rudrateswarar

rudrateswarar

Saturday, May 4, 2013

சிறுத்தொண்டர் நாயனார் புராணம்

                             ஓம் நமசிவாய 


சிறுத்தொண்டர்நாயனார் புராணம்

"செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்"


அவதார தலம் - திருசெங்காட்டாங்குடி 
முக்தி தலம்     - திருசெங்காட்டாங்குடி 
குருபூசைதிருநட்சத்திரம்-சித்திரை மாதம்
 09-05-2013 வியாழக்கிழமை                 பரணி 

கணபதீச்சரம் சிவனாரை விநாயகப்பெருமான்  பூசித்த ஆலயம் அவ்வாலயம் அமைந்துள்ளது வளம்பொருந்திய திருசெங்காட்டங்குடியாகும்
சிறப்புடைய இத்தலத்தில்  மாமாத்திரர் குலத்திலே பரஞ்சோதியார் என்பார் சிறப்புற்று இருந்தார் 

பரஞ்சோதியார் மருத்துவ, வடமொழி நூல்கள் 
எண்ணற்றன கற்று போருக்குரிய பயிற்சியும் 
பெற்று வல்லவரானார் .கலைகள் கற்றதோடு 
காலனை உதைத்த பெருமானை கருத்தினில் 
கொண்டு நாளும் சிவத்தொண்டாற்றி வந்தார் 

சோழ மன்னனிடம் நெருங்கிய சேனைதளபதி   என்ற சிறப்புடன் யானை மீது சென்று வெற்றி வாகை சூடிவருவார். ஒருமுறை வாதாபி சென்று யாரும் வெல்லமுடியாத அம்மன்னனை  வென்று நவமணிகளையும் பொற்குவியலையும் கவர்ந்து வந்ததை கண்டு மன்னன் அதிசயித்தான். அருகில் இருந்த அமைச்சர்கள் இவர் சிவபெருமான் திருவருள் நிரம்பப்பெற்றவர் அருள் வல்லமையும் திருத்தொண்டின் திறமும் பெற்றதனால் இவருக்கு இணையாரும் இல்லை என்று கூறினார்கள் 
அதுகேட்ட மன்னன் பதறி ஈசனடியாரை என் ஏவலுக்கு வைத்தேனே என்று வருந்தி,
இனி தாங்கள் என்னிடம் பணி செய்யலாகாது தங்கள் ஊர் சென்று திருத்தொண்டைத்தொடர வேண்டும் என்று கூறி வேண்டிய பொன்னும் பொருளும் நிலமும் கொடுத்து அனுப்பினான் 

கணபதீச்சரம் சென்று இறைவரை வணங்கி 
திருத்தொண்டு செய்துவரும் நாளில் திருவெண்காட்டுநங்கை என்பாரைத் திருமணம் புரிந்தார் இருவரும் மனமொத்து திருத்தொண்டாற்றி வரும்வேளையில் இல்லறத்தின் ஆணிவேராக அம்மையார் கருவுற்றார் .கரு முதிர்ந்து ஒரு நன்னாளில்
சீராளதேவர் என்ற மைந்தர் அவதரித்தார் 
பரஞ்சோதியார் அடியவர்களை திருமுன்பு 
மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொள்வதால் 
சிறுத்தொண்டர் எனும் திருநாமம் பெற்றார் 

சீராளதேவர் வளர்ந்து மூன்றாவது ஆண்டில் முடியெடுத்து ஐந்தாம் ஆண்டில் பள்ளியில் சேர்த்தார்கள்.அந்நாளில் சம்பந்தர் பெருமான் 
திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார்
சிறுத்தொண்டர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பூசித்து அனைவருக்கும் திருவமுது படைத்தார். சிறுத்தொண்டரின் 
திருத்தொண்டினை சிறப்பித்து பாடினார் 

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இவரின் பற்றற்ற தொண்டின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தி உய்விக்க  திருவுளங் கொண்டார்.அவ்வாறு திருவுளங்கொண்ட 
மகாதேவர் வைரவ சந்நியாசி வேடம்கொண்டு செங்காட்டங்குடியை அடைந்தார் 
நாள்தோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் 
அன்னமுண்ணும் மனையில் அன்றுஒருவரும் வரவில்லை நாயனார் வருத்தமுற்று தமது விரதத்திற்கு இடையூறு நேர்ந்து விடக்கூடாது 
என்று அடியாரைத்தேடி சென்றார் 
அப்போது வைரவராக வந்த எம்பெருமான் மிகுந்த பசியுடையவர் போல சிறுத்தொண்டர் மனை எங்கே என்று கேட்டுக்கொண்டு அவருடைய திருமாளிகை முன் வந்து அழைத்தார் மனைக்குள் சந்தன நங்கை என்ற வேலைக்கார அம்மையார் பெருமானைத் தொழுது நாயனார் அடியார்களை  தேடி சென்ற விவரம் கூறி உள்ளே வந்து அமருங்கள் 
என்றார் வைரவர் அம்மாதின் முகம் நோக்கி 
பெண்கள் தனித்திருக்கும் இடத்தில்யாமிருக்க மாட்டோம் கணபதீச்சரம் கோயிலில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறோம் அவர் வந்தவுடன் நாம் இருக்குந்தன்மையை கூறுவீர் என்றார் 
சிறுத்தொண்டர் அடியவர் ஒருவரையும் தேடி 
கிடைக்காது வருந்தி திருமாளிகை முன் வந்தார்.  திருவெண்காட்டு நங்கையார் கணவரைத் தொழுது வைரவர் வந்த விவரம் கூறி அவரை அமுதுண்ண அழைத்து வாரும் என்றார் அதுகேட்டு மகிழ்ந்த நாயனார் சென்று 
ஆத்திமரத்தின் அடியில் வைரவரைக்கண்டு 
அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நின்றார் .
நின்ற தொண்டரைப்பார்த்து சிறுத்தொண்டர் 
என்பது நீர் தானோ? என்று கேட்டருளினார் 
நாயனார் தொழுது அடியேன் தவத்தினால் தங்களைக்கண்டேன் தாமதிக்காமல் மனைக்கு எழுந்தருளி அமுதுசெய்ய வேண்டும் என்றார்.அதற்கு வைரவர் நாம் இருப்பது உத்தராபதி எமக்கு அன்புடன் அமுதூட்ட உம்மால் முடியாது அது உமக்கு அறிய செயலாகும் என்றார் சிறுத்தொண்டர் உரைத்தருளும் சுவாமி சிவனடியார் முயற்சி செய்தால் இல்லாததுவும் கிட்டும் என்றார்
வைரவர் அன்பரீர் நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்போம் அதுவும் பசு வதைத்து உண்போம் அதற்குரிய நாள் இன்று .அது உம்மால் இயலாது என்றார். நாயனார்  அடியவராகிய தங்கள் அமுதுக்கு இன்னவகை பசு என்று கூறினால் காலந்தாழ்த்தாமல் அமுது தயாரிக்க ஏதுவாகும் என்றார் 
வைரவரோ உமது அன்புக்கு மகிழ்ச்சி,நாம் உண்பது நரப்பசுவாகும் அதுவும் ஐந்து வயதுக்குள் அங்கம் பழுதில்லாமல் ஒருகுடிக்கு ஒருமகனாக இருக்கவேண்டும் 
தாயார் மடியில் தலை வைத்துப்பிடிக்க தந்தை மனமகிழ்ச்சியுடன் அரிந்து குற்றமின்றி அமைத்த கறி நாம் உண்பது என்றார்.
சிறுத்தொண்டரோ தேவரீர் அமுது செய்ய எதுவுமே அரிதில்லை சற்று இரும் தாங்கள் விரும்பியபடி அமைத்து வந்து அழைப்பேன் என்று கூறி சென்றார் 
சிறுத்தொண்டர் தமது திருமனை அடைந்து தமது மனைவியாரிடம் நடந்ததை கூறினார் 
ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு தேடுவோம். அப்படியே பொருள் கொடுத்து வாங்கினாலும் 
மகிழ்ச்சியோடு எந்த தாய் தந்தையும் அரிந்து தரமாட்டார்கள் எனவே நாம் பெற்ற புத்திரனை அழைப்போம் என்றார். கணவர் கூறக்கேட்ட அந்த உத்தமி அவ்வண்ணமே நம்மைக்காக்க வந்த மாமணியை பள்ளியினின்று அழைத்து 
வாரும் என்றார்  நாயனார் பள்ளிக்கு  சென்றதும் அழைக்காமலே பாதச்சலங்கை ஒலிக்க பிள்ளை ஓடிவந்து தந்தையை தழுவிக் கொண்டது திருப்புதல்வரை அழைத்து வந்து திருமஞ்சன நீராட்டி ஆடை அணிகலன் அணிவித்து கணவன் கையில் கொடுத்தார் அம்மையார்.குற்றமில்லாத அடியவர்க்கு அமுது செய்ய உரிய உடம்பு என்று உச்சி மோர்ந்தாரில்லை முத்தமிடவில்லை .தனது திருமாளிகையில் உலகார் அறியாவண்ணம் ஒருபுறத்தில் கொண்டுசென்று தாயார் பிடிக்க சீராளதேவரோ சிவனடியார் அமுது செய்ய இந்தசெயல் நடக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சியுற்றார் மகனின் மனநிலை அறிந்த நாயனார் வாள் கொண்டு ஒப்பற்ற மகனின் தலையை அரிந்தார்.புத்திரன் என்ற சொல்லின் பயனை இவன் நமக்களித்தான் என்று அகமும் முகமும் மலர அமுது தயார் செய்தார்கள் தலையின் இறைச்சி அமுதுக்கு ஆகாது என்று கருதி வேலைக்காரி சந்தனநங்கையிடம் கொடுத்து புதைத்து விடக்கட்டளையிட்டார். வகைவகையாக உணவு தயாரானதும் சென்று அடியவரை அழைத்து வருமாறு கணவனிடம் கூறினார்திருவெண்காட்டம்மையார் .நாயனாரும் 
வைரவர் உரைத்தவாறு அமைத்து முடித்ததை அளவற்ற மகிழ்ச்சியடைந்து திருக்கோயில் சென்று அவரின் திருவடி வணங்கி காலம் தாழ்த்தாமல் வந்து அமுது செய்யும் என்றார் 
வைரவரும் எழுந்து நடக்கலுற்றார்.அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த அம்மையார் எதிர்வந்து அழைத்து ஆசனத்தில் அமர்த்தி மாகேஸ்வர பூசை செய்தனர் .இலையிட்டு  அன்னமும் கறிகளும் படைத்தார்கள் .அதைப் பார்த்த வைரவர் நாம் சொன்னபடியே நரப்பசு
கொண்டு எல்லாம் அமைத்தீரோ? என்று கேட்டார். திருவெண்காட்டம்மையார்,தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என்று அகற்றினோம் மற்றவை யாவும் கறியமுது அமைத்துள்ளோம் என்று பகன்றார். அதுவும் கூட உண்போம் அதனையும் படையுங்கள் என்றார் அதுகேட்ட சிறுத்தொண்டர் நடுநடுங்கினார் அய்யோ கெட்டேன்  இத்தனை செய்தும் இப்பயிரவர் அமுது செய்யத் தடை நேர்ந்ததே ,சிவபெருமானே இனி என் செய்வேன் தலைஇறைச்சியையும் இவர் உண்பார் என்பது தெரியாமல் போயிற்றே என பலவாறு நினைந்து வருந்தினார் அம்மையாரும் செய்வதறியாது திகைத்தார் 
அதுசமயம் அமுத சஞ்சீவி வந்து உதவியது போலசந்தன நங்கை என்ற தாதியார்,தாங்கள் வருந்த வேண்டாம் தாங்கள் தலையை புதைக்க கொடுத்தபோது ஒருக்கால் வைரவர் 
தலையிறைச்சி  கேட்ககூடுமோ? என்று எண்ணி தனியே சமைத்து வைத்திருக்கிறேன் இதோ இருக்கின்றது என்று கொடுத்தார் . அம்மையாரும் நாயனாரும் களிப்புற்று வைரவர் முன் இலையில் படைத்தார்கள் .
அப்போது வைரவர் அன்பரே நாம் தனித்து உண்ணமாட்டோம் உடன் உண்ண ஒரு அடியாரை அழையும் என்றார். எந்தையே   இன்று எங்கும் அடியார் ஒருவரும்
காணப்பெற்றேனில்லை .அடியவரைக்கண்டு அடியேனும் திருநீறு பூசிகொண்டிருக்கிறேன் 
என்றார்.வைரவர் நல்லது,நல்லது நீரே அருகில் அமர்ந்து எம்முடன் உண்ணும் என்று 
அருளி இலை போட்டு பரிமாறச் சொன்னார் 
திருவெண்காட்டம்மையாரும் அன்னத்தில் பாதியும் இறைச்சியில் ஒரு கூறும் வயிரவர் ஆணைப்படி பரிமாறினார் .அதை நாயனார் உண்ணத்துவங்கும் போது தடுத்து நான் ஆறு மாதத்திற்குஒருமுறைஉணவுஉண்ணுகிறேன்  நானே உண்ண ஆரம்பிக்கவில்லை நீர் அதற்குள் உண்ண ஆரம்பித்துவிட்டீர்? நம்முடன் உணவு உண்ண உங்கள் மைந்தனை அழையும் என்றார்.இறைவரை நோக்கி எந்தையே அவன் இப்போது உதவான் என்றார் 
வைரவர் சிறுத்தொண்டரே நாம் உமது புதல்வன் வந்தால் தான் உண்போம் இப்போது உதவான் என்கிறீர் அவன் எப்போதும் உதவுவான் நீர் சென்று நாடி அழையும் என்றார் சிறுத்தொண்டர் மனைவியுடன் வெளியே சென்று மைந்தனை அழைக்கின்றார். பரமேஸ்வரன் திருவருளால் பள்ளியினின்று வருவார்போல சீராளதேவர் காலில் சதங்கை ஒலிக்க தளர்நடையிட்டு ஓடி வந்தார். பெற்றோர் மகிழ்ந்து இனி சிவனடியார் உண்ணப்பெற்றோம் என்று உவகை கொண்டனர் திருமகனை உச்சி மோந்து உள்ளே சென்றனர் வைரவராக வந்த முதல்வர் மறைந்தருளினார் அவரைக்காணாது சிறுத்தொண்டர் சிந்தை கலங்கி அடியற்ற மரம் போல் வீழ்ந்தார் மறைந்த அப்பரமபதி அன்னை உமையோடும்முருகக்கடவுளோடும்   வெள்ளை விடைமேல் வானிடை காட்சி 
கொடுத்தார் இனிய கறியமுது படைத்த 
அடியார்க்குத் திருவருள் தந்தருளினார் . சிறுத்தொண்டர் மனைவி மகன் மற்றும் சந்தன நங்கை ஆகியோருடன் மண்மிசை வீழ்ந்து வணங்கி திருவருளை எண்ணி கண்ணீர் வடித்தார் அந்நால்வரையும் உடன் அழைத்துக்கொண்டு இறைவர் சிவலோகத்திற்கு எழுந்தருளினார் .இறைவன் 
முழு நம்பிக்கையும் அன்பையும் பக்தியையும் காட்டினால் நாமும் நற்கதி பெறலாம் என்பதே சிறுத்தொண்டர் புராணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம்                         
 
            

No comments:

Post a Comment