ஓம் நமசிவாய
நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3
22.திருவோணம்
வேதமோதி வெண்ணூல்பூண்டு
வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார்
புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு
நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்
பழன நகராரே. 1-67-1
23.அவிட்டம்
எண்ணு மெழுத்துங் குறியும்
அறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய
வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய வமுதினை
நாமடைந் தாடுதுமே. 4-90-6
24.சதயம்
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே 7-69-2
25.பூரட்டாதி
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த
வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
கூத்தன் குரைகழலே 4-81-7
26.உத்திரட்டாதி
நாளாய போகாமே நஞ்சணியும்
கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோம் மடநெஞ்சே
அரன் நாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும்
கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி
எம் பெருமானே 1-62-1
27.ரேவதி
நாயினுங் கடைப்பட் டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே
அமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே
நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கி நீ அருள்செய்வாயே 4-76-6
திருச்சிற்றம்பலம்
போற்றி ஓம் நமசிவாய
No comments:
Post a Comment