rudrateswarar

rudrateswarar

Thursday, May 9, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை -9

                                              ஓம் நமசிவாய

  
ஐந்தெழுத்தின் மேன்மை-9


திருமுறை 4 பதிகம் 94 பாடல் 5 திருப்பாதிரிப்புலியூர் 


வைத்த பொருள் நமக்காம் என்று 
                 சொல்லி மனத்தடைத்துச்
சித்தம்  ஒருக்கிச் சிவாய 
                  நமவென்று  இருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் 
                  அவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ 
                  அறிவிலாப் பேதைநெஞ்சே


அறியாமையை உடைய மனமே !நமக்கு சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லாது, திருப்பாதிரிப் புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?



திருமுறை 4 பதிகம் 94 பாடல் 6 திருப்பாதிரிப்புலியூர் 



கருவாய்க் கிடந்துன் கழலே 
              நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் 
              பயின்றேன்  உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய 
              நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா  
             திரிப்புலி யூர் அரனே.


 திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்தபோது உன் திருவடிகளையே  தியானிக்கும் கருத்து உடையவனாய் இருந்தேன். மண்ணுலகில் பிறந்து உருவம் கிட்டிய பிறகு உன் அருளால் உன் திருநாமம் அறியப்பெற்றேன்  சிவாயநம எனும்   திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப்பொழுது அணியப் பெற்றேன். சிவகதி தருவீராக
  

திருமுறை 5 பதிகம் 43 பாடல் 6 திருநல்லம்





அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நம என்று
நல்லம் மேவிய நாதன்  அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.


ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும், திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை  சிவாயநம  என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும். 


திருமுறை 6 பதிகம் 61 பாடல் 8 திருகன்றாப்பூர் 


திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
          திகையாதேசிவாயநமவென்னுஞ்சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
            கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
            பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.



மன உறுதியால் ஐம்பொறிகளால் ஈர்க்கப்படாது  வென்று  சிவாயநம எனும் திருவைந்தெழுத்தைத் தியானித்தலால் துன்பம் நீக்கி , சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறிநாதரைக் காணலாம்


                          போற்றி ஓம் நமசிவாய 


                                திருச்சிற்றம்பலம் 

சிவனடிமைவேலுசாமி 


No comments:

Post a Comment