் நின்று விட்டது  அங்கு சுவேதவனப் பெருமாளைக் கண்டார் ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய அந்த குழந்தை பெரிய மகானாக வரப் போவதும், இந்த குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு இருப்பதையும் உணர்ந்து  விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கிய அவர் குழந்தையைத் தம் கைகளால் எடுத்து ஸ்பரிச, நயன தீட்சை அளித்து சிவஞான உபதேசமும் செய்வித்தார். 


பரஞ்சோதி முனிவர் தன் குருவின் பெயரான  சத்தியஞான தரிசினி என்ற பெயரையே தமிழாக்கம் செய்து மெய்கண்டார் என தீட்சா நாமமாக அருளிச் செய்தார். அன்று முதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் என்ற திருநாமத்துடன் விளங்கினார். சமயகுரவர் களில் முதல்வரான திருஞானசம்பந்தர் தம் மூன்று வயதில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டு அன்னையின் ஞானப்பாலுண்டு எப்படி ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தான குரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் இரண்டாம் வயதிலேயே குருவால் சிவஞான உபதேசம் பெற்றார். மெய்கண்டாரால் சிவஞானம் எங்கும் பரவ வேண்டும் என்பதற்காக தமிழில் சிவஞானபோதம் செய்தருளினார்

மெய்கண்டார் தன்னிடம் உபதேசம் பெற வருபவர்களுக்கு சைவ சித்தாந்தத்தை உபதேசித்துவந்தார். சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி எட்ட அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு பிஞ்சுப்  பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவத்துடன் அவரைக் காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்து சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டு விரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதர் தன் ஆணவம் அடங்கி மெய் கண்டாரின் பார்வையால் நயன தீட்சை பெற்று பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி சிவம் என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்களோடு அருள் நந்தி 49-ஆம் மாணவரனார் .சாத்திர நூல்கள் பதினான்கினுள் உண்மை விளக்கம் அருளிய மனவாசகம் கடந்தார் என்பவரும் மெய்கண்டாரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற 49 பேருள் அவரும் ஒருவர் .அடுத்த  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய் தெரிகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டறிந்து அங்கே மெய்கண்டாருக்கு  நினைவாலயம் கட்டி மெய்கண்டாரின் திருஉருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது  


மேலும் திருவாவடுதுறை ஆதீன மாத இதழ் 
மெய்கண்டார் என்ற பெயருடன் இப்பொழுது வெளிவந்து கொண்டுள்ளது 



                       போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்