rudrateswarar

rudrateswarar

Friday, March 15, 2013

1008 திருமுறை போற்றி திரட்டு-1

                                         
                           ஓம் நமசிவாய
 
1008 திருமுறை போற்றி திரட்டு-1



எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி   20
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.

சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.   40

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.

வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி          60
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி

முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.                          80

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி போற்றி
அருமறையான் சென்னிக் கணியாமடி போற்றி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி போற்றி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி போற்றி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி போற்றி
பதினெண் கணங்களும் பாடும்மடி போற்றி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி போற்றி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி போற்றி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி போற்றி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி போற்றி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி போற்றி
கடல்வையங் காப்பான் கருதும்மடி போற்றி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி போற்றி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி போற்றி

வைதெழுவார் காமம்பொய் போகாவடி போற்றி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி போற்றி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி போற்றி
கணக்கு வழக்கைக் கடந்தவடி போற்றி                100
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி போற்றி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி போற்றி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி போற்றி
அழகெழுத லாகா அருட்சேவடி போற்றி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி போற்றி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி போற்றி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி போற்றி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி போற்றி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி போற்றி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி போற்றி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி போற்றி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி போற்றி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி போற்றி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி போற்றி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.         120

திருமகட்குச் செந்தா மரையாமடி போற்றி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி போற்றி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி போற்றி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி போற்றி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி போற்றி
உருவென் றுணரப் படாதவடி போற்றி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.

உரைமாலை யெல்லா முடையவடி போற்றி
உரையால் உணரப் படாதவடி போற்றி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி போற்றி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி போற்றி
அரைமாத் திரையில் லடங்கும்மடி போற்றி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி போற்றி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி போற்றி
கமழ்வீரட் டானக் கபாலியடி போற்றி.

நறுமலராய் நாறு மலர்ச்சேவடி போற்றி
நடுவாய் உலகநா டாயவடி போற்றி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி போற்றி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி போற்றி                 140
மறுமதியை மாசு கழுவும்மடி போற்றி
மந்திரமுந் தந்திரமு மாயவடி போற்றி
செறிகெடில நாடர் பெருமானடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி போற்றி
அடியார்கட் காரமுத மாயவடி போற்றி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி போற்றி
பற்றற்றார் பற்றும் பவளவடி போற்றி
மணியடி பொன்னடி மாண்பாமடி போற்றி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி போற்றி
தணிபாடு தண்கெடில நாடன்னடி போற்றி
தகைசார் வீரட்டத் தலைவனடி போற்றி.

அந்தாம ரைப்போ தலர்ந்தவடி போற்றி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி போற்றி
முந்தாகி முன்னே முளைத்தவடி போற்றி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி போற்றி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி போற்றி
பவளத் தடவரையே போல்வானடி போற்றி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி போற்றி
வீரட்டங் காதல் விமலனடி போற்றி .         160

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி   180
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.   200

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி   220
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி          240

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
 
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி     260
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.    280

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி                         300
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.      320

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.   336




                                                     திருச்சிற்றம்பலம்




                         போற்றி ஓம் நமசிவாய

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

    ReplyDelete