rudrateswarar

rudrateswarar

Friday, August 30, 2013

புகழ்த்துணை நாயனார் புராணம்

                                  ஓம் நமசிவாய


புகழ்த்துணை நாயனார் புராணம்
 

 
 
              "புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப் 
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்"


அவதார தலம் - அரிசிற்கரைப்புத்தூர்  
முக்தி தலம்     - அரிசிற்கரைப்புத்தூர் 
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி  ஆயில்யம் 
03-09-2013 செவ்வாய்க்கிழமை


சிறப்புமிக்க அரிசில்கரைப்புத்தூர் என்னும் தலத்திலே ஆதிசைவர் குலத்திலே அவதரித்தவர் புகழ்த்துணை நாயனார்  இவர்  
இறைவனை சிவாகம விதிப்படி பூசித்து வந்தார்.


தங்கோனைத் தவத்தாலே
        தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து
        வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன்
        அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு
        குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
 



ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல்,மெய்யும் கையும் அயர்ந்த போதும் உள்ளம் அயராது எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவர் சிவலிங்கத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபடும்போது பசிப்பிணியின் காரணமாக உடல் சோர்ந்து குடத்தை இறைவர் திருமுடி மீது தவற விட இவரும் அயர்ச்சியினால் சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் மூர்ச்சித்தார் எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளி பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்ற போதும் நீ மட்டும் எம்மை அணைந்து வழிபட்டு பணியாற்றியமைக்காக உமக்கு பஞ்சம் நீங்கும் வரை பீடத்தில் நாள்தோறும் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைப்போம் என்று அருளிச் செய்தார் . துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பரமன் தந்த காசுகொண்டு பசி தீர்ந்து பனிமலர் கொண்டு அர்ச்சித்து பூசனை செய்து பூவுலகில் வாழ்ந்து இறுதியில் இறைவனின் இணையடி மலர் சார்ந்து இன்பமெய்தினார் 


அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
      அரிசிற்புனல் கொண்டுவந்தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
      முடிமேல்விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
      வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
       பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.


சுந்தரமூர்த்திசுவாமிகள் அரிசில்கரைப்புத்தூர் தல தேவாரத்தில் புகழ்த்துணையாரைப்பற்றி மேலே சொன்ன பாடலில் பாடியுள்ளார் என்றால் அவர் எத்துணை புகழுக்கு உரியவர் என்று நம்மால் அளவிட முடியுமா?.

சம்பந்தருக்கும் அப்பருக்கும் ஈன்றது போல இவருக்கும் இறைவர் படிக்காசு அருளினார் என்பதை எண்ணி வியக்கும் புகழ்  புகழ்த்துணை நாயனாருடையது   



                          போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment