rudrateswarar

rudrateswarar

Sunday, November 3, 2013

மெய்கண்டதேவர் குருபூசை

                                          
                            ஓம் நமசிவாய


மெய்கண்டதேவர் குருபூசை

" ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த 
  மெய்கண்டார் இணைத்தாள் போற்றி "

அவதார தலம் - பெண்ணாடம் 
முக்தி தலம்     - திருவெண்ணெய் நல்லூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி ,சுவாதி 
03-11-2013 ,ஞாயிற்றுகிழமை  

  
சைவசமயத்தில் சமயக் குரவர்கள் நான்கு பேர் . அது போல சந்தான குரவர்கள் நான்கு பேர் . 

சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்றவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். அதனால் இது சந்தான பரம்பரை என்று 
கூறப் பட்டது . சந்தானகுரவர்களால் சைவ சித்தாந்த சாத்திரங்கள் சொல்லப்பட்டன . அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர் அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், அவரின் சீடர் உமாபதி சிவம்.
 

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திர மரபும், சைவ சமயத்துக்கான குரு மரபும் தோற்று வித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் (கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே) பெண்ணாடம் என்னும் ஊராகும். 13ஆம் நூற்றாண்டில் அச்சுதக்களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக்கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. தம் குலகுருவான சகலாகம பண்டிதரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகம் பாடல் கிடைத்தது.

 

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு 
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே


என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ள நினைவா யினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்ற இந்த வரிகளை சுட்டிக்காட்டி  பிள்ளைப்பேறு உறுதி என்று ஆறுதல் கூறி திருவெண்காடு சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும் கவலை வேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுதக்களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று  சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் ஆகிய மூன்றிலும்  நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபட்டார் . ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுதக்களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் ஞானசம்பந்தனைப் போன்றதொரு மகன் பிறப்பான்.” என்று அருளினார்.


அவ்வாறேஅச்சுதகளப்பாளருக்கு  ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திருவெண் காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்று திருநாமம் சூட்டி வளர்த்தனர் . குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்தி மிகக்கொண்டு விளங்கிற்று. குழந்தைக்கு இரண்டு வயதில்  ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கயிலையில் நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற எட்டுபேருள் சனற்குமாரரும் ஒருவர் அவருடைய ஞானப்புதல்வர் சத்திய ஞான தரிசினி இவரிடம் ஞான உபதேசம் பெற்றவர் பரஞ்சோதி முனிவர் .அவர் கயிலையில் இருந்து அகத்தியரை சந்திக்க ஒளியையே விமானமாக்கி பொதிகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய் நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவரின் ஒளி விமானம் வானவீதியில் செல்கையில் திருவெண்ணெய் நல்லூரை அடைந்ததும் மேலே செல்ல முடியாமல் நின்று விட்டது  அங்கு சுவேதவனப் பெருமாளைக் கண்டார் ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய அந்த குழந்தை பெரிய மகானாக வரப் போவதும், இந்த குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு இருப்பதையும் உணர்ந்து  விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கிய அவர் குழந்தையைத் தம் கைகளால் எடுத்து ஸ்பரிச, நயன தீட்சை அளித்து சிவஞான உபதேசமும் செய்வித்தார். 


பரஞ்சோதி முனிவர் தன் குருவின் பெயரான  சத்தியஞான தரிசினி என்ற பெயரையே தமிழாக்கம் செய்து மெய்கண்டார் என தீட்சா நாமமாக அருளிச் செய்தார். அன்று முதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் என்ற திருநாமத்துடன் விளங்கினார். சமயகுரவர் களில் முதல்வரான திருஞானசம்பந்தர் தம் மூன்று வயதில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டு அன்னையின் ஞானப்பாலுண்டு எப்படி ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தான குரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் இரண்டாம் வயதிலேயே குருவால் சிவஞான உபதேசம் பெற்றார். மெய்கண்டாரால் சிவஞானம் எங்கும் பரவ வேண்டும் என்பதற்காக தமிழில் சிவஞானபோதம் செய்தருளினார்

மெய்கண்டார் தன்னிடம் உபதேசம் பெற வருபவர்களுக்கு சைவ சித்தாந்தத்தை உபதேசித்துவந்தார். சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி எட்ட அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு பிஞ்சுப்  பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவத்துடன் அவரைக் காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்து சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டு விரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதர் தன் ஆணவம் அடங்கி மெய் கண்டாரின் பார்வையால் நயன தீட்சை பெற்று பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி சிவம் என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்களோடு அருள் நந்தி 49-ஆம் மாணவரனார் .சாத்திர நூல்கள் பதினான்கினுள் உண்மை விளக்கம் அருளிய மனவாசகம் கடந்தார் என்பவரும் மெய்கண்டாரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற 49 பேருள் அவரும் ஒருவர் .அடுத்த  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய் தெரிகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டறிந்து அங்கே மெய்கண்டாருக்கு  நினைவாலயம் கட்டி மெய்கண்டாரின் திருஉருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது  


மேலும் திருவாவடுதுறை ஆதீன மாத இதழ் 
மெய்கண்டார் என்ற பெயருடன் இப்பொழுது வெளிவந்து கொண்டுள்ளது 



                       போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment