rudrateswarar

rudrateswarar

Sunday, July 28, 2013

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

                               ஓம் நமசிவாய

பெருமிழலைக்குறும்ப நாயனார்

                              "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன் "

அவதார தலம் - பெருமிழலை 
முக்தி தலம்     - திருவாரூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி -சித்திரை 
12-08-2013 திங்கள் கிழமை
   

பெருமிழலை புதுக்கோட்டைக்குத் தென் மேற்கே பேரையூருக்கருகில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது. சோழ நாட்டில் திருவீழிமிழலை என்ற பதி ஒன்று உள்ளது. அதனின்றும் வேறு பிரித்தறிய, மிழலை நாட்டுப் பெருமிழலை என்பர் .

அந்த  திருநகரத்திற்கு குறுநில மன்னராக விளங்குபவர் மிழலைக் குறும்பனார் ஆவர். அவர் சிவனடியவர்களுக்கு வேண்டிய பணி விடைகளையெல்லாம் அவர் தம் கூறும் முன்னமே குறிப்பறிந்து விருப்புடன் ஏற்றுச் செய்து வந்தார் 

அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ண குறையாதவாறு அமுது ஊட்டியும், அவர்கள் கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெரும் செல்வங்களை கொடுத்தும், தம்மைச் சிறியராக வைத்து நடந்து கொள்ளுமவர், உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமானின் சிவந்த திருவடிகளாகிய தாமரை மலர்களை, மனமாகிய மலரில் வைத்துப் போற்றுபவர் 

இவ்வாறு  எல்லையற்ற திருத்தொண்டின் உண்மை நிலையினை உலகறியும்பொருட்டு அடியவர் தம் திருவுள்ளத்தில் நீங்காது நிலை பெற்று விளங்கும் திருத்தொண்டத்தொகை   அருளிய சுந்தரரை பணிந்து பெருமானின் திருவருள் பெற்ற அப்பெருமகனாரின் திருவடிகளை நாளும் நினைந்து போற்றி வந்தார்

நம்பியாரூரரின் மலரனைய திருவடிகளைக் கைகளால் தொழுதும்,வாயினால் வாழ்த்தியும், மனத்தினால் நினைந்தும் வரும் கடப்பாட்டில் நின்று மாலும் அயனும் அறிய இயலாத சிவந்த பொன் போன்ற திருவடிகளை அடைதற்கு,உரியநெறிஇதுவே என்று உட்கொண்டு அன்பினால் அவரைப் போற்றி வந்தார் .

நம்பியாரூரரின் திருப்பெயரைப் போற்றி
வந்த நலத்தால் எண்வகை சித்திகளும் கைவரப் பெற்றதோடு, இறைவனின் திருவைந்தெழுத்தே சுற்றமும் பொருளும் உணர்வும் எனும் மனநலத்தைப் பெற்றார்

தல யாத்திரையாய் சேரமான் பெருமானின் கொடுங்கோளூர் சேர்ந்த வன்தொண்டர் அங்கு திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளி யிருக்கும் நஞ்சுண்ட பெருமானை வழிபட்டு தமிழ் மாலையாகிய தேவாரத்திருப்பதிகம்  பாடி சிவபெருமானின் திருவருளினால்  கயிலையைச் சேர இருக்கும் வாழ்வினை, பெருமிழலைக் குறும்பனார் தாம் இருந்த இடத்தில் இருந்தவாறே தம் யோக நெறியால் உணர்ந்தார்.


மண்ணில் திகழும் திருநாவல் ஊரில் வந்த வன்றொண்டர்
நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன்என்று 

எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்றடைவன் யோகத்தாலென்பார்




மனம் முதலிய அகக்கருவிகள் நான்கும் சிந்தையே ஆக, அகப்புறக் கருவிகளுக்கு ஆட்படாது  உணர்ச்சியானது சுழுமுனை வழியே உயிர்க் காற்றைச் செலுத்த உச்சித் துளையின் வழி அக்காற்றுப் பொருந்த முன் பயின்ற நெறியினால் எடுத்த பிரணவ மந்திரமானது அவ்வாயிலைத் திறக்க அவ்வழி மூலம் நம்பியாரூரர் திருக்கயிலை சென்று அடையும் முன்பே இவர் அடைந்தார். உயிர்க்காற்றை வாங்கவும், நிறுத்தவும், விடவும் பயின்ற யோக பயிற்சியால் ஆரூரரின் திருவடிகளைப் பிரியாது அடைவதற்கு திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிப் பேற்றை அடைந்த பெருமிழலைக்குறும்ப நாயனாரின் திருவடிகளை வணங்குவோம் 

பெருமிழலைக்குறும்ப நாயனார் முத்திபேறு எய்திய நாள் சுந்தரர் கயிலைசென்ற நாளுக்கு முன் வரும் ஆடிச் சித்திரையாகும். இவர் அப்பூதியடிகளாரைப் போல குருநாமமே பஞ்சாட்சரம் என்று குருபக்திக்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்த பெரியோர் ஆவர் 
இவர் காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8 ஆம் நூற்றாண்டாகும்.



                           போற்றி ஓம் நமசிவாய 


                                  திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment