rudrateswarar

rudrateswarar

Friday, October 20, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 06



                    போற்றி ஓம் நமசிவாய

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 06

                        திருச்சிற்றம்பலம்


பெரியபுராணம்-திருமூலதேவநாயனார் புராணம் பாடல்-23


தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த ணர்வுடையார் ஈசர் அருள் னவுணர்ந்தார்

சிவபெருமான் தாம் அருளிய ஆகமப்பொருளை இந்நிலவுலகில் திருமூலர் வாக்கால் தமிழில் சொல்வதற்கு வாய்ப்பாக சிவயோகியார் உடலை மறைப்பித் தருளினார் என்று உணர்ந்தார். சடையார் என் உரைத்ததினால் தமது ஐந்து திருமுகங்களால் ஆகமம் அருளப்பட்டது என்பது முடிவான முடிவாகும்
இப்புராணம் வாயிலாகவும் ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டது என் தெளிவுபடுத்தப்படுகிறது .இனி திருமூலர் வாக்கால் அறிவோம்

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

மாதோர்பாகனாகிய சிவபெருமான் ஐந்தோடு இருபத்து மூன்று (5+23) அதாவது இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார் என்பது தெளிவு

ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவதறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே

இப்பாடல் மூலமும் வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது என அறியலாம். தமிழில் திருமந்திரத்தில்  திருவம்பலச்சக்கரம் அருச்சனை திரிபுரைச்சக்கரம் வயிரவிச்சக்கரம் சாம்பவி மண்டலச்சக்கரம் புவனாபதி சக்கரம் நவாக்கரி சக்கரம் ஆகியவற்றில் வடமொழி மந்திரங்களும் எழுத்துக்களும் உள்ளதால் அறியலாம் . ஆக வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது
இரண்டுமே சிவபெருமானால் அருளப்பட்டது . அவையே வேள்விக்கும் பூஜைக்கும் உரியன . சிவாலயங்கள் கட்ட துவங்குவதிலிருந்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் அதன்பின் நித்திய நைமித்திகம் காமிக புண்ணியகால பூஜை முறைகள் என அனைத்துமே ஆகமங்களில் தான் சொல்லப்பட்டுள்ளது . ஸ்தபதிகள் யாராவது இவர்கள் தமிழ் வேள்வி வழிபாடு எனச்சொல்வது போல தமிழ் ஸ்தபதிகள் என்று கூறுகிறார்களா ? இல்லை அவர்கள் முற்றிலும் ஆகம முறைகளைக் கடைப்பிடிப்பவர்களே. திருமுறைகளில் அவை சொல்லப்பட வில்லை .அதே போல திருமுறைகளில் திருமுறைகளை வேள்வி செய்ய பயன்படுத்தவும் கூறவில்லை . நம என்பதை நாங்கள் போற்றி என்கிறோம் தவறா என்பார்கள். அது தவறில்லை. ஏழுகோடி மந்திரங்களில் மீதி ஸ்வாஹா , ஸ்வதா ,வஷட் ,வெளஷட் ,ஹூம் , பட் ,இவைகளை என்ன சொல் கொண்டு நிரப்புவீர்கள் .ஐநூறு ரூபாயை கடையில் கொடுத்தால் பொருள் கிடைக்கும். அந்த ஐநூறு ரூபாயை நகல் எடுத்துக் கொடுத்தால் என்ன கிடைக்கும் ? அது போல வடமொழி மந்திரங்களை மொழி பெயர்த்துக் கூறுவதில் பயன் உண்டா? மந்திர பீஜங்களுக்கு உள்ள வைப்ரேசனை அந்த மொழிபெயர்ப்பு மந்திரம் கொடுக்குமா ?
சைவத்தை அழிக்க வந்த கைக்கூலிகளால் தமிழ் தமிழ் என்று வெற்று வாய்வீச்சாளராக தமிழை முன் நிறுத்தி தன் குடும்பத்தை வளர்த்த சிலரால் தான் இந்நிலைமை. இந்த தமிழ் பற்றாளர்கள் சுயரூபம் தெரியுமா மக்களே 1.இவர்கள் ஒன்று நல்ல பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ்பற்று வரும் 2. வருமானம் பற்றி தமிழ் பற்று வரும்.ஆனால் இந்த தமிழ் பற்றாளர்களின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் பொறியியலும் கணிணித்துறையிலும் வணிகவியலும் மருத்துவமும் சி பி எஸ் சி பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இவர்கள் தமிழ் வளர்க்க இவர்கள் வீட்டுக்குழந்தைகளை தமிழ் பள்ளியில் தமிழ் இலக்கியம் படிக்கவைக்க வேண்டியது தானே .அதைவிட்டு இறை நம்பிக்கையில் எழு பிறப்புக்கும் நம்மைத் தொடரும் புண்ணிய பாவ ஈட்டங்களில் வழிபாட்டில் உங்கள் தமிழார்வத்தைக் காட்டி சிவாபராதத்தை நீங்களும் தேடி உங்களுக்கு பொருளை வழங்குவோர்க்கும் தேடித்தராதீர்கள். உலகியல் எனும் இம்மை வாழ்க்கைக்கு அந்நிய மொழி ஆங்கிலம் கற்கும் சுயநல திராவிடக்கட்சியின் ஆன்மிகப்பிரிவினரே அம்மை நலம் அருளும் வடமொழி ஏன் கற்று முறையான வழிபாடு செய்யவேண்டியது தானே ?

இவர்களின் போலி வேள்வியில் செய்யும் முத்திரைகள் கிரியைகள் அனைத்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டதை அரைகுறையாக காபி அடித்து அரைகுறையாக செய்யப்படுபவையே. முழுமையில்லை மந்திரம் கிரியை பாவனை இவை மூன்றும் சேர்ந்து செய்யப்படுவதே வழிபாடு .முதலில் மந்திரமில்லை.ஏனெனில் திருமுறைகள் திருவிசைப்பா வரை எல்லாம் இசைப்பாக்கள் தோத்திரங்கள் புகழ் நூல்கள். அவை இசை பற்றி வந்தது என ஏற்கெனவே கூறியுள்ளோம் .இவர்களுக்கு கிரியை செய்யத் தெரியாது ஏனெனில் யாரும் இதற்கான முறையான பயிற்சி பெற்றவர் இல்லை. இது  பாரம்பரியமான ஒன்று அல்ல .சமீபகாலமாக வந்தது . சைவ அருளாளர்கள் சேக்கிழார் கச்சியப்பர் குமரகுருபரர் தாயுமானார் ஆதீன கர்த்தர்கள் சிவஞான சுவாமிகள் இந்நூற்றாண்டில் சமீபத்தில் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் என யாரும் இந்த வழிபாட்டை ஏற்கவில்லை . இறை வழிபாட்டில் இந்த போலிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். எட்டு ஆண்டுகள் குருகுல வாசமில்லை . நான்கு ஆண்டுகள் திருமுறை பண்ணோடு பாடக் கற்கவில்லை முறையான தீட்சா பாரம்பரியம் இல்லா ஒருவரிடம் போலி தீட்சை பெற்று சிவபூசை செய்யும் தகுதி கூட இல்லாமல் வேள்வி செய்யக் கிளம்பும் இந்த தகுதியற்ற பொக்கம் மிக்கவர்கள் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.

                திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment