போற்றி ஓம் நமசிவாய
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 09
திருச்சிற்றம்பலம்
முத்திநெறி அறியாத பத்திநெறி அறிவிக்காத பழவினைகள் பாறாத சித்தமலம் அறுபடாத சிவமாக தன்னைப் பாவித்து தீட்சை கொடுக்கத் தெரியாதவரிடம் தீட்சை என்று ஏமாந்தவர்களுக்கு அருள் புரிவாய் எம்பெருமானே .
நீங்கள் நினைக்கலாம் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை உரைக்கிறோம் என்று. பயிருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளவே .பயிரும் அந்த களையும் ஒரே மாதிரி இருக்கும் வளரும் ஏன் பயிரை விட களை மிகச்செழிப்பாக நன்றாகவே வளரும் . ஆனால் அறுவடை செய்யும்போது தான் உண்மை விளைச்சல் என்ன ? எது கொடுத்தது ?என்று தெரியும் .பயிர் மட்டுமே பயனுள்ள உணவுப் பொருளைத் தரும் இந்த களை பதர் கூட தராது . அது போல உண்மையான ஆச்சார்யாரிடம் தீட்சை பெற்றால் அது முத்திக்கு இப்பிறவியில் இல்லாவிட்டாலும் மறு பிறவியிலாவது வழி காட்டும் .அது தான் வள்ளுவர் சொன்ன ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்பது அது தான் எழுமைக்கும் துணையாக வரும்
அடுத்து இவர்கள் மொழியறிவையும் மொழிபெயர்ப்பு அறிவையும் பார்ப்போம்
வழிபாட்டிடத்தில் அஸ்த்ராய பட் என்று சிறிது ஜலம் தெளிக்க என்பதை ஆய்தம்பட் என்று தெளிக்க என்று சொல்கிறீர்களே . அஸ்த்ரம் என்பதை ஆய்தம் என்று மொழிபெயர்த்து விட்டார்கள் .இதற்கும் ஒரு படி மேலே போய் இவர் சீடர்கள் அய்தம்பட் எனவும் ஆயத்தம்பட் எனவும் சொல்கிறார்கள். ஏன் என்றால் வழிபாட்டுக்கு ஆயத்தம் என்று அர்த்தமாம் சிவசிவ . பஞ்சபாத்திரத்தில் ஹ்ருதயாய நம என்று நீர் நிரப்ப வேண்டியதை இதயம் போற்றி என்று நிரப்பிக் கொள்ளவாம் .என்னா புலமை . ஏன் நகலெடுக்கிற வேலை . இது எங்கிருந்து காபி செய்யப்பட்டது பெரியோர்களே வடமொழியிலிருந்தா ? அல்லது தமிழ் வேதத்திலிருந்தா ? அங்குச முத்திரை தேனு முத்திரை நந்தி முத்திரை (ம்ருகீ ) இதெல்லாம் எங்கிருந்து வந்தது ?
ஆசமனம் செய்யும் மந்திரங்கள்
1.போற்றி நாலாறுண்மை (4*6= 24 ஆன்ம தத்துவமாம்)
2.போற்றி ஏழ் மெய்யறிவு (வித்யா தத்துவமாம் )
3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (சிவ தத்துவமாம் )
ஸ்வதா எனும் மந்திரம் சேர வேண்டிய இடத்தில் போற்றியா .நம என்பதற்கு போற்றி பொருந்தி வரும் .ஸ்வதா வுக்கு ? .அந்த நாலாறும் உண்மையா ? வித்யா என்பதன் மொழியாக்கம் மெய்யறிவு ? சிவதத்துவங்கள் ஐந்து .ஐந்தாம் உணர்வு என்பதனால் ஐந்தாவதாக உள்ளது மட்டுமே என்று தானே பொருள் .அப்போ மற்ற நான்கும் அடங்குமா ? தமிழ் கற்றவர்கள் யாராவது விளக்கலாம். சொல்லும் பொருளுமே தூத்திரியும் என்று பாடிய காரைக் காலம்மை தான் விளக்கவேண்டும்
திருநீறு அபிமந்திரிக்கும் போது சொல்லும் மந்திரமாவது குருநாதர் அருளிய மூலமந்திரத்தால் ஐந்து முறை தொட்டு இறைவன் திருவருளையும் அவன் அருட்கலைகளாகிய நீக்கல், நிறுவல் ,ஞானம் ,மோனம் ,மோனம் கடந்த இயல்புநிலை ஆகிய ஐந்தையும் சிந்தித்து நீர் விட்டுக்குழைக்கவும் . இந்த ஐந்தும் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் .இதில் யாராவது சம்ஹிதா மந்திரம் இல்லையா என்று கேட்காதீர்கள் அதற்கு இன்னும் மொழிபெயர்ப்பு கிடைக்க வில்லை . அதே போல விபூதிஉருத்திரரைக் தியானிக்க வேண்டாமா ? என்று கேட்காதீர்கள். அவர் சைவரல்ல அல்லது அவர் தமிழரல்ல என்று கூறிவிடுவார்கள் திருநீறு அணியும் இடங்களைப் பற்றியோ அதன் அளவுகளைப் பற்றியோ திருமுறைகளில் எங்காவது சொல்லப் பட்டுள்ளதா ?
அகமர்ஷணம் செய்ய மந்திரம் ஒன்றுமில்லை நன்று நாள்தொறும் என்ற அப்பர் குறுந்தொகை பாடினால் போதும் . அடுத்து தர்ப்பணம் .தர்ப்பணம் என்பது இவர்களுக்குத் தெரிந்தவரையில் முன்னோர்களுக்கு செய்வது தான். அதனடிப்படையில் மறைந்த முன்னோர்களை நினைந்து மூவேழ் சுற்றம் முரணுற நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்ற மந்திரம் ? சொல்லி மூன்று முறை சங்குமுத்திரையால் நீர் விடுக என்பது தான். இந்த மூலமந்திரம் சொல்லி சிவகாயத்ரி சொல்லி சம்ஹிதா மந்திரம் சொல்லி பின்னும் மந்திரங்கள் .தேவர்கள் ரிஷிகள் மானுடர்கள் பூதங்கள் பிதுர்க்கள் ஞாதிக்கள் ஆச்சாரியார்கள் எண்கணங்கள் இவர்களுக்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது . இதற்கெல்லாம் திருமுறைகளில் பாடல் கிடைத்தால் போடமாட்டார்களா ?
சூர்யோபஸ்தானம் செய்ய மந்திரம் ? இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போற்றி சொன்னால் போதும் . அடுத்து மூச்சடக்கம், சிவம் (ஜபம்) பஞ்சபுராணம் அவ்வளவு தான் அனுஷ்டானம் முடிந்தது
ஏன் இப்படி தமிழ்வழிபாடு என்ற பெயரில் மொழிபெயர்ப்பு மந்திரமும் பொருந்தாத திருமுறைப்பாடலும் போட்டு மக்களை நன்னெறி சென்று உய்வு பெறுவதைத் தடுத்து சிவாபராதம் தேடுகிறீர்கள் .திருமுறைகள் நமக்கு கிடைத்து சற்றேறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகிறது என வைத்துக்கொள்வோம் இந்த காலகட்டங்களில் எத்தனை தமிழ் அறிஞர்கள் அருளாளர்கள் வந்து சென்று விட்டார்கள் அவர்களை விட இன்று தமிழ்வழிபாடு என்று சொல்பவர்கள் எந்த விதத்தில் தகுதி பெற்றவர்கள் என்று சிந்தியுங்கள்.
ஏற்கெனவே சாமி அருளிய வேத ஆகமம் இருக்கிறது அது அரிசி .இவர்கள் அதை மொழிபெயர்த்து அந்த கிரியைகளை காபி அடிப்பது உமி .ஏன் அரிசியே இருக்க இவர்களின் உமியுடன் கலந்து ஊதி தின்ன வேண்டும்
என்று நீ அன்று நான் என்பது தாயுமானார் வாக்கு அது போல என்று சிவமோ அன்று முதல் அவர் அருளிய வேதாகமங்கள் அவைகளே வழிபாட்டில் போற்றப்பட வேண்டியவை
திருச்சிற்றம்பலம்