ஓம்நமசிவாய
திக்கெலாம் தேசமெல்லாம்
புகழும் தலங்கள்
திக்கெலாம் புகழும்
திருநெல்வேலியும் திருவாரூரும் திருவீழிமிழலையும் திருக்காளத்தியும் தேசமெலாம் அறிந்து
புகழும் திருநெய்த்தானமும் திருக்கச்சி ஏகம்பமும் தேயமெலாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூரும்
என்று நம் திருமுறை அருளாளர்களால் தெறிவு செய்யப்பட்டுள்ளன என்பது அப்பெரியோர்களின் திருவாக்கால்
அறிகிறோம்
நாமும் இந்த தலங்களைப்புகழ்ந்தும்
இறைஞ்சியும் ஈசன் அருள் நாடி உய்வு தேடுவோமாக.
திருச்சிற்றம்பலம்
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே தி.3ப.92-பா.7
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசமெல்லாம் அறியும்
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரைமேல்
சென்றடைந்தார் வினை தீர்க்கும்நெய்த்தானத்து இருந்தவனே தி.4ப.89பா.3
நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே
தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப் பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப்பாதம் என்சிந்தையுள் நின்றனவே தி.4ப.94பா.4
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாம் சடையினன்காண் தொண்டர் செல்லும்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே தி.6ப.30பா.2
காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம்பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே தி.8திருவா.ப.9பா.4
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து
ஐவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே தி.9ப.5பா.6
தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே தி.9ப.5பா.10
பண்டிதுவே அன்றா கில் கேளீர்கொல் பல்சருகு
கொண்டிலிங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு
நலம் திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு. தி.11ப.9பா.32
திருச்சிற்றம்பலம்
போற்றி ஓம் நமசிவாய
சிவனடிமைவேலுசாமி
No comments:
Post a Comment