rudrateswarar

rudrateswarar

Friday, September 6, 2013

விநாயகர் பெருமை

                                                         

                                  ஓம் நமசிவாய



விநாயகர் பெருமை



விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வேளை யில் விநாயகரைப்பற்றி சில தகவல்களை யும் திருமுறை துதிப்பாடல்களையும் பார்ப்போம் நாயகர் என்றால் தலைவர் வி என்றால் மேலான என்று பொருள் விநாயகர் என்றால் மேலான கடவுள் என்று பொருள் 
கணபதி என்றால் கணங்களின் தலைவன் என்று பொருள் இவரை மூத்த பிள்ளையார் என்றும் கூறுவார்கள் ஏன் ? சிவபெருமானுக்கு நான்கு பிள்ளைகள் கணபதி, வைரவர், வீரபத்திரர் ,முருகன் ஆவர் முருகனை இளைய பிள்ளையார் என்று கூறுவார்கள் இப்பிள்ளைகளில் மூத்தவர் விநாயகர் அதனால் மூத்த பிள்ளையார் ஆனார் அவருக்கு ஏன் யானை முகம் வந்தது ? என்பதனை நமது முதல் சமயக்குரவரான ஆளுடைய பிள்ளையார் சம்பந்தர் சுவாமிகள் தமது திருமுறை பாடலிலே அழகாக கூறியுள்ளார் 

திருமுறைகளில் அருளியுள்ள விளக்கம் காண்போம்    

திருமுறை-1, பதிகம் 123, பாடல் 5,6 திருவலிவலம்


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
.

அன்னை உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ ஆண் யானை வடிவம் தாங்கி அடியவர் தம் இடர் போக்கும் கணபதிநாதன் தோன்ற அருள் புரிந்த ஈசன் மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்தவர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறைவனாவார்.

இந்த பாடலில் உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம் கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது
பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக் கொண்டு.
கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளல் தன்மையினர்

பாடல்-6

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல் உமையொடுவிரவதுசெய்து
நரைதிரை கெடுதகையது அருளினன் எழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை இறையே.


அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள் புரிபவனாவான்.

இந்த பாடலில் மற்றும் ஒரு செய்தியாக ஏன் புணர வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல விநாயகர் அவதாரம் பற்றியும் வருகிறது .பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகர தாம் போகியா யிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப் பாடலில் உமையம்மை பெண் யானையாக, இவர் ஆண் யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது.
புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தல் . தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினார் என்பதாகும்.


 

திருமுறை 1, பதிகம் 77 ,பாடல் 3
திருஅச்சிறுப்பாக்கம்


காரிருள் உருவ மால்வரை புரையக்
களிற்றினதுஉருவுகொண்டுஅரிவைமேல்ஓடி
நீர் உரு மகளை நிமிர்சடைத்தாங்கி

நீறணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார்

பிணியிலர்கேடிலர் பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம்மடிகள்

அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சி புரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண்யானை வடிவு கொள்ள தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். கங்கையை மேல் நோக்கிய சடையினில் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பு இறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன் மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.
 

இறைவர், உமையம்மை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது.
கார் இருள் உருவம் மால்வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரிய மலையையும் ஒத்த.
அரிவை - பெண்யானையாகிய உமாதேவி. இது `பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு` நடந்தமையைக் காட்டுவது.
நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தால் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட்கூட்டம்.
 


விநாயகர் துதி பாடல்கள்


வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.        
ஒளவையார்

 
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.        
ஒளவையார்
 
 
 
 
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.     
திருமூலர்
 
 
 
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
               கபிலதேவ நாயனார்
 
 
 
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.      
சம்பந்தர்
 
 
 
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.        
கச்சியப்பர்


 
 
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை                             கபிலதேவ நாயனார்

 

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
            நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்
           தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
           இரவு பகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டு அயன் திருமால் செல்வமும்
           ஒன்றோ என்னச் செய்யும் தேவே            அருணந்திசிவம்


எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்         சேக்கிழார்பெருமான்



அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல குணம் அதிகமா மருணைக் கோபுரத்துள் மேவு

செல்வ கணபதியைக் கைதொழுதக்கால்.         ஒளவையார்





                     போற்றி ஓம் நமசிவாய 




                           திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment