rudrateswarar

rudrateswarar

Monday, March 24, 2014

திரு நந்திதேவர் திருக்கல்யாணம்

                                                ஓம் நமசிவாய


திரு நந்திதேவர் திருக்கல்யாணம்  



பங்குனி 24 ஆம் நாள்  07-04-14  திங்கள்கிழமை 
 

நந்தியெம்பெருமான் சைவ குரு பரம்பரைக்கு முதல் குருநாதன் ஆவார் திருக்கயிலை வாயில் காப்பாளராகவும் இருப்பவர். இவர் பூலோகத்தில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஐயாறப்பரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி, "முனிவரே, நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப் படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறுதான்' என்று கூறியது.

அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது.  அவர்தான் செப்பேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. 

செப்பேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம்தான் பூலோகத்தில் இருப்பார் என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது.

இதனை அறிந்த செப்பேஸ்வரர், திருவையாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும் தவம் புரிந்தார். காலம் கடந்தது. செப்பேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான், "என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக வாழ்வாய்' என்று அருளியதுடன், செப்பேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் திரும்பிய செப்பேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் சிலாத முனிவர் .
வசிஷ்ட முனிவரின் பேத்தியும்  வியாக்ர பாத முனிவருடைய மகளும்  உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயசாம்பிகையை   தன் மகனாகிய செப்பேஸ்வரருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.

பிறகு, செப்பேஸ்வரர் ஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. சிலாத முனிவர் பூமியை உழும்போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்' ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

அன்று மாலை திருவையாற்றில் நந்திக்கு பட்டாபி ஷேகம் நடைபெறும். மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயசாம்பிகை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். அப்போது அந்த ஊரே வாழைமரம், தோரணங்கள்  கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும்.சப்த தானங்களில் இருந்து பூக்களும் பழங்களும் பட்சணங்களும் உணவு வகைகளும்  சீர் வரிசைகளும் கொண்டு செல்லப்பட்டது . 

திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார்கள். நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.

இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்கு செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை, போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்.

திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.இந்த விழாவின் தொடர்ச்சி தான் திருவையாறு சப்த ஸ்தான விழா. திருவையாற்று ஐயாறப்பர், நந்தி சகிதமாக திருப்பழனம், திருச்சோற்றுத்துறை,திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.

திருமணத்தடை உள்ளவர்கள் நந்தி கல்யாணத்தை தரிசித்தால், தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. 


வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி 
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி 
அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும் 
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்



                                          போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம் 

பழமொழிப் பதிகம்

                                                         ஓம் நமசிவாய


பழமொழிப் பதிகம்


நான்காம் திருமுறையில் ஐந்தாவது பதிகமாக இந்த பதிகம் அமைந்துள்ளது . திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய இந்த பதிகத்தில் பாடல்  தோறும் ஒரு பழமொழி வைத்து அருளியுள்ளார் .நாவுக்கரசு என்று இறைவரால் பெயர் சூட்டப்பெற்றது எத்துணை சால பொருத்தமானது 

                            
                           திருச்சிற்றம்பலம் 


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த 
              மேனியான் தாள்தொ ழாதே
உய்யலாம்  மென்றெண்ணி உறிதூக்கி 

              உழிதந்தென் உள்ளம்விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ 

              மயில் ஆலும் ஆரூ ரரைக்
கையினால் தொழாதுஒழிந்து 
கனியிருக்கக்    
              காய்கவர்ந்தகள்வ னேனே.  


என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு 
           என்னையோர்  உருவம்  ஆக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு  

           என்னுள்ளம்  கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு  

           அருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் 

            காக்கைப்பின் போன வாறே.   


பெருகுவித்துஎன்பாவத்தைப்பண்டெலாம்       
             குண்டர்கள்தம்  சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தி னுள்ளிருந்த                     கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு                      
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறம் இருக்க                  
றம்விலைக்குக் கொண்ட வாறே. 


குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார்
           நகைநாணாது உழிதர் வேனைப் 
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில் 
           தெளித்துத்தன் பாதம்காட்டித் 
தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல் 
            அருள்செய்யும் ஆரூரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீரால் 
             பாவைசெயப் பாவித் தேனே  


துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் 
           சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரி தந்து ஈங்கு  இருகையேற்று  

           இடஉண்ட ஏழை யேனான்
பொன்னாகத்து  அடியேனைப் புகப்பெய்து 

            பொருட்  படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு  

             ஆதனாய்  அகப்பட் டேனே. 


பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொரு 
             தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்துஎன் உ ள்ளத்தின்  

             உள்ளிருந்து அங்கு  உறுதி காட்டி
அப்போதைக்கு  அப்போதும்  அடியவர்கட்கு  

             ஆரமுதாம்  ஆரூ ரரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் 

              மலடு கறந்து  எய்த்த வாறே. 


கதியொன்றும்  அறியாதே கண்ணழலத் 
          தலைபறித்துக் கையில்  உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண 

          நகைநாணாது  உழிதர் வேற்கு
மதிதந்த ஆரூரில் வார்தேனை 

          வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்க 

           மின்மினித்தீக் காய்ந்த வாறே.  


ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்  
           ஓரம்பின் வாயில் வீழக்
கட்டானைக் காமனையும்  காலனையும்  

           கண்ணினெடு காலின் வீழ
அட்டானை  ஆரூரில்  அம்மானை 

           ஆர்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க 

           அவஞ்செய்து தருக்கி னேனே. 


மறுத்தான் ஓர் வல்லரக்கன்  ஈரைந்து 
           முடியினொடு தோளும்  தாளும்
இறுத்தானை  எழின்முளரித் தவிசின்மிசை

           இருந்தான்றன் தலையில்  ஒன்றை
அறுத்தானை ஆரூரில்  அம்மானை 

           ஆலாலம்  உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க 

           இரும்புகடித்து எய்த்த வாறே.  


                            திருச்சிற்றம்பலம்


                      போற்றி ஓம் நமசிவாய

Wednesday, March 19, 2014

அவிநாசியில் திருமுறை அற்புதம்

                                                          ஓம் நமசிவாய

அவிநாசியில் திருமுறை அற்புதம்


சுந்தரர் முதலைவாய் பிள்ளை அழைத்த உற்சவம் வரும் பங்குனி திங்கள் 29 ஆம்       நாள் (12-04-2014 )நடைபெறுகிறது 

விநாசம் என்றால் அழிவு என்று அர்த்தம் விநாசே காலே விபரீத புத்தி என்பது போலே அவிநாசி என்றால் அழிவில்லாத என்று பொருள் .

காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமுறைகளிலே ஏழாம் திருமுறையில் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடியருளி யுள்ளார் எட்டாம் திருமுறையிலே மணிவாசகர் அரிய பொருளே அவிநாசியப்பா என்றும் ஆறாம் திருமுறையில் அப்பர் சுவாமிகள் அவிநாசி கண்டாய் என்றும் பாடியருளிய பேறு பெற்ற தலம்


சுந்தர மூர்த்தி நாயனார் தல யாத்திரை செல்லும் போது இவ்வூரில் உள்ள அந்தணர்கள் வாழும் தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒன்றில் மங்கள ஒலியும் மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது . அது பற்றி அங்குள்ளவர்களிடம் விசாரிக்க ஒரு வீட்டில் பிள்ளைக்கு பூணூல் கல்யாணம் நடக்கிறது என்றும் எதிர் வீட்டில் உள்ளவர் களின் பிள்ளையும் அதே வயது உடையவன் என்றும் மூன்று  ஆண்டுகள் முன் முதலை குளக்கரையில் விழுங்கியதனால் அந்த பெற்றோர் அதை நினைந்து அழுவதையும் கூறினர்  

இந்த சம்பவத்தை தீர விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பாலகர்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் இப்போது பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்று அழுவதாயும்  தெரிவித்தனர்.

இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்து "எற்றான் மறக்கேன் " என்ற திருப்பதிகம் பாடி பிள்ளை தரச்சொல்லு காலனையே என்று பாட அவிநாசியப்பரின் அருளால் வறண்ட  குளத்தில் நீர் நிறைந்து முதலை வந்து அதன் வாய்க்குள்  3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். பிறகு அப்பாலகனை பெற்றோரிடம் அழைத்து சென்று சேர்த்து அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் திருமுறை நடத்திய அற்புத நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி மாத உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்சவம்' நடக்கிறது.


அப்பதிக பாடல் 

பாடல் எண் : 4
 

உரைப்பார் உரைஉகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர்அவி னாசியே
கரைக்கால்முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே

 
                    
திருமுறைகளை நம்பிக்கையுடன் நாளும் ஓத வேண்டுவதெல்லாம் கிட்டும் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும் ?

இன்றும் அவிநாசியில் அந்தணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆரூரன் ,சுந்தரமூர்த்தி , நம்பிஆரூரன் என்று பெயர் வைத்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நன்றி செலுத்துகிறார்கள்                     



                        போற்றி ஓம் நமசிவாய


                             திருச்சிற்றம்பலம்  



Monday, March 17, 2014

தண்டியடிகள் நாயனார் குருபூசை

                                            ஓம் நமசிவாய 


தண்டியடிகள் நாயனார் குருபூசை 


     "நாட்டமிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும் )அடியேன்" 


அவதார தலம் - திருவாரூர் 
முக்தி தலம்     - திருவாரூர்
குரு பூசை திருநட்சத்திரம் -பங்குனி - சதயம்


 28-03-14-வெள்ளிகிழமை 

தண்டியடிகள் நாயனார் புராணம் படிக்க இங்கே சொடுக்கவும்


http://sivanadimai.blogspot.in/2013/04/blog-post_6.html 



                         போற்றி ஓம் நமசிவாய 



                                திருச்சிற்றம்பலம் 

Sunday, March 16, 2014

காரைக்கால் அம்மையார் குருபூசை

                                                      ஓம் நமசிவாய 

காரைக்கால் அம்மையார் குருபூசை
                                  
                                        
           "பேயார்க்கும் அடியேன்" 


அவதார தலம் - காரைக்கால்
முக்தி தலம்     - திருவாலங்காடு
குருபூசை திருநட்சத்திரம் - பங்குனி - சுவாதி
            20-03-2014 - வியாழக்கிழமை


 
காரைக்கால் அம்மையார் புராணம் படிக்க இங்கே சுட்டவும் 

http://sivanadimai.blogspot.in/2013/03/blog-post_22.html 



                          போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்  

சைவ காலண்டர் -பங்குனி

                                ஓம் நமசிவாய


சைவ காலண்டர் -பங்குனி
           
         15-03-2014 முதல் 13-04-2014 வரை

தை 
02 ஆம் நாள் - 16-03-14-ஞாயிறு -பௌர்ணமி 

06 ஆம் நாள் - 20-03-14-வியாழன் -சதுர்த்தி , காரைக்கால் அம்மையார் குருபூசை 

08 ஆம் நாள் - 22-03-14-சனி-சஷ்டி

09 ஆம் நாள் -23-03-14-ஞாயிறு -தேய்பிறை அஷ்டமி

14 ஆம் நாள் -28-03-14-வெள்ளி -பிரதோஷம் , தண்டியடிகள் குருபூசை 

15 ஆம் நாள் -29-03-14-சனி- சிவராத்திரி

16 ஆம் நாள் -30-03-14-ஞாயிறு -அமாவாசை 

20 ஆம் நாள் -03-04-14-வியாழன் -சதுர்த்தி , கிருத்திகை 

21 ஆம் நாள் -04-04-14-வெள்ளி -நேச நாயனார் குருபூசை 

22 ஆம் நாள் -05-04-14-சனி -சஷ்டி

23 ஆம் நாள் -06-04-14-ஞாயிறு -கணநாத நாயனார் குருபூசை 

24 ஆம் நாள் -07-04-14-திங்கள் -திரு நந்தி தேவர் திருக்கல்யாணம் 

25 ஆம் நாள் -08-04-14-செவ்வாய் -முனையடுவார் நாயனார் குருபூசை 

29 ஆம் நாள் -12-04-14-சனி -மகா பிரதோஷம் , அவினாசி சுந்தரர் முதலை வாய் பிள்ளை அழைத்த உற்சவம் 

30 ஆம் நாள் -13-04-14-ஞாயிறு -பங்குனி உத்திரம், எட்டு தொகையடியார்கள் குருபூசை
(தில்லை வாழ் அந்தணர் தவிர )




                         போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம்