rudrateswarar

rudrateswarar

Sunday, July 28, 2013

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

                               ஓம் நமசிவாய

பெருமிழலைக்குறும்ப நாயனார்

                              "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன் "

அவதார தலம் - பெருமிழலை 
முக்தி தலம்     - திருவாரூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி -சித்திரை 
12-08-2013 திங்கள் கிழமை
   

பெருமிழலை புதுக்கோட்டைக்குத் தென் மேற்கே பேரையூருக்கருகில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது. சோழ நாட்டில் திருவீழிமிழலை என்ற பதி ஒன்று உள்ளது. அதனின்றும் வேறு பிரித்தறிய, மிழலை நாட்டுப் பெருமிழலை என்பர் .

அந்த  திருநகரத்திற்கு குறுநில மன்னராக விளங்குபவர் மிழலைக் குறும்பனார் ஆவர். அவர் சிவனடியவர்களுக்கு வேண்டிய பணி விடைகளையெல்லாம் அவர் தம் கூறும் முன்னமே குறிப்பறிந்து விருப்புடன் ஏற்றுச் செய்து வந்தார் 

அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ண குறையாதவாறு அமுது ஊட்டியும், அவர்கள் கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெரும் செல்வங்களை கொடுத்தும், தம்மைச் சிறியராக வைத்து நடந்து கொள்ளுமவர், உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமானின் சிவந்த திருவடிகளாகிய தாமரை மலர்களை, மனமாகிய மலரில் வைத்துப் போற்றுபவர் 

இவ்வாறு  எல்லையற்ற திருத்தொண்டின் உண்மை நிலையினை உலகறியும்பொருட்டு அடியவர் தம் திருவுள்ளத்தில் நீங்காது நிலை பெற்று விளங்கும் திருத்தொண்டத்தொகை   அருளிய சுந்தரரை பணிந்து பெருமானின் திருவருள் பெற்ற அப்பெருமகனாரின் திருவடிகளை நாளும் நினைந்து போற்றி வந்தார்

நம்பியாரூரரின் மலரனைய திருவடிகளைக் கைகளால் தொழுதும்,வாயினால் வாழ்த்தியும், மனத்தினால் நினைந்தும் வரும் கடப்பாட்டில் நின்று மாலும் அயனும் அறிய இயலாத சிவந்த பொன் போன்ற திருவடிகளை அடைதற்கு,உரியநெறிஇதுவே என்று உட்கொண்டு அன்பினால் அவரைப் போற்றி வந்தார் .

நம்பியாரூரரின் திருப்பெயரைப் போற்றி
வந்த நலத்தால் எண்வகை சித்திகளும் கைவரப் பெற்றதோடு, இறைவனின் திருவைந்தெழுத்தே சுற்றமும் பொருளும் உணர்வும் எனும் மனநலத்தைப் பெற்றார்

தல யாத்திரையாய் சேரமான் பெருமானின் கொடுங்கோளூர் சேர்ந்த வன்தொண்டர் அங்கு திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளி யிருக்கும் நஞ்சுண்ட பெருமானை வழிபட்டு தமிழ் மாலையாகிய தேவாரத்திருப்பதிகம்  பாடி சிவபெருமானின் திருவருளினால்  கயிலையைச் சேர இருக்கும் வாழ்வினை, பெருமிழலைக் குறும்பனார் தாம் இருந்த இடத்தில் இருந்தவாறே தம் யோக நெறியால் உணர்ந்தார்.


மண்ணில் திகழும் திருநாவல் ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன்என்று 

எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்றடைவன் யோகத்தாலென்பார்




மனம் முதலிய அகக்கருவிகள் நான்கும் சிந்தையே ஆக, அகப்புறக் கருவிகளுக்கு ஆட்படாது  உணர்ச்சியானது சுழுமுனை வழியே உயிர்க் காற்றைச் செலுத்த உச்சித் துளையின் வழி அக்காற்றுப் பொருந்த முன் பயின்ற நெறியினால் எடுத்த பிரணவ மந்திரமானது அவ்வாயிலைத் திறக்க அவ்வழி மூலம் நம்பியாரூரர் திருக்கயிலை சென்று அடையும் முன்பே இவர் அடைந்தார். உயிர்க்காற்றை வாங்கவும், நிறுத்தவும், விடவும் பயின்ற யோக பயிற்சியால் ஆரூரரின் திருவடிகளைப் பிரியாது அடைவதற்கு திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிப் பேற்றை அடைந்த பெருமிழலைக்குறும்ப நாயனாரின் திருவடிகளை வணங்குவோம் 

பெருமிழலைக்குறும்ப நாயனார் முத்திபேறு எய்திய நாள் சுந்தரர் கயிலைசென்ற நாளுக்கு முன் வரும் ஆடிச் சித்திரையாகும். இவர் அப்பூதியடிகளாரைப் போல குருநாமமே பஞ்சாட்சரம் என்று குருபக்திக்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்த பெரியோர் ஆவர் 
இவர் காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8 ஆம் நூற்றாண்டாகும்.



                           போற்றி ஓம் நமசிவாய 


                                  திருச்சிற்றம்பலம் 

அப்பருக்கு கயிலைக்காட்சி

                                 ஓம் நமசிவாய 


அப்பருக்கு கயிலைக்காட்சி

திருநாவுக்கரசு நாயனார் திருக்காளத்தியில் ஞானப்பூங்கோதையம்மை உடனாய குடுமித் தேவரையும் பலகாலம் பணிந்து பரவசமுற்று திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளும் திருகோலம் காண காதல் கொண்டார் வடதிசை நோக்கி புறப்பட்டார் 

திருப்பருப்பதம் எனும் ஸ்ரீசைலம் அடைந்து மல்லிகார்ச்சுனரை கண்குளிரக் கண்டு தமிழ் பாமாலை சூட்டினார் .அங்கிருந்து தெலுங்கு கன்னட தேசங்கடந்து காசிப்பதியடைந்தார் கங்கையில் மூழ்கி பாலாம்பிகையையும் விசுவநாதரையும் வணங்கி உடன் வந்த அடியார்களை அங்கு விடுத்து வடதிசை நோக்கி நடந்து மலைக்கானகம் அடைந்தார் 

மனிதர்கள் செல்லமுடியாத அடர்ந்த உயர்ந்த காட்டு வழியில் தனிப்பெருங்காதலுடன் தனியே சென்றார் காய் கனி கிழங்கு அருந்துவதும் தவிர்த்துச் செல்ல கொடிய விலங்குகள் இவரைக்கண்டு ஒதுங்கின 

இரவு பகல் பாராது நடந்து பாதங்கள் தசைகள் தேய்ந்து குருதி வழிந்தது .கரங்களினால் தவழ்ந்து செல்ல மணிக்கட்டுவரை தசை தேய்ந்து விட மார்பினால் தவழ்ந்து சென்றார் மார்பும் தேய்ந்து சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன அப்பொழுதும் உருண்டு புரண்டு சென்றார் .

பரம்பொருள் பரமேசர் அவருக்கு உலகில் இன்னும் பல இனிய செந்தமிழ் பாடல் பாடும் பொருட்டு கயிலை காண அருளாதவராகி அருகில்  தடாகம் உருவாக்கி முனிவர் வடிவில் தோன்றியருளினார் .அப்பரை நோக்கி அய்யா உடல் உறுப்புகள் அழியும்படி இக்கொடிய வனத்தில் எதற்கு வந்தீர்?என்று வினவினார்.அப்பர்சுவாமிகள் அம்முனிவரை
நோக்கி வடகயிலையில் என்தாய் மலைவளர்மங்கையுடன் எம்பெருமான் வீற்றிருக்கும் திருகோலம் காணுங் காதலுடன்  செல்கின்றேன் என்றார்.முனிவர் அன்பரே மானுடர்கள் சென்று கயிலையை காண்பது இயலாது .அமரர்கட்கும் அது அரிது எனவே நீர் திரும்பி செல்வதே சரியாகும் என்றருளினார் .நாவுக்கரசர் கயிலை நாயகனை காணாமல் இவ்வுடல் கொண்டு திரும்பி செல்லேன் என்றார் அவரது உறுதி கண்ட உமைபங்கர் விண்ணில் மறைந்து நின்று ஓங்கும் நாவுக்கரசனே எழுந்திரு என்று அருளினார் தேய்ந்த உடலெல்லாம் செழிப்புற்று திருவருள் ஒளியுடன் கயிலைக் காட்சியை காண அருளவேண்டும் என்று பணிந்தார் 

அண்ணலேயெனை யாண்டு கொண்டருளிய அமுதே 
விண்ணிலே மறைந்தருள் புரி வேதநாயகனே 
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்தருள் புரியெனப்பணிந்தார்

இத் தடாகத்தில் முழுகி திருக்கைலாயக் காட்சியை திருவையாற்றில் காண்பாய் என்று அண்ணல் விண்ணில் மறைந்து அருள் புரிந்தார்

வாக்கின் வேந்தர் இறைவர் திருவருளை சிரமேற்கொண்டு செந்தமிழ் பதிகம் பாடி துதித்தார் ஐந்தெழுத்தை ஓதி புனிதவாவி யில் முழுகினார் திருவையாற்றில் ஒரு திருக்குளத்தில் வந்து எழுந்தார் உலகமே வியந்தது எம்பெருமானின் திருக்கருணையை எண்ணி கண்ணீர் சொறிந்தார் திருக்கோயிலை அடைந்தார் அங்கு சரம் அசரம் என்ற எல்லாம் தத்தம் துணையுடன் விளங்கும் தோற்றம் கண்டார் கயிலையில் சத்தியும் சிவமும் விளங்குவது போல எல்லாம் சிவசத்தி சொரூபமாகக் கண்டார்.திருக்கோயில் கயிலாயமலை யாகவும் மாலயன் உள்ளிட்ட வானவர் வாழ்த்தும் ஒலி பொங்கவும் சிவகணங்கள் போற்றவும் பூதவேதாளங்கள் வணங்கவும் இடபதேவர் எதிர் நிற்கவும் வெள்ளிமாமலை மேல் மரகதகொடி போல் பார்வதிதேவி அருகிருப்ப பவளமலை போல் பரமர் வீற்றிருக்கும் அரிய காட்சியை அப்பர் மூர்த்திகள் தரிசித்தார் .அந்த ஆனந்தக் கடலைக் கண்களெனும் கரங்களால் மொண்டு மொண்டு பருகினார் ,ஆடினார் , பாடினார்,விழுந்தார் ,எழுந்தார் ,அழுதார் , தொழுதார் .அவர் அடைந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளவிட்டு சொல்லமுடியுமா ? போற்றி திருத்தாண்டகங்கள் பாடினார் .பின் கயிலைக்காட்சி மறைய திருவையாறு தெரிந்தது தந்தையருள் இதுவோ? என்று தெளிந்து பல பதிகங்கள் பாடியருளினார் .

அப்பர் சுவாமிகளுக்கு திருக்கயிலைக்காட்சி அருளிய தினம் ஆடி அமாவாசை தினமாகும் 
அன்று அன்பர்கள் கட்டாயம் சிவாலயம் சென்று அப்பர் பெருமானை வணங்கி குருவருளையும் சிவபெருமானை வழிபட்டு திருவருளையும் பெற்று வளம் பல பெற்று
வாழ்வாங்கு வாழுமாறு கேட்டுக் கொள்கிறோம் .தமிழ்நாட்டில் இருப்பவர்கள் முடிந்தால் திருவையாறு சென்று இந்த அரிய காட்சியை கண்ணுற கேட்டுக்கொள்கிறோம்.


                       போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம்            

Saturday, July 27, 2013

கூற்றுவ நாயனார் புராணம்

                                                       ஓம் நமசிவாய


கூற்றுவ நாயனார் புராணம்

 "ஆர்கொண்ட வேல் கூற்றன் களந்தைக்கோன் அடியேன் "  

அவதார தலம்  - களந்தை 
முக்தி தலம்      -சேரநாடு
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி திருவாதிரை
04-08-2013   ஞாயிறு 



வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த தலம் திருக்களந்தை! இத்தலத்தில் களப்பாளர் மரபில் தோன்றியவர்  கூற்றுவ நாயனார்  வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. 

வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்தார்  களந்தை நாட்டை,அரனார் அருளோடு பெரும் வெற்றிகள்  பெற்று அறம் பிறழாது புகழ்பட  ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி வரும் பக்தி படைத்தவர். 

இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள தேர்,புரவி ஆட் படை கொண்டு நாடு பல வென்று தமது கொடியின் கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரிநிலமானது. முடியுடை மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்று திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். 

சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும்இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம்.

மணிமகுடம் ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணி மகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்த கூற்றுவ நாயனார் தில்லை வாழ்அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணி ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்து நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லை வாழ்அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு முடி சூட்ட வேண்டும்  என்று வேண்டினார். அம்மொழி கேட்டு தில்லைவாழ்அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடி சூட்ட மறுத்தனர். மன்னா நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம் வேறு மன்னர்களுக்கு இத்திருமுடி யைச் சூட்டுவதற்கில்லை என்று பகர்ந்தனர். துணிச்சலோடு விடையளித்து மன்னருடைய கோரிக்கையை நிராகரித்தனர். 

அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர்.அவரால் தங்களுக்கு தீங்கு ஏதும் வந்து விடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங் கொண்டு  தில்லையின் எல்லையை நீங்கி சேரமன்னர் பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் அளித்து பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.இவர்கள் அச்சமின்றி மொழிந்த வார்த்தை கேட்டு கூற்றுவநாயனார் செய்வதறியாது திகைத்தார். 

முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? என தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர தில்லைவாழ்அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற வேதனை கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார்.
இறைவனைப் பணிந்து, அருட்புனலே !ஆடும் ஐயனே உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு மகுடம் சூட்ட மறுத்து விட்டார்களே ஐயன் இந்த எளியனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள் புரிதல் வேண்டும் என்று தொழுது தமது இருப்பிடம் அடைந்து துயில் எய்தினார் அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவில் எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி தமது அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்தார். 


அற்றை நாளில் இரவின்கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும் எனப்பரவும் 
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாதமலரளிக்க 
உற்ற அருளால் அவைதாங்கி உலகமெல்லாம் தனிபுரந்தார்
  

கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி போர்க்களத்திலே அவர் பெற்ற பெரும் வெற்றியைக் காட்டிலும் பேருவகை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்த போதும் தில்லைப்பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணி பேரானந்தம் அடைந்தார் சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் எம்பெருமானுடைய திருவடியையே மணி மகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார். 

அறநெறி வழுவாத நாயனார், இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களிலும் நித்திய நைமித்திய பூசைகள் தடையின்றி நடைபெற ஆவன செய்தார். திருத்தலங்கள்  பல சென்று சிவவழிபாடு நடத்தினார். 

விரிசடைப்  பெருமானின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டியகூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சித பாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.

அம்பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திருனடஞ்செய்
தம்பிரானார் புவியில் மகிழ் கோயில் எல்லாம் தனித்தனியே 
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும்பூ சனையியற்றி 
உம்பர் மகிழ அரசளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார் 
 



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம் 

Friday, July 26, 2013

விநாயகர் வழிபாட்டு பாடல்கள்

                                                   ஓம் நமசிவாய 


விநாயகர் வழிபாட்டு பாடல்கள்


தினமும் காலையில் பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழி பட நன்மை பயக்கும் .மிக எளிமையான இனிமையான பாடல்கள்


வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்              
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.  
                                                  ஒளவையார்                        

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. 
                                                 ஒளவையார்                             
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. 
                               திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
                                            11ஆம் திருமுறை

பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. 
                           சம்பந்தர்

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.  
                          கச்சியப்பர் 


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை                                                  11ஆம் திருமுறை


ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
         நால்வாய் ஐங்கரத்தன் ஆறு 
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன் 
         தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் 
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே 
         இரவு பகல் உணர்வோர் சிந்தைத் 
திருகோட்டு அயன் திருமால் செல்வமும் 
         ஒன்றோ என்னச் செய்யும் தேவே                             அருணந்திசிவம்


எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் 
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத் 
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக் 
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்                                    சேக்கிழார்



அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல குணம திகமா மருணைக் கோபுரத்துள் மேவு 

செல்வ கணபதியைக் கைதொழுதக்கால்.





                        போற்றி ஓம் நமசிவாய 



                             திருச்சிற்றம்பலம் 



Thursday, July 25, 2013

புகழ்ச்சோழ நாயனார் புராணம்

                                    ஓம் நமசிவாய

புகழ்ச்சோழ நாயனார் புராணம் 

               
                      "பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்"


அவதார தலம் -உறையூர் 
முக்தி தலம்     -கருவூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி கார்த்திகை 
31-07-2013,புதன்கிழமை




சோழநாட்டுத் தலைநகர் உறையூர்.உறந்தை கோழியூர் முதலிய பெயர்களை உடையது .ஒரு சமயம் கோழி யானையை துரத்தி வென்றதனால் கோழியூர் என பெயர் பெற்றது அத்தலைநகரில் இருந்து  அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர்.இவர் தில்லையில் எல்லை யில்லாத திருப்பணிகள் செய்த அநபாய சோழ மன்னருடைய மூதாதையர். அவர் தமது தோள்வலியினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கு நாட்டு வேந்தரும், குடபுலமன்னர் களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறை பெறும்  பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் பசுபதீச்சரரை பலகாலும் வழிபட்டு பரவசமடைந்தார் . 
அத்தாணி மண்டபத்தில் அரியணையில் வீற்றிருந்து குறுநில மன்னர்கள் கொணர்ந்த யானைகள் குதிரைகள் பொன்மணிகள் முதலிய திறைப்பொருள்களை எல்லாம் கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் தந்து உபசரித்தார் . அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.

சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித்தாமம் 
அன்று சிதறுங்களிற்றை அற எறிந்து பாகரையும் 
கொன்ற ஏறி பத்தரெதிர் என்னையுங் கொன்றருளுமென 
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டின் மிகச்சிறந்தார்



இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையை யும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்த நாயனாரிடம் யானையால் நேர்ந்த சிவாபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளை  நீட்டித் திருத்தொண்டில் தலை நின்றவர். அவர் அவ்வாறு தன்னையே மாய்க்க முயன்ற போது திருவருள் வெளிப்பட்டு யானை உயிர் பெற்றெழுந்தது.அத்தகைய அருட்பெரும்செல்வராக புகழ்ச்சோழ நாயனார் பொலிவுடன் விளங்கினார்  


அமைச்சர் அரசரை வணங்கி திறை கொடாத அதிகன் என்னும் அரசன் அண்மையில் மலையரணுடையவனாக மதில் சூழ்ந்த காவல்மிக்க கடிநகரில் உறைகின்றான் என்று சொன்னார். படை எழுந்து அவ்வரணை  அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளை இட்டார். அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ்வலிய அரணை முற்றுகை இட்டு அழித்து அதிகனது சேனையினை வென்றனர். அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்று யானை, குதிரை முதலியவற்றையும் போர்ச்சின்னமாக கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். 

அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல் களுள்  அரசர், ஒரு தலையிற் சடைமுடியைக் கண்டார். அது கண்டு நடுங்கி தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது என்று தம்மை இகழ்ந்து கொண்டார். ஒன்று செய்யத் துணிந்து தம் குமரனுக்கு முடிசூட்டும் படி அமைச்சருக்குக் கட்டளை இட்டார். தமக்குச் சேர்ந்த சிவாபராதமாகிய பழிக்குத் தீர்வு தாமே காரணமாகிச் செந்தீ வளர்ப்பித்தார். உடம்பு முழுதும் திருநீறு பூசிக்கொண்டார் சடையுடைய சிரத்தினை பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட்புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழலைச் சார்ந்து பேரின்பமுற்றார் .


                      போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 

மூர்த்தி நாயனார் புராணம்

                                                       ஓம் நமசிவாய 

  
மூர்த்தி நாயனார் புராணம்
            
               
            "மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்" 


அவதார தலம் - மதுரை
முக்தி தலம்     - மதுரை 
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி கார்த்திகை 
31-07-2013,புதன்கிழமை





மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிகர் குலத்திலே அவதரித்தார். அவர் அகப்பற்று புறப்பற்று விடுத்து பற்றற்ற சிவபெருமான் திருவடி களையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் என வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்கு சந்தனக்காப்பு நித்தமும் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான்.அவன் நன்னெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சைவநெறியில் செல்லாது தீநெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது திருத்தொண்டிற்கு  தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாருக்கும் பல கொடுமைகள் செய்தான். அவர் அவற்றால் ஒன்றும் தடைப் படாது தமது நியதியான சந்தனக்காப்பு திருப்பணியைச் செய்து வருவாராயினார். சிவனடியார் அன்பின் வெள்ளத்தை அணை போட்டுத் தடுக்கவல்லார் உண்டோ? அது கண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடவும்  திருநீற்று நன்னெறியைப் பெறுவதுவும் என்றோ? என எண்ணி வருந்தினர். அன்று பகல் முழுவதும் சந்தனக் கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம் தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனம் அரைக்கும் வட்டப்பாறை யில் தமது முழங்கையைத் தேய்த்தார்.தோல்  நரம்பு எலும்பு முதலியன கரைந்து தேய்ந்தன 


நட்டம் புரிவாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும் பரிசாயினும் தேய்க்குங்கை முட்டாதென்று 
வட்டந் திகழ் பாறை யின் வைத்து முழங்கை தேய்த்தார் 
கட்டும் புறந்தோல் நரம்பென்பு கரைந்து தேய 
 
கையெலும்புக்குள்  மூளை சொரிந்தது.அது கண்டு கருணைக்கடவுளாகிய இறைவர் பொறுக்கவில்லை .உடனே ஐயனே! அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயவன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பம் எல்லாம் போக்கி நீதியை நிலைநிறுத்தி உலகத்தை காத்து நியதியாய்  திருப்பணி செய்து முடிவில் சிவலோகம் வந்து சேர்வாயாக! என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. கையை கல்லில் தேய்ப்பதை நிறுத்தினார் புண்ணாகிய தன்மை நீங்கி கை செழுமையுற்று விளங்கியது சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.

அன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர்கள்  கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசனது காவலில்லா விடின் நாடு நல்வாழ்வில்  வாழமுடியாதென்று அமைச்சர் கவலை அடைந்தனர் 


சொக்கேசப்பெருமானை அருச்சனை செய்து வழிபட்டு சிறந்த பட்டமணிந்த நெற்றியை உடைய யானையைக் கண்ணை கட்டி விடுத்து அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.

அன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட நாயனார் எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத் தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய் இறைவர் திருக்கோயிலின் முன் வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேல் வைத்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்த்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டு வதற்குரிய சடங்குகள் செய்யலாயினர். சமண இருள் போய்ச் சைவஒளி  ஓங்குமாகில் நான் இந்த அரசாட்சியினை ஏற்று ஆள்வேன் அவ்வாறு அரசாட்சி செய்வேனாயின் முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் இருத்தல் வேண்டும்   என மூர்த்தியார் அருளினார். 


அது கேட்ட அறிவின் சிகரங்களாக விளங்கும் அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் வாழ்த்தொலியும் முழங்க  நாட்டின் அரசராக முடி சூடினார்.
 

மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர்.அங்கு நின்ற யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அமர்ந்து  வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மை யினால் உலகாண்டனர் மூர்த்தியார்.மாதரை மனத்தாலும் தீண்டாது துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப்பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்தார் தமது திருத்தொண்டினை இடையறாது புரிந்து நெடுநாள் அரசாட்சி செய்து வேதமுதலாம் நாதன் திருவடி நீழலில் பெருவாழ்வு பெற்று இன்புற்றார் .



                         போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

Wednesday, July 17, 2013

மகா பிரதோஷம் 20 - 07- 2013

                                                         ஓம் நமசிவாய 



சனிப்பிரதோஷம்  20-07-2013


பிரதோஷ வேளை என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த வேளை சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை இது இறைவனை வழிபடஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்திற்கும்  புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டு மகாதேவர்  நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடை யே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல்            திரு நடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட   நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால்அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்துப் பேறு பெறுகின்றன .எனவே அரிய    மானுடப் பிறப்பாகிய நாமும்
சிவனையும்    நந்தியெம்பெருமானையும் அபிஷேகித்து, அர்ச்சித்து ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிகிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது   பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்
 
பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்
 
பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு ஈடானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
 
இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்தவேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.
 
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் 

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ? செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும்.


செய்யத்தகாதவை 

1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் 
 
2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )
 
3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  
4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக்கூடாது    
5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
  
6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது  அடியோடு கூடாது ,பொறுமை அமைதி காக்க வேண்டும்
  
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 
 
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது
 
9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.
சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
 
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை செய்யகூடாது        

செய்யத்தகுந்தவை  
 
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ளசுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
 
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
 
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 
 
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
 
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 
 
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய ஏழை பங்காளனின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய  சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்
 
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 
 
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  
10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        

சனிப்பிரதோஷ புண்ணியவேளையில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக

                           போற்றி ஓம் நமசிவாய 


                                                   திருச்சிற்றம்பலம்

Friday, July 12, 2013

சைவ காலண்டர் - ஆடி

                                    ஓம் நமசிவாய

சைவ காலண்டர் - ஆடி

17-07-2013 TO 16-08-2013 


ஆடி மாதம்


1 ஆம் நாள் 17-07-13 புதன் -தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பம்

3 ஆம் நாள் 19-07-13 வெள்ளி -ஆடி முதல் வெள்ளி

4 ஆம் நாள் 20-07-13 சனி   -மகா பிரதோஷம்

6 ஆம் நாள் 22-07-13 திங்கள் -பௌர்ணமி ,ஆடித்தபசு,பட்டினத்தார் குருபூசை 

9 ஆம் நாள் 25-07-13 வியாழன் - சங்கடஹர சதுர்த்தி

10 ஆம் நாள் 26-07-13 வெள்ளி -ஆடி 2 ஆம் வெள்ளி

12 ஆம் நாள்  28-07-13 ஞாயிறு -சஷ்டி

13 ஆம் நாள் 29-07-13 திங்கள் -தேய்பிறை அஷ்டமி

15 ஆம் நாள் 31-07-13 புதன் -கிருத்திகை,மூர்த்தி நாயனார் ,புகழ்ச்சோழர் நாயனார் குருபூசை

17 ஆம் நாள் 02-08-13 வெள்ளி ஆடி 3 ஆம் வெள்ளி  

18 ஆம் நாள் 03-08-13 சனி -ஆடி பெருக்கு

19 ஆம் நாள் 04-08-13 ஞாயிறு -பிரதோஷம்,கூற்றுவ நாயனார் குருபூசை 

20 ஆம் நாள் 05-08-13 திங்கள் -சிவராத்திரி

21 ஆம்நாள்  06-08-13 செவ்வாய் - சர்வ ஆடி அமாவாசை,அப்பர் சுவாமிகளுக்கு திருவையாறில் கயிலைக்காட்சி அருளியது 

24 ஆம் நாள் 09-08-13 வெள்ளி -ஆடிப்பூரம்,ஆடி 4 ஆம் வெள்ளி 

25 ஆம் நாள் 10-08-13 சனி -சதுர்த்தி

27 ஆம் நாள் 12-08-13 திங்கள் -சஷ்டி,பெருமிழலை குறும்ப நாயனார் குருபூசை 

28 ஆம்நாள் 13-08-13 செவ்வாய் -சுந்தரமூர்த்தி நாயனார்,சேரமான் பெருமான் நாயனார் குருபூசை

 31 ஆம் நாள் 16-08-13 வெள்ளி - ஆடி 5 ஆம் வெள்ளி கலிய நாயனார் ,கோட்புலி நாயனார் குருபூசை




                              போற்றி  ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம்

Saturday, July 6, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 7

                                     ஓம் நமசிவாய

 
மகான் சேஷாத்திரி சுவாமிகள்

ஒருமுறை சேஷாத்திரி சுவாமிகள் மண்டப வாயிலில் அமர்ந்திருந்த போது பக்தர் ஒருவர் அவருக்கு உணவு பொட்டலம் ஒன்றை கொடுத்து உண்ண வேண்டினார்.அவர் அந்த பொட்டலத்தில் இருந்து சிறிது உணவை எடுத்து உட்கொண்டவர் திடீரென்று என்ன நினைத்தாரோ மீதம் இருந்த உணவை மேலும் கீழும் அள்ளி வீசினார். உணவைக்  கொடுத்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை உணவை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் என்று கேட்க அவருக்கு பயமாக இருந்தது. ஆனாலும் உணவை உண்ணாமல் இப்படி கீழே இறைக்கிறீர்களே ஏன் சுவாமி என்று கேட்டார் அதற்கு சேஷாத்திரி சுவாமிகள் நீ எனக்கு தந்த உணவை பூதங்களும் தேவதை களும் கேட்கிறார்கள் அதனால் தான் இப்படிச் செய்கிறேன் என்றவர் மீண்டும் பொட்டலத் தில் இருந்த உணவை அள்ளி வீசினார்.

பக்தருக்கோ ஒன்றும் புரியவில்லை சுவாமி நீங்கள் சொல்லும் "பூதம் தேவதைகள்" என் கண்களுக்கு தெரியவில்லையே? என்று சற்று கிண்டலுடன்கேட்டார் உடனே சுவாமிகள் அந்த பக்தரை சற்று முறைத்து  "பூதம், தேவதைகளை காணவில்லை என்கிறாய் அப்படித்தானே ?" ஆமாம் என்றார் பக்தர்
"அப்படி என்றால் அவற்றை உனக்கு காட்டு கின்றேன்" என்ற சுவாமிகள் அந்த பக்தரின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது கட்டைவிரலை வைத்து சிறிது அழுத்த பக்தர் கண்களை மூடிக்கொண்டார் .பிறகு"இப்போது பார்" என்றார் சுவாமிகள்

பக்தர் கண்களை திறக்க அங்கே அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தின  சுவாமிகள் வீசி எறிந்த உணவை கோரைப்பற் களும் தொங்கிய நாக்கும் இருந்த பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன கிண்டல் பேசிய பக்தரை அவை முறைத்தன.
அது கண்ட பக்தர் பயத்தில் நடுங்கினார் 
சேஷாத்திரி சுவாமிகளும் சிரித்துக்கொண்டே இப்போது புரியுதா? இனிமே சந்தேகப்படாதே என்று கூறியபடி பக்தரின் புருவ மத்தியில் இருந்து தனது விரலை எடுத்தார்.தவறுக்கு வருந்தி அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு வேண்டினார் பக்தர்.
 
அடியவர்கள் சிலரது வீடுகளில் சேஷாத்திரி சுவாமிகள் திடீர் என போய்த்தங்குவதுண்டு. முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் போய்த் தங்குவதே அவர் வழக்கம்.தங்கள் வீட்டில் தங்க மாட்டாரா என்று ஏராளமான பேர் காத்து கொண்டிருப்பார்கள்.யார் தூய்மையான வாழ்க்கை வாழ்பவர் யார் உண்மையான பக்தி கொண்டவர் என்றும் சுவாமிகளுக்குத் தெரியும்.வருந்தி அழைப்பவர்களின் வீடு களையெல்லாம் விட்டுவிட்டுத் தாம் விரும்பு கிறவர் வீட்டுக்குத் திடீரென்று போய் நிற்பார் 
மொட்டை மாடி இருக்கும் வீடானால் அவருக்கு ஆனந்தம். இரவு மொட்டை மாடி யில் போய் உறங்குவார். "தான் உறங்கும் போது, இரவு மாடிக்கு யாரும் வரக்கூடாது!' என்ற நிபந்தனையில் மட்டும் கண்டிப்பாக இருப்பார். "இவரோ முற்றும் துறந்த துறவி. அப்படியிருக்க இரவு ஏன் யாரும் மாடிக்கு வந்து தன்னைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்?' என ஓர் அன்பருக்கு சந்தேகம். ஒருநாள் நள்ளிரவு யாரும் அறியாதவாறு மாடிக் கதவைத் திறந்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றார். நிலவொளியில் அவர் கண்ட காட்சியால் அவரது கை கால்கள் கிடு கிடுவென நடுங்கின. விழிகள் வியப்பிலும் அதிர்ச்சியிலும் விரிந்தன.சுவாமிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எல்லோரையும் போல் உறங்கவில்லை. கால்கள் இரண்டும் ஒரு பக்கம் தனியாகவும்  கைகள் தனியாக வேறொரு பக்கமும்  தலை, உடல் ஆகியவையும் தனித்தனியாகவும்  வெவ்வேறு பக்கம் சாய்ந்திருந்தன. என்ன இது ! யாராவது சுவாமிகளை கண்டந்துண்ட மாக வெட்டி வீசிவிட்டார்களா? என்று அந்த காட்சியை கண்டவரின் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது. நடுக்கத்தோடு மாடிக் கதவை சாத்தி விட்டு பயந்து கீழே வந்து படுத்துக் கொண்டார் உறக்கம் வராமல் இறைவன் நாமத்தை கூறியவாறு இரவைக் கழித்தார்.
 
மறுநாள் காலை ஆனந்தமாக வழக்கம்போல் மொட்டை மாடியை விட்டு இறங்கி வந்தார் சுவாமிகள் அந்த அன்பரைப் பார்த்து, "என்ன ரொம்ப பயந்து விட்டாயோ? நல்லதுதான். அதனால்தானே ராத்திரியெல்லாம் பகவான் நாமாவை ஜபித்தாய்! மொட்டை மாடிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே? அப்படியிருக்க ஏன் வந்தாய்?'' என்று நகைத்த வாறே அவரிடம் கேட்டார்."தெரியாமல் செய்து விட்டேன் சுவாமி!'' என்று அவர் மெய் சிலிர்க்க சுவாமிகளை நமஸ்கரித்தார்.
 
திருவண்ணாமலையில் இருந்த நாவிதர்கள்  சேஷாத்ரி சுவாமிகளை மிகவும் பிடித்தது அதற்கு காரணம் சேஷாத்திரி சுவாமிகள் நிகழ்த்திய ஒரு அற்புதம் தான். திடீரென்று ஒரு நாவிதர்முன் போய் அமர்ந்து "எனக்கு மொட்டை போட்டு விடு! என்று கேட்பார். அந்த நாவிதருக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படும் ஏனென்றால் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பார் அந்த நாவிதர். பய பக்தியோடு கத்தியைத் தீட்டி சுவாமிகளின் தலைமுடியை மழிப்பார். முடி எடுத்ததும் சுவாமிகள் சிரித்துக் கொண்டு   குளிக்கச் சென்றுவிடுவார். அவ்வளவு தான். அன்று அந்த நாவிதருக்குக் கை வலிக்கும் அளவு தொழில் நடக்கும். ஏராளமான பேர் அவரிடம் முகச்சவரம் செய்துகொள்ளவும் முடியிறக்கவும் என்று தேடி வருவார்கள். ஒரு மாதத்தில் நடக்காத தொழிலை ஒரே நாளில் நடத்திச் சம்பாதித்து விடுவார் அவர்.
இந்த அனுபவத்தால் சில நாவிதர்கள் சுவாமி களைப் பார்த்தால்,தலைமுடி மழிக்கவா? என ஆவலோடு கேட்பார்கள். அவர் நினைத்தால், தான் நினைத்த நாவிதரிடம் தானே போய் உட்கார்ந்து கொள்வார்.
 
அப்படி ஒருநாள் ஒரு நாவிதரிடம் போய் அமர்ந்தார் சேஷாத்திரி சுவாமிகள் அந்த நாவிதர் கடவுள் பக்தி கொண்ட தொழிலாளி. பிரியமாக அவரது தலைமுடியை மழித்தார். சுவாமிகள் சிரித்துக்கொண்டு சென்று விட்டார்.அன்று ஏராளமான பேர் தன்னிடம் முடி மழிக்க வருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தார் நாவிதர். என்ன வினோதம்! அன்று ஒரே ஓர் ஆள்கூடத் தேடி வரவில்லை. இன்று ஏன் தொழிலே நடக்கவில்லை?' என சிந்தித்தவாறே கடையடைத்து  வீட்டுக்குப் புறப்பட்டார் நாவிதர்.அப்போது ஓர் அற்புதம் நடந்தது. காற்று ஒரு பெரிய தொகையைப் புரட்டிக் கொண்டு வந்து அவர் காலடியில் சேர்த்தது. காலின் கீழ் ஏதோ காகிதம் படபடக் கிறதே என்று எடுத்துப் பார்த்த நாவிதர், ஒரு பெருந்தொகை தனக்கு அருளப்பட்டிருப்பதை எண்ணிப் பூரித்தார். சேஷாத்ரி சுவாமிகளை மனதார வணங்கி அந்தப் பணத்தை கண் களில் ஒற்றி எடுத்துக் கொண்டார். 
 
1928-ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒரு நாள் தன் பக்தையான சுப்புலட்சுமியிடம் இந்த வீட்டை விட்டுப் புதிய வீட்டிற்குப் போக நினைக்கிறேன் என்று கூற அந்த அம்மா முதலில் மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய் சொல்வ தாய் நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப சுவாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், ஆம் புதியதோர் வீடுகட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம் என்றாராம். அந்த அம்மாவின் வார்த்தைகளை பராசக்தி யின் கட்டளையாக ஏற்ற சுவாமிகள். சரி, அப்படியே செய்வோம் என்றார். சிலநாள்  கழித்து அவர் பக்தர்கள் சிலருக்கு சுவாமி களை போட்டோ படம் பிடித்து வைக்கலாம்  எனத் தோன்றியது. ஆகவே துணிமாற்றாமல், குளிக்காமல் இருந்த சுவாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுத்த வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டி னார்கள்.சுவாமிகள் வேண்டாம் என மறுத்தும் அவர்கள் கேட்காமல் எண்ணெய் தேய்த்துக்குளிப்பாட்டி,புதுத்துணிஅணிவித்து, மாலை போட்டுப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்திரி சுவாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41-ஆம் நாள் அண்ணாமலையாரைத் தரிசிக்கச் சென்றார் சுவாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்ல மெல்ல உடல்நிலை மோசமாகி 1929-ஆம் வருடம் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சுவாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்தது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்கமுடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கி  எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூர்களில் இருந்தெல் லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்திற்கு வந்து குவிந்தார்கள். 
 
காஞ்சி பெரியவர் சொல்வாராம் நான் சேஷாத்திரி மாதிரி உட்கார்ந்திருக்கிறேனா? என்று.அவ்வளவு பெரிய மகான் இவரை போற்றுகின்றார் என்றால் அவர் பெற்ற திருவருள் பேறு தான் என்னே ? 
 
 
                                        அற்புதங்கள் தொடரும் ....

 
                         போற்றி ஓம் நமசிவாய 
 
 
                              திருச்சிற்றம்பலம் 
 
 
                                           

அண்ணாமலையார் அற்புதங்கள் -6

                                     ஓம் நமசிவாய

மகான் சேஷாத்திரி சுவாமிகள்

சேஷாத்திரிசுவாமிகள் செய்த அற்புதங்கள் பல. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவர் மனைவி சுப்புலட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார் 4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். சுப்புலட்சுமி இங்கு வா ஒரு வேடிக்கை காட்டுகிறேன் என்று சுவாமிகள் சொன்னார்  அவர் என்ன வேடிக்கை என்று கேட்டார். அந்த  வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன் என்று சொல்லி வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்ய ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடக்கூப்பிட பறவைகள் நூற்றுக் கணக்கில் பெருகின. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று விதவித மான பறவைகள் வந்தன. பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து குரல் எழுப்பின . சுப்புலட்சுமி யம்மாள் அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்க அப்படியா இதோ போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. 


திருவண்ணாமலை டேனிஷ் மிஷின் பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் வேங்கடராம ஐயர் சேஷாத்திரி சுவாமிகளின் மீது அளவுகடந்த பக்தியும், ஈடுபாடும் கொண்ட அந்த அன்பரின் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சுவாமிகள் திருமண மண்டபத்திற்குள் நுழைய இவர் என்ன கலாட்டா செய்யப்போகிறாரோ? என்று சிலர் பயந்தனர். வேங்கடராம ஐயர் மட்டும் மிகுந்த சந்தோஷத்தோடு தேடிப்போன தெய்வம் தன் வீடு தேடி வந்ததாக நினைத்து, மாங்கல்யம், பூ, பழம் ஆகியவற்றோடு இருந்த தாம்பாளத்தை சுவாமிகளின் முன்னால் ஆசி வழங்க நீட்டினார்.சுவாமிகள் ஆசிவழங்காமல் தட்டைத் தட்டிவிட்டார். தாலியும் மங்கலப் பொருள்களும் தரையில் சிதறின. இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் இப்படி அமங்கலமாக நடந்து கொள்கிறாரே என்று பொருமினர். ஐயர் மட்டும் புன்னகையோடு சிதறிய பொருள்களை எடுத்து தாம்பாளத்தில் வைத்துக் கொண்டே இது நல்ல சகுனம் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதோடு சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வேண்ட சுவாமிகள் யாருமே எதிர்பாராத மற்றொரு செயலையும் செய்தார். மணமகளின் அருகே நின்றிருந்த ஐயரின் இரண்டாவது மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். அந்த பெண் இராஜம்மாள் திருமணம் ஆகி அறுபது ஆண்டுகளுக்கு மேல் கணவருடன்  வாழ்க்கை நடத்தினாள். அவளுக்கு நேர இருந்த தாலி தோஷத்தை நீக்கவே அவர் பலர் முன்னிலை யில் தாலிவைத்திருந்த தாம்பாளத்தைத் தட்டி விட்டிருக்கிறார்.


சேஷாத்திரி சுவாமிகள் தினமும் திருவண்ணாமலையை வலம் வருவார். சில தினங்களில் நான்கைந்து முறை கிரிவலம் வருவார் மற்ற நேரங்களில் கோவிலின் நடன மண்டபத்திலோ அல்லது விருபாக்ஷி குகையிலோ அவரைப் பார்க்கலாம்.அவரது நடவடிக்கைகள் வேடிக்கையாக பித்துப்பிடித்த வரின் செயலாகவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். சுவாமிகள் சிவகங்கை தீர்த்தத்தில் குதித்துக் குளிப்பார். அப்படியே எழுந்து வந்து கரையில் நிற்பவர்களின் மீது ஈரவேட்டியைப் பிழிந்து தண்ணீரைத் தெளிப்பார். வாயில் நீரை எடுத்து வந்து அதை எதிரில் வருபவர்கள் மீது துப்புவார்.கொப்பளித்த தண்ணீர் பலபேருடைய நோய்களை நீக்கியிருக்கிறது. அவரது எச்சில் தண்ணீர் பலபேருடைய வாழ்வில் வெற்றி களைத் தந்திருக்கிறது. அவர் வேட்டியிலிருந்து தெறித்த தண்ணீர் பலபேருக்கு மன அமைதி அளித்திருக்கிறது. சுவாமிகள் தீர்த்தமாட குளத்தினுள் குதித்து விட்டால் கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்பார்கள். அவர் கரையேறும் போது தண்ணீர் தெளித்தால் நாமும் வாழ்வின் தொல்லைகளிலிருந்து கரையேறி விடலாமே! என்ற ஏக்கத்தோடு அவர்கள் காத்திருப்பார்கள்.


இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை  சுவாமிகள் ஒரு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் இதை விற்காதே என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்தவர்  மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அவன் காவல்துறையில் புகார் செய்ய போளூரிலிருந்து திருவிழா பணிக்கு திருவண்ணாமலைக்கு வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.அரை மணியில் அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவ மக்கள் கொதித்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் திருவிழா முடிந்த பிறகே சுவாமிகளை விடமுடியும் என கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் கேடு வரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.அடுத்தஅரைமணி நேரத்தில் அவருக்கு அவரது மனைவி தந்தி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத்தாழ் போட்டுக் கொண்டு கதவைத் திறக்கத் தெரியாது பயந்து அழுது, மூர்ச்சையாகி விட்டதாகவும் உடனே கிளம்பி வரவும் என்று தந்தி தெரிவித்தது.இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன் பெரும்  கூட்டம் கூடியிருந்தது. அந்த அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைக்க முடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையிலிட்ட பாவம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள் என்று அழுதாள்.இன்ஸ்பெக்டர் தன் தவறு உணர்ந்து  சுவாமிகளை விடுவிக்கும்படி  தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு,அச்சம் இன்றி தானே கதவைத் திறந்து வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? என்று ஆச்சரியப்பட்டார்  இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு சென்று, சுவாமி களை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார்.கிழிந்த ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியுமாக  பார்ப்பதற்கு பைத்தியம் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டுவதும் உண்டு.  பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களேஎன்று கேலி செய்வதும் உண்டு.


1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை பெரியம்மை நோய் தாக்கியது. நோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.சேஷாத்திரி சுவாமிகளையும் அந்த அம்மை நோய் தாக்கியது.நோய் கண்ட அவரை ஒரே இடத்தில் இருக்கும்படியும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிய நோய் பரவும் என பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
 

மறுநாள் காலை தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, அங்கு சேஷாத்திரிசுவாமிகள் சாலையில் ஒரு  புளியமரத்தினடியில் நிற்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்து பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கேவந்து சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதி மகானின் பெருமைகளைக் கேட்டரிந்தார்.
அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என பார்த்து வரசொல்லி அனுப்பினார் அவர் மகானைக் கண்காணிக்க அங்கேயே தங்கினார்
சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது என்று செட்டியார் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்லை கேட்க வில்லை எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடி படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறின முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொல்ல அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்க்க சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.மகானின் பெருமை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ள  சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.
 


                                                             அற்புதங்கள் தொடரும் ......



                          போற்றி ஓம் நமசிவாய 



                                 திருச்சிற்றம்பலம்  

அண்ணாமலையார் அற்புதங்கள் -5

                                                     ஓம் நமசிவாய

மகான் சேஷாத்திரி சுவாமிகள்

 



சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதியர்க்கு 1870ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார்

சேஷாத்திரிக்கு ஐந்து வயது இருக்கும் போது அவருடைய தாயார் மரகதம் தன் பிள்ளையை வரதராஜபெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் வாசலில் கண்ணன் சிலை களை ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். தனக்கு ஒரு பொம்மை வாங்கித்தரும்படி சேஷாத்திரி தம் தாயிடம் கேட்டார். கையில் காசில்லாத அவர் மகனின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தார். ஆனால் சிறு பிள்ளை சேஷாத்திரி விடுவதாக இல்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்து,அந்த பொம்மையை வாங்கித்தர வேண்டும்  என்று பிடிவாதம் செய்தார்.நிலைமையைப் புரிந்து கொண்ட வியாபாரி அம்மா உங்கள் குழந்தை ஆசைப்படுகிறான். ஆதலால் நானே ஒரு பொம்மையை அவனுக்குத் தருகிறேன்.அதற்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி, சேஷாத்திரியின் கைகளில் ஒரு கண்ணன் பொம்மையை கொடுத்தான் சேஷாத்திரி அந்தப் பொம்மையை வாங்கி அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. மறுநாள் மரகதம் தன் மகனோடு கோவிலுக்கு சென்ற போது நேற்று பொம்மையை அளித்த வியாபாரி குழந்தையைப் பார்த்ததும் ஓடி வந்தான். மரகதத்திடம் அம்மா! இவன் சாதாரண குழந்தையல்ல,தெய்வீகக் குழந்தை என்றான் பக்தியோடு. மரகதம் அம்மாள் விஷயம் தெரியாமல் விழிக்க வியாபாரி விளக்கினான் அம்மா! இங்கு பல நாட்களாக நான் வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரம் இல்லாமல் நான் மிகவும் வருத்தத்துடன் நாட்களை ஓட்டிவந்தேன். நேற்று உங்கள் பிள்ளைக்கு ஒரு பொம்மை கொடுத்தேன். அவன் கரம் பட்ட நேரம் பொன்னான நேரம். என்னிடம் இருந்த எல்லா பொம்மைகளும் நேற்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இப்படியொரு லாபம் கிடைக்கும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. இது சாதாரணக் கை அல்ல அம்மா தங்கக் கை என்று  தழுதழுத்த குரலில் கூறி குழந்தையைக் கும்பிட்டான். இச்செய்தி சில நாட்களில் ஊர் முழுதும் பரவ அது முதல் எல்லாரும் அவரை தங்கக் கை சேஷாத்திரி என்றழைக்கலாயினர் 


சேஷாத்திரி தனது ஐந்தாவது வயதில் வேத பாடசாலைக்கு கற்க  அனுப்பப்பட்டார். அங்கு வேதம் மற்றும் மந்திரங்கள் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி பதினான்காம் வயதை தாண்டும் முன் வேதங்களை நன்கு கற்றுக்கொண்டார். பதினான்கு வயதில் அவருடைய தந்தையார்  இறக்க அதன் பின் சேஷாத்திரி தன்னுடைய மாமாவின் ஊருக்கு சென்றார். இங்கு அவர் உபநிஷம், வேதம், ஜோதிடம்,இசை என பல கலை பயின்று தேர்ச்சி பெற்றார் . இருந்தாலும் அவர் செயல்கள் எல்லாம் சிறிது பித்துகுளித் தனமாகவும் வெகுளித்தனமாகவும் இருக்கும். அது கண்டு அவர் தாயார் இறக்கும் தருவாயில் மகனைப்பார்த்து மிகவும் வருந்தி  மகனின் கரத்தைப் பற்றி அருணாச்சலா அருணாச்சலா என்று சொல்லும் போது உயிர் பிரிந்தது சேஷாத்திரியின் பதினேழாம் வயதில் தாயும்  இறக்க பின்முழுமையாக அவரின் மாமாவின்  அரவணைப்பில் வாழ்ந்தார்.தாயின் கடைசி வாக்கு அருணாச்சலா என்ற சொல் அவர் காதில் ஏதோ மந்திரம் போல் சுற்றிச் சுற்றி வர சக்தி,அருணாச்சலேஸ்வரர் படங்களை முன் வைத்து நீண்ட நேரம் தியானம் செய்தார். பின் சேஷாத்திரி தனது பத்தொன்பது வயதில் பாலாஜி சுவாமிகளிடம் சிஷ்யனாக சேர்ந்து துறவறம் மேற்கொண்டார். பிறகுதமிழ்நாட்டில் உள்ள பல புண்ணிய தலங்களுக்கு சென்று கடைசியாக அண்ணாமலையாரின் தலமான திருவண்ணாமலை வந்தடைந்தார். 

சேஷாத்திரி தியானம் செய்ய  தனியாக எந்த இடத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அங்கு, இங்கு சென்று தியானம் செய்வார். அவருக்கு மிக பிடித்த இடங்கள் கம்பத்திளை யனார் கோயில்,திரௌபதியம்மன் ஆலயம்
யோகேஸ்வர மண்டபம், பாதாளலிங்கம் ஆகியன .நாள்தோறும் கிரிவலம் செல்லுவதை வழக்கமாக்கி கொண்டார்.அவர் பெற்ற அருளால் திருவண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றை அடுத்த பதிவில் தொடர்வோம் 

                                       அற்புதங்கள் தொடரும் 


                             போற்றி ஓம் நமசிவாய


                                 திருச்சிற்றம்பலம்   

நந்தி தல சிறப்புகள்

                         ஓம் நமசிவாய 


நந்தி தல சிறப்புகள்

1.நந்தியெம்பெருமான் திருமணம்

பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற்றது 

2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்

1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக 
2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக 
3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக

3.நந்தி இறைவனை நோக்காமல் இறைவர் பார்க்கும் திசையை பார்க்கும் தலங்கள்

1.திருவலம் 
2.வடதிருமுல்லை வாயில் 
3.செய்யாறு 
4.பெண்ணாடம் 
5.திருவைகாவூர் 

4.நந்தி நின்ற திருக்கோலம்

1.திருமாற்பேறு  (திருமால்பூர் )
2.திருவாரூர்

5.நந்தி கொம்பு ஒடிந்த தலம் 

                 திருவெண்பாக்கம்

6.நந்தி இறைவனுக்கு பின்னும் உள்ள தலம்

               திருக்குறுக்கை வீரட்டம்

7.நந்தி சங்கமத் தலம் 

திருநணா (பவானி )

8.நந்தி சற்று சாய்ந்துள்ள தலம் 

திருப்பூவணம் 

9.நந்தி முகம் திரும்பிய தலம் 

கஞ்சனூர் 

10.நந்தி உடல் துளைக்கபட்டுள்ள தலம் 

திருவெண்காடு 

11.நந்தி காது அறுந்த தலம் 

தேப்பெருமாநல்லூர் 

12.நந்தி தலம் 

திருவாவடுதுறை 

13.ஒரே கல்லில் மிகப்பெரிய நந்தி 

தஞ்சாவூர் 

14.மிகப்பெரிய சுதை நந்தி 

1.திருவிடை மருதூர் 
2.இராமேஸ்வரம் 

15.கற்களால் ஆன பெரிய நந்தி 

திருவாவடுதுறை 


                          போற்றி ஓம் நமசிவாய

                                 திருச்சிற்றம்பலம்