rudrateswarar

rudrateswarar

Friday, August 30, 2013

அதிபத்த நாயனார் புராணம்

                                 ஓம் நமசிவாய


அதிபத்த நாயனார் புராணம்

 
 
               
               "விரிதிரை சூழ் கடல் நாகை அதிபத்தற் கடியேன்"



அவதார தலம் - திரு நாகை  
முக்தி தலம்     - திரு நாகை  
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி  ஆயில்யம் 
03-09-2013 செவ்வாய்க்கிழமை

சோழநாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகப்பட்டினமும் இரு பெரும் வாணிப நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகையம்பதியின் கடற்கரை ஓரத்தில் நுளைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது. இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்துவரும் அதிபத்தர் முதல் மீனை சிவபெருமானுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.


 முட்டில் மீன்கொலைத் தொழில்
          வளத் தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
          மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
          கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
          புடன்என்றும் விருப்பால்.  



எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த ஒரு மீனையும் இறைவனுக்கு என்று  கடலுக்குள் வீசிவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்த செல்வம் சிறுகச் சிறுகக் குறைந்தது 


சால நாள்கள்இப் படிவரத்தாம்                                              உணவயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
           தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
          தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
          பெனும்அமு துண்பார். 



ஒருநாள் அதிபத்த நாயனார் வீசிய வலையில் விசித்திரமான மீன் ஒன்று கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அப் பொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. 

ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
           மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
           சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
           கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
           றிடுவலைப் படுத்தார்



வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்க வில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்று மற்றற்ற  மகிழ்ச்சி யோடு இறைவனை நினைந்து அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார். அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது. இறைவன் உமையுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் 



                          போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம் 




 

புகழ்த்துணை நாயனார் புராணம்

                                  ஓம் நமசிவாய


புகழ்த்துணை நாயனார் புராணம்
 

 
 
              "புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப் 
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்"


அவதார தலம் - அரிசிற்கரைப்புத்தூர்  
முக்தி தலம்     - அரிசிற்கரைப்புத்தூர் 
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி  ஆயில்யம் 
03-09-2013 செவ்வாய்க்கிழமை


சிறப்புமிக்க அரிசில்கரைப்புத்தூர் என்னும் தலத்திலே ஆதிசைவர் குலத்திலே அவதரித்தவர் புகழ்த்துணை நாயனார்  இவர்  
இறைவனை சிவாகம விதிப்படி பூசித்து வந்தார்.


தங்கோனைத் தவத்தாலே
        தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து
        வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன்
        அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு
        குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
 



ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல்,மெய்யும் கையும் அயர்ந்த போதும் உள்ளம் அயராது எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவர் சிவலிங்கத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபடும்போது பசிப்பிணியின் காரணமாக உடல் சோர்ந்து குடத்தை இறைவர் திருமுடி மீது தவற விட இவரும் அயர்ச்சியினால் சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் மூர்ச்சித்தார் எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளி பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்ற போதும் நீ மட்டும் எம்மை அணைந்து வழிபட்டு பணியாற்றியமைக்காக உமக்கு பஞ்சம் நீங்கும் வரை பீடத்தில் நாள்தோறும் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைப்போம் என்று அருளிச் செய்தார் . துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பரமன் தந்த காசுகொண்டு பசி தீர்ந்து பனிமலர் கொண்டு அர்ச்சித்து பூசனை செய்து பூவுலகில் வாழ்ந்து இறுதியில் இறைவனின் இணையடி மலர் சார்ந்து இன்பமெய்தினார் 


அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
      அரிசிற்புனல் கொண்டுவந்தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
      முடிமேல்விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
      வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
       பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.


சுந்தரமூர்த்திசுவாமிகள் அரிசில்கரைப்புத்தூர் தல தேவாரத்தில் புகழ்த்துணையாரைப்பற்றி மேலே சொன்ன பாடலில் பாடியுள்ளார் என்றால் அவர் எத்துணை புகழுக்கு உரியவர் என்று நம்மால் அளவிட முடியுமா?.

சம்பந்தருக்கும் அப்பருக்கும் ஈன்றது போல இவருக்கும் இறைவர் படிக்காசு அருளினார் என்பதை எண்ணி வியக்கும் புகழ்  புகழ்த்துணை நாயனாருடையது   



                          போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

Thursday, August 29, 2013

செருத்துணை நாயனார் புராணம்

                                             ஓம் நமசிவாய


 செருத்துணை நாயனார் புராணம்

 
 
               
          "மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - கீழ் தஞ்சை 
முக்தி தலம் -திருஆரூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,பூசம் 
02-09-2013 திங்கள் கிழமை

 
அறம் வழுவாத பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் திருமரபில் செருத்துணை நாயனார் வந்தார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அபச்சாரம்செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார் இல்லாவிடில் தண்டிப்பார். 
ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவ அரசன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி பூமாலை தொடுக்கும் மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். 
 
அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியின் செயல் கண்டு சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்தது சிவாபராதம் என்று கருதி ஓடி வந்து அரச மாதேவியாரின் கூந்தல் பற்றி இழுத்துக் கீழே தள்ளி மூக்கைப் பிடித்து அறுத்தார் 
 
 

கடிது முட்டி மற்றவள்தன்
           கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
           பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்டபத்து  
           மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
           அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்
 
 
அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்த வற்றை உரைத்து தமது செயலை  விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலை வணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வன்மீகநாதரின் திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பலகாலம்  புரிந்து முடிவில் செருத்துணை நாயனார் 
இறைவனடி சேர்ந்து முடிவிலா இன்பமுற்றார் 


                 
                        போற்றி ஓம் நமசிவாய
 
 
 
                              திருச்சிற்றம்பலம் 

Tuesday, August 13, 2013

கலிய நாயனார் புராணம்

                                ஓம் நமசிவாய


கலிய நாயனார் புராணம்
 
 
               
                     "கலியன் .......அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - திருவொற்றியூர் 
முக்தி தலம் -திருவொற்றியூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி ,கேட்டை
16-08-2013 வெள்ளிக்கிழமை


ஓங்கிய புகழுடைய தொண்டை நன்னாட்டில், சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இத்திருத்தலத்திலே    எண்ணெய் வாணிபம் புரியும் சக்கரப்பாடித் தெருவிலே அக்குலம் செய்த புண்ணியத்தால் கலிய நாயனார் பிறந்தார். சைவ நெறியில் நின்று சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். 

இங்கு எழுந்தருளியுள்ள படம்பக்கநாதர் திருக்கோயிலில் உள்ளும் புறமும் விளக்கு ஏற்றும் பணியில் இரவும் பகலும் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் 

கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணி நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து காசு சம்பாதிக்கலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு திருக்கோயில் தீப திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். 


செக்குநிறை எள்ளாட்டி பதமறிந்து திலதயிலம் 
பக்கமெழ மிகவுழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழில் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை 
மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்
  

சில காலத்துக்குப்பின் கூலி வேலையும் கிடைக்காமல் நாயனார் தமது வீட்டையும் வீட்டிலுள்ள பண்டங்களையும் விற்று திருவிளக்கிட்டார்  இறுதியில் விற்க எதுவும் இல்லாமையால் மனைவியை விற்க முடிவு செய்தார்

தமது மனைவியாரை பெற்று பொன் தருவாரைத் தேடினார் ஒருவரும் கிடைக்க வில்லை.அன்று விளக்கிட ஒரு பொருளும்   இன்றி செய்வதறியாது திகைத்தார் சித்தம் கலங்கினார் மனம் தளர்ந்தார் .விளக்கிடும் தொண்டு இல்லையேல் அடியேனும் இல்லை என்று துணிந்தார். படம்பக்கநாதர் திருக் கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்து திரியிட்டு எண்ணெய்க்குப் பதிலாக உதிரம் கொண்டு விளக்கிட வாள் எடுத்து வந்து தமது கண்டத்தை அரிந்தார் அவ்வாறு அரிந்த அந்த திருக்கரத்தைச் சிவமூர்த்தி நேரே வந்து பிடித்தருளினார் 


எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் விடைமீது எழுந்தருளி காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறை பணிந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்க திருவருள் செய்தார்.


 மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில்

தனமளிப்பார் தமைஎங்குங் கிடையாமல் தளர்வெய்திச்

சினவிடையார் திருக்கோயில் திருவிளக்குப் பணிமுட்டக்

கனவிலுமுன் பறியாதார் கையறவால் எய்தினார் 
 
 
திருகோயிலில் திருவிளக்கிடுதல் சிறந்த ஒப்பற்ற திருதொண்டாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் என்பது  அப்பர் சுவாமிகள் திருவாக்கு தற்செயலாக அணைகின்ற திருவிளக்கைத் தூண்டிய புண்ணியத்தினால் எலியானது  மகா பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பதால் விளக்கிட்டவர் பெரும் பேறு என்ன என்பது விளங்குகின்றது 
 
நாமும் கலிய நாயனார் குருபூசை தினத்தில் திருக்கோயில் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தொடங்குவோம் 
 
 
 
                         போற்றி ஓம் நமசிவாய     

                            திருச்சிற்றம்பலம்  

கோட்புலி நாயனார் புராணம்

                                 ஓம் நமசிவாய


கோட்புலி நாயனார் புராணம் 

           
  "அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்"


அவதார தலம் - திருநாட்டியத்தான்குடி  
முக்தி தலம் -  திருநாட்டியத்தான்குடி
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி, கேட்டை
16-08-2013 வெள்ளிக்கிழமை
  
 

சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே வந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணமிக்கவராதலால்,இவருக்கு கோட்புலியார் என்று பெயர் ஏற்பட்டது.  எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர் களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.  


வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவிய லைக் கோயில் திருப்பணிக்குப் பயன் படுத்தினார். ஒருமுறை அரச கட்டளையை ஏற்றுப் போருக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன் தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் சொந்த உபயோகத்திற்கு  எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத் துரோகமாகும். கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று தனித்தனியாக  ஒவ்வொருவரிடமும் திட்டவட்டமாகக் கூறி விட்டு புறப்பட்டார். 

கோட்புலியார் சென்ற சில நாட்களில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றியுடன் நாடு திரும்பினார். சுற்றத்தாரும் உறவினர்களும் நெற்குவி யலை எடுத்து உண்டதை அறிந்து கோபம் கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி தன் பெயர் கொண்ட கோட்புலி என்னும் வேலைக்காரனைக் காவல்புரியச் செய்து தம் தந்தை, தாய் , உடன்பிறந்தார் மனைவி, சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்.




தந்தையார் தாயார் மற் றுடன் பிறந்தார் தாரங்கள்

பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும்

எந்தையார் திருப்படிமற் றுண்ணஇசைந் தார்களையும்

சிந்தவாள் கொடுதுணித்தார் தீயவினைப் பவந்துணிப்பார்


 
அங்கே அவர் வாளுக்குத் தப்பிப் பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இப்பாலகன் இவ்வன்னத்தை உண்டதில்லை.எனவே  இக்குழந்தையைக் கொல்லாதருள் புரியும் என்று வேண்டினான். அவன் சொன்னதைக் கேட்ட நாயனார், இப்பாலகன் அன்னத்தை தான் உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட தாயின் முலைப்பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இருதுண்டாக்கினார்.அக்கணம் சடைமுடிப்    பெருமானார் விடையின் மீது எழுந்தருளி அன்பனே! உன் கைவாளால் உயிர் மாண்ட  அனைவரும் பாவத்தை விட்டு நீங்கினர்  அவர்கள் பொன்னுலகம் புகுந்து இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையுடன் நமது சிவபதம் அணைவாய் என்று அருள் புரிந்தார். 

சிவபெருமான் மீது கோட்புலியார் காட்டிய பக்திஅனைவருக்கும் பிறவாப்பெருவாழ்வை பெற்றுக் கொடுத்தது.

இவ்வரலாறு படிக்கும் நாம் நினைக்கலாம் இது சிறிய தவறு என்று ஆனால் சிவனுக்கு என்று உரிய பொருளை எடுத்துக்கொள்வது மன்னிக்கமுடியாத சிவாபராதம் ஆகும் . பாவங்களில் மிக கொடிய பாவம் என்பது சிவத்துரோகமாகும்.

இன்று பல சிவன் கோயில்களில் கோயில் சொத்தை அபகரித்தவர்களும் குத்தகை செலுத்தாதவர்களும் உள்ளனர் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது நினைக்கவே முடியாத அளவு இருக்கும் என்பது திண்ணம் .கோட்புலியார் அவதரித்து இந்த கோயில் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தால் அனைத்து ஆலயங்களிலும் ஆறு கால பூசை நடத்தலாம் திருப்பணி செய்யலாம் .ஈசன் அருள்புரிவாராக 



                       போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம் 

Monday, August 12, 2013

சைவ காலண்டர் -ஆவணி

                               ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் -ஆவணி

17-08-2013 TO 16-09-2013


ஆவணி மாதம்


02ஆம் நாள் 18-08-13-ஞாயிறு -பிரதோஷம் 

03ஆம் நாள் 19-08-13-திங்கள்  -தில்லை நடராசர் அபிஷேகம் 

04ஆம் நாள் 20-08-13-செவ்வாய் -பௌர்ணமி , ஆவணி அவிட்டம்

08ஆம் நாள் 24-08-13-சனி-சங்கடஹர சதுர்த்தி 

10ஆம் நாள் 26-08-13-திங்கள் -சஷ்டி 

11ஆம் நாள் 27-08-13-செவ்வாய்-கிருத்திகை 

12ஆம் நாள் 28-08-13-புதன் -தேய்பிறை அஷ்டமி 

17ஆம் நாள் 02-09-13-திங்கள் -பிரதோஷம் ,செருத்துணை நாயனார் குருபூசை 

18ஆம் நாள் 03-09-13-செவ்வாய் -புகழ் துணை நாயனார் ,அதிபத்தர் நாயனார் குருபூசை ,சிவராத்திரி 

19ஆம் நாள் 04-09-13-புதன் -இளையான்குடிமாற நாயனார் குருபூசை 

20ஆம் நாள் 05-09-13-வியாழன் -அமாவாசை 

21ஆம் நாள் 06-09-13-வெள்ளி-மறைஞான சம்பந்தர் குருபூசை 

24ஆம் நாள் 09-09-13-திங்கள் -விநாயகர் சதுர்த்தி 

26ஆம் நாள் 11-09-13-புதன் -சஷ்டி,குலச்சிறை நாயனார் குருபூசை 

28ஆம் நாள் 13-09-13-வெள்ளி-குங்குலியகலய நாயனார் குருபூசை , ஆவணி மூலம் பிட்டுத் திருவிழா




                                           போற்றி ஓம் நமசிவாய 



                                                      
                              திருச்சிற்றம்பலம்


Saturday, August 10, 2013

உயிர்ப்பயணம்

                                 ஓம் நமசிவாய 



உயிர்ப்பயணம் 


உயிர் எனும் ஆன்மா இந்த உடம்பை விட்டு நீங்கும் வாயில்கள் பதினொன்று எனவும் அது நீங்கும் வழியை வைத்து அந்த உயிரின் பிறப்பு அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்றும் நம் பெரியவர்கள் அருளியுள்ளார்கள் 

1.மிகுந்த பாவம் செய்தவனுக்கு மலத்துடன் மலவாயில் உயிர் பிரியும், பிரிந்த அந்த உயிர் நரகங்களில் சென்று கீழ்ப்பட்ட பிறவிகளில் பிறந்து உழலும்

2.பாவம் செய்தவனுக்கு நீர்வாயில் (சிறுநீர் பாதையில் )உயிர் பிரியும் அவ்வாறு  பிரிந்த உயிர் மறுபிறப்பில் காமியாய் திரியும் .

3.பாவம் பெரிதும் புண்ணியம் சிறிதும் செய்த உயிர் நாபி வழியே பிரியும் அந்த உயிர் வறுமையிலும் நோயாளியாகவும் அங்க ஊனத்துடனும் பிறக்கும் 

4.பாவமும் புண்ணியமும் செய்த உயிர் வாய் வழியே பிரியும் அவ்வாறு பிரிந்த உயிர் மறு பிறப்பில் மிகுந்த உணவு உண்ணுவதாயும் உணவு மேல் பெருவிருப்பு கொண்டதாயும் பிறக்கும் 

5,6.இரண்டு நாசிகளின் வழியே உயிர் பிரிந்தால் அது அதிக பாவம் செய்யாதது ஆகும் அது அடுத்த பிறவியில் நறுமணம் விரும்பும்.

7,8.இரண்டு செவிகளின் வழியே பிரிந்த உயிர் புண்ணியம் செய்த உயிர் .அந்த உயிரானது மறுபிறவியில் கேள்விச் செல்வம் மிகவும் உடையதாக வாழும் இயல் இசை கேட்பதில் காலம் கழிக்கும் 

9,10.மிகுந்த புண்ணியம் செய்த உயிர் இடக்கண் ,வலக்கண் வழியே பிரியும் மறு பிறப்பில் அந்த உயிர் கல்வி செல்வம் என சகலபாக்கியங்களும் பெற்று உயர்வுடன் வாழும் 

11.சிவயோக நெறியில் நின்ற ஆன்மாவானது  உடம்புக்கு எடுத்து வந்த பிராரப்தங்களை கழித்து பின் பலகாலம் செய்த சாதகத்தால் சுழுமுனை நாடி வழியே பிராணனை செலுத்தி பிரமரந்திர வழியைத் திறந்து மேலைப்பெருவெளியில் நிறுத்தி கபால வெளியே திறந்து கொண்டு ஒளிமயமாகச் செல்லும் .அந்த உயிருக்கு பிறவி கிடையாது முக்தி பேறு எனும் பெருவாழ்வு பெறும்.

யோகம் என்பது பிராண வாயுவைப் பிடித்து வெளியே விடாமல் அடக்கிச் செய்யும் முறை ஹடயோகம் எனப்படும் .அது ஞான நெறி முறை அல்ல 

சிவயோகம் என்பது பிராணவாயுவை தொடர்ந்து சஞ்சரிக்க செய்து இடைபிங்கலை நாடிகளில் செல்லாமல் தடுத்து சுழுமுனை நாடியில் செலுத்தி உடல் வேறு தான் வேறாக உயிர் பிரிந்து நிற்கும் வகையாகும்.இந்த வகை யோகமே சிவஞானம் பெற்று முக்தி நிலையை அடையச்செய்யும்

இதற்கு உதாரணமாக பெருமிழலைக்குறும்ப நாயனாரை கூறலாம்


                         போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்   

Friday, August 9, 2013

சேரமான் பெருமான் நாயனார் புராணம்

                             ஓம் நமசிவாய 


சேரமான் பெருமான் நாயனார்

    "கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்"

அவதார தலம்  - கொடுங்கோளூர்
முக்தி தலம்      - திருஅஞ்சைக்களம் 
குருபூசை திருநட்சத்திரம்- ஆடி-  சுவாதி
13-08-2013 ,செவ்வாய்கிழமை 


மகோதை என்னும் கொடுங்கோளூர்  சேர நாட்டின் தலைநகரம்.அங்கு சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலம் செய்த சிவபுண்ணியங்களின் பயனாய் தோன்றியவர். பெற்றோர் பெருமாக்கோதையார் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இளமை முதல்  திருஅஞ்சைக் களத்து இறைவர் பால் பேரன்புடையவராய் விளங்கினார் . பரிதி புலரும் முன் எழுந்து ஆலயத்தைத் திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார். அந்நாட்டு அரசன் தன் அரசவாழ்வை துறந்து தவம் மேற்கொண்டு சென்றதால் அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதை யாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர்.

பெருமாக்கோதையார்  அஞ்சைக்களத்து இறைவரை வழிபட்டு அவர் திருவுளம் அறியும் குறிப்புடன் நின்றார். சேரநாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்குமாறு திருவருள் உணர்த்திற்று. இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலை பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்  
இறைவன் திருவுள்ளம் உணர்ந்தகோதையார் சேரமன்னராய் மணிமுடி சூடி திருவஞ்சை களத்து  இறைவனை வழிபட்டு யானை மீது  அரசமாளிகைக்கு சென்றார் அப்போது ஏதிரே ஒரு வண்ணான் உவர்மண் பொதி சுமந்து வந்தான். அப்போது மழைபெய்தது. மழை நீரில் நனைந்ததால் உவர் மண் கரைந்து உடல் முழுதும் வழிந்தும் வெயிலில் அம்மண்  காய்ந்ததால் வெண்ணிறமாகியும் அவன் முழுநீறு பூசிய அடியவர் போலக் காட்சி அளித்தான். அவனைக் கண்ட சேரர் கோன்  சிவனடியார் ஒருவர் எதிரே வருகிறார் எனக் கருதி யானையினின்றும் கீழே இறங்கி அவனை வணங்கினார். அவன் அச்சம் கொண்டு  அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான் என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.
கழறிற்றறிவார் தமிழகத்தின் ஏனைய மன்னர்களோடும் நட்புக் கொண்டு  நல்லாட்சி புரிந்தார். நாள்தோறும் தில்லை நடராசப் பெருமானை நினைந்து சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது  வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அருளுவார்
ஒருநாள் ஆலவாய் இறைவர் பாணபத்திரர் எனும் புலவர்க்கு மாண் பொருள் கொடுத்து உதவுமாறு எழுதிய திருமுகப்பாசுரம் கண்டு பாணபத்திரர்க்கு அளவற்ற நிதிக் குவைகளை அளித்து மகிழ்ந்தார்.



சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பால் நாள் தோறும் பூசை முடிவில் கேட்பிக்கும் சிலம்பொலியைக் காலந் தாழ்த்திக் கேட்பித் தருளினார். கழறிற்றறிவார் இவ்வாறு நிகழ தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற அப்போது தில்லையில்  சுந்தரன் நம்மைப் பாடிக் கொண்டிருக்க அப்பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்க சிறிது காலம் தாழ்க்க நேர்ந்தது என இறைவன் திருக்குறிப்பு கேட்டு அந்த சுந்தரர் பெருமானைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாக அங்கு திருச்சிலம்பொலி காட்டியருளினார். பின்னர் சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக் கிணங்கி  அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார்.
 
சுந்தரர் சேரமான் பெருமான்  இருவரும் பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி யாத்திரை மேற்கொண்டனர். சேரமான் தனக்குத் திருமுகம் அனுப்பி அருளிய பெருமானைக் காணும் பெருவேட்கையோடு சுந்தரருடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். மூவேந்தர் சூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத்தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டு மெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ் வித்தார்.


சிலநாட்கள் சென்றன. சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடை பெற்றார். சேரமான் தம் மாளிகையிலுள்ள பெரும் பொருளைப் பொதி செய்துசுந்தரரை வழியனுப்பினார் 


திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்க ளுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றார். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

 
ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம்  இறைவரை வணங்கி, தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.

அந்நிலையில் அவரது பாசத்தளையை நீக்கி அருள் புரிய விரும்பிய பெருமான் இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி ஆரூரரைத் திருக் கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார்  தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி `தானெனை முன் படைத்தான்` என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.
 
சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவ கணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரை மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

சுந்தரர் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றினார். சேரமான் வருகையைச் சிவபிரானிடம் விண்ணப்பிக்க பெருமான் சேரர்கோனை உள்ளே அழைத்து `இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?` எனக் கேட்க சேரமான் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் என்னையும் ஈர்த்துக் கொணர்ந்து இங்கே நிறுத்தியது அடியேன் தேவரீரைப் பாட்டு டைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளேன் அதனை திருச்செவி சார்த்தி அருள வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞானஉலாவைத் திருக் கயிலையில் பெருமான் முன்னர் அரங்கேற்றி னார். பெருமான் சுந்தரரோடு சேரமானையும் சிவகணத்தலைவராய் நம்பால் நிலை பெற்றிருப்பீராக எனப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து பெருவாழ்வு 
அடைந்தார் 
                         போற்றி ஓம் நமசிவாய 
                             திருச்சிற்றம்பலம் 

Thursday, August 8, 2013

ஒன்று இரண்டு மூன்று ..... விடம் தீர்த்த பதிகம்

                                 ஓம் நமசிவாய 


ஒன்று இரண்டு மூன்று .....
  
விடம் தீர்த்த பதிகம்
  

விடம் தீர்த்த பதிகம் அப்பர் சுவாமிகளின் தேவாரப்பதிகம் இது .இறைவனை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி பாடி அருளியுள்ளார். பதிகப்பலன் விடம் நீங்குதல் குழந்தைகளுக்கு ஏற்படும் விஷகடி மற்றும் தீங்குகள் நீங்கும்

                              திருச்சிற்றம்பலம்

ஒன்றுகொ லாம் அவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாம் உ ய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாம் இடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாம் அவர் ஊர்வது தானே.  




இரண்டுகொ லாம் இமை யோர்தொழு பாதம்
இரண்டுகொலாம் இலங்கும் குழைபெண்ணாண்
இரண்டுகொ லாம் உரு வம் சிறு மான்மழு
இரண்டுகொ லாம் அவர் எய்தின தாமே.




  
மூன்றுகொ லாம்அவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாம்அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாம்கணை கையது வில் நாண்
மூன்றுகொ லாம்புரம்  எய்தன தாமே.




நாலுகொ லாம்அவர் தம்முகம்  ஆவன
நாலுகொ லாம்சன னம்முதல்  தோற்றமும்
நாலுகொ லாம்அவர்  ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாம்மறை பாடின தாமே.




அஞ்சுகொ லாம்அவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாம்அவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாம்அவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாம்அவர் ஆடின தாமே.





ஆறுகொ லாம்அவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாம்அவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாம்அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாம் சுவை யாக்கின தாமே.





ஏழுகொ லாம்அவர்  ஊழி படைத்தன
ஏழுகொ லாம்அவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாம்அவர்  ஆளும் உலகங்கள்
ஏழுகொ லாம் இசை யாக்கின தாமே.





எட்டுக்கொ லாம்அவர்  ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாம்அவர் சூடும்  இனமலர்
எட்டுக்கொ லாம்அவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாம் திசை யாக்கின தாமே.





ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில்  நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம்  தானே.





பத்துக்கொ லாம் அவர்பாம்பின் கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்துக்கொ லாம் அவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாம் அடி யார்செய்கை தானே.




                         திருச்சிற்றம்பலம் 


                 போற்றி ஓம் நமசிவாய



திருவாதிரை திருப்பதிகம்

                                                                 ஓம் நமசிவாய


திருவாதிரை திருப்பதிகம்


பெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம். 

திருவாரூரில் உள்ள கமலாம்பிகை உடனமர் புற்றிடங்கொண்ட பெருமானின் மார்கழித் திருவாதிரைத்  திருவிழாவின் சிறப்பினை  அப்பர் சுவாமிகள் அருளிச்செய்தது 
இத்திருப்பதிகம் 


                               திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1


முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 2



நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு 

அணியான்  ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

  

பாடல் எண் : 3



வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள்  ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் 
ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 4



குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன்
ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 5



நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து  

அலமர்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 6



விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால்  முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென்  அப்பன்  என்பார்கட்கு 

அம்மான்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 7





செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

 

 

பாடல் எண் : 8



முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள்
ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 9



துன்பநும்மைத் தொழாதநாள்கள்  என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள்  என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன்
ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 10



பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல்  ஆடல் அறாத செம்மாப்பார்ந்து 

ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன் 
ஆதிரை நாளால்  அது வண்ணம்.
                              

                              திருச்சிற்றம்பலம்
                        போற்றி ஓம் நமசிவாய