rudrateswarar

rudrateswarar

Friday, August 9, 2013

சேரமான் பெருமான் நாயனார் புராணம்

                             ஓம் நமசிவாய 


சேரமான் பெருமான் நாயனார்

    "கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்"

அவதார தலம்  - கொடுங்கோளூர்
முக்தி தலம்      - திருஅஞ்சைக்களம் 
குருபூசை திருநட்சத்திரம்- ஆடி-  சுவாதி
13-08-2013 ,செவ்வாய்கிழமை 


மகோதை என்னும் கொடுங்கோளூர்  சேர நாட்டின் தலைநகரம்.அங்கு சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலம் செய்த சிவபுண்ணியங்களின் பயனாய் தோன்றியவர். பெற்றோர் பெருமாக்கோதையார் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இளமை முதல்  திருஅஞ்சைக் களத்து இறைவர் பால் பேரன்புடையவராய் விளங்கினார் . பரிதி புலரும் முன் எழுந்து ஆலயத்தைத் திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார். அந்நாட்டு அரசன் தன் அரசவாழ்வை துறந்து தவம் மேற்கொண்டு சென்றதால் அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதை யாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர்.

பெருமாக்கோதையார்  அஞ்சைக்களத்து இறைவரை வழிபட்டு அவர் திருவுளம் அறியும் குறிப்புடன் நின்றார். சேரநாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்குமாறு திருவருள் உணர்த்திற்று. இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலை பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்  
இறைவன் திருவுள்ளம் உணர்ந்தகோதையார் சேரமன்னராய் மணிமுடி சூடி திருவஞ்சை களத்து  இறைவனை வழிபட்டு யானை மீது  அரசமாளிகைக்கு சென்றார் அப்போது ஏதிரே ஒரு வண்ணான் உவர்மண் பொதி சுமந்து வந்தான். அப்போது மழைபெய்தது. மழை நீரில் நனைந்ததால் உவர் மண் கரைந்து உடல் முழுதும் வழிந்தும் வெயிலில் அம்மண்  காய்ந்ததால் வெண்ணிறமாகியும் அவன் முழுநீறு பூசிய அடியவர் போலக் காட்சி அளித்தான். அவனைக் கண்ட சேரர் கோன்  சிவனடியார் ஒருவர் எதிரே வருகிறார் எனக் கருதி யானையினின்றும் கீழே இறங்கி அவனை வணங்கினார். அவன் அச்சம் கொண்டு  அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான் என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.
கழறிற்றறிவார் தமிழகத்தின் ஏனைய மன்னர்களோடும் நட்புக் கொண்டு  நல்லாட்சி புரிந்தார். நாள்தோறும் தில்லை நடராசப் பெருமானை நினைந்து சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது  வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அருளுவார்
ஒருநாள் ஆலவாய் இறைவர் பாணபத்திரர் எனும் புலவர்க்கு மாண் பொருள் கொடுத்து உதவுமாறு எழுதிய திருமுகப்பாசுரம் கண்டு பாணபத்திரர்க்கு அளவற்ற நிதிக் குவைகளை அளித்து மகிழ்ந்தார்.



சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பால் நாள் தோறும் பூசை முடிவில் கேட்பிக்கும் சிலம்பொலியைக் காலந் தாழ்த்திக் கேட்பித் தருளினார். கழறிற்றறிவார் இவ்வாறு நிகழ தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற அப்போது தில்லையில்  சுந்தரன் நம்மைப் பாடிக் கொண்டிருக்க அப்பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்க சிறிது காலம் தாழ்க்க நேர்ந்தது என இறைவன் திருக்குறிப்பு கேட்டு அந்த சுந்தரர் பெருமானைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாக அங்கு திருச்சிலம்பொலி காட்டியருளினார். பின்னர் சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக் கிணங்கி  அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார்.
 
சுந்தரர் சேரமான் பெருமான்  இருவரும் பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி யாத்திரை மேற்கொண்டனர். சேரமான் தனக்குத் திருமுகம் அனுப்பி அருளிய பெருமானைக் காணும் பெருவேட்கையோடு சுந்தரருடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். மூவேந்தர் சூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத்தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டு மெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ் வித்தார்.


சிலநாட்கள் சென்றன. சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடை பெற்றார். சேரமான் தம் மாளிகையிலுள்ள பெரும் பொருளைப் பொதி செய்துசுந்தரரை வழியனுப்பினார் 


திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்க ளுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றார். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

 
ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம்  இறைவரை வணங்கி, தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.

அந்நிலையில் அவரது பாசத்தளையை நீக்கி அருள் புரிய விரும்பிய பெருமான் இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி ஆரூரரைத் திருக் கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார்  தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி `தானெனை முன் படைத்தான்` என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.
 
சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவ கணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரை மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

சுந்தரர் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றினார். சேரமான் வருகையைச் சிவபிரானிடம் விண்ணப்பிக்க பெருமான் சேரர்கோனை உள்ளே அழைத்து `இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?` எனக் கேட்க சேரமான் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் என்னையும் ஈர்த்துக் கொணர்ந்து இங்கே நிறுத்தியது அடியேன் தேவரீரைப் பாட்டு டைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளேன் அதனை திருச்செவி சார்த்தி அருள வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞானஉலாவைத் திருக் கயிலையில் பெருமான் முன்னர் அரங்கேற்றி னார். பெருமான் சுந்தரரோடு சேரமானையும் சிவகணத்தலைவராய் நம்பால் நிலை பெற்றிருப்பீராக எனப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து பெருவாழ்வு 
அடைந்தார் 
                         போற்றி ஓம் நமசிவாய 
                             திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment