rudrateswarar

rudrateswarar

Thursday, May 30, 2013

கழற்சிங்க நாயனார் புராணம்

                                                    ஓம் நமசிவாய


கழற்சிங்க நாயனார் புராணம்

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"
அவதார தலம் - திருக்கச்சி (காஞ்சி )
முக்தி தலம்     - திருக்கச்சி (காஞ்சி )
குருபூசை திருநட்சத்திரம்-வைகாசி  பரணி 
      ( 06-06-2013 வியாழக்கிழமை )


கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர் முக்கண்  பரமனடி அன்றி வேறு ஒன்றையும்  அறிவிற் குறிக்கோளாகக் கொள்ளாது   சேனைகளுடன் நல்லாட்சி புரிந்து வந்தார் 


படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்றறி வினிற் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பர்  


 வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று  நாடாண்ட வேந்தராகிய இவர் அரனார் ஆலயங்கள் பலவுஞ் சென்று ஆராத அன்புடன் பணிந்து நித்திய நைமித்தியங்கள் அமைத்து திருத்தொண்டு புரிந்து வந்தார் 

ஒரு நாள் சிவலோகம் போன்ற திருவாரூரை அடைந்தார்  திருக்கோயிலை சுற்றி வந்து பிறப்பை ஒழிக்கும் பிறைமுடிப் பெருமானை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருகி தரிசித்துக் கொண்டிருந்தார் . 

அவருடைய பட்டத்து நாயகி கோயிலை வலம் வந்து கோயிலின் பெருமைகளை
தனித்தனியே  கண்டு களிப்புற்றாள் அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள்.  அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்கு வந்த செருத்துணை நாயனார்  என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் இது சிவாபராதம் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். 

உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணை நாயனார்  'அரசரேறே இவள் எம்பிரானுக்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோர்ந்தாள்  அதனாலே இதை  நானே செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரைப்பணிந்து , 'இக்குற்றத்திற்கு தக்க தண்டனை தந்தீரில்லை பூவை எடுத்த கையே முதல் குற்றவாளி.கை எடுக்காமல் இருந்தால் 
மூக்கு முகராது ஆதலால் கையை முதலில் வெட்டுதல் வேண்டும் என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையை வெட்டினார் . 

கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்
தொட்டுமுன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்பதென்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவியான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந்துணித்தாரன்றே

இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க பல காலம் அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

இந்த குரு பூசை திருநாளில் நாமும் சிவத்தொண்டு சிவாபராதம் எது என அறிந்து மற்றவர்களுக்கும் அதை உணர்த்தி கடைப்பிடிப்போமாக.



                           போற்றி ஓம் நமசிவாய



                                திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment