rudrateswarar

rudrateswarar

Monday, September 2, 2013

மறைஞானசம்பந்தர் குருபூசை

                                  ஓம் நமசிவாய


மறைஞானசம்பந்தர் குருபூசை


நீராண்ட கடந்தை நகர் மறைஞான
     சம்பந்தர் நிழல் தாள் போற்றி


அவதார தலம் - பெண்ணாகடம்  
முக்தி தலம்     - திருக்களாச்சேரி
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,உத்திரம் 
06-09-2013 வெள்ளிக்கிழமை


சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சமயக்குரவர் நால்வர் என அழைக்கப்படுவார்கள். அதேபோல் சந்தானக் குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள் நால்வர்  அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர்.

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு ஆரம்பம் ஆனது. மெய்கண்டாரின் சீடர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது சீடர் மறைஞான சம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் ஆவணி உத்திரம் அன்று பிறந்த இவர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றார். சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இவருடைய வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று உண்டு. ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய உமாபதி சிவம்  என்பவர் பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அக்காலத்தில், கோயில்களில் பூஜைசெய்யும்அர்ச்சகர்களை  பல்லக்கில் கொண்டு சென்றுவீட்டில்விடுவது பகலாக இருந்தாலும் தீவட்டி பிடித்துச் செல்வதும் வழக்கம்) உச்சிவேளை... வெயில் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகல் நேரத்தில், பல்லக்கின் முன்னே ஒருவன் தீவட்டி பிடித்துச் செல்ல உமாபதி சிவம் பல்லக்கில் பின்னே வர செல்லும் வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் மறைஞானசம்பந்தர். உமாபதியின் பல்லக்கையும், முன்னே தீவட்டியும் செல்வதைக் கண்ட அவர், பட்ட மரத்தில் பகல்குருடு போகுது பார் என்று அவருடைய காதில் படும்படி உரக்க சத்தமிட்டார்.உமாபதி சிவாச்சாரியாரின் காதுகளில் இது கேட்டது. கற்பூரத்தில் பற்றிய நெருப்பு எப்படி கொழுந்து விட்டு எரியுமோ, அதுபோல அவரது மனதில், இந்த வார்த்தைகள் ஞானாக்னியாக பற்றிக் கொண்டது.

சிவஜோதி அவருள் தனலாய் எழுந்தது. பல்லக்கிலிருந்து கீழே குதித்தார். மறைஞான சம்பந்தரிடம் ஓடினார், என்னை சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்,என்று அவரது திருவடி களில் பணிந்தார். மறைஞானசம்பந்தர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. திண்ணையில் இருந்து எழுந்தார். அப்படியே நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை. அவர்  பின்தொடர்ந்தார். மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டில் இருந்தவர்கள் கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தனர். சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே மறைஞானசம்பந்தர் அதை அண்ணாந்து குடித்தார். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் ஒழுகத் தொடங்கியது. குருவாக ஏற்றுக் கொண்ட உமாபதி, சிந்திய கூழை குரு பிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் உமாபதிசிவாச்சாரியார், மறைஞானசம்பந்தரின் சீடரானார். உமாபதி சிவாச்சாரியாரோடு சந்தானக்குரவர் என்னும் மரபு முற்றுப்பெற்றது. சிந்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களை எழுதினார். இதில் குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். 


மறைஞானசம்பந்தர் சிவதர்மோந்திரம் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார் .இவர் நேரடியாக எந்த சித்தாந்த நூல்களையும் எழுத வில்லை தனது குரு அருணந்தி சிவம் அவர்களிடம் தான் கற்றவற்றை தனது சீடர் உமாபதிசிவம் அவர்களுக்கு உபதேசிக்க அவர் மெய்கண்ட சாத்திரங்களில் எட்டு நூல்களை இயற்றினார் .



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment