rudrateswarar

rudrateswarar

Friday, September 20, 2013

உருத்திரபசுபதி நாயனார் புராணம்


                               ஓம் நமசிவாய 


 உருத்திரபசுபதி நாயனார் புராணம்


                            "உருத்திர பசுபதிக்கும் அடியேன்"


அவதார தலம் - திருத்தலையூர்
முக்தி தலம் - திருத்தலையூர்
குருபூசை திருநட்சத்திரம் -புரட்டாசி ,அசுபதி

22-10-2013 ஞாயிற்றுக்கிழமை



சோழவள நாட்டிலே பூம்பொழில்கள் மிகுந்துள்ள ஊர் திருத்தலையூர் . இவ்வூரில் அந்தணர்களின்  வேதபாராயணம்  ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித்தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும் அளவிற்கு அருளுடைமை யும், பொருளுடைமையும் ஓங்கிட அன்பும் அறனும் ‌குன்‌றாது குறையாது நிலை‌ பெற்று விளங்கின. இத்தகைய சீரும், சிறப்புமிக்க திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார். இவர் தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉருத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். 



அருமறைப் பய னாகிய உருத்திர மதனை
வருமுறைப் பெரும்பகலும்எல் லியும்வழுவாமே
திருமலர்ப் பொகுட்டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.




ருத்திரன் என்றால் துன்பங்களினின்றும் விடுப்பவன் என்று பொருள் சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின. எம்பெருமானுடைய பெருமையை சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப் பொருளாகும். அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப்பெற்றுள்ள இத்திருமந்திரத்தையே  தமது மூச்சாகக் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். இவர் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவத்தொண்டு புரிந்து வந்தார். இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை குவித்து உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவு பகல் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது பற்றியே இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 


நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.



உருத்திர பசுபதியாரின் சிவபக்தி பற்றி அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமே இருப்பர். உருத்திரபசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்ய எம்பெருமான் திருவுள்ளம் கனிந்து, பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திர பசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி அருகில் அரும்பேற்றைப் பெற்றார்.


                       போற்றி ஓம் நமசிவாய


 


                            திருச்சிற்றம்பலம்

திருநாளைப்போவார் புராணம்

                               ஓம் நமசிவாய



திருநாளைப்போவார் புராணம்

                       

           "செம்மையே  திருநாளைப் போவார்க்கும்  அடியேன்"


அவதார தலம் - ஆதனூர்
முக்தி தலம்     - தில்லை
குருபூசைதிருநட்சத்திரம் -புரட்டாசி,ரோகிணி
25-09-2013 புதன்கிழமை


ஆதனூர் என்னும் சிவத்தலம் சோழவள நாட்டிலே கொள்ளிடக் கரையை அடுத்தாற் போல் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் நீர்வளமும், நில வளமும் அமையப் பெற்றது. ஆதனூருக்கு அருகாமையில் ஊரை ஒட்டி வயல்களால் சூழப்பட்ட சிறு குடிசைகள் நிறைந்த புலைப்பாடி ஒன்று இருந்தது. அங்கு குடும்பமாகக் குடிசைகள் அமைத்து புலை‌‌யர் குல மக்கள் உழுதலைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் நந்தனார் . மண்ணிலே பிறந்த நாள் முதல் அரனாரிடத்து அளவில்லாத அன்பும், பக்தியும் பூண்டிருந்தார் நந்தனார். எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். தமது குலத்தி னருக்குரிய தொழில்களில் மேம்பட்டு விளங்கிய நந்தனார், தமக்குத் கிடைக்கும் தோல், நரம்பு முதலியவற்றை விற்று ஊதியத்தைப் பெருக்காமல், ‌கோயில்களுக்கு பயன்படும் பேரிகை முதலான கருவிகளுக்கு வேண்டிய போர்வைத் தோல் முதலிய பொருள்களை இலவசமாக வழங்கி வந்தார். ‌கோயில்களில் உள்ள வீணைக்கும், யாழுக்கும் நரம்புகள் அளிப்பார். ஆராதனைப் பொருளான கோரோசனம் போன்ற நறுமணப் பொருள்களை வழங்குவார். இங்ஙனம் நந்தனார் பல வழிகளில் இறைவனுக்கு இடையறாது அருந்தொண்டு புரிந்து வந்தார். அக்காலத்தில் தாழ்ந்த குலத்தோர் எனக் கருதப்படுவோர் ஆலயத்துள் சென்று இறைவ‌னை வழிபடத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர். அதனால் நந்தனார் ஆலயத்திற்குள் போகாது வெளி‌யே இருந்து இறைவனை மனதிலே எண்ணி ஆனந்தக் கூத்தாடுவார், பாடுவார், பெருமகிழ்ச்சி கொள்வார்.


நந்தனார் ஒருமுறை திருப்புன்கூரிலுள்ள திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் சிவலோக நாதரைத் தரிசிக்க எண்ணினார். தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்று உளம் விரும்பினார். ஒரு நாள் புறப்பட்டு அத்திருக்கோயிலை சென்று அடைந்தார். சிவலோகநாதரைக் கோயிலின் வெளியி‌லே நின்று வழிபட்டுப் போக விரும்பினார் நந்தனார். அவருடைய விருப்பம் நிறைவேறாது சிவலோகநாதரை மறைத்துக் கொண்டு நந்தி இருந்தது. அதைப் பார்த்ததும் நந்தனாருக்கு வேதனை தாங்க வில்லை. தேடி வந்த பெருமானின் தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண் கலங்கினார். சிவ சிவ என்று இறைவன் திருநாமத்தையே ஓதிக் கொண்டிருந்தார். கோயிலின் வெளியே மனம் நைந்து உருகும் பக்தனைக் காக்கத் திருவுள்ளங் கொண்ட சிவலோகநாதர் தம்மை மறைத்த நந்தியைச் சிறிது விலக்கினார். தீபாராதனை ஒளியில் கர்ப்பக் கிரகத்தில் ஆனந்தச் சுடராய் அருள் வடிவாய் காட்சியளிக்கும் சிவலோகநாதரின் திருத்தோற்றத்தைப் பார்த்து உள்ளமும், உடலும் பொங்கிப் பூரிக்க நிலத்தில் வீழ்ந்து பன்முறை வணங்கினார் நந்தனார். சிவலோக நாதரைப் பாடிப் பாடி ஆனந்தக் கூத்தாடினார். உள்ளத்திலே பேரின்பம் பூண்ட அவர் உடல் புளகம் போர்த்தது ! கோயிலை பன்முறை வலம் வந்தார். நந்தனார் மன நிறைவோடு ஊருக்குப் புறப்பட்டார்.

திரும்பும்போது ஊரின் நடுவ‌‌ே பெரும்பள்ளம் ஒன்று இருக்கக் கண்டார். ‌பள்ளத்தை பார்த்த நந்தனார் உள்ளத்தில் ஒரு நல்ல எண்ணம் பிறந்தது. ஊற்றுக்கேற்ற பள்ளமான அந்த இடத்தை வெட்டி குளமாக்கத் தீர்மானித்தார். இரவு பகல் பாராமல் சிவநாமத்தைச் சிந்தை யிலே கொண்டு பள்ளத்தை சுவாமி புஷ்கரணி யாக்கினார். எண்ணியதை எண்ணியபடிச் செய்து முடித்தார். ஆதனூருக்கு திரும்பினார். ஆதனூரை அடைந்ததும் நந்தனார் சிவலோக நாதர் நினைவிலேயே இருந்தார். மீண்டும் திருப்புன்கூர் பெருமானை வழிபட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனே ஆதனூரை விட்டுப் புறப்பட்டுத் திருப்புன்கூர் சென்று இறைவனை வழிபட்டார். இம்மையில் தாம் எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்று விட்டதாக உள்ளம் பூரித்தார். நாட்கள் நகர நந்தனாரின் தொண்டுகளும் தங்கு ‌தடை இன்றி தவறாது நடந்தன. பல தலங்களுக்குச் சென்று அடிக்கடி இறைவனை வழிபட்டு வந்த நந்தனாரின் பக்தி உள்ளத்தில் ஒரு ஆசை பிறந்தது. சிவத்தலங்களுள் ஒப்பற்ற மணியாய் விளங்கும் தில்லைக்குச் சென்று அம்பலக் கூத்தனை வழிபட்டு வரவேண்டும் எனற தணியாத ஆசை எழுந்தது ! இரவு துயிலப் போகும்போது, பொழுது புலர்ந்ததும், எப்படியும் தில்லைக்குப் புறப்பட வேண்டும் என்று எண்ணுவார். விடிந்ததும் அவரது எண்ணம் அவரது இதயத்தினின்றும் கதிரவனைக் கண்ட காலைப்பனி கலைவது போல் மறைந்துவிடும். முடவன் கொம்புத் தேனை விரும்புவதா? உ‌யரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்பது போல் தனக்கு எவ்வளவு தான் ஆவல் உயர்ந்த போதும் மற்றவர்களைப்போல் தில்லைக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியுமா? முடியவே முடியாது என்ற உறுதியான தீர்மானத்திற்கே வந்து விட்டார் நந்தனார். இவ்வாறு அவரால் சில நாட்கள் தான் இருக்க முடிந்தது !

மீண்டும் தில்லைக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமா‌னைத் தரிசிக்காவிடில் இம்மையில் உயிர் வாழ்ந்து என்ன பயன்? சிதம்பர தரிசனம் கிடைக்காது போகும் இந்த இழிவை அகற்றுவது எப்படி ? என்றெல்லாம் எண்ணிப் புலம்புவார். இப்படி ஒவ்வொரு நாளும் நந்தனாரின் ஆசை நிறை வேறாமல் தடைபட்டுக் கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் நாளைப் போவேன் என்று எண்ணி நாளைக் கடத்திக் கொண்டே வந்த நந்தனார் திருநாளைப் போவார் என்ற திருநாமத்தைப் பெற்றார். எப்படியோ ஒருநாள் அவரது இதயத்தில் எழுந்த இந்த ஆசை பூவாகி, காயாகி, கனிந்து முதிர்ந்து நாளைப் போவோம் என்று நாள் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த நந்தனார், ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்கு புறப்பட்டு தில்லையின் எல்லையடைந்தார். தில்லையிலே அந்தணர் நடத்தும் வேள்விப் புகை விண்ணை முட்டி மேகத்தோடு கலக்க மூவாயிரம் வேள்விச் சாலைகளிலிருந்தும் எழுந்த இறைவனின் திருநாம ஒலிகள் தில்லை எங்கும் ஒலித்துக்‌ கொண்டிருந்தன. கயிலையே தில்லைக்கு வந்தாற் போன்ற காட்சி. இதை எல்லாம் பார்த்த நந்தனாருக்கு கை கால் ஓடவில்லை.அப்படியே சிலை போல் எல்லையிலேயே நின்றுவிட்டார் ! தில்லையின் எல்லையில் நின்றவர் தமக்கு நகருள் சென்று கோயிலைக் காணும் தகுதி இல்லை என்பதை உணர்ந்து உளம் வாடினார். அடங்காத ஆறாக் காதல் வளர்ந்தோங்கிற்று உள்ளம் உருகிற்று சென்னி மீது கரம் தூக்கி தொழுது நின்றார். தி‌ல்லையைக் கண்ட களிப்பில் உடல் இன்ப நாதம் எழுப்பும் ‌யாழ் போல் குழைந்தது. உள்ளக்களிப்பு கூத்தாட நகரைப் பன்முறை வலம் வந்தார். எல்லையில் நின்றபடி ஆனந்தக் கூத்தாடிப் பாடினார். அம்பலத்தரசரின் நாமத்தைப்பாடிப் பெருமையுற்றார்.

இப்படியே ஆடியும், பாடியும் நந்தனார் தம்மையறியாமலேயே தில்லையின் எல்லையைத் தாண்டி அந்நகரத்தைச் சுற்றி அமைந்திருந்த மதிற்புறத்தை அடைந்து மதி‌லை வணங்கினார். இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்தார். அவரால் ஆலயத்தை அடைய முடியவில்லை. ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்த போதிலும் சமூகத்தின் தீண்டாமை நோய் அவரைத் தடுத்தது. இந்நிலையை நினைத்து நெஞ்சு புலம்பினார். இறைவனை உள் சென்று வழி படும் பேறு எனக்கு இல்லையே களிநடனம் புரியும் திருநடராஜரின் காலைத்தூக்கி நின்றாடும் ஆனந்தக் காட்சியைக்காணக் கொடுத்து வைக்காத கண்ணைப் பெற்ற பாவி கண்ணிருந்தும் குருடன் ஆனேனே ? என்று அரற்றினார். அரனார் நாமம் போற்றித் துதித்தார் , துக்கித்தார். அம்பலத்தரசனை மனத்தில் நினைத்தபடியே தன்னை மறந்து நிலத்தில் சாய்ந்தார். இப்படியாக நாட்கள் பல உருள அவரது ஆசை மட்டும் ஈடேறவே இல்லை.

ஒருநாள், அம்பலத்தரசன் அவரது கனவில் எழுந்தருளி நந்தா வருந்தாதே எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன். இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவன் நந்தனாருக்கு அருள் செய்து பின்னர் தில்லை வாழ் அந்தணர் தம் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என ஆணையிட்டார். மறுநாள் காலை தில்லை வாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.

எம்பெருமானை நினைத்துருகும் நந்தனாரை அணுகி, அம்பலத்தரசன் ஆணையை நிறை வேற்ற நாங்கள் வந்துள்ளோம் பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழ தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக என்று வேண்டிக்கொண்டார்கள் தில்லை அந்தணர்கள் மொழிந்‌ததைக் ‌கேட்டு, உய்ந்தேன் என்று கூறி நந்தனார் அவர்களைத் தொழுதார். அந்தணர்கள் மதிற்புறத்த‌ே தீ மூட்டி நந்தனார் மூழ்கி எழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். நந்தனார் இறைவன் மலர்த்தாளினை மனத்திலே எண்ணியவராய்த் தீயை வலம் வந்தார். செந்தீவண்ணர் தியானத்திலேயே தீயிடை மூழ்கினார். நெருப்பிலை மூழ்கி எழுந்த நந்தனார் பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் ‌போல் சடை முடியுடன், கோடி சூர்யப்பிரகாசத்துடன் வெளியே வந்தார். நந்தனார் அனலிடை மூழ்கி எழுந்த காட்சி செந்தாமரை மலர் மீது தோன்றிய பிரம்மனை போல் இருந்ததாம் நந்தனாரின் அருள் வடிவம் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்து அவரை வாழ்த்தி வணங்கினார். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவ கணங்கள் வேதம் முழங்க நான்மறைகள் ஒலித்தன. அந்தணர்கள் வழிகாட்ட நந்தனார் முன் சென்றார். கரம் குவித்து ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் சென்று குவித்த கரங்களோடு திருமுன் சென்றவர் திரும்பவே இல்லை. அம்பலத்தரசன் திருவடி நீழலிலேயே ஐக்கியமாகி கலந்தார் நந்தனார். எம்பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வு பெற்றார் நந்தனார்.




                      போற்றி ஓம் நமசிவாய 



                           திருச்சிற்றம்பலம்

Thursday, September 12, 2013

சைவ காலண்டர் - புரட்டாசி

                                                         ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் - புரட்டாசி

17-09-2013 -17-10-2013


 புரட்டாசி மாதம் 

01ஆம் நாள் 17-09-13-செவ்வாய் -பிரதோஷம்

02ஆம் நாள் 18-09-13-புதன்- ஸ்ரீ நடராசப்பெருமான் அபிடேகம்

03ஆம் நாள் 19-09-13-வியாழன் -பௌர்ணமி 

06ஆம் நாள் 22-09-13-ஞாயிறு -சங்கடஹர சதுர்த்தி ,உருத்திரபசுபதி நாயனார் குருபூசை 

08ஆம் நாள் 24-09-13-செவ்வாய் -கிருத்திகை 

09ஆம் நாள் 25-09-13-புதன் -சஷ்டி ,திருநாளைப்போவார் குருபூசை

11ஆம் நாள் 27-09-13-வெள்ளி- தேய்பிறை அஷ்டமி ,பைரவர் வழிபாடு 

16ஆம் நாள் 02-10-13-புதன்- பிரதோஷம் 

17ஆம் நாள் 03-10-13-வியாழன்-சிவன்ராத்திரி ,அருள்நந்தி சிவாச்சாரியார் குருபூசை 

18ஆம் நாள் 04-10-13-வெள்ளி- மஹாளய அமாவாசை 

19ஆம் நாள் 05-10-13-சனி - நவராத்திரி ஆரம்பம் 

22ஆம் நாள் 08-10-13-செவ்வாய்- சதுர்த்தி 

24ஆம் நாள் 10-10-13-வியாழன்- சஷ்டி 

26ஆம் நாள் 12-10-13-சனி- ஏனாதி நாயனார் குருபூசை 

27ஆம் நாள் 13-10-13-ஞாயிறு- சரஸ்வதி பூசை ,ஆயுதபூசை 

28ஆம் நாள் 14-10-13-திங்கள்- விஜயதசமி 

29ஆம் நாள் 15-10-13-செவ்வாய் -நரசிங்கமுனையரையர் நாயனார் குருபூசை 

30ஆம் நாள் 16-10-13-புதன்- பிரதோஷம்




                       போற்றி ஓம் நமசிவாய 




                                             திருச்சிற்றம்பலம்   
 

Wednesday, September 11, 2013

குங்குலியக் கலய நாயனார் புராணம்

                                                           
                          ஓம் நமசிவாய

 
குங்குலியக் கலய நாயனார் புராணம்

                 
                     "கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - திருக்கடவூர்  
முக்தி தலம்     - திருக்கடவூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி, மூலம் 
13-09-2013 வெள்ளிக்கிழமை



 

திருக்கடவூர் சோழ நாட்டிலுள்ள ஒரு தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான்   அமிர்தகடேசுவரர் என்ற திருநாமம் கொண்டு நம்மை உய்விக்கிறார் . பால் மணம் மாறாத பாலகன் மார்க்கண்டேயனின் அன்பு அணைப்பிலே கட்டுப்பட்ட பெருமான் காலனைக் காலால் உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக வெளிப்பட்ட தலம் இதுவே. 

இத்தகைய புராணப் பெருமைமிக்க தலத்தில் வேதியர்கள் பலர் வாழ்ந்தனர் அவர்களுள் கலயனாரும் ஒருவர்  இவர் கங்கை அணிந்த மாதோர்பாகன் திருவடியை இடையறாது வணங்கும் நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். தூய உள்ளமும், நல்லநெறியும் சிறந்த பக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற கலயனார், திருக்கோயிலுக்கு குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை, தவறாது பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். 

எம்பெருமானுக்குத் தூய மணம் கமழும் குங்கிலியம் ஏற்றும் தொண்டினை செய்ததால் இவர் குங்குலியக் கலயர் என்று பெயர் பெற்றார். கலயனார் குடும்பத்தில் வறுமை தாண்டவம் புரிந்தது. வறுமையை யும் ஒரு பெருமையாகக் கொண்டு சற்றும் மனம் தளராது திருத்தொண்டினை மட்டும் இடைவிடாது சிறப்பாகவே செய்து வந்தார் கலயனார். வறுமை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. நிலங்களை விற்றார்.வீட்டில் உள்ள அசையும் அசையாத பொருட்களை விற்றார். பசியினால் சுற்றமும் மக்களும் மனைவியும் பெரிதும் துன்புற்றார்கள் . இரு  நாட்களாக உணவில்லாமல் வாடினர் கலயனார் தமது வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொண்டாரே தவிர குங்குலிய தூபமிடும் திருத்தொண்டினை மட்டும் நிறுத்தவில்லை.

வறுமையின் நிலை கண்டு குடும்பத்தலைவி மனம் வருந்தி தமது திருமாங்கல்யத்தைக் கழற்றி கணவரிடம் தந்து அதனை விற்று நெல் வாங்கி வருமாறு கூறினார்   


திருமாங்கல்யத்தைப் பெற்று அதை விற்று நெல் வாங்கும் பொருட்டு புறப்பட்டார். அந்த சமயம் எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லா  குங்குலியப்பொதியினைக் கொண்டு வந்தான் நாயனார் அவனிடம் இது என்ன பொதி ? என்று வினவினார் .அவன் இது குங்குலியம் என்றான் அது கேட்ட கலயனார் அகமும் முகமும் மலர்ந்தார் .
 

இறைவனின் திருவருளை என்னென்பது ! கையிலே பொன்னையும் கொடுத்து எதிரில் குங்குலியத்தையும் அல்லவா அனுப்பி வைத்திருக்கிறார். இந்த பாக்கியம் உலகில் வேறு யாருக்குமே கிட்டாது. எம்பெருமானின் திருவுள்ளம் இந்த ஏழைக்காக இரங்கியதை என்னென்பது  என்று எண்ணி மகிழ்ந்தார் கலயனார், களிப்புடன் வணிகனை அணுகி, இந்த பொன்னை எடுத்துக் கொண்டு, குங்கிலியப் பொதியைக் கொடு என்றார். கலயனார்,தாலியை வணிகனிடம் கொடுக்க மகிழ்ச்சியோடு வணிகனும் குங்குலியப் பொதியை அவரிடம் கொடுத்தான். 


உடனே கலயனார், குங்குலியப்பொதியோடு விரைந்து கோயிலுக்கு சென்று குங்குலிய மூட்டையைச் சேர்த்துச் சிந்தை மகிழ்ந்தார். இறைவனின் திருநாமத்தைப் போற்றியவாறு மனைவி மக்களையும் மறந்து எம்பிரானை நினைந்து அயரா அன்புடன் வழிபாடு செய்து அங்கேயே தங்கிவிட்டார். 

கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமானின் திருவருளின்படி குபேரன் கலயனாரது திருமாளிகை முழுவதும்  நெல்லும், நவமணியும், பொன்னும், பட்டும் அளவிட முடியாத அளவிற்கு குவித்து வைத்தனன் . இறைவன் களைத்து துயிலும் கலயனாருடைய மனைவியாரின் கனவில்  எழுந்தருளி தமது திருவருளால் செல்வம் நிறைந்த தன்மையை உணர்த்தியருளினார்   கலயனார் மனைவி துயிலெழுந்து வீட்டில் பொன்னும், மணியும், நெல்லும், குவிந்து கிடப்பது கண்டு திருவருளை வியந்து போற்றினார்.விடியற்காலை நேரமாதலால் குளித்து முழுகி கணவனாருக்கு உணவைப் பக்குவம் செய்யத் தொடங்கினாள். 

கலயனார்பால் காலனை செற்ற கண்ணுதற் கடவுள் எழுந்தருளி அன்பனே  உன்னுடைய இல்லத்திற்குச் சென்று, பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு பசி தீர்ந்து மகிழ்வாயாக என்று திருவாய் மலர்ந்தார். குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க தமது  திருமனைக்கு ஓடோடி வந்தார்.

இல்லத்தில் இருநிதிக் குவியல்கள் சேர்ந்த செல்வம் கண்டார் .திருமாங்கல்யத்துடன் திகழும் மனைவியை நோக்கி எப்படி இதெல்லாம் என்று வினவ அம்மையார் தொழுது எம்பெருமான் அருளினால் வந்தது என்றார் .நாயனார் எம்மையும் ஒரு பொருட்டாக ஆட்கொண்ட எந்தை ஈசனின் திருவருள் தான் என்னே? என்று தலைமேல் கை கூப்பி வணங்கினார். பின் பலகாலும் நாயனாரும் அவர்தம் மனைவியாரும் அடியார்க்கு அமுது செய்வித்து திருத்தொண்டாற்றி வருவாராயினர்


திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலே, பாரே வியக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை இறைவர் ஏற்படுத்தினார். திருப்பனந்தாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தாள் தாடகை என்னும் பெண்ணொருத்தி  இறைவழிபாடு முடிந்த பிறகு இறைவனுக்கு மாலையை அணிவிக்கும் சமயத்தில் அம்மங்கை நல்லாளின் ஆடை சற்று நெகிழ்ந்தது.

ஆடையை இரண்டு முழங்கைகளினாலும் இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனுக்கு மாலையைப் போட முயன்ற அப்பெண் மாலையை அணிவிக்க முடியாமல் தவிக்க இறைவன், அப்பெண்ணுக்காக இரங்கிச் சற்றுச் சாய்ந்து கொடுக்க தாடகையும் மாலையணிவித்து, மகிழ்வோடு சென்றாள். அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது. 


இந்நிலையில், திருப்பனந்தாள் ஆலயத்தில் சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட  நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன்முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான் திருமேனி நிமிரவில்லை அன்பின்மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தி குங்குலியக் கலயனார் கேட்டார் இறைவனுக்குத் திருத்தொண்டு புரிந்து வரும் குங்குலியக் கலயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோவிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால்சன்னதியைத் தூபமிட்டார் .  கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தை எம்பெருமான்  திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். கயிறு இறுகி உயிர் போகும் என்று  கவலைப்பட வில்லை நாயனார் ! இறைவனுக்கு இச்சிறு தொண்டினைச் செய்ய முடியாத இந்த உயிர் இருந்தாலென்ன ? பிரிந்தாலென்ன ? என்ற முடிவோடு தமது முழுப் பலம் கொண்டு இழுத்தார். இறைவனைக் கயிற்றால், தன் கழுத்தோடு கலயனார் பிணைத்து இழுத்த செயல் எம்பெருமானுக்குத் தம்மைப் பக்தி எனும் கயிற்றால் கட்டி இழுப்பது போல் இருந்தது.

அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது. எம்பெருமான் திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலயனாரின் பக்தியையும், இறைவனைக் கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ஐயனே! உங்கள் அன்பின் திறத்தினை என்னென்பது ! திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் மலரடியை அன்புமிக்க அடியார்கள் அல்லாது வேறு யாரால் அடைய முடியும் ? உம்மால் யாமும் எம் குடிமக்களும் உய்ந்தோம்  உலகிற்கே உய்வு தங்களால்தான் ஏற்பட்டது என்றார். அரசன் திருப்பணிகளும், திருவிழாக் களும் நடத்தினான். அரசன் கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான் பின் மன நிறைவோடு தன்னகர் அடைந்தான். 


கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். முன்போல் ஆலய வழிபாட்டை செய்யலானார். 

திருக்கடவூர்க்கு எழுந்தருளிய சீர்காழிப் பிள்ளையார் சம்பந்தர் பெருமானுக்கும் திருநாவுக்கரசு நாயனாருக்கும் அடியார் குழாங்களுக்கும் அன்பின்  மிகுதியினால் எதிர் கொண்டு அழைத்து வணங்கி தமது திருமனைக்கு புகுத்தி அருசுவையுண்டியும் படைத்து குருவருளும் திருவருளும் ஒருங்கே பெற்றார் 

காலனையுங் காமனையுங் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்கு தொண்டு பல புரிந்து காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக் கலயனார், இறுதியில் இறைவன் திருவடி நீழலை இணைந்த பேரின்ப வாழ்வைப் பெற்றார்.



                     போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம் 
  

Friday, September 6, 2013

விநாயகர் பெருமை

                                                         

                                  ஓம் நமசிவாய



விநாயகர் பெருமை



விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வேளை யில் விநாயகரைப்பற்றி சில தகவல்களை யும் திருமுறை துதிப்பாடல்களையும் பார்ப்போம் நாயகர் என்றால் தலைவர் வி என்றால் மேலான என்று பொருள் விநாயகர் என்றால் மேலான கடவுள் என்று பொருள் 
கணபதி என்றால் கணங்களின் தலைவன் என்று பொருள் இவரை மூத்த பிள்ளையார் என்றும் கூறுவார்கள் ஏன் ? சிவபெருமானுக்கு நான்கு பிள்ளைகள் கணபதி, வைரவர், வீரபத்திரர் ,முருகன் ஆவர் முருகனை இளைய பிள்ளையார் என்று கூறுவார்கள் இப்பிள்ளைகளில் மூத்தவர் விநாயகர் அதனால் மூத்த பிள்ளையார் ஆனார் அவருக்கு ஏன் யானை முகம் வந்தது ? என்பதனை நமது முதல் சமயக்குரவரான ஆளுடைய பிள்ளையார் சம்பந்தர் சுவாமிகள் தமது திருமுறை பாடலிலே அழகாக கூறியுள்ளார் 

திருமுறைகளில் அருளியுள்ள விளக்கம் காண்போம்    

திருமுறை-1, பதிகம் 123, பாடல் 5,6 திருவலிவலம்


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
.

அன்னை உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ ஆண் யானை வடிவம் தாங்கி அடியவர் தம் இடர் போக்கும் கணபதிநாதன் தோன்ற அருள் புரிந்த ஈசன் மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்தவர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறைவனாவார்.

இந்த பாடலில் உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம் கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது
பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக் கொண்டு.
கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளல் தன்மையினர்

பாடல்-6

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல் உமையொடுவிரவதுசெய்து
நரைதிரை கெடுதகையது அருளினன் எழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை இறையே.


அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள் புரிபவனாவான்.

இந்த பாடலில் மற்றும் ஒரு செய்தியாக ஏன் புணர வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல விநாயகர் அவதாரம் பற்றியும் வருகிறது .பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகர தாம் போகியா யிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப் பாடலில் உமையம்மை பெண் யானையாக, இவர் ஆண் யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது.
புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தல் . தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினார் என்பதாகும்.


 

திருமுறை 1, பதிகம் 77 ,பாடல் 3
திருஅச்சிறுப்பாக்கம்


காரிருள் உருவ மால்வரை புரையக்
களிற்றினதுஉருவுகொண்டுஅரிவைமேல்ஓடி
நீர் உரு மகளை நிமிர்சடைத்தாங்கி

நீறணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார்

பிணியிலர்கேடிலர் பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம்மடிகள்

அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சி புரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண்யானை வடிவு கொள்ள தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். கங்கையை மேல் நோக்கிய சடையினில் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பு இறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன் மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.
 

இறைவர், உமையம்மை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது.
கார் இருள் உருவம் மால்வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரிய மலையையும் ஒத்த.
அரிவை - பெண்யானையாகிய உமாதேவி. இது `பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு` நடந்தமையைக் காட்டுவது.
நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தால் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட்கூட்டம்.
 


விநாயகர் துதி பாடல்கள்


வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.        
ஒளவையார்

 
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.        
ஒளவையார்
 
 
 
 
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.     
திருமூலர்
 
 
 
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
               கபிலதேவ நாயனார்
 
 
 
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.      
சம்பந்தர்
 
 
 
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.        
கச்சியப்பர்


 
 
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை                             கபிலதேவ நாயனார்

 

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
            நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்
           தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
           இரவு பகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டு அயன் திருமால் செல்வமும்
           ஒன்றோ என்னச் செய்யும் தேவே            அருணந்திசிவம்


எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்         சேக்கிழார்பெருமான்



அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல குணம் அதிகமா மருணைக் கோபுரத்துள் மேவு

செல்வ கணபதியைக் கைதொழுதக்கால்.         ஒளவையார்





                     போற்றி ஓம் நமசிவாய 




                           திருச்சிற்றம்பலம்

குலச்சிறை நாயனார் புராணம்

                                   
                             ஓம் நமசிவாய 



குலச்சிறை நாயனார் புராணம் 


               “பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”


அவதார தலம் - மணமேற்குடி 
முக்தி தலம்     - மதுரை
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,அனுசம்
11-09-2013 புதன்கிழமை




பழமையான புகழினை உடைய நன்மை மிக்க பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல் களும் இனிய கரும்புகளும் அவற்றின் அருகே  செறிந்து நிற்கும் பாக்கு மரங்களும் கொண்ட இடங்களும் சூழ உள்ளதும் நிலை பெற்ற வள்ளன்மையுடையார் இருந்தருள் வதுமாய நகரம், மணமேற்குடி என்பதாகும் அந்நகரின் முதல்வர், செயற்கரிய சிறப்பினை யுடைய குலச்சிறையார் ஆவர். அவர் வன்றொண்டன் எனும் பெயருடைய நம்பியாரூரரால், ஒப்பற்ற `பெரு நம்பி` எனப் போற்றப் பெற்றவர். தம் திருமனத்து இருக்கும் திண்மையால் திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் வழுவாதவர்


கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.


அவர், இறைவனின் இன்னருள் பெறுதற்கு சிவனடியார்களே காரணமாவர் எனும் துணிவால், அடியவர்களிடத்து அன்பு கொண்டு அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி கைகள்கூப்பித் தொழுது, அன்புகலந்த இனிய நன்மொழி களைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர். வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவ்வவ்வொழுக்க நெறியினின்றும் நீங்கிய வர்களாக இருப்பினும்சிவபெருமானிடத்தில்  நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப் பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையவர்.


குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்

உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்க ளின்றி அளவற்ற தீமைகளை உடையரா யினும் , பிறை விளங்கும் செஞ்சடையினை உடைய சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கும் தன்மையினை உடையவர்.

இப்பெருந்தகையார், குணத்தில் மிக்கவர்கள் பெருங்கூட்டத்தாராய் உணவு வேண்டி வரினும், அன்றி ஒருவராய் உணவு வேண்டி வரினும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, அவரொடு நட்புமிக்குத் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர்
அடியவர்கள் , திருநீறு, உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நா வணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர்.

இவ்வாறாகிய நல்லொழுக்கத்தில் தலை நின்றவராய குலச்சிறையார், முடிவில்லாத சிறப்பினையுடைய பாண்டி மன்னராம் நின்றசீர் நெடுமாறனாருக்கு அமைந்த சிறப்பு மிக்க அமைச்சர்களுள் மேம்பட்டவராய் வாழ்ந்தவராவர். இவர் பகைவர்களை அழித்து அரசருக்கு உறுதி பயக்கும் நிலையில் பணிபுரிந்து வருபவர்.இத்தகைய செயற்பாட்டினை உடையராகிய நாயனார் கங்கையைத் திருச்சடையில் கொண்ட சிவபெருமானாரின் திருவடிகளையே போற்றி வரும் இயல்பினை உடையவர். யாண்டும் நிலவிய சிறப்பினை உடைய மங்கையர்க்கரசியாரின் பொருந்திய திருத்தொண்டினுக்கு உறுதுணையாக நிற்கும் உண்மைத் தொண்டரும் ஆவர்.

இழிந்த குணம் உடைய சமணர்களின் பொய்மைகளை நீக்கவும், பாண்டியநாடு திருநீற்றுநெறியினைப் போற்றி வளர்க்கவும், பொருந்திய காழிப்பதியின் வள்ளலாராகிய திருஞானசம்பந்தரின் அழகிய திருவடிமலர் களைத் தம் தலையில் சூடி மகிழவும் வாழ்ந்த சிறப்பினை உடையவர்.


பாண்டியன் உற்ற வெப்பு நீக்கம் முதலாக நேர்ந்த மூவகை வாதங்களிலும் தோல்வி அடைந்த சமணர்களை, வலிய கழுமரத்தில், அவர்கள் இதுகாறும் செய்து வந்த தீமைகளி னின்றும் நீங்க, அதன்கண் ஏற்றுவித்த குலச்சிறையாரின் ஆற்றலை, எவ்வகையில் போற்றி செய்து வணங்கமுடியும்  ஒருவகையிலும் போற்றி செய்ய முடியாது .
என்பது தெய்வ சேக்கிழார் திருவாக்கு 



                        போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

Monday, September 2, 2013

மறைஞானசம்பந்தர் குருபூசை

                                  ஓம் நமசிவாய


மறைஞானசம்பந்தர் குருபூசை


நீராண்ட கடந்தை நகர் மறைஞான
     சம்பந்தர் நிழல் தாள் போற்றி


அவதார தலம் - பெண்ணாகடம்  
முக்தி தலம்     - திருக்களாச்சேரி
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,உத்திரம் 
06-09-2013 வெள்ளிக்கிழமை


சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படுவார்கள். அதேபோல் சந்தானக் குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள் நால்வர்  அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர்.

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு ஆரம்பம் ஆனது. மெய்கண்டாரின் சீடர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது சீடர் மறைஞான சம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் ஆவணி உத்திரம் அன்று பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இவருடைய வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று உண்டு. ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவம்  என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜைசெய்யும்அர்ச்சகர்களை  பல்லக்கில் கொண்டு சென்றுவீட்டில்விடுவது பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்) உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் செல்ல உமாபதி சிவம் பல்லக்கில் பின்னே வர செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார்.உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானாக்னியாக பற்றிக் கொண்டது.

சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்,என்று அவரது திருவடி களில் பணிந்தார். மறைஞானசம்பந்தர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவர்  பின்தொடர்ந்தார். மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டில் இருந்தவர்கள் கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தனர். சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே மறைஞானசம்பந்தர் அதை அண்ணாந்து குடித்தார். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் ஒழுகத் தொடங்கியது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். 


மறைஞானசம்பந்தர் சிவதர்மோந்திரம் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார் .இவர் நேரடியாக எந்த சித்தாந்த நூல்களையும் எழுத வில்லை தனது குரு அருணந்தி சிவம் அவர்களிடம் தான் கற்றவற்றை தனது சீடர் உமாபதிசிவம் அவர்களுக்கு உபதேசிக்க அவர் மெய்கண்ட சாத்திரங்களில் எட்டு நூல்களை இயற்றினார் .



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம் 

இளையான்குடிமாற நாயனார் புராணம்

                                 ஓம் நமசிவாய


இளையான்குடிமாற நாயனார் புராணம்

 
 
               
              "இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - இளையான்குடி  
முக்தி தலம்     - இளையான்குடி
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி , மகம் 
04-09-2013 புதன்கிழமை


இளையான்குடி என்னும் நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இத்திருப்பதியிலே வேளாளர் மரபிலே குலம் பெற்ற பேறாக உதித்தவர் தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். எந்நேரமும் எம்பெருமானையும்   ஐந்தெழுத்தையும் சிந்தித்த கொண்டிருப்பார் மாறனார். இவ்வகையில் அடியார்களை அழைத்து வந்து தாமும் அவரொடு மனை புகுந்து அவர் தம் திருவடிகளைக் குளிர்ந்த தூயநீரால் கழுவி நிறைந்த பெருவிருப்போடு, அவர்களைப் புனித இருக்கையில் இருத்தி திருவடி வழிபாட்டினைச் செய்த பின்பு, நால் வகையான உணவுகளை, அறுசுவையோடு, ஒப்பில்லாத தேவர் களுக்குத் தலைவனாய, சிவபெருமானுடைய அடியவர்களை மிக விருப்போடு உணவு உண்ணுமாறு நாடொறும் கொடுத்து வந்தவர்.



கொண்டு வந்து மனைப்பு குந்துகு
             குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலினாதனத்திடை
             வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறு

              சுவைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டரிச்சையில்
              அமுது செய்யஅ ளித்துளார்.



இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்து இவருடைய இறை சேவைக்கு உதவினார் மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்ட இறைவர் வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றிப் பேணும்  தன்மையுடையார் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டி, அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான்


வறுமையைக் கண்டு நாயனார் சற்றும் மனம் தளரவில்லை. எப்பொழுதும் போலவே அவர் தமது சிவத்தொண்டைத் தட்டாமல் செய்து வந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்று  அடியார்க்கு அமுதூட்டும் பணியைத் தொடர்ந்தார். செல்வம் தான் சுருங்கியதே தவிர அவரது உள்ளம் மட்டும் சுருங்காமல் நிறைவு பெற்றிருந்தது. விற்று விற்று கைப்பொருள்கள் அனைத்தும் தீர்ந்ததும் மாறனார் கையிலிருந்த பணத்திற்கு சிறிது  நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். அதில் சிறிதளவு விதை நெல்லை விதைத்தார். அன்றிரவு பயங்கர மழை, காற்றோடு கலந்து பெய்யத் தொடங்கியது. பாதை எங்கும் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மாறனாருக்கு ஒன்றும் புரியவில்லை. விதை நெல் வீணாகிவிடுமே என்று வேதனைப் பட்டார். மாறனாரும் அவர் தம் மனைவியும், பசியாலும், குளிராலும் வாடினர். இரவெல்லாம் உறக்கமின்றி உணவின்றி  விழித்திருந்தனர். இத்தருணத்தில் அரனார் சிவனடியார்போல் திருவேடம் பூண்டு  மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி  நாயனார் வீட்டிற்குள் வந்து நுழைந்தார். மாறனார் வீடு அடியார்களை எதிர்நோக்கி, இரவும் பகலும்எப்பொழுதும் திறந்தே தான் இருக்கும்.மழையில் நனைந்து வந்த அடியாரைப் பார்த்து துடித்துப்போனார் மாறனார் விரைந்து சென்று அடியாரை வரவேற்று, அவரது மேனியில் வழிந்த ஈரத்தை துவட்டச் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார். மாறனார் அவரிடம், சுவாமி ! சற்று பொறுங்கள்! அமுது சூடாகச் செய்து அளிக்கிறேன் என்றார். எம்பெருமான் அதற்கு சம்மதித்தவர் போல் தலையை அசைத்தார். இந்நேரத்தில் நமக்கு இப்படியொரு சோதனை வந்துவிட்டதே என்று எண்ணாமல்  நாயனார் மனம் தளரவுமில்லை வெறுப்பும் கொள்ள வில்லை. வீடு தேடிவந்த அடியாரின் பசியை எப்படிப் போக்குவது நமக்கு உணவில்லை என்றாலும் பரவாயில்லை என்று எண்ணி  மனைவியிடம் அது பற்றி வினவினார். 


நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாமின் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென



சுவாமி ! தங்களுக்குத் தெரியாதா ? இந்த நள்ளிரவு வேளையில் எங்கு சென்று யாரிடம் நான் என்ன கேட்பேன் கேட்டால் தான் கொடுக்க யாரிருக்கிறார்கள் ? எனக் கூறி கண் கலங்க  செய்வதறியாது  திகைத்தனர். இடியும், மழையும் அதிகரித்து மின்னல் பளிச்சிட்டது. அம்மின்னலைப் போல் மனைவியார் உள்ளத்திலும் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மங்கை நல்லாள் கணவரை நோக்கி, சுவாமி எனக்கு ஒரு  யோசனை தோன்றுகிறது, கழனியில் காலையில் நாம் விதைத்த முளை நெல்லை வாரிக்கொண்டு வாருங்கள். இமைப்பொழுதில் குத்தி அரிசியாக்கி அடியார்க்கு அமுதிடலாம் என்றாள்.

செல்லல் நீங்கப் பகல்வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலு மாகுமற்
றல்ல தொன்றறி யேன் என் றயர்வுற. 



தக்க சமயத்தில் மனைவியார் கூறிய மொழிகள் அவரது செவியில் அமிர்தம் போல் பாய உள்ளமும் உடலும் பூரித்துப்போனார். புதையல் கிடைத்தாற்போல் உவகை யடைந்து கூடையும் கையுமாகக் கழனியை நோக்கி விரைந்தார். பயங்கர மழை  திக்கு திசை தெரியாத கும்மிருட்டு, மேடு பள்ளம் காண முடியாத அளவிற்குத் தெருவெல்லாம் வெள்ளம் இத்தகைய பயங்கர சூழ்நிலையில் அடியார் மீது பூண்டுள்ள அன்பின் பெருக்கால் நாயனார் இடி மழை கண்டு அஞ்சாது கழனி நோக்கி ஓடினார். 


பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.
 



நடந்து பழக்கப்பட்ட பாதையானதால் இருளில் தன்னை சமாளித்துக் கொண்டார். மாறனார் மழையில் நனைந்தார். இல்லை, அவர் பக்தியில் மூழ்கினார் என்றுதான் கூறவேண்டும். மனம் குளிர சிவநாமத்தை ஜபித்தார். மிக்க சிரமத்துடன் தண்ணீர் மீது மிதக்கின்ற விதை நெல் முளைகளை வாரிக் கூடையிலே போட்டுக் கொண்டு வீட்டை அடைந்தார். அதற்குள் அவரது மனைவியார் தோட்டத்திலிருந்து கீரை பறித்து வந்தாள். நெல்லை கொடுத்தார் நெல்லை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அம்மையார்  சமைக்க விறகு இல்லையே ? என்றதும் மாறனார் சற்றும் மனம் கசப்படையாமல் வீட்டுக் கூரை மீது இருந்த கொம்புகளை அறுத்தெடுத்து வெட்டிக் கொடுத்தார். அதனால் மழையின் கொடுமை வீட்டிற்குள்ளும் புகுந்தது   அம்மையார் நெல்முளையை பக்குவமாக வறுத்து, குத்தி, அரிசியாக்கி சோறாக்கினாள். பறித்து வந்த கீரை கொண்டு சுவையான கறி யமுதும் செய்தார் . இன்னல்களுக்கிடையே ஒருவாறாக இன்னமுது சமைத்தனர்

  
அழுந்திய இடருள் நீங்கி
            அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
            அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
            சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
           தொண்டருந் திகைத்து நின்றார்




அடியவரை அமுதுண்ண மாறனாரும் அவர் மனைவியாரும், ஐயனே! அடியார்களிடம் யாம் பூண்டுள்ள அன்பறிந்து எம் இல்லம் எழுந்தருளிய பெரியோரே! பிறவிக்கடலைக் கடக்க மரக்கலம் இன்றி அழுந்திக் கிடக்கும் இவ்வேழையர் உய்யும் பொருட்டு ஏழையின் மனைக்கு அமுது உண்ண எழுந்தருளும் ! எனப் பணிவன்புடன் வேண்டி நின்றனர். நிலம் கிடந்து நமஸ்கரித்தனர். கண் மூடி தியானித்து நமஸ்கரித்து எழுந்த தெய்வீகத் தம்பதியர் கண் திறந்து பார்த்தபோது  பிறைமுடிப் பெருமான் உமையுடன் விடை மீது எழுந்தருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும் இத்திருக்காட்சி கண்டு பக்தி பெருக்கோடு மெய் மறந்து துதித்து நின்றனர். 


சங்கரா போற்றி ஞான சம்புவே 
            போற்றி யாற்றில் 
வெங்கரா வடுமால்  காணா 
            விமலனே போற்றி என்றும் 
செங்கரா மலகம் போன்று திரு
          வருள் செய்வோய் போற்றி 
பொங்கராவணிந்த வேத 
           புங்கவ போற்றி போற்றி


மாலயனும், கண்டரியாத அடியவராய் வந்த சிவபெருமான்  மனைவியாருடன் கண்டு திகைத்து நிற்கும் மாறனார்க்கு மயிர்ச்சாந்து  அணிந்த நீண்ட திருமுடியுடைய உமையா ரோடு ஆனேற்றில் எழுந்தருளி சிறந்த முறையில்வழிபாடாற்றிய அடியவரை நோக்கி,

அன்பனே அன்பர் பூசை
          அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி
          இருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
          மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந் திருக்க என்றே அருள் 
           செய்தான் எவர்க்கும் மிக்கான்.

 

அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்து வந்த நீ, உன் மனைவியோடு பெருமை பொருந்திய சிவலோகத்தையடைந்து, குபேரனே தனக்குரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்

மாறனார் தன் மனைவியாருடன் உலகத்தில் பல காலம் வாழ்ந்து, திருத்தொண்டர்களைப் பணிந்தும் பரமனை வழிபட்டும்  இறுதியில் செஞ்சடை வண்ணரின் திருவடி நீழலில் இறுதியில்லா இன்பம் பெற்றார்கள்.



                        போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்