rudrateswarar

rudrateswarar

Wednesday, July 17, 2013

மகா பிரதோஷம் 20 - 07- 2013

                                                         ஓம் நமசிவாய 



சனிப்பிரதோஷம்  20-07-2013


பிரதோஷ வேளை என்பது சிவபெருமான் ஆலம் உண்டு உயிர்களை காத்த வேளை சூரிய அஸ்தமனத்திற்குமுன் ஒன்றரை மணி நேரம் அஸ்தமனத்திற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை இது இறைவனை வழிபடஏற்ற  புண்ணிய காலம் இறைவன் நஞ்சை உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
 
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்திற்கும்  புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டு மகாதேவர்  நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடை யே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல்            திரு நடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட   நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால்அயன் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்துப் பேறு பெறுகின்றன .எனவே அரிய    மானுடப் பிறப்பாகிய நாமும்
சிவனையும்    நந்தியெம்பெருமானையும் அபிஷேகித்து, அர்ச்சித்து ஆராதித்து  ஐந்தெழுத்து ஜெபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பஷ பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும்,சனிகிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது   பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்
 
பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்த வற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்
 
பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன்இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு ஈடானது
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
 
இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்தவேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.
 
பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரண பயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் 

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ? செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும்.


செய்யத்தகாதவை 

1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் 
 
2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை )
 
3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  
4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது அரன் நாமம் அன்றி வேறு பேசக்கூடாது    
5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
  
6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது  அடியோடு கூடாது ,பொறுமை அமைதி காக்க வேண்டும்
  
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 
 
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது
 
9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது.
சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
 
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தவறியும் அசைவம் கூடாது   
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை செய்யகூடாது        

செய்யத்தகுந்தவை  
 
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம் அணிந்து உள்ளசுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
 
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
 
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் பன்னீர் ,மஞ்சள் ,திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 
 
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
 
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியாவிட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 
 
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய ஏழை பங்காளனின் மூல மந்திரம்  
ஓம் நமசிவாய  சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்
 
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 
 
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  
10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        

சனிப்பிரதோஷ புண்ணியவேளையில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக

                           போற்றி ஓம் நமசிவாய 


                                                   திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment