rudrateswarar

rudrateswarar

Wednesday, June 26, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 4

                                         ஓம் நமசிவாய

அண்ணாமலையார் அற்புதங்கள்- 4

அப்பர் சுவாமிகள் அண்ணாமலையாரை தொழ என்ன என்ன நன்மைகள் என்று தமது ஐந்தாம் திருமுறையில் அருளியுள்ளார் 

பாடல் எண் : 1
பட்டி ஏறுகந்து  ஏறிப் பலஇ(ல்)லம்
இட்ட மாக இரந்துண்டு உழிதரும்
அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.


அடங்காத ஏற்றினை அடக்கி எருதினை வாகனமாக கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் முக்திபேறடைய  என்றும் தடை  இல்லை 

பாடல் எண் : 2

பெற்றம்  ஏறுவர் பெய்பலிக்கு  என்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.


ஈசன் கபாலமேந்தி மனைகளிலிடும் பிச்சையேற்பவர் ஆவர் தனக்குச் சுற்றமான உமையம்மையோடு வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார்  நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் 

பாடல் எண் : 3

பல்லில் ஓடுகை யேந்திப் பல இ( ல் )லம்
ஒல்லை சென்று உணங்கல்கவர் வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.


பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை பெறுபவர் அவர்தம் உள்ளங்களை  கவர்பவராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .

பாடல் எண் : 4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன்று என்கொலோ
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.


பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் அவர்தம் உள்ளங்கவர்ந்து ஓடிப் போய் விட்டனர் ஆதலால் செய்வது இனி என்ன ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ இகவாழ்க்கைஇன்னல்களும் ஆறாத் துயர்களும் பின் பிறவிப்பிணியாகிய நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் .

பாடல் எண் : 5

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.


தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏற்றினால்  அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடி வந்து ஆட்கொள்வார் ஆடியும் பாடியும் உருகியும் திருவண்ணாமலையைக் கைதொழ நமது நிகழ்வினைகள் யாவும் நம்மைவிட்டு ஓடிப்போகும் .

பாடல் எண் : 6

கட்டி யொக்கும்  கரும்பின் இடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்தி அண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன்கு ஆகுமே.


கரும்பின் கட்டி போன்று இனிமையுடையவர் சிவபெருமான். துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .

பாடல் எண் : 7

கோணிக் கொண்டையர்வேடமுன்கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப் பொன்னன் அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.


சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நடனம் ஆடுபவரும் உயர்ந்த பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் இப்பிறவி யின் பொருட்டு சார்ந்த பிராரத்தம் ஆகிய 
பெரு வினைகள் போகும் .

பாடல் எண் : 8

கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.


திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைக்கால் கொண்டு மாய்த்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளால் தொழ இவ்வுயிரைபற்றி நின்று துன்புறுத்தும் நம் மேலை(பழைய) தீவினைகள் நம்மைவிட்டு நீங்கும் .

பாடல் எண் : 9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்  அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும்  கருத்தனே.


மாலைச்செவ்வண்ணம்  போன்ற மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் (காலை,பகல் ,மாலை ) வணங்கவும் , அத்திருவண்ணாமலையைச் சிந்தித்து  துயில் எழுவார் வினைகளையும்  , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய சிவபெருமான் தீர்ப்பான் .

பாடல் எண்  10

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும்  நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையு மாண்பின்அண்ணாமலைகைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.


பிரமனும் திருமாலும் காண இயலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையுகின்ற  மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கை தொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .அண்ணாமலை ஈசனின் திருநாமத்தையும் திருமலையையும் உணர்த்துவதாகும் 
                                 


                              போற்றி ஓம் நமசிவாய 
                                     

                                   திருச்சிற்றம்பலம் 
 

No comments:

Post a Comment