rudrateswarar

rudrateswarar

Tuesday, August 13, 2013

கலிய நாயனார் புராணம்

                                ஓம் நமசிவாய


கலிய நாயனார் புராணம்
 
 
               
                     "கலியன் .......அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - திருவொற்றியூர் 
முக்தி தலம் -திருவொற்றியூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆடி ,கேட்டை
16-08-2013 வெள்ளிக்கிழமை


ஓங்கிய புகழுடைய தொண்டை நன்னாட்டில், சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இத்திருத்தலத்திலே    எண்ணெய் வாணிபம் புரியும் சக்கரப்பாடித் தெருவிலே அக்குலம் செய்த புண்ணியத்தால் கலிய நாயனார் பிறந்தார். சைவ நெறியில் நின்று சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். 

இங்கு எழுந்தருளியுள்ள படம்பக்கநாதர் திருக்கோயிலில் உள்ளும் புறமும் விளக்கு ஏற்றும் பணியில் இரவும் பகலும் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் 

கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணி நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து காசு சம்பாதிக்கலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு திருக்கோயில் தீப திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். 


செக்குநிறை எள்ளாட்டி பதமறிந்து திலதயிலம் 
பக்கமெழ மிகவுழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழில் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை 
மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்
  

சில காலத்துக்குப்பின் கூலி வேலையும் கிடைக்காமல் நாயனார் தமது வீட்டையும் வீட்டிலுள்ள பண்டங்களையும் விற்று திருவிளக்கிட்டார்  இறுதியில் விற்க எதுவும் இல்லாமையால் மனைவியை விற்க முடிவு செய்தார்

தமது மனைவியாரை பெற்று பொன் தருவாரைத் தேடினார் ஒருவரும் கிடைக்க வில்லை.அன்று விளக்கிட ஒரு பொருளும்   இன்றி செய்வதறியாது திகைத்தார் சித்தம் கலங்கினார் மனம் தளர்ந்தார் .விளக்கிடும் தொண்டு இல்லையேல் அடியேனும் இல்லை என்று துணிந்தார். படம்பக்கநாதர் திருக் கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்து திரியிட்டு எண்ணெய்க்குப் பதிலாக உதிரம் கொண்டு விளக்கிட வாள் எடுத்து வந்து தமது கண்டத்தை அரிந்தார் அவ்வாறு அரிந்த அந்த திருக்கரத்தைச் சிவமூர்த்தி நேரே வந்து பிடித்தருளினார் 


எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் விடைமீது எழுந்தருளி காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறை பணிந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்க திருவருள் செய்தார்.


 மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில்

தனமளிப்பார் தமைஎங்குங் கிடையாமல் தளர்வெய்திச்

சினவிடையார் திருக்கோயில் திருவிளக்குப் பணிமுட்டக்

கனவிலுமுன் பறியாதார் கையறவால் எய்தினார் 
 
 
திருகோயிலில் திருவிளக்கிடுதல் சிறந்த ஒப்பற்ற திருதொண்டாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் என்பது  அப்பர் சுவாமிகள் திருவாக்கு தற்செயலாக அணைகின்ற திருவிளக்கைத் தூண்டிய புண்ணியத்தினால் எலியானது  மகா பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பதால் விளக்கிட்டவர் பெரும் பேறு என்ன என்பது விளங்குகின்றது 
 
நாமும் கலிய நாயனார் குருபூசை தினத்தில் திருக்கோயில் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தொடங்குவோம் 
 
 
 
                         போற்றி ஓம் நமசிவாய     

                            திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment