rudrateswarar

rudrateswarar

Monday, April 1, 2013

நாயினும் கடையேன்

                                   ஓம் நமசிவாய


நாயினும்  கடையேன்  
                     

நாயினும் கடையேன் என்று தன்னை 
மாணிக்க வாசக சுவாமிகள் கூறிகொள்கிறார்  ஏன்அவ்வாறுசொல்கிறார்?
மற்ற ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் 
சொல்வதனால் நாயின் அப்படிப் பட்ட குணங்கள் தான் என்ன என்று சிந்திப்போம்
தன்னை  பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன், ஊற்றையேன்  என்று கீழ் நிலைப்படுத்திக் கொண்டும்  திருப்தி இல்லை போலும்

நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன் என்று  திரும்ப  திரும்ப  தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார்   
நாய் தன் தலைவனை அறியும் தன்மை 
உடையது மேலும் தன் தலைவன் மேல்  விசுவாசம் மிக்கது .சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களை பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார் அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது . தனக்கு பிடிக்காது  ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது  போல நாய்   தன் வாயினால் கக்கியதை தானே திரும்ப திண்ணும் இயல்புடையது .இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் தன்மையைக் குறிக்கிறது . ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய  மனிதனுக்கும் தான் வெறுத்ததையே  மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு  
ஆக ஐந்தறிவு உள்ள நாயின் குணத்தை உயர்த்தி தான் அதை விட கீழானவன் என்கிறாரா? அல்லது கீழ்தரமான நாயை விட நான் கீழானவன் என்ற அர்த்தத்தில் கூறு கிறாரா? எப்படி தன்னை ஐந்தறிவு ஜீவனை விட கீழானவன் என்று கூறும் பாங்கு என்ன ?
ஆன்மாவானது  பிறவி, பந்தம், பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனை திரும்ப திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும்  பிறவித் தளையில் இருந்து விடுபட முயற்சிப் பதையும்  இறைவனின் திருவடியை சேர தடையாய் இருப்பதையும்  கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின்  பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும் என்பதே கடை நாயினும் கீழான இந்த நாயேனின் கருத்து

பிழை இருப்பின் மன்னிக்கவும்

இது சார்ந்த பெரியோர்களின் கருத்துக்கள் 
வரவேற்கபடுகிறது   
திருவாசகத்தில் 67 இடங்களில் நாயேன் என்று பாடியுள்ளார் 

1.சிவபுராணம்    (60வது அடி)

நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

2.கீர்த்தித் திருஅகவல்   (127வது அடி )

நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென

3.திருவண்டப் பகுதி   (164 வது அடி )

சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

4.  திருவண்டப் பகுதி (172 வது அடி )

குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய

5.போற்றித் திருஅகவல் (144 வது அடி )

கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி

6.போற்றித் திருஅகவல் (185 வது அடி )

பஞ்சுஏர்  அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

7.போற்றித் திருஅகவல் (219 வது அடி ) 

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள் போற்றி

8.திருச்சதகம் (அறிவுறுத்தல் 3 வது பாடல் )

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாயடியேன்

9.திருச்சதகம் (அறிவுறுத்தல் 6 வது பாடல் )

சூழ்த்துமது  கரம் முரலும் தாரோயை நாயடியேன்

10.திருச்சதகம் (சுட்டறுத்தல் 3 வது பாடல் )

நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு

11.திருச்சதகம் (சுட்டறுத்தல் 6 வது பாடல் )

சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி

12. திருச்சதகம் (சுட்டறுத்தல் 8 வது பாடல் )

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே  நாயினுக்கு தவிசிட்டு

13.திருச்சதகம் (சுட்டறுத்தல் 8 வது பாடல் )

நாயினேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப்பின்னும்

14.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 4 வது பாடல் ) 

கிற்ற வாமனமே கெடுவாய் உ டையானடி நாயேனை

15.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 7 வது பாடல் )

வினைஎன் போல் உடையார் பிறர் யார் உடையான் அடி நாயேனைத்

16.திருச்சதகம் (ஆத்துமசுத்தி 9 வது பாடல் )

நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்

17.திருச்சதகம் (கைம்மாறு கொடுத்தல்10வதுபாடல்)

அறிவனே அமுதேயடி நாயினேன்

18. திருச்சதகம் (அனுபோகசுத்தி முதல்  பாடல் )

நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான

19.திருச்சதகம் (அனுபோகசுத்தி 2 வது பாடல் )

செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாதமலர் காணாப்

20.திருச்சதகம் (அனுபோகசுத்தி 6 வது பாடல் )

 உடையார் உடையாய் நின்பாதம்  சேரக்கண்டு இங்கு ஊர்நாயின்

21. திருச்சதகம் (அனுபோகசுத்தி 9 வது பாடல் )

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான

22.திருச்சதகம் (அனுபோகசுத்தி 10 வது பாடல் )

நகுவேன் பண்டு தோள் நோக்கி  நாணம் இல்லா நாயினேன்

23.திருச்சதகம் (காருண்யத்திரங்கல் 9 வது பாடல் )

ஆர்த்த நின்பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி  

24. திருச்சதகம் (ஆனந்தத்தழுந்தல் 4 வது பாடல் )

ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளுநீ

25. திருச்சதகம் (ஆனந்த பரவசம் 4 வது பாடல் ) 

ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

26.திருச்சதகம் (ஆனந்தாதீதம் முதல் பாடல் )

கீறு இலாத நெஞ்சுடைய நாயினேன்

27. திருச்சதகம் (ஆனந்தாதீதம் 10 வது பாடல் ) 

ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடும் நின் கலழ் போது நாயினேன்

28.நீத்தல் விண்ணப்பம் ( 6 வது பாடல் )

பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே

29.நீத்தல் விண்ணப்பம் ( 13 வது பாடல்)

கடலினுள் நாய்நக்கி யாங்குஉன் கருணைக் கடலின் உள்ளம் 

30.திரு அம்மானை (4 வது பாடல் )

தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு

31.திரு அம்மானை (5 வது பாடல் )

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

32.திரு அம்மானை (7 வது பாடல் )

நாயான நம் தம்மை  ஆட்கொண்ட நாயகனைத்

33.திரு அம்மானை (10 வது பாடல் )

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

34.திருப்பொற்சுண்ணம்  ( 8வது பாடல்)

நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை

35.திருக்கோத்தும்பி (8 வது பாடல்)

நன்றாக வைத்தென்னை நாய் சிவிகை ஏற்றுவித்த

36.திருக்கோத்தும்பி (10 வது பாடல்)

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்

37. திருக்கோத்தும்பி (12 வது பாடல்)

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் 

38.திருக்கோத்தும்பி (20 வது பாடல்)

நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த

39.திருச்சாழல் (10 வது பாடல் )

தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

40.திருப்பூவல்லி (3 வது பாடல் )

நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்துத்

41.திருப்பொன்னூசல் (முதல் பாடல்)

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு 

42.திருப்பொன்னூசல் (6 வது பாடல்)

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்

43.திருத்தசாங்கம் (9 வது பாடல் )

நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்

44.கோயில் மூத்த திருப்பதிகம் (9 வது பாடல்) 

நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே

45.செத்திலாப் பத்து (7 வது பாடல்)

நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்

46.ஆசைப் பத்து (6 வது பாடல் )

எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க கில்லேன் இல்வாழ்க்கை

47.ஆசைப் பத்து (10 வது பாடல் )

நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்

48.புணர்ச்சிப் பத்து (9 வது பாடல் )

தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட

49.வாழாப் பத்து (6 வது பாடல் )

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை

50.திருக்கழுக்குன்றம் (2 வது பாடல் )

சிட்டனே சிவலோகனே சிறு நாயினும்  கடையாய வெங்

51.கண்டப் பத்து (3 வது பாடல்)

அருத்தியினால் நாயடியேன்  அணிகொள் தில்லை கண்டேனே

52. கண்டப் பத்து (4 வது பாடல்)

கல்லாத புல்ல றிவிற்  கடைப்பட்ட நாயேனை

53. கண்டப் பத்து (5 வது பாடல்)

ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு

54. கண்டப் பத்து (9 வது பாடல்)

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை

55.பிரார்த்தனைப் பத்து (6 வது பாடல் )

புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே

56. பிரார்த்தனைப் பத்து (7 வது பாடல் )

இடரே பெருக்கி ஏசற்றிங்கு  இருத்தல் அழகோ அடி நாயேன்

57.குழைத்த பத்து  (3 வது பாடல் )

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை

58.குழைத்த பத்து  (8 வது பாடல் )

நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்

59.குழைத்த பத்து  (10 வது பாடல் )

அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே 

60.உயிருண்ணிப் பத்து (2 வது பாடல் )

நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு

61.திருவேசறவு (5 வது பாடல் )

பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே

62.அற்புதப் பத்து (9 வது பாடல் )

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய் போல

63.எண்ணப் பதிகம் (2 வது பாடல் )

தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினால்

64.யாத்திரைப் பத்து (2 வது பாடல்)

 நகவே ஞாலத் துள்புகுந்து  நாயே அனைய நமையாண்ட

65.ஆனந்த மாலை (5 வது பாடல் )

நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே

66.ஆனந்த மாலை (5 வது பாடல் )

நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ

67.அச்சோப்பதிகம் (9 வது பாடல் )

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற் கும் உருகார் என்பது போல நாயிற் கடைப் பட்டஇந்த ஆன்மா முக்தி பெற
இறைவனிடம் அழுது அழுது பாடியுள்ள இந்த அற்புத தேனை நாமும் பருகி  மாணிக்க வாசகப் பெருமானுக்கு நன்றி செலுத்தி அவர் பாதம் பணிவோம். 


                         போற்றி ஓம் நமசிவாய


                              திருச்சிற்றம்பலம்  



    

No comments:

Post a Comment