rudrateswarar

rudrateswarar

Tuesday, May 28, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை-10

                                 ஓம் நமசிவாய 

ஐந்தெழுத்தின் மேன்மை-10


பத்தாம் திருமுறை -தந்திரம்.3 - 18 கேசரியோகம் பாடல்-11


ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப்பருகி சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க காற்றும்  நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -20
   

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.


செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைக்கும் பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும்செம்பொன் மயமான  திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -22


வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.


ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும் தொடர்ந்து ஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லை. அதற்கு முன்னே அவ்வாறு ஓதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாம் தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.


நான்காம் தந்திரம் 1 அசபை பாடல் -29


கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே

இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்கு மாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.


                              திருச்சிற்றம்பலம்

 
                           போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி 



                                  

No comments:

Post a Comment