rudrateswarar

rudrateswarar

Sunday, October 20, 2013

இடங்கழி நாயனார் புராணம்


                                                           ஓம் நமசிவாய

இடங்கழி நாயனார் புராணம் 


               "மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன் " 

அவதார தலம் - கொடும்பாளூர்

முக்தி தலம்     - கொடும்பாளூர்

குருபூசை திருநட்சத்திரம்- ஐப்பசி,கார்த்திகை 
21-10-2013 ,திங்கள்கிழமை



இயற்கை வளமும்,  தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர்.  கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் குடியிலே அவதரித்தவர் இடங்கழி நாயனார். இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவ வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. 


இடங்கழியார் எனவுலகில்
            ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார்
           அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும்
           உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால்
           தொண்டர்வேண் டியசெய்வார்



சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக் குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வந்தனர். சைவம் வளர்த்த அடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி இருந்த ஒரு சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அடியார்களுக்கு அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப் பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார். திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே  சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று கேட்டார் வேந்தர் . சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த சிவப்பணிக்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார்.  அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன் , பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு  எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.


எண்ணில்பெரும் பண்டாரம்
            ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
            உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
            திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
            மலரடியின் நிழல்சேர்ந்தார்




                       போற்றி ஓம் நமசிவாய



                          திருச்சிற்றம்பலம்  

சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?

                                                       ஓம் நமசிவாய


சிவலோக பதவி வருந்தத்தக்கதா ?



நாளிதழ்களில்  இறந்தவர்களுக்கு துக்க மரண அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள் அது போல சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன அதில்  இன்னார் இறந்து விட்டார்கள் என அறிவிப்பது வருந்தத்தக்க விசயந்தான் ஆனால் அதில் அவர்கள் வெளியிடும் செய்தி நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனை யானதும் கூட .  

ஏனெனில் இன்னார் சிவலோக பதவி அடைந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம் என்று வெளியிடு கிறார்கள் . சிவலோக பதவி என்பது எளிதில் கிடைக்குமா ? அப்படி கிடைத்தாலும் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா ? அது கிடைக்காமல் ஏங்குவோர் எவ்வளவு பேர் ? சிவலோக பதவி என்பது இனி பிறவி இல்லை என்னும் முக்தி வீடுபேறல்லவா ? அது மனித பிறப்பில் நாம் அடையும் கண நேரம் தோன்றி மறையும் அற்ப இன்பமா ?  எல்லையில்லா பேரின்பமல்லவா ? .

ஒருவேளை இறந்தவருக்கு சிவலோக பதவி கிடைத்துவிட்டதே என்று பொறாமையினால் அப்படி போஸ்டர் ஓட்டுகிறார்களோ என்னவோ ? 

சிவலோக பதவி எப்படி வருந்தத்தக்க விசயமாகும் என்பதை இனியாவது சிந்தித்து உணர்வார்களா ? மரண அறிவிப்புகள் இது போல நகைப்புக்குரிய விசயமாக இல்லாமல் இருந்தாலே அது துக்கம் அனுஷ்டித்ததாக இருக்கும் .



                    போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்  

தீக்ஷை முறைகள்

                                                      ஓம் நமசிவாய


தீக்ஷை முறைகள் 

தீக்ஷை எனப்படுவது உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் மலங்களை நீக்கி ஞானத்தை உண்டாக்குவது .தீ என்றால் கெடுத்தல் எதை ? மலத்தை க்ஷை என்றால் கொடுத்தல் எதை ? ஞானத்தை 

இந்த தீக்ஷை தக்க உபதேச பாரம்பரியம் உள்ள குரு மூலம் மட்டுமே நாம் பெற முடியும் . எந்த உயிருக்கு இந்த ஞானத்தை பெற பக்குவம் உள்ளதோ அந்த உயிருக்கு தீக்ஷை வழங்க சிவபெருமானே குரு உருவில் வருவார் . முற்பிறவிகளில் உயிர்கள் தாம் செய்த தவத்தால் மட்டுமே இந்த வாய்ப்பு அருளப்படும் . அதாவது சரியை கிரியை யோக மார்க்கத்தில் செய்த தவத்தின் பலன் ஞான வழியை காட்டுமே தவிர முக்தி எனும் வீடுபேற்றை வழங்காது . ஞானம் பெரும் வழியை உணர்த்தும். அந்த ஞானம் குரு மூலம் தீக்ஷையால் வழங்கப்படும் . அவர் உயிர்களின் மலங்களை நீக்கி ஞானத்தை வழங்குவார் 

இதன் மூலம் உயிர்களின் சஞ்சிதம் அழியும் . குரு உபதேசித்த ஞானநெறி மூலம் இப்பிறவியில் ஆகாமியம் என்னும் வினைகள் ஏறாது .அந்த ஞான நெறி நன்கு கைகூடும் போது முக்தி வாய்க்கும் .

தீக்ஷை என்பது வெறும் மந்திர உபதேசம் மட்டுமல்ல . குரு உயிரின் மாசுக்களை அதாவது சஞ்சித வினைகளை நீக்கி புனிதமாக்குவார் .சிவஞானத்தை வழங்குவார் . தீக்ஷை வழங்கும் முறைகள் ஆறு வகைப்படும் 

1.நயனதீக்ஷை  

நயனம் என்பது கண் பார்வையால் வழங்குவது , மீன் தனது முட்டையை தன் கண்பார்வையினாலே குஞ்சு பொரித்தலைப்போல ஞானகுரு தன் கண்களை சிவனது கண்ணாக பாவித்து நோக்க சீடன் சிவானந்தம் பெறுவான்

2.பரிச தீக்ஷை

 பரிசம் என்பது தீண்டுவது தொடுவது ,கோழி முதலிய பறவைகள் தனது முட்டையின்மேல் பொருந்தி குஞ்சு பொரிக்கும் அதுபோல ஞானகுரு தம்மை சிவமாக பாவித்து சீடன் தலையைத் தொடுவதால் சீடன் சிவானந்தம் பெறுவான் 
 

3.வாசக தீக்ஷை

வாசகம் என்பது சொல் உரை ,ஞானகுரு சித்தாந்த வாக்கியங்களையும் சிவமூல மந்திரத்தையும் சீடனுக்கு பொருளுடன் உபதேசிப்பது வாசக தீக்ஷை


4.மானச தீக்ஷை

ஞான குரு தன் உடம்பிலிருந்து யோக முறையில் சீடனின் இருதயத்தில் புகுந்து அவனது ஆன்மாவை தூய்மை செய்து அதை சிவ ஒளியுடன் கலக்கச்செய்து அந்த ஆன்மாவை சிவமாக பாவித்து மீண்டும் அந்த சக்தியை சீடனது இருதயத்தில் யோக முறையில் சேர்ப்பித்தல் மானச தீக்ஷை எனப்படும்

5.சாத்திர தீக்ஷை

ஞான சாத்திரங்களை கற்பித்தலும் சிந்தித்தலுமே சாத்திர தீக்ஷை ஆகும் 


6. யோக தீக்ஷை 

ஆதார யோகம் ,நிராதார யோகம் என்பவற்றை  பயில்வித்தல் யோக தீக்ஷை ஆகும்




                          போற்றி ஓம் நமசிவாய




                                திருச்சிற்றம்பலம்

Sunday, October 13, 2013

பற்றுக பற்று அற்றவன் திருவடியை

                             
                                                            ஓம் நமசிவாய


பற்றுக பற்று அற்றவன் திருவடியை


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்

 ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை


திருகுறளில்  துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக இந்த பாடல் உள்ளது இப்பாடலை துறவு என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக எழுதுகிறோம் எனவே பற்று என்ற ஒட்டுதல் அறவே கூடாது என்று திருவள்ளுவர் ஒவ்வொரு வார்த்தையும் உதடுகள் ஒட்டாமல் எழுதியுள்ளார்


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு


பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்   

துறவு அதிகாரத்தில் பத்தாவது பாடலாக இந்த பாடல் உள்ளது இதை திருவள்ளுவர் எழுதும்போது பற்று வேண்டும் என்கிறார் எதன் மீது ? பற்றற்ற இறைவன் திருவடியை பற்ற வேண்டும் என்று அருள்கிறார் . அதற்காக அனைத்து வார்த்தைகளும் அழுத்தமாக உதடுகள் ஓட்டும் வண்ணம் எழுதியுள்ளார் .

இதிலிருந்தே எதைப் பற்றவேண்டும் என்று தெளிவாக தெரிகிறது . பற்றற்றவன் தாளை தவிர மற்ற பற்றுகள் துன்பம் விளைவிக்கும். எனவே அளவில்லா வற்றாத இன்பம் கிடைக்கும் வண்ணம் உலகப்பற்றுக்களை நீக்கி பற்றற்ற இறைவன் திருவடியினை பற்றுவோம், பிறவிப்பிணி நீங்கி ஆனந்தம் பெறுவோம் 



                         போற்றி ஓம் நமசிவாய 



                              திருச்சிற்றம்பலம் 

சைவ காலண்டர் - ஐப்பசி

                                                 ஓம் நமசிவாய 


சைவ காலண்டர் - ஐப்பசி


18 -10-2013  லிருந்து  16-11-2013 வரை


ஐப்பசி மாதம் 

01ஆம் நாள் 18-10-13-வெள்ளி - மகா அன்னாபிசேகம் ,பௌர்ணமி

03ஆம் நாள் 20-10-13-ஞாயிறு -நின்றசீர் நெடுமாறன் நாயனார் குருபூசை

04ஆம் நாள் 21-10-13-திங்கள்  - இடங்கழி நாயனார் குருபூசை , கிருத்திகை

05ஆம் நாள் 22-10-13-செவ்வாய்  -சங்கடஹர சதுர்த்தி

07ஆம் நாள் 24-10-13-வியாழன்  -சஷ்டி 

10ஆம் நாள் 27-10-13-ஞாயிறு  -சக்தி நாயனார் குருபூசை, தேய்பிறை அஷ்டமி

15ஆம் நாள் 01-11-13-வெள்ளி - பிரதோஷம் ,சிவராத்திரி

16ஆம் நாள் 02-11-13-சனி - தீபாவளி

17ஆம் நாள் 03-11-13-ஞாயிறு -மெய்கண்ட தேவர் குருபூசை ,கேதார கௌரி விரதம் ,அமாவாசை ,கந்தசஷ்டி ஆரம்பம் 

19ஆம் நாள் 05-11-13-செவ்வாய்  - பூசலார் நாயனார் குருபூசை

20ஆம் நாள் 06-11-13-புதன் -சதுர்த்தி

21ஆம் நாள் 07-11-13-வியாழன் - சதுர்த்தி ,ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை

22ஆம் நாள் 08-11-13-வெள்ளி - ஸ்கந்த சஷ்டி 

29ஆம் நாள் 15-11-13-வெள்ளி - திருமூலர் நாயனார் குருபூசை,பிரதோஷம் 

30ஆம் நாள் 16-11-13-சனி -ஐப்பசி கடைமுழுக்கு மயிலாடுதுறை ,பரணி தீபம் 





                      போற்றி ஓம் நமசிவாய



                             திருச்சிற்றம்பலம்    

நீ நாளும் நன்னெஞ்சே நினை

    
                              ஓம் நமசிவாய


 நீ நாளும் நன்னெஞ்சே நினை


இறைவனை நாம் எல்லா நாளும் எல்லா நேரமும் நினைக்க வேண்டும். எந்த நேரம் நினைத்தால் என்ன சொல்லி வாழ்த்தி நினைக்கலாம் என்று சில திருவாசக போற்றி திருஅகவல்களை தொகுத்துள்ளோம் . நம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அந்த செயல் திருவருள் துணையுடன் சிறப்பாக முடிய சிவசிவ என்று நம் நா உச்சரிக்க வேண்டும் .சம்பந்தர் மூர்த்தி சுவாமிகள் திருச்சாய்க்காடு தேவாரத்தில் நீ நாளும் நன்னெஞ்சே என்று அருளியுள்ளார்


காலையில் உறங்கி  எழும்போது

அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண்ணார் அமுதக் கடலே போற்றி


ஆலய கோபுரம் மற்றும் இறை தரிசனம் காணும்போது


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


உணவு உண்ணும்போது


தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 


மன அச்சம் நீங்க 


அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி 

புத்துணர்ச்சி பெற 


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி 

உறங்க செல்லும் போது 

ஆடக மதுரை அரசே போற்றி 
கூடல் இலங்கு குருமணி போற்றி




                             திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் - 4


                                 ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3


22.திருவோணம் 

வேதமோதி வெண்ணூல்பூண்டு 
            வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் 

           புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு 

           நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் 

           பழன நகராரே.    1-67-1

23.அவிட்டம்  

எண்ணு மெழுத்துங் குறியும் 
            அறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய 

            வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் 

            பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய வமுதினை 

            நாமடைந் தாடுதுமே.  4-90-6 


24.சதயம்

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
           கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
          அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
           வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
           பாசுப தாபரஞ் சுடரே    7-69-2







25.பூரட்டாதி

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்     
             நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த 

             வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் 

             தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் 

             கூத்தன் குரைகழலே 4-81-7


26.உத்திரட்டாதி 

 நாளாய போகாமே நஞ்சணியும்    
             கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோம்  மடநெஞ்சே     

             அரன் நாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும்  

             கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி

             எம் பெருமானே   1-62-1 


27.ரேவதி 

நாயினுங் கடைப்பட் டேனை 
         நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே 

           அமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே 

            நிலாவினாய்  நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்  

           நோக்கி நீ அருள்செய்வாயே  4-76-6


                           திருச்சிற்றம்பலம் 


                       போற்றி ஓம் நமசிவாய     

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -3


                                 ஓம் நமசிவாய 

நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3

15.சுவாதி 

காவினை யிட்டுங் குளம்பல 
           தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித்தீர் 

           என்றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி 

           போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றா

           திரு நீலகண்டம்.   1-116-2

 16.விசாகம் 

விண்ணவர் தொழுதேத்த நின் றானை
           வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன்றன்னை
            நாளும் நாம் உகக்கின்ற பி ரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
           என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக்கம்பன் எம்மானைக்
           காணக் கண்அடியேன்பெற்றவாறே    7-61-7


17.அனுஷம் 

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1-23-5



18.கேட்டை

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை யம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லையேற்றினர் கோடிகாவாஎன்றங்கு  ஒல்லையேத்துவார்க்கு ஊனமொன்றி
ல்லையே    5-78-3


19.மூலம் 


கீளார் கோவணமுந் திருநீறு 

         மெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா    

          எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடி     

          உள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
          யாரை நினைக்கேனே       7-24-2



 20.பூராடம் 

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
        நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோர்  அமுதமானாய்
        மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
         பூமிமேல் புகழ்தக்க பொருளேஉன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
        ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே 6-95-7



21.உத்திராடம் 



குறைவிலா நிறைவே குணக்குன்றே
         கூத்தனே குழைக்காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
         ஒருபிழைபொறுத்தால் இழிவுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ் திருவாரூர்ச்
         செம்பொனே திரு வாவடுதுறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
         ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே 7-70-6






                              திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

 



நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -2

                                                        ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப்  பாடல்கள் -2


8.பூசம்

பொருவிடை யொன்றுடைப் 
             புண்ணியமூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை 

              மணாளனுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற 

              தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு 

              மற்றினிக் காண்பதென்னே.  4-80-2


9.ஆயில்யம் 

கருநட்ட கண்டனை யண்டத் 
              தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்ய

             வல்லானைச் செந்தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்கு
             இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் 

             கோனென்று வாழ்த்துவனே. 4-81-1


10.மகம்  

 பொடியார் மேனியனே புரி
          நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
          ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
          வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
          கார்துணை நீயலதே.     7-28-1



11.பூரம் 

நூலடைந்த கொள்கையாலே 
           நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க 

           நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி ய

          அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் 

         சேய்ஞலூர் மேயவனே       1-48-1 


12.உத்திரம் 


போழும் மதியும் புனக்கொன்றை
             புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
             உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
             வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
             ஐயா றுடைய அடிகேளோ    7-77-8



13.அஸ்தம்


வேதியா வேத கீதா விண்ணவர்  
          அண்ணா வென்றென்
ஓதியே மலர்கள் தூவி யொருங்கி

          நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் 

          படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே 

          அருள்செ யாயே.     4-62-1


14.சித்திரை 


நின்னடியே வழிபடுவான் நிமலா
           நினைக் கருத
என்னடியானுயிரைவவ்வேலென்று                    

            அடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு

          நீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் 

          நெடுங்களமே யவனே    1-52-3



                           திருச்சிற்றம்பலம்



                      போற்றி ஓம் நமசிவாய  

Saturday, October 12, 2013

தேவாரத் தலங்கள் - தற்போதைய பெயர்கள்

                                                       ஓம் நமசிவாய


தேவாரத்தலங்கள் - தற்போதைய பெயர்கள்

காவிரி வடகரை தலங்கள்

1. கோயில் - சிதம்பரம்

2. திருவேட்களம்

3. திருநெல்வாயில் - சிவபுரி 

4. திருக்கழிப்பாலை -
திருக்கழப்பாலை  

5. திருநல்லூர்ப்பெருமணம் - ஆச்சாள்புரம்

6. திருமயேந்திரப்பள்ளி - மகேந்திரப்பள்ளி 

7. தென்திருமுல்லைவாயில் - திருமுல்லை வாசல்

8. திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை

9. திருச்சாய்க்காடு  - சாயாவனம்

10. திருப்பல்லவனீசுரம் - பூம்புகார்

11. திருவெண்காடு

12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி

13. திருக்குருகாவூர் - திருக்கடாவூர் 

14. சீர்காழி

15. திருக்கோலக்கா

16. திருப்புள்ளிருக்குவேளூர் -  வைத்தீச்சுரன்கோவில்

17. திருக்கண்ணார்கோவில் - குறுமாணக்குடி

18. திருக்கடைமுடி - கீழையூர் ,கீழூர்

19. திருநின்றியூர்

  
20. திருப்புன்கூர்

21. திருநீடூர்  - நீடூர்

22. அன்னியூர்  - பொன்னூர்

23. திருவேள்விக்குடி

24. எதிர்கொள்பாடி - மேலைத்திருமணஞ்சேரி

25. திருமணஞ்சேரி - கீழை
த்திருமணஞ்சேரி 

26. திருக்குறுக்கை - கொருக்கை

27. கருப்பறியலூர் - தலைஞாயிறு

28. திருகுரக்குக்கா - திருக்குரக்காவல்

29. திருவாழ்கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் 

30. பழமண்ணிப்படிக்கரை - இலுப்பைப்பட்டு

31. ஓமாம்புலியூர்

32. கானாட்டுமுள்ளூர் - கானாட்டம்புலியூர்

33. திருநாரையூர்

34. திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர்

35. பந்தணைநல்லூர் - பந்தநல்லூர்

36. கஞ்சனூர்

37. திருக்கோடிக்கா - திருக்கோடிக்காவல்

38. திருமங்கலக்குடி

39. திருப்பனந்தாள்

40. திருஆப்பாடி - திருவாய்ப்பாடி

41. திருச்சேய்ஞலூர் - சேங்கனூர்

42. திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி

43. திருவியலூர் - திருவிசலூர்

44. கொட்டையூர்

45. இன்னம்பர் - இன்னம்பூர்

46. திருப்புறம்பயம் - திருப்புறம்பியம்

47. திருவிசயமங்கை - திருவிஜயமங்கை

48. திருவைகாவூர்

49. வடகுரங்காடுதுறை - ஆடுதுறை பெருமாள் கோயில்
 

50. திருப்பழனம்

51. திருவையாறு

52. திருநெய்த்தானம் - தில்லைஸ்தானம்

53. பெரும்புலியூர்

54. திருமழபாடி 

55. திருப்பழுவூர்
- கீழப்பழுவூர்
 

56. திருக்கானூர்

57. அன்பில்ஆலந்துறை - அன்பில்

58. திருமாந்துறை - மாந்துறை

59. திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை

60. திருவானைக்கா

61. திருப்பைஞ்ஞீலி

62. திருப்பாச்சிலாச்சிராமம் - திருவாசி

63.திருஈங்கோய்மலை - திருவிங்கிநாதமலை 

காவிரித் தென்கரைத் தலங்கள்
 

64. திருவாட்போக்கி - ரத்னகிரி அய்யர் மலை
 

65. கடம்பந்துறை - குளித்தலை

66. திருப்பராய்துறை

67. கற்குடி - உய்யக்கொண்டான்மலை

68. மூக்கீச்சுரம் - உறையூர் - திருச்சி

69. சிராப்பள்ளி - திருச்சி மலைகோட்டை 

70. எறும்பியூர் - திருவெறும்பூர்

71. திருநெடுங்களம்

72. மேலை.திருக்காட்டுப்பள்ளி
 

73. திருஆலம்பொழில்

74. திருப்பூந்துருத்தி

75. கண்டியூர்

76. திருச்சோற்றுத்துறை

77. திருவேதிகுடி

78. தென்குடித்திட்டை -திட்டை

79. திருப்புள்ளமங்கை - பசுபதி கோயில்

80. சக்கரப்பள்ளி - ஐயம்பேட்டை
 

81. திருக்கருகாவூர்

82. திருப்பாலைத்துறை

83. திருநல்லூர்

84. ஆவூர்ப்பசுபதீச்சுரம் - ஆவூர்

85. திருச்சத்திமுத்தம்

86. பட்டீச்சுரம்

87. பழையாறை வடதளி

88. திருவலஞ்சுழி

89. குடமூக்கு - கும்பகோணம்

90. குடந்தை கீழ்க்கோட்டம் - நாகேச்சுரசுவாமிக் கோவில்

91. குடந்தைக்காரோணம் - விஸ்வநாதர் கோவில்

92. திருநாகேச்சுரம்

93. திருவிடைமருதூர்

94. தென்குரங்காடுதுறை - ஆடுதுறை

95. திருநீலக்குடி

96. வைகல்மாடக்கோவில்

97. திருநல்லம் - கோனேரி ராஜபுரம்

98. கோழம்பம் - திருக்கொழம்பியம்

99. திருவாவடுதுறை

100. திருத்துருத்தி - குத்தாலம்

101. திருவழுந்தூர் - தேரழுந்தூர்

102. திருமயிலாடுதுறை

103. திருவிளநகர்

104. திருப்பறியலூர் - பரசலூர்

105. திருச்செம்பொன்பள்ளி - செம்பனார் கோவில்

106. திருநனிபள்ளி - புஞ்சை

107. திருவலம்புரம் - மேலப்பெரும்பள்ளம்

108. தலைச்சங்காடு

109. ஆக்கூர் - தான் தோன்றி மடம்

110. திருக்கடவூர் வீரட்டம் - திருக்கடையூர்

111. திருக்கடவூர் மயானம் - திரு மயானம்

112. திருவேட்டக்குடி

113. திருத்தெளிச்சேரி - கோயில் பத்து

114. தருமபுரம்

115. திருநள்ளாறு

116. கோட்டாறு - திருக்கொட்டாரம்

117. அம்பர்பெருங்கோயில் - அம்பர் ,அம்பல்
 

118. அம்பர் மாகாளம் - கோயில் மாகாளம்

119. திருமீயச்சூர்

120. திருமீயச்சூர் இளங்கோயில்

121. திலதைப்பதி - திலதர்ப்பணபுரி

122. திருப்பாம்புரம்

123. சிறுகுடி
 

124. திருவீழிமிழலை

125. திருவன்னியூர் - அன்னியூர்

126. கருவிலி - கருவிலிக்கொட்டிட்டை

127. பேணுபெருந்துறை - திருப்பந்துறை

128. நறையூர்ச்சித்தீச்சுரம் - திருநறையூர்

129. அரிசிற்கரைப்புத்தூர் - அளகாபுத்தூர்

130. சிவபுரம்

131. கலயநல்லூர் - சாக்கோட்டை

132. கருக்குடி - மருதாந்தநல்லூர்

133. திருவாஞ்சியம்

134. நன்னிலம்

135. திருக்கொண்டீச்சரம் - திருக்கண்டீஸ்வரம்

136. திருப்பனையூர் - பனையூர்

137. திருவிற்குடி வீரட்டம்

138. திருப்புகலூர்

139. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

140. இராமனதீச்சுரம் - திருக்கண்ணபுரம்

141. திருப்பயற்றூர்

142. திருச்செங்காட்டங்குடி

143. திருமருகல்

144. திருச்சாத்தமங்கை - சீயாத்தமங்கை

145. நாகைக்காரோணம் - நாகப்பட்டினம்

146. சிக்கல்
 

147. கீழ்வேளூர் - கீவளூர்

148. தேவூர்

149. பள்ளியின்முக்கூடல் - அரியான்பள்ளி

150. திருவாரூர்

151. திருவாரூர்அரநெறி

152. திருவாரூர் பரவையுன்மண்டலி

153. திருவிளமர் - விளமல்
 

154. கரவீரம் - கரையபுரம்

155. பெருவேளூர் -மணக்கால் ஐயம்பேட்டை

156. தலையாலங்காடு

157. குடவாயில் - குடவாசல்

158. திருச்சேறை

159. நாலூர்மயானம்

160. கடுவாய்க்கரைப்புத்தூர் - ஆண்டான்கோவில்

161. இரும்பூளை - ஆலங்குடி

162. அரதைப்பெரும்பாழி - அரித்துவாரமங்கலம்

163. அவளிவணல்லூர்

164. பரிதிநியமம் - பருதியப்பர்கோவில்

165. வெண்ணி - கோயில் வெண்ணி

166. பூவனூர்

167. பாதாளீச்சுரம் - பாமணி

168. திருக்களர்

169. சிற்றேமம் - சிற்றய்மூர்

170. திருஉசாத்தானம் - கோயிலூர்

171. இடும்பாவனம்

172. கடிக்குளம் - கற்பகநாதர் குளம்

173. தண்டலைநீள்நெறி - தண்டலைசேரி 

174. கோட்டூர்

175. திருவெண்துறை - வண்டுதறை 


176. கொள்ளம்புதூர் -திருக்களம்பூர்

177. பேரெயில் - ஓகைப்பேரையூர்

178. திருக்கொள்ளிக்காடு - கள்ளிக்காடு

179. திருத்தெங்கூர்

180. திருநெல்லிக்கா

181. திருநாட்டியத்தான்குடி

182. திருக்காறாயில் - திருக்காறைவாசல்

183. கன்றாப்பூர் - கண்ணாப்பூர்

184. வலிவலம்

185. கைச்சின்னம் - கச்சனம்

186. திருக்கோளிலி - திருக்குவளை

187. திருவாய்மூர்

188. திருமறைக்காடு -  வேதாரண்யம்

189. அகத்தியான்பள்ளி

190. திருக்கோடி - கோடியக்கரை

191. திருவிடைவாய்


ஈழநாடு

192. திருக்கோணமலை

193. திருக்கேதீச்சுரம் - இலங்கை மாந்தை


பாண்டியநாடு

194. திருஆலவாய் - மதுரை

195. திருஆப்பனூர் - ஆப்புடையார் கோயில்

196. திருப்பரங்குன்றம்

197. திருவேடகம்

198. திருக்கொடுங்குன்றம் - பிரான்மலை

199. திருப்புத்தூர்

200. திருப்புனவாயில் - திருப்புனவாசல் 

201. திருஇராமேச்சுரம்

202. திருவாடானை

203. திருக்கானப்பேர் - காளையார்கோவில்

204. திருப்பூவணம்

205. திருச்சுழியல் - திருச்சுழி

206. திருக்குற்றாலம் 

207. திருநெல்வேலி


கொங்குநாடு

208. திருப்புக்கொளியூர் - அவிநாசி

209. திருமுருகன்பூண்டி

210. திருநணா - பவானி

211. திருக்கொடிமாடச்செங்குன்றூர் - திருச்செங்கோடு

212. திருவெஞ்சமாக்கூடல் - வெஞ்சமாங்கூடலூர்

213. திருப்பாண்டிக்கொடுமுடி - கொடுமுடி

214. திருக்கருவூர்  - கரூர்


நடுநாடு

215. திருநெல்வாயில்அரத்துறை - திருவட்டுறை
 

216. திருத்தூங்கானைமாடம் - பெண்ணாடம்

217. திருக்கூடலையாற்றூர்

218. திருஎருக்கத்தம்புலியூர் - இராசேந்திரப்பட்டிணம்

219. திருத்தினைநகர் - தீர்த்தனகிரி

220. திருச்சோபுரம் - தியாகவல்லி

221. திருவதிகை

222. திருநாவலூர் - திருநாமநல்லூர்

223. திருமுதுகுன்றம் - விருத்தாசலம்

224. திருநெல்வெண்ணெய் - நெய்வெணை 

225. திருக்கோவலூர் - திருக்கோயிலூர்
 

226. திருஅறையணிநல்லூர் - அரகண்டநல்லூர்

227. திருஇடையாறு - டி .எடையார்

228. திருவெண்ணெய்நல்லூர்

229. திருத்துறையூர் - திருத்தளூர்

230. திருவடுகூர் - ஆண்டார்கோவில்

231. திருமாணிக்குழி

232. திருப்பாதிரிப்புலியூர் - கடலூர்

233. திருமுண்டீச்சுரம்

234. திருபுறவார்பனங்காட்டூர் - பனையபுரம்

235. திருஆமாத்தூர் - திருவாமாத்தூர்

236. திருவண்ணாமலை


தொண்டைநாடு 

237. திருக்கச்சிஏகம்பம் - காஞ்சிபுரம்

238. திருக்கச்சிமேற்றளி - பிள்ளையார் பாளையம்

239. ஓணகாந்தன்தளி

240. கச்சிஅனேகதங்காவதம்

241. கச்சிநெறிக்காரைக்காடு - திருக்காலிமேடு

242. குரங்கணில்முட்டம்

243. மாகறல்

244. திருவோத்தூர் - திருவத்தூர்

245. வன்பார்த்தான்பனங்காட்டூர் - திருப்பனங்காட்டூர்

246. திருவல்லம் - திருவலம்

247. திருமாற்பேறு - திருமால்பூர்

248. திருஊறல் - தக்கோலம்

249. இலம்பையங்கோட்டூர் 

250. திருவிற்கோலம் - கூவம்

251. திருவாலங்காடு 

252. திருப்பாசூர் - திருப்பாச்சூர்

253. திருவெண்பாக்கம் - பூண்டி

254. திருக்கள்ளில் - திருக்கண்டலம்

255. திருக்காளத்தி - காளஹஸ்தி

256. திருவொற்றியூர்

257. திருவலிதாயம் - பாடி

258. வடதிருமுல்லைவாயில்

259. திருவேற்காடு

260. திருமயிலை - மயிலாப்பூர்

261. திருவான்மியூர்

262. திருக்கச்சூர் - ஆலக்கோவில்

263. திருஇடைச்சுரம் - திருவடிசூலம்

264. திருக்கழுக்குன்றம்

265. அச்சிறுப்பாக்கம் - அச்சரப்பாக்கம்

266. திருவக்கரை

267. திருஅரசிலி - ஒழுந்தியாப்பட்டு

268. திருஇரும்பைமாகாளம் - இரும்பை


துளுவ நாடு

269. திருகோகர்ணம் (கோகர்ணா)

மலைநாடு

270. திருவஞ்சைக்களம் - கொடுங்களூர்

வடநாடு

271. திருப்பருப்பதம் - ஸ்ரீசைலம்

272. இந்திரநீலப்பருப்பதம் - நீலகண்டசிகரம் பத்ரிநாத் அடிவாரம் 

273. அனேகதங்காவதம் - கௌரிகுண்டம்

274. திருக்கேதாரம் - கேதார்நாத்

275. நொடித்தான்மலை - கயிலாயம்




                          போற்றி ஓம் நமசிவாய 



                             திருச்சிற்றம்பலம் 

Friday, October 11, 2013

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு


                               ஓம் நமசிவாய 



சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு


மதுரை தியாகராஜர் கல்லூரியில், பத்து நாட்கள்  சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள், நவம்பர் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், சைவ சித்தாந்த கோட்பாடுகளும், நூல்களும் பயிற்றுவிக்கப் படும். பொதுநிலை, சிறப்பு நிலை என இரு பிரிவுகளில் பயிற்சியும்  சான்றிதழும்  அளிக்கப்படும். 

பேராசிரியர் ஆனந்தராசன் அய்யா அவர்கள் தலைமையில் பல பேராசிரியர்களும் சித்தாந்த அறிஞர்களும் பாடங்களை பயிற்றுவிப்பார்கள் 

இதில் சேர்பவர்களுக்கு 10 நாட்களும் இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை.
 

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், "முதல்வர், தியாகராஜர் கலை கல்லூரி, மதுரை- 9', என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, சுய விலாசமிட்ட கவர் ஒன்றை இணைத்து விண்ணப்பம் பெறலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்.,31க்குள் வந்துசேர வேண்டும் என, கல்லூரி முதல்வர் தாமரைசெல்வன் தெரிவித்துள்ளார்.

சைவநெறி ஆர்வலர்களும் சிவநேய செல்வர்களும் பங்கு பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 


                         போற்றி ஓம் நமசிவாய 


                           திருச்சிற்றம்பலம் 

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

                                                            ஓம் நமசிவாய 

  
நரசிங்க முனையரைய நாயனார் புராணம்




                "மெய்யடியன் நரசிங்க முனையரையற் கடியேன்"

அவதார தலம் - திருநாவலூர் 
முக்தி தலம்     -
திருநாவலூர்
குருபூசை திருநட்சத்திரம் - புரட்டாசி சதயம் 
15-10-13 செவ்வாய்க்கிழமை




சீரும் சிறப்புமிக்கது  திருமுனைப்பாடி நாடு நமது சமய குரவர்கள் இருவர் பிறந்த மண் அப்பரும் சுந்தரரும் அவதரித்த புண்ணிய பூமி அந்நாட்டை நரசிங்கமுனையரையர்  எனும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். 

சிவனடியார்களைக் கண்டால் எதிர்கொண்டு இறைஞ்சி இனிது உபசரிப்பார் . சிவாலயங்க ளில் பல நிபந்தங்கள் அமைத்து காலம் தோறும் வழிபாடுகள் வழுவாது நடைபெறு மாறு செய்வித்தார் நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடத்துமாறு செய்தார் நல்விழாக்கள் நடத்தினார்


திருவாதிரை நாள் தோறும் சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்து மகிழ்வார்  ஒரு திருவாதிரைத் திருநாளன்று மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர் கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப் பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப் படைந்து விலகிச் சென்றனர். மன்னர் அடியார்களிடம் இவரை நீங்கள் வெறுக்க கூடாது எந்த நிலையில் உள்ளவராயினும் திருநீறு அணிந்தவரை இகழ்ந்தால் நரகமே விளையும் ஆகவே திருநீறு பூசியவர் எவராயினும் பூசிக்க வேண்டும் தூசிக்க கூடாது என்று அறிவுரை கூறினார் . மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்



                       போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 

ஏனாதிநாத நாயனார் புராணம்


                                ஓம் நமசிவாய


ஏனாதிநாத நாயனார் புராணம்

 "ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் " 


அவதார தலம் - எயினனூர்
முக்தி தலம்     - எயினனூர்
குருபூசை திருநட்சத்திரம் - புரட்டாசி உத்திராடம்
12-10-13 சனிக்கிழமை


எயினனூர் என்பது வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குல மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாராயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழி படுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற் றின் ஒளியைக் கண்டால் போதும், உடனே பகைமை மறந்து அவரை வணங்கி வழி படுவார். இதனால் பகைவரும் போற்றும் படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். 


இவர் சோழர் படையில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இவர வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும்,வாட்பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட்பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்தனர். வாட்பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை எல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார். இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத் தானே செய்கின்றனர். ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லக் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.தொழில்நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்பத்தில் அறியாமல் சேர்ந்த சில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகினர் .  இதனால் ஏனாதிநாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது.ஏனாதிநாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன் . ஏனாதிநாதரிடம் அழுக்காறு, அவா, சினம், இன் சொல் ஆகிய தீய குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதிநாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற எண்ணம் கொண்டான் . 


ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளை யிடுவது போல், வீரம் படைத்த ஏனாதிநாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர் பரணி எழுப்பினான். ஏனாதிநாதரே ! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு ? அதிலும் இரண்டு ஆசிரியர்கள் தான் எதற்கு ? இவ்வூரில் வாட் பயிற்சி ஆசானாக இருக்க  தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன. போர் ஆரம்பமானது அணிவகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர். வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன.  தாள்களும், தோள்களும் புண்பட்டு இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன. அதிசூரன் படை முறியடிக்கப்பட்டது. போரில் தலைப் பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப் பட்டனர். போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்தபோது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதிநாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். வெற்றிவாகை சூடித் திரும்பினார் ஏனாதிநாதர். 


நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது ! அதிசூரன் நேர் பாதையில் ஏனாதி நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அதிசூரன் ஏவலாளன் ஒருவனை ஏனாதிநாதரிடம் அனுப்பினான். தன்னோடு தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்ப அவனது அந்த முடிவிற்கு ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போட நாள்  குறித்து நேரம் கணித்து இடம்  தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் சேதி சொல்லி அனுப்பினான். அதற்கு அவர் சம்மதித்தார்.


அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும்,கேடயத்தாலும் மறைத்துக் கொண்டு , போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்றிருந்தார். அதிசூரன் கேடயத்தால் , தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதிநாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான் அதிசூரன். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும்,கேடயத்தையும் விலக்கினான். 



அடல்விடையே றென்ன அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல் வெண்ணீறு தாங்கண்டார்.




வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியை பார்த்த நாயனார் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன் ! பகைவன் என்று போரிட வந்தேனே ! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒரு பொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே ! இவர் சிவத்தொண்டரே தான். இவரோடு, இனி போரிடுவது தகாத செயல்  ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன் ! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதிநாத நாயனார், தம் கை வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணிய  தருணத்தில் , நாயனாருக்கு வேறொரு எண்ணம் பிறந்தது, நாம் ஆயுதங் களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும்.நிராயுதபாணியைக்  கொன்றார் என்ற இழி பெயர் இவருக்கு வந்துவிடும் ,அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படாவண்ணம் இறுதிவரை நான் ஆயுதத் துடனே இவரை எதிர்த்து நிற்பது போல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடி வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.பின்னர் சொல்லவும் வேண்டுமோ ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. அதிசூரனும் ஓடி ஒளிந்தான். 


ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது ! எம்பெருமான் உமையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் பன்முறை வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தளைகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதி நாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெருவாழ் வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார் . திருவெண்ணீறு அருள் மயமானது. எம்பெருமானின் திருமேனியில் எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்க்கு அமர வாழ்வு  கிட்டும். ஆன்மா உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும். இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருநீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டி வந்த பேரன்பைத்தான் என்னவென்பது ?

மற்றினிநாம் போற்றுவதென் வானோர்பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால் பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும் உடன்பிரியா அன்பருளிப்

பொற்றொடியாள் பாகனார் பொன்னம் பலமணைந்தார். 
                                                     
இந்த நாயனார் புராணத்தின் மூலம் திருநீற்றின் மேன்மையை நாம் அறியும் வேளையில் வேளை  தவறாது வெண்ணீறு அணிந்து பிறவி பிணி நீங்குவோம் 






 
                      போற்றி ஓம் நமசிவாய 




                          திருச்சிற்றம்பலம்

Tuesday, October 8, 2013

நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -1

                                                         ஓம் நமசிவாய

நட்சத்திரத்திருமுறைப்  பாடல்கள் -1

எல்லா திருமுறைப்பாடல்களுமே மந்திர ஆற்றல் கொண்டவையே . இருந்தாலும் சில பாடல்களை 27 நட்சத்திரத்துக்கேற்றவாறு தொகுத்து அளித்துள்ளோம் . அவரவர் நட்சத்திரம் வரும் நாட்களில் அந்தந்த திருமுறைகளை ஓத நலம் பயக்கும்.

                        திருச்சிற்றம்பலம் 


1.அசுபதி  

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்து
              உன்றன் சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிறம் 

              அல்லா லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக

               வட மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து

               உறையுஞ் சிவக்கொழுந்தே.  4-96-9  

2.பரணி 
  
கரும்பினு மினியான் றன்னைக்காய்
               கதிர்ச் சோதி யானை
இருங்கடலமுதந்தன்னை

              இறப்பொடு  பி றப்பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் 

               பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்  

               அழகிதா நினைந்த வாறே.  4-74-3


3.கார்த்திகை 


செல்வியைப் பாகங் கொண்டார் 
              சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மா

               மலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சி

               மா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் 

               இலங்குமேற் றளிய னாரே. 4-43-8


4.ரோகிணி 

எங்கே னும்மிருந்துன் னடியேன் 
             உனைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் 

             உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்திட்டு           

              எனையாளுங்
கங்கா நாயகனே கழிப்
               பாலை மேயானே.        7-23-2 


5.மிருகசீரிடம் 


பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
         பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
         என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
         மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
          கயிலை மலையானே போற்றி போற்றி 

                                                        6-55-7

 6.திருவாதிரை 


கவ்வைக்கடல் கதறிக்கொணர்
             முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
              தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
              தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
              அலராள் பிரியாளே   7-82-3 


7.புனர்பூசம் 

மன்னு மலைமகள் கையால் 
              வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்

              பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத் 

              தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன இன்னரம்பரான்

              தன் இணையடியே .        4-100-1



                             திருச்சிற்றம்பலம்


                      போற்றி ஓம் நமசிவாய
  

Wednesday, October 2, 2013

கல்லும் கடவுளும்

                            ஓம் நமசிவாய


கல்லும் கடவுளும்


மனிதப்பிறவி இறைவன் படைப்புகளிலேயே
மிக உன்னதமான பிறவி ஆனால் அதற்கேற் றவாறு நடக்கின்றோமா என்றால் அது தான் இல்லை . ஏன் இயலவில்லை ? ஏன் அதற்கு முயலவில்லை ?  காரணம் ஆன்மாவைப் பற்றியுள்ள ஆணவம் அறியாமை எனும் இருள்  உதாரணமாக நமது கண்ணுக்கு பார்க்கும் திறன் உள்ளது என்று நம்புகிறோம் ஆனால் பார்க்கும் திறன் பெற்ற கண்ணால் ஏன் இரவில் பார்க்க முடியவில்லை , காட்டு விக்கும் ஒளி இல்லை அதனால் நம்மால் இருளில் பார்க்க இயலவில்லை

அது போலவே தான் உயிர்கள் அறிவித்தால் தான் எந்த ஒரு விசயத்தையும் அறியும் ஆனால் அப்படி அறிவித்தாலும் நாம் அறிகிறோமா? என்றால் இல்லை 
பகுத்தறிவு , சிந்தனாவாதி என்று மெய்யறிவு புலப்படாமல் போகிறது

ஒரு கல்லானது சிலை என்று ஆகி விட்டால் அது வழிபடத்தக்கதாக ஆகிறது . காரணம் சிற்பி உருவம் கொடுக்க சிவாச்சாரியார் ஆவாகனம் செய்ய அந்த கற்சிலையானது  கடவுளாகிறது அப்போ மனிதன் ஏன் கடவுளாக வழிபடத்தக்க வகையில் மாறுவ தில்லை .ஏனெனில் சிற்பி செதுக்கும் போது கல் எந்த எதிர்ப்பையும் காண்பிப்பதில்லை ஆனால் மனிதன் சிந்திக்கிறேன் பேர்வழி என்று பல எதிர்ப்புகளை காண்பிக்கிறான் அது மிகவும் கஷ்டமான செயலாக தோன்றுகிறது

நாம் மாடிப்படி ஏற மிகவும் சிரமப்படுகிறோம் ஆனால் இறங்குவதற்கு அவ்வளவு சிரமம் இருப்பதில்லை அதுபோல மனிதன் அடுத்த படிநிலைக்கு மாற சிரமம் இருக்கும் ஆனால் அதை கடந்துவிட்டால் எல்லையில்லா ஆனந்தம் பெறலாம் என்பதை ஏன் உணர்வ தில்லை இறை சிந்தனையை ஊட்டுவிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது அப்பொழுது அவர்கள் பகுத்தறிவு என்ற பெயரில் கேட்கும் கேள்விகளும் சிந்தனைகளும் மிகவும் கேவலமானவை பாவம் எது புண்ணியம் எது என்பதைக்கூட சராசரியாக அறியவில்லை 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே



 மாணிக்கவாசகர் சுவாமிகள் நம் உயிரைப் பற்றியுள்ள ஆணவமலம் நீங்கினால் நம் வினைகள் நீங்கி நாமும் சிவமாகலாம் அந்த நெறியை அறியாதவர்கள் மூர்க்கர்கள் என்றும் அந்த நெறியை அறியவும் அறிவிக்கவும் அந்த இறைவனால் மட்டுமே முடியும் அதற்குரிய பக்தி நெறியை  தேடி நாம் ஓரடி சென்றால் இறைவன் நம்மை நோக்கி பத்தடி வருவார் என்பது பகவான் ராமகிருஷ்ணர் வாக்கு


ஒன்றுகண் டீர்உல குக்கு ஒரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்கு உயி ராவதும்
நன்றுகண் டீர்இன் நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கு இது தித்தித்த வாறே.



  
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
 
                                                                                                            திருமூலர் 

 
 கல் கடவுளாகும் போது மனிதனும் கடவுளாக முடியும் நாம் அதற்கு முயற்சி செய்தால் நாமும் வழிபடும் பொருளாவோம் 



                           போற்றி ஓம் நமசிவாய 



                              திருச்சிற்றம்பலம்