rudrateswarar

rudrateswarar

Saturday, July 6, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் -6

                                     ஓம் நமசிவாய

மகான் சேஷாத்திரி சுவாமிகள்

சேஷாத்திரிசுவாமிகள் செய்த அற்புதங்கள் பல. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவர் மனைவி சுப்புலட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார் 4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். சுப்புலட்சுமி இங்கு வா ஒரு வேடிக்கை காட்டுகிறேன் என்று சுவாமிகள் சொன்னார்  அவர் என்ன வேடிக்கை என்று கேட்டார். அந்த  வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன் என்று சொல்லி வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்ய ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடக்கூப்பிட பறவைகள் நூற்றுக் கணக்கில் பெருகின. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று விதவித மான பறவைகள் வந்தன. பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து குரல் எழுப்பின . சுப்புலட்சுமி யம்மாள் அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்க அப்படியா இதோ போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. 


திருவண்ணாமலை டேனிஷ் மிஷின் பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் வேங்கடராம ஐயர் சேஷாத்திரி சுவாமிகளின் மீது அளவுகடந்த பக்தியும், ஈடுபாடும் கொண்ட அந்த அன்பரின் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சுவாமிகள் திருமண மண்டபத்திற்குள் நுழைய இவர் என்ன கலாட்டா செய்யப்போகிறாரோ? என்று சிலர் பயந்தனர். வேங்கடராம ஐயர் மட்டும் மிகுந்த சந்தோஷத்தோடு தேடிப்போன தெய்வம் தன் வீடு தேடி வந்ததாக நினைத்து, மாங்கல்யம், பூ, பழம் ஆகியவற்றோடு இருந்த தாம்பாளத்தை சுவாமிகளின் முன்னால் ஆசி வழங்க நீட்டினார்.சுவாமிகள் ஆசிவழங்காமல் தட்டைத் தட்டிவிட்டார். தாலியும் மங்கலப் பொருள்களும் தரையில் சிதறின. இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் இப்படி அமங்கலமாக நடந்து கொள்கிறாரே என்று பொருமினர். ஐயர் மட்டும் புன்னகையோடு சிதறிய பொருள்களை எடுத்து தாம்பாளத்தில் வைத்துக் கொண்டே இது நல்ல சகுனம் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதோடு சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வேண்ட சுவாமிகள் யாருமே எதிர்பாராத மற்றொரு செயலையும் செய்தார். மணமகளின் அருகே நின்றிருந்த ஐயரின் இரண்டாவது மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். அந்த பெண் இராஜம்மாள் திருமணம் ஆகி அறுபது ஆண்டுகளுக்கு மேல் கணவருடன்  வாழ்க்கை நடத்தினாள். அவளுக்கு நேர இருந்த தாலி தோஷத்தை நீக்கவே அவர் பலர் முன்னிலை யில் தாலிவைத்திருந்த தாம்பாளத்தைத் தட்டி விட்டிருக்கிறார்.


சேஷாத்திரி சுவாமிகள் தினமும் திருவண்ணாமலையை வலம் வருவார். சில தினங்களில் நான்கைந்து முறை கிரிவலம் வருவார் மற்ற நேரங்களில் கோவிலின் நடன மண்டபத்திலோ அல்லது விருபாக்ஷி குகையிலோ அவரைப் பார்க்கலாம்.அவரது நடவடிக்கைகள் வேடிக்கையாக பித்துப்பிடித்த வரின் செயலாகவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும். சுவாமிகள் சிவகங்கை தீர்த்தத்தில் குதித்துக் குளிப்பார். அப்படியே எழுந்து வந்து கரையில் நிற்பவர்களின் மீது ஈரவேட்டியைப் பிழிந்து தண்ணீரைத் தெளிப்பார். வாயில் நீரை எடுத்து வந்து அதை எதிரில் வருபவர்கள் மீது துப்புவார்.கொப்பளித்த தண்ணீர் பலபேருடைய நோய்களை நீக்கியிருக்கிறது. அவரது எச்சில் தண்ணீர் பலபேருடைய வாழ்வில் வெற்றி களைத் தந்திருக்கிறது. அவர் வேட்டியிலிருந்து தெறித்த தண்ணீர் பலபேருக்கு மன அமைதி அளித்திருக்கிறது. சுவாமிகள் தீர்த்தமாட குளத்தினுள் குதித்து விட்டால் கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்பார்கள். அவர் கரையேறும் போது தண்ணீர் தெளித்தால் நாமும் வாழ்வின் தொல்லைகளிலிருந்து கரையேறி விடலாமே! என்ற ஏக்கத்தோடு அவர்கள் காத்திருப்பார்கள்.


இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை  சுவாமிகள் ஒரு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் இதை விற்காதே என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்தவர்  மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அவன் காவல்துறையில் புகார் செய்ய போளூரிலிருந்து திருவிழா பணிக்கு திருவண்ணாமலைக்கு வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.அரை மணியில் அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவ மக்கள் கொதித்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் திருவிழா முடிந்த பிறகே சுவாமிகளை விடமுடியும் என கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் கேடு வரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.அடுத்தஅரைமணி நேரத்தில் அவருக்கு அவரது மனைவி தந்தி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத்தாழ் போட்டுக் கொண்டு கதவைத் திறக்கத் தெரியாது பயந்து அழுது, மூர்ச்சையாகி விட்டதாகவும் உடனே கிளம்பி வரவும் என்று தந்தி தெரிவித்தது.இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன் பெரும்  கூட்டம் கூடியிருந்தது. அந்த அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைக்க முடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையிலிட்ட பாவம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள் என்று அழுதாள்.இன்ஸ்பெக்டர் தன் தவறு உணர்ந்து  சுவாமிகளை விடுவிக்கும்படி  தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு,அச்சம் இன்றி தானே கதவைத் திறந்து வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? என்று ஆச்சரியப்பட்டார்  இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு சென்று, சுவாமி களை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார்.கிழிந்த ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியுமாக  பார்ப்பதற்கு பைத்தியம் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டுவதும் உண்டு.  பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களேஎன்று கேலி செய்வதும் உண்டு.


1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை பெரியம்மை நோய் தாக்கியது. நோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.சேஷாத்திரி சுவாமிகளையும் அந்த அம்மை நோய் தாக்கியது.நோய் கண்ட அவரை ஒரே இடத்தில் இருக்கும்படியும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிய நோய் பரவும் என பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
 

மறுநாள் காலை தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, அங்கு சேஷாத்திரிசுவாமிகள் சாலையில் ஒரு  புளியமரத்தினடியில் நிற்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்து பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கேவந்து சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதி மகானின் பெருமைகளைக் கேட்டரிந்தார்.
அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என பார்த்து வரசொல்லி அனுப்பினார் அவர் மகானைக் கண்காணிக்க அங்கேயே தங்கினார்
சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது என்று செட்டியார் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்லை கேட்க வில்லை எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடி படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறின முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொல்ல அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்க்க சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.மகானின் பெருமை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ள  சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.
 


                                                             அற்புதங்கள் தொடரும் ......



                          போற்றி ஓம் நமசிவாய 



                                 திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment