rudrateswarar

rudrateswarar

Tuesday, June 11, 2013

மக்கட்பேறு கிட்ட

                                     ஓம் நமசிவாய


மக்கட்பேறு கிட்ட 

       
 திருஞானசம்பந்தர் அருளியது 
2ஆம் திருமுறை பதிகம் 48  திருவெண்காடு

                                     திருச்சிற்றம்பலம் 

பாடல் எண் : 1

 
கண்காட்டும்  நுதலானும்  கனல்
          காட்டுங் கையானும்
பெண்காட்டும்  உருவானும் 
          பிறைகாட்டும்  சடையானும்
பண்காட்டும்  இசையானும் பயிர்
          காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை
          காட்டும்  கொடியானே.


பாடல் எண் : 2

 
பேய் அடையா பிரிவெய்தும் 
         பிள்ளையினோடு உள்ளம் நினைவு 
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற
         வேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு 
          முக்குளநீர்
தோய்வினையார்  அவர்தம்மைத் 
         தோயாவாம்  தீவினையே.


பாடல் எண் : 3

 
மண்ணொடு நீர் அனல் காலோடு  
           ஆகாயம்  மதி ரவி
எண்ணில்வரும்  இயமானன்  இக
           பரமும்  எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு 
           சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடு 
           இடமா விரும்பினனே.


பாடல் எண் : 4

 
விடமுண்ட மிடற்று அண்ணல் 
           வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் 
           குருகு என்று
தடமண்டு துறைக்கெண்டை 
           தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகை
          காட்டும்  காட்சியதே.


பாடல் எண் : 5

 
வேலைமலி தண்கானல் வெண் 
            காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு
            நல் மறையவன் தன்
மேல் அடர்வெங் காலன் உயிர் விண்ட
            பினை நமன் தூதர்
ஆலமிடற் றான்  அடியா ரென்று 
             அடர அஞ்சுவரே.


பாடல் எண் : 6

 
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் 
              சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் 
              கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பல
             ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணை மேல் 
             வீற்றிருக்கும் வெண்காடே.


பாடல் எண் : 7

 
சக்கரமாற்கு  ஈந்தானும்  
         சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும் 
         அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக் கருள்சுரக்கும் 
         வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்  
          முக்கண் உடை யிறையவனே.


பாடல் எண் : 8

 
பண்மொய்த்த இன்மொழியாள் 
          பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன்  உரம் நெரித்து அன்று  
          அருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை 
          நடமாடக் கடல்  முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு  
          இசைமுரலும் வெண்காடே.


பாடல் எண் : 9

 
கள்ளார்   செங் கமலத்தான் 
        கடற்கிடந்தான்  என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து 
        ஆழ்ந்து உணர்வு அரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகு
         வெண் காட்டான் என்று 
உள்ளாடி உருகாதார்  
          உணர்வுடைமை உணரோமே.


பாடல் எண் : 10

 
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
             மொழி பொருள் என்னும்
பேதையர்கள்  அவர்  பிறிமின் 
             அறிவுடையீர்  இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் 
              வியன் திருவெண் காட்டான் என்று 
ஓதியவர் யாதுமொரு தீது இலர் 
              என்று உணருமினே.


பாடல் எண் : 11

 
தண் பொழில்சூழ் சண்பையர்கோன் 
            தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி 
           விகிர்தன்  உறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை 
            பாடியபத்து  இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் 
            வான் பொலியப் புகுவாரே.



                                                     திருச்சிற்றம்பலம்

இந்த பதிகம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது நமது சந்தானக்குரவர் நால்வருள் முதன்மையானவரான மெய்கண்ட தேவ நாயனார் அவர்களின்  பெற்றோர் இந்த பதிகம் பாடி திருவெண்காட்டு ஈசனை தொழ நாயனார் அவதரித்தார்.இதை ஓதி பிள்ளைப்பேறு பெற்றவர்கள் ஏராளம் .ஓதும் அனைவருக்கும் பிள்ளைபேறு கிட்ட சுவேதவனப்பெருமான் அருள்வாராக 



                               போற்றி ஓம் நமசிவாய
   

2 comments:

  1. Fetal monitors are medical devices used by healthcare providers to continuously track a fetus's heart rate and uterine contractions.
    Fetal Monitor Price
    Fetal Monitor in India
    Best Fetal Monitor
    CTG Machine Price

    ReplyDelete