rudrateswarar

rudrateswarar

Wednesday, June 22, 2016

இராவணனின் தேர்ப்பாகன் கூறிய அறம்



                       ஓம் நமசிவாய

இராவணனின் தேர்ப்பாகன் கூறிய அறம்


விரைந்து செல்லத்தக்க சிறந்த தேராயினும் நாம் வணங்கும் கயிலைநாதனாகிய  பரமேசுவரன் வீற்றிருக்கும் கயிலாய மலைக்கு மேல் நம் தேர் செல்வது அறம் அன்று என்று தேரைச் செலுத்திய பாகன் அறம் கூறினான். அவ்வறம் மொழிந்த பாகனை முனிந்து நோக்கித் தேரை விடு விடு என்று சொன்னான். தேர் செல்லாது போகவே கயிலைமலையை பெயர்த்து எடுக்கலுற்றான் இராவணன். அவனது முடியையும் தோளையும் நெடு நெடுவென இற்று வீழ விரல் வைத்த பெருமானின் பாதத்தை என் மனம் நினைவுற்றது என்று கடுகிய தேர்செலாது என்ற பாடலிலும் மூர்த்தி தன் மலைமீது என்ற பாடலிலும் அப்பர் சுவாமிகள் குறிப்பிடும் அறிய புராண செய்தி நமக்கு கிடைக்கிறது. இந்த வரலாற்றுக் குறிப்பு இவ்விரு பாடல்கள் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை.
             
            திருச்சிற்றம்பலம்

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது
      கருதேல் உன் வீரம் ஒழிநீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன்
      மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவுஉற்று அரக்கன்
      வரை உற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரல்உற்ற பாதம்
      நினைவு உற்றது என்தன் மனனே   தி.4 .14பா.11

இலங்கைக் கோமான் பாகனைப் பார்த்துத் திருக்கயிலையை நோக்கித் தேரோட்டு என்று ஏவினான் . அவன் கடுந்தேராயினும் கயிலாயம் மீது விடும் தேர் அன்று, விட்டாலும் செல்லாது  உன் வீரம் வீரபத்திரனிடத்தில் வேண்டாம்  வீரத்தை விட்டொழி என்னை முடுகுவது அறம் அன்று என்று மொழிந்தான் . அவனை மிகச் சினந்து விடுவிடு என்று முடுகினான் அவனும் முடுக்கினான் தேரை . சென்றான் இராவணன் விரைவுற்றான் வரையை எடுக்க முயன்றான் . முடியும் தோளும் நெடுநெடு என இற்று விழுந்தன .அவ்வாறு நிகழ ஊன்றி பெருவிரலைக் கொண்ட திருவடிகளை  என் உள்ளம் எண்ணலுற்றது . விரலின் ஆற்றல் தோன்றக் கூறினார் .

மூர்த்திதன் மலையின் மீது
      போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலால் பாய்ந்து
       உடன் மலையைப் பற்றி,
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
       அடர்த்து நல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்
       திருப் பயற்றூரனாரே       தி.4 .32பா.10

திருப்பயற்றூரனார் சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக என்று அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டு நோக்கி  மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார்   தேத்தெத்தா - இசை குறித்த அநுகரணம்
                        

             திருச்சிற்றம்பலம்
                      
         போற்றி ஓம் நமசிவாய

சிவனடிமைவேலுசாமி 

No comments:

Post a Comment