rudrateswarar

rudrateswarar

Tuesday, August 13, 2013

கோட்புலி நாயனார் புராணம்

                                 ஓம் நமசிவாய


கோட்புலி நாயனார் புராணம் 

           
  "அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்"


அவதார தலம் - திருநாட்டியத்தான்குடி  
முக்தி தலம் -  திருநாட்டியத்தான்குடி
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி, கேட்டை
16-08-2013 வெள்ளிக்கிழமை
  
 

சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே வந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணமிக்கவராதலால்,இவருக்கு கோட்புலியார் என்று பெயர் ஏற்பட்டது.  எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர் களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.  


வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவிய லைக் கோயில் திருப்பணிக்குப் பயன் படுத்தினார். ஒருமுறை அரச கட்டளையை ஏற்றுப் போருக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன் தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் சொந்த உபயோகத்திற்கு  எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத் துரோகமாகும். கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று தனித்தனியாக  ஒவ்வொருவரிடமும் திட்டவட்டமாகக் கூறி விட்டு புறப்பட்டார். 

கோட்புலியார் சென்ற சில நாட்களில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றியுடன் நாடு திரும்பினார். சுற்றத்தாரும் உறவினர்களும் நெற்குவி யலை எடுத்து உண்டதை அறிந்து கோபம் கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி தன் பெயர் கொண்ட கோட்புலி என்னும் வேலைக்காரனைக் காவல்புரியச் செய்து தம் தந்தை, தாய் , உடன்பிறந்தார் மனைவி, சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்.




தந்தையார் தாயார் மற் றுடன் பிறந்தார் தாரங்கள்

பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும்

எந்தையார் திருப்படிமற் றுண்ணஇசைந் தார்களையும்

சிந்தவாள் கொடுதுணித்தார் தீயவினைப் பவந்துணிப்பார்


 
அங்கே அவர் வாளுக்குத் தப்பிப் பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இப்பாலகன் இவ்வன்னத்தை உண்டதில்லை.எனவே  இக்குழந்தையைக் கொல்லாதருள் புரியும் என்று வேண்டினான். அவன் சொன்னதைக் கேட்ட நாயனார், இப்பாலகன் அன்னத்தை தான் உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட தாயின் முலைப்பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இருதுண்டாக்கினார்.அக்கணம் சடைமுடிப்    பெருமானார் விடையின் மீது எழுந்தருளி அன்பனே! உன் கைவாளால் உயிர் மாண்ட  அனைவரும் பாவத்தை விட்டு நீங்கினர்  அவர்கள் பொன்னுலகம் புகுந்து இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையுடன் நமது சிவபதம் அணைவாய் என்று அருள் புரிந்தார். 

சிவபெருமான் மீது கோட்புலியார் காட்டிய பக்திஅனைவருக்கும் பிறவாப்பெருவாழ்வை பெற்றுக் கொடுத்தது.

இவ்வரலாறு படிக்கும் நாம் நினைக்கலாம் இது சிறிய தவறு என்று ஆனால் சிவனுக்கு என்று உரிய பொருளை எடுத்துக்கொள்வது மன்னிக்கமுடியாத சிவாபராதம் ஆகும் . பாவங்களில் மிக கொடிய பாவம் என்பது சிவத்துரோகமாகும்.

இன்று பல சிவன் கோயில்களில் கோயில் சொத்தை அபகரித்தவர்களும் குத்தகை செலுத்தாதவர்களும் உள்ளனர் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது நினைக்கவே முடியாத அளவு இருக்கும் என்பது திண்ணம் .கோட்புலியார் அவதரித்து இந்த கோயில் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தால் அனைத்து ஆலயங்களிலும் ஆறு கால பூசை நடத்தலாம் திருப்பணி செய்யலாம் .ஈசன் அருள்புரிவாராக 



                       போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment