rudrateswarar

rudrateswarar

Thursday, June 16, 2016

தியாகேசர் திருவுருவம்

                                                          ஓம் நமசிவாய

தியாகேசர் திருவுருவம்


இருபத்தைந்து  மாகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றான சோமாஸ் கந்தர் வடிவம் போல தியாகராசர் தோன்றினாலும் அவர் சோமாஸ் கந்தர் வடிவிலும் வேறுபட்டு அதற்கும் அப்பாற்பட்டவர் என்பது கீழ்கண்ட அப்பர் வாக்கால் அறியலாம்  

பையம் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வான் உள்ளத் தானும் கையஞ்சுநான்குஉடை யானைக் கால்விர லால்அடர்த் தானும் பொய்அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சின் அப்புறத் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே. தி4 ப 4 பா 10.

படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப் படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

இந்த திருமுறைப்பாடலில் ஐயஞ்சின் என்பதற்கு 5x5=25 இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்தவன் என்று உரை செய்துள்ளார்கள். சிவம் முப்பத்தாறு  தத்துவங்களையும்  கடந்தவன் அல்லவா?

ஐயஞ்சின் அப்புறத்தான் என்பது இருபத்தைந்து மாகேசுவர மூர்த்தங்கட்கு உட்பட்டவர் அல்லர் என்பதே சரியாக இருக்கும். 25 மாகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றான சோமாசுகந்தர் வடிவம் போல தியாகராசர் தோன்றினாலும் அவர் சோமாசுகந்தர் வடிவிலும் வேறுபட்டு அதற்கும் அப்பாற்பட்டவர் என்பது உணரத் தக்கது என்பது அடியேனின் தாழ்ந்த கருத்து

இது தருமபுரம் மடத்து பதிப்பில் உள்ளது கீழ்கண்ட உரை.

பை - நச்சுப்பை. அம் சுடர் - அழகிய மாணிக்கச் சுடர். நாகப்பள்ளி கொள்வான் - பாம்பணையான் (திருமால்). திருமால் தன் உள்ளத்தில் வீதி விடங்கப் பெருமானை உடைமை திருவாரூர்ப் புராணத்தாலும் தியாகேசத் திருமேனியாலும் அறியப்படும். பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தான் என்ற உண்மையை உணர்த்தும் ஓவியம் அது. கை அஞ்சு நான்கு - இருபது கை. உடையான் - இராவணன். கால் விரலால் என்றது இருபதுகையனை ஒரு கால்விரல் முனையால் அடர்த்தல் சிவபிரானுக்கு மிக எளிதென்றதாம். திருவருள் பெற விரும்பி முயல்வார்க்குப் பொய்யை அஞ்சுதலும், வாய்மைகளே பேசுதலும், இறைவன் பொருள் சேர் புகழே புரிதலும் இன்றியமையாதன.  ஐயஞ்சின் அப்புறத்தானானாலும், பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு அருள் செய்ய இப்புறத் தானாகி அருள் செய்வான்.

ஐயைஞ்சு - (5x5=25) நிலம் முதல் 25 தத்துவம்.

சிவதருமோத்தரம். 10. சிவஞானயோகவியல் 32.

எண்ணுக பிரதானத்தை இருபத்துநாலாம் வேரென்று

எண்ணுக புருடன்தன்னை இருபத்தைந்தாவானென்றே

எண்ணுக இருபத்தாறாம் பொருளெனஈசன் தன்னை

எண்ணுக இணையில் ஈசன் இருபத்தேழாவானென்றே

பிரகிருதி மாயையில் தோற்றப்பட்ட இருபத்துநான்கு தத்துவத்துக்கும் வேராதலால் அதற்கு காரணம் என்று அறிக. ஆன்மாவை அம்மாயைக்கு மேலாக இருபத்தைந்தாக எண்ணப்பட்டவன் என்று அறிக. அதற்கு மேலாக இருபத்தாறாம் பொருளென்று எண்ணப்பட்டவர் ஈசுரன் என்று அறிக. அதற்கு மேலாய் இருபத்தேழாம் பொருளாக எண்ணப்பட்டவர் பரமேசுவரன் என்றறிக .



சங்கற்பநிராகரணம் சங்கிராந்தவாதி. (அடி. 40)

எத்திறத் தினதருள் இயம்புக அன்றியும்
நிறைந்து நீயாய் நின்றனை யேனும்
மறைந்தைம் புலனால் வாரா யென்றும்
கரணம் எல்லாங் கடந்தனை என்றும்
மரணம்ஐ யைந்தின் அப்புறத் தென்றும் 40

திருக்களிற்றுப்படியார் பாடல் எண் : 1

அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

பொழிப்புரை :

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக; அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அம்மையப்பர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார் சிவன் ஆறத்துவாவினும் பொதுவியல்பாற் கலந்திருப்பினுந் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் இப்படிக் கலந்திருப்பினுங் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார்.

 

                               திருச்சிற்றம்பலம்

                         போற்றி ஓம் நமசிவாய

 

சிவனடிமைவேலுசாமி



No comments:

Post a Comment