rudrateswarar

rudrateswarar

Wednesday, June 8, 2016

அநபாயர் பெருமை



              ஓம் நமசிவாய
  
அநபாயர் பெருமை

தெய்வச்சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் வரையக் காரணமானவர் அநபாயச் சோழச்சக்கரவர்த்தி. சிந்தாமணியிலே மூழ்கிக்கிடந்தவரை சேக்கிழார் இடித்துக் கூறி சைவச்சேம நிதியாகிய பெரியபுராணம் பற்றிக்கூறி அவரை நல்வழிப் படுத்தினார். சிவபெருமானிடத்தும் அடியார்களிடத்தும் பேரன்பு பூண்டும் தூயமனத்தினராயும் இருந்தார் என்று அறிகிறோம். பேரம்பலம் பொன் வேய்ந்தமையும் திருத்தில்லைத் திருவெல்லையிலும், திருவீதியிலும் பொற் பணிகள் செய்தமையும் பெரியபுராணம் மட்டுமின்றி திருவாரூர்க் கல்வெட்டுகளும் அதற்கு சான்றுகளாக உள்ளன. அவரது மனதை திருக்கயிலைக்கு ஒப்பாகச் சேக்கிழார் எடுத்துரைக்கிறார்.
"செய்யகோலபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள் சிலம்பு" - தி.மலைசிறப்பு-12

அதாவது கயிலையைப்போலவே சிவபெருமான் எப்போதும் நீங்காது நிறைந்திருக்கிறார் என்பதும் அதுபோலவே பெருமையும் தூய்மையும் பெற்றது என்பதாகும்.
 இப்புராணம் பாடுவித்த உபகாரத்தின் பொருட்டு அவரின் சிறப்பை வாழ்த்தியும் நன்றி பாராட்டியும் அநபாயருடைய திருப்பெயரைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தில் 11 இடங்களில் பாடியருளியுள்ளார். அரனையும் அடியார் களையும் பாடிய சேக்கிழார்பெருமான் இவரையும் இந்த மாக்கதையில் குறிப்பிடுகின்றார் என்றால் அவர் சிறப்புதான் என்னே!
திருவருளின் மேன்மையையும், திருத்தொண்டர்களை எம்பெருமான் ஆட்கொண்ட பேரரருள் திறத்தினையும் நாம் அறியும் வண்ணம் சேக்கிழார் பெருமானை ஊக்கப்படுத்திய அநபாயச் சோழரை நாமும் நினைவில் நன்றியோடு கொண்டாடுவோம்.

சேக்கிழார்பெருமான் அநபாயரைக்குறிப்பிடும் பாடல்கள்
                     திருச்சிற்றம்பலம்                      
1. பாயிரம்- பாடல் -8

மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம் பலஞ்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை

2. திருமலைச்சிறப்பு – பாடல் -12

கையின் மான்மழுவர் கங்கைசூழ் சடையில்
               கதிரிளம் பிறைநறுங் கண்ணி                  ஐயர்வீற்றிருக்குந் தன்மையினாலும்
               அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும்
               வென்றிவெண் குடைஅந பாயன் 

 செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும்
              திருக்கயி லாயநீள்  சிலம்பு


3. திருநாட்டுச்சிறப்பு – பாடல்-35

நற்றமிழ் வரைப்பின் ஓங்கு  நாம்
       புகழ் திருநாடென்றும்  
பொற்றடந் தோளால் வையம் பொதுக்
       கடிந் தினிதுகாக்கும்   
கொற்றவன் அநபா யன்பொற் குடை
        நிழற் குளிர்வதென்றால்  
மற்றதன் பெருமை நம்மால்  
        வரம்புற விளம்பலாமோ

4.திருவாரூர்ச்சிறப்பு- பாடல் -13

அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே

5. இயற்பகை நாயனார் புராணம் – பாடல்- 1

சென்னி வெண்குடை நீடந பாயன்
   திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
   வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
   புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
   நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்

6. எறிபத்த நாயனார் புராணம்-பாடல்-2

பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும் சுடர்மணி வீதி மூதூர்

7.சண்டேசுர நாயனார் புராணம்-பாடல்-8


சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் 
                  தில்லைத் திருவெல்லை                       

பொன்னின் மயமாக் கியவளவர்
                 போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வரும்
                 தொல் மரபின் முடிசூட்டும்
தன்மை நிலவு பதிஐந்தின் ஒன்றாய்
                  விளங்குந் தகைத்தவ்வூர்                      

08. திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்-பாடல்-847

எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன் தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே

09. புகழ்ச்சோழ நாயனார் புராணம்-பாடல்-8

அந்நகரில் பாரளிக்கும் அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன் திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழர் எனப்பொலிவார்

10. இடங்கழி நாயனார் புராணம்-பாடல்-3

அந் நகரத் தினில் இருக்குவேளிர் குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன்புகழ்மரபிற் குடிமுதலோர்

11.கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்-பாடல்-14

மந்திரிகள் தமைஏவி வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில் அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந் தானங்கள் பலசமைத்தார்
      
                   திருச்சிற்றம்பலம்

                போற்றி ஓம் நமசிவாய 

சிவனடிமை வேலுசாமி                   
                         

No comments:

Post a Comment