rudrateswarar

rudrateswarar

Wednesday, September 11, 2013

குங்குலியக் கலய நாயனார் புராணம்

                                                           
                          ஓம் நமசிவாய

 
குங்குலியக் கலய நாயனார் புராணம்

                 
                     "கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - திருக்கடவூர்  
முக்தி தலம்     - திருக்கடவூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி, மூலம் 
13-09-2013 வெள்ளிக்கிழமை



 

திருக்கடவூர் சோழ நாட்டிலுள்ள ஒரு தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான்   அமிர்தகடேசுவரர் என்ற திருநாமம் கொண்டு நம்மை உய்விக்கிறார் . பால் மணம் மாறாத பாலகன் மார்க்கண்டேயனின் அன்பு அணைப்பிலே கட்டுப்பட்ட பெருமான் காலனைக் காலால் உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக வெளிப்பட்ட தலம் இதுவே. 

இத்தகைய புராணப் பெருமைமிக்க தலத்தில் வேதியர்கள் பலர் வாழ்ந்தனர் அவர்களுள் கலயனாரும் ஒருவர்  இவர் கங்கை அணிந்த மாதோர்பாகன் திருவடியை இடையறாது வணங்கும் நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். தூய உள்ளமும், நல்லநெறியும் சிறந்த பக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற கலயனார், திருக்கோயிலுக்கு குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை, தவறாது பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். 

எம்பெருமானுக்குத் தூய மணம் கமழும் குங்கிலியம் ஏற்றும் தொண்டினை செய்ததால் இவர் குங்குலியக் கலயர் என்று பெயர் பெற்றார். கலயனார் குடும்பத்தில் வறுமை தாண்டவம் புரிந்தது. வறுமையை யும் ஒரு பெருமையாகக் கொண்டு சற்றும் மனம் தளராது திருத்தொண்டினை மட்டும் இடைவிடாது சிறப்பாகவே செய்து வந்தார் கலயனார். வறுமை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. நிலங்களை விற்றார்.வீட்டில் உள்ள அசையும் அசையாத பொருட்களை விற்றார். பசியினால் சுற்றமும் மக்களும் மனைவியும் பெரிதும் துன்புற்றார்கள் . இரு  நாட்களாக உணவில்லாமல் வாடினர் கலயனார் தமது வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொண்டாரே தவிர குங்குலிய தூபமிடும் திருத்தொண்டினை மட்டும் நிறுத்தவில்லை.

வறுமையின் நிலை கண்டு குடும்பத்தலைவி மனம் வருந்தி தமது திருமாங்கல்யத்தைக் கழற்றி கணவரிடம் தந்து அதனை விற்று நெல் வாங்கி வருமாறு கூறினார்   


திருமாங்கல்யத்தைப் பெற்று அதை விற்று நெல் வாங்கும் பொருட்டு புறப்பட்டார். அந்த சமயம் எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லா  குங்குலியப்பொதியினைக் கொண்டு வந்தான் நாயனார் அவனிடம் இது என்ன பொதி ? என்று வினவினார் .அவன் இது குங்குலியம் என்றான் அது கேட்ட கலயனார் அகமும் முகமும் மலர்ந்தார் .
 

இறைவனின் திருவருளை என்னென்பது ! கையிலே பொன்னையும் கொடுத்து எதிரில் குங்குலியத்தையும் அல்லவா அனுப்பி வைத்திருக்கிறார். இந்த பாக்கியம் உலகில் வேறு யாருக்குமே கிட்டாது. எம்பெருமானின் திருவுள்ளம் இந்த ஏழைக்காக இரங்கியதை என்னென்பது  என்று எண்ணி மகிழ்ந்தார் கலயனார், களிப்புடன் வணிகனை அணுகி, இந்த பொன்னை எடுத்துக் கொண்டு, குங்கிலியப் பொதியைக் கொடு என்றார். கலயனார்,தாலியை வணிகனிடம் கொடுக்க மகிழ்ச்சியோடு வணிகனும் குங்குலியப் பொதியை அவரிடம் கொடுத்தான். 


உடனே கலயனார், குங்குலியப்பொதியோடு விரைந்து கோயிலுக்கு சென்று குங்குலிய மூட்டையைச் சேர்த்துச் சிந்தை மகிழ்ந்தார். இறைவனின் திருநாமத்தைப் போற்றியவாறு மனைவி மக்களையும் மறந்து எம்பிரானை நினைந்து அயரா அன்புடன் வழிபாடு செய்து அங்கேயே தங்கிவிட்டார். 

கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமானின் திருவருளின்படி குபேரன் கலயனாரது திருமாளிகை முழுவதும்  நெல்லும், நவமணியும், பொன்னும், பட்டும் அளவிட முடியாத அளவிற்கு குவித்து வைத்தனன் . இறைவன் களைத்து துயிலும் கலயனாருடைய மனைவியாரின் கனவில்  எழுந்தருளி தமது திருவருளால் செல்வம் நிறைந்த தன்மையை உணர்த்தியருளினார்   கலயனார் மனைவி துயிலெழுந்து வீட்டில் பொன்னும், மணியும், நெல்லும், குவிந்து கிடப்பது கண்டு திருவருளை வியந்து போற்றினார்.விடியற்காலை நேரமாதலால் குளித்து முழுகி கணவனாருக்கு உணவைப் பக்குவம் செய்யத் தொடங்கினாள். 

கலயனார்பால் காலனை செற்ற கண்ணுதற் கடவுள் எழுந்தருளி அன்பனே  உன்னுடைய இல்லத்திற்குச் சென்று, பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு பசி தீர்ந்து மகிழ்வாயாக என்று திருவாய் மலர்ந்தார். குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க தமது  திருமனைக்கு ஓடோடி வந்தார்.

இல்லத்தில் இருநிதிக் குவியல்கள் சேர்ந்த செல்வம் கண்டார் .திருமாங்கல்யத்துடன் திகழும் மனைவியை நோக்கி எப்படி இதெல்லாம் என்று வினவ அம்மையார் தொழுது எம்பெருமான் அருளினால் வந்தது என்றார் .நாயனார் எம்மையும் ஒரு பொருட்டாக ஆட்கொண்ட எந்தை ஈசனின் திருவருள் தான் என்னே? என்று தலைமேல் கை கூப்பி வணங்கினார். பின் பலகாலும் நாயனாரும் அவர்தம் மனைவியாரும் அடியார்க்கு அமுது செய்வித்து திருத்தொண்டாற்றி வருவாராயினர்


திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலே, பாரே வியக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை இறைவர் ஏற்படுத்தினார். திருப்பனந்தாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தாள் தாடகை என்னும் பெண்ணொருத்தி  இறைவழிபாடு முடிந்த பிறகு இறைவனுக்கு மாலையை அணிவிக்கும் சமயத்தில் அம்மங்கை நல்லாளின் ஆடை சற்று நெகிழ்ந்தது.

ஆடையை இரண்டு முழங்கைகளினாலும் இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனுக்கு மாலையைப் போட முயன்ற அப்பெண் மாலையை அணிவிக்க முடியாமல் தவிக்க இறைவன், அப்பெண்ணுக்காக இரங்கிச் சற்றுச் சாய்ந்து கொடுக்க தாடகையும் மாலையணிவித்து, மகிழ்வோடு சென்றாள். அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது. 


இந்நிலையில், திருப்பனந்தாள் ஆலயத்தில் சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட  நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன்முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான் திருமேனி நிமிரவில்லை அன்பின்மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தி குங்குலியக் கலயனார் கேட்டார் இறைவனுக்குத் திருத்தொண்டு புரிந்து வரும் குங்குலியக் கலயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோவிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால்சன்னதியைத் தூபமிட்டார் .  கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தை எம்பெருமான்  திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். கயிறு இறுகி உயிர் போகும் என்று  கவலைப்பட வில்லை நாயனார் ! இறைவனுக்கு இச்சிறு தொண்டினைச் செய்ய முடியாத இந்த உயிர் இருந்தாலென்ன ? பிரிந்தாலென்ன ? என்ற முடிவோடு தமது முழுப் பலம் கொண்டு இழுத்தார். இறைவனைக் கயிற்றால், தன் கழுத்தோடு கலயனார் பிணைத்து இழுத்த செயல் எம்பெருமானுக்குத் தம்மைப் பக்தி எனும் கயிற்றால் கட்டி இழுப்பது போல் இருந்தது.

அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது. எம்பெருமான் திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலயனாரின் பக்தியையும், இறைவனைக் கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ஐயனே! உங்கள் அன்பின் திறத்தினை என்னென்பது ! திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் மலரடியை அன்புமிக்க அடியார்கள் அல்லாது வேறு யாரால் அடைய முடியும் ? உம்மால் யாமும் எம் குடிமக்களும் உய்ந்தோம்  உலகிற்கே உய்வு தங்களால்தான் ஏற்பட்டது என்றார். அரசன் திருப்பணிகளும், திருவிழாக் களும் நடத்தினான். அரசன் கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான் பின் மன நிறைவோடு தன்னகர் அடைந்தான். 


கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். முன்போல் ஆலய வழிபாட்டை செய்யலானார். 

திருக்கடவூர்க்கு எழுந்தருளிய சீர்காழிப் பிள்ளையார் சம்பந்தர் பெருமானுக்கும் திருநாவுக்கரசு நாயனாருக்கும் அடியார் குழாங்களுக்கும் அன்பின்  மிகுதியினால் எதிர் கொண்டு அழைத்து வணங்கி தமது திருமனைக்கு புகுத்தி அருசுவையுண்டியும் படைத்து குருவருளும் திருவருளும் ஒருங்கே பெற்றார் 

காலனையுங் காமனையுங் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்கு தொண்டு பல புரிந்து காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக் கலயனார், இறுதியில் இறைவன் திருவடி நீழலை இணைந்த பேரின்ப வாழ்வைப் பெற்றார்.



                     போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம் 
  

No comments:

Post a Comment