rudrateswarar

rudrateswarar

Friday, September 6, 2013

குலச்சிறை நாயனார் புராணம்

                                   
                             ஓம் நமசிவாய 



குலச்சிறை நாயனார் புராணம் 


               “பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”


அவதார தலம் - மணமேற்குடி 
முக்தி தலம்     - மதுரை
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,அனுசம்
11-09-2013 புதன்கிழமை




பழமையான புகழினை உடைய நன்மை மிக்க பாண்டிய நாட்டில் செந்நெல் நிரம்பிய வயல் களும் இனிய கரும்புகளும் அவற்றின் அருகே  செறிந்து நிற்கும் பாக்கு மரங்களும் கொண்ட இடங்களும் சூழ உள்ளதும் நிலை பெற்ற வள்ளன்மையுடையார் இருந்தருள் வதுமாய நகரம், மணமேற்குடி என்பதாகும் அந்நகரின் முதல்வர், செயற்கரிய சிறப்பினை யுடைய குலச்சிறையார் ஆவர். அவர் வன்றொண்டன் எனும் பெயருடைய நம்பியாரூரரால், ஒப்பற்ற `பெரு நம்பி` எனப் போற்றப் பெற்றவர். தம் திருமனத்து இருக்கும் திண்மையால் திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் வழுவாதவர்


கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
தீர நன்மொழி எய்த இசைத்துளார்.


அவர், இறைவனின் இன்னருள் பெறுதற்கு சிவனடியார்களே காரணமாவர் எனும் துணிவால், அடியவர்களிடத்து அன்பு கொண்டு அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி கைகள்கூப்பித் தொழுது, அன்புகலந்த இனிய நன்மொழி களைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர். வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவ்வவ்வொழுக்க நெறியினின்றும் நீங்கிய வர்களாக இருப்பினும்சிவபெருமானிடத்தில்  நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப் பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையவர்.


குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்

உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்க ளின்றி அளவற்ற தீமைகளை உடையரா யினும் , பிறை விளங்கும் செஞ்சடையினை உடைய சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கும் தன்மையினை உடையவர்.

இப்பெருந்தகையார், குணத்தில் மிக்கவர்கள் பெருங்கூட்டத்தாராய் உணவு வேண்டி வரினும், அன்றி ஒருவராய் உணவு வேண்டி வரினும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, அவரொடு நட்புமிக்குத் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர்
அடியவர்கள் , திருநீறு, உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நா வணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர்.

இவ்வாறாகிய நல்லொழுக்கத்தில் தலை நின்றவராய குலச்சிறையார், முடிவில்லாத சிறப்பினையுடைய பாண்டி மன்னராம் நின்றசீர் நெடுமாறனாருக்கு அமைந்த சிறப்பு மிக்க அமைச்சர்களுள் மேம்பட்டவராய் வாழ்ந்தவராவர். இவர் பகைவர்களை அழித்து அரசருக்கு உறுதி பயக்கும் நிலையில் பணிபுரிந்து வருபவர்.இத்தகைய செயற்பாட்டினை உடையராகிய நாயனார் கங்கையைத் திருச்சடையில் கொண்ட சிவபெருமானாரின் திருவடிகளையே போற்றி வரும் இயல்பினை உடையவர். யாண்டும் நிலவிய சிறப்பினை உடைய மங்கையர்க்கரசியாரின் பொருந்திய திருத்தொண்டினுக்கு உறுதுணையாக நிற்கும் உண்மைத் தொண்டரும் ஆவர்.

இழிந்த குணம் உடைய சமணர்களின் பொய்மைகளை நீக்கவும், பாண்டியநாடு திருநீற்றுநெறியினைப் போற்றி வளர்க்கவும், பொருந்திய காழிப்பதியின் வள்ளலாராகிய திருஞானசம்பந்தரின் அழகிய திருவடிமலர் களைத் தம் தலையில் சூடி மகிழவும் வாழ்ந்த சிறப்பினை உடையவர்.


பாண்டியன் உற்ற வெப்பு நீக்கம் முதலாக நேர்ந்த மூவகை வாதங்களிலும் தோல்வி அடைந்த சமணர்களை, வலிய கழுமரத்தில், அவர்கள் இதுகாறும் செய்து வந்த தீமைகளி னின்றும் நீங்க, அதன்கண் ஏற்றுவித்த குலச்சிறையாரின் ஆற்றலை, எவ்வகையில் போற்றி செய்து வணங்கமுடியும்  ஒருவகையிலும் போற்றி செய்ய முடியாது .
என்பது தெய்வ சேக்கிழார் திருவாக்கு 



                        போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment