rudrateswarar

rudrateswarar

Saturday, March 30, 2013

சிவத்தொண்டா? சிவத்தொழிலா?

                                                           ஓம் நமசிவாய

 
சிவத்தொண்டா ? சிவத்தொழிலா ? 


சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள் 

1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூஜை நடத்துவது 

2.ஆலய உழவாரப்பணி செய்வது 

3.ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு 

4.திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது 

5.பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து  அடியார்களின் பெருமைகளை கூறுதல்  

6.ஐந்தெழுத்தின் மகத்துவம் பற்றிக் கூறி ஜெபிக்க சொல்வது 

7.தீப ஒளி இல்லாமல் இருக்கும் ஆலயங்க ளில் விளக்கேற்ற்றுவது , அடியார்களை அப்பணிக்கு  தூண்டுவது தீப எண்ணை வாங்கித் தருவது 

8.ஒரு கால பூஜை இல்லாத கோவில்களில்  பூஜை நடக்க ஏற்பாடு செய்வது 

9.பூஜை செய்ய சிவாச்சாரியார் இல்லையா? அதற்கு ஏற்பாடு  செய்து  பூஜை  நடத்தலாம்  அவருக்கு ஊதியம்  வழங்க  மக்களிடம்  வீட்டுக்கு  50,100 என  கேபிள் T .V  செலவைப் போல என்று சொல்லி நம்  ஊர்  கோவிலில்  பூஜை நடந்தால்  நம் ஊர் செழிக்கும் என்று எடுத்துக்கூறி செயல்படுத்துவது

10.கோவில்களில் ஓதுவாமூர்த்திகள் இருந்தால் சிறு பிள்ளைகளுக்கு திருமுறை களை கற்றுக்கொடுக்க சொல்லலாம் அதனால் அவருக்கும் பிழைப்பு கிடைக்கும்

11.ஆலயம் வரும் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது 

12.புண்ணியகாலம் உற்சவ காலங்களில் ஆலய தூய்மை செய்தல் தேர் வடம் இழுத்தல் 

13.மதமாற்றத்தை தடுக்கலாம் 

14.சைவ சின்னங்களான திருநீறு ருத்ராட்சம் அவைகளை அணியச் சொல்லி அதனால் வரும் பயன்களை எடுத்துக்கூறலாம் 

15.மெய்கண்டசாத்திரங்கள் பற்றி சிறு சொற் பொழிவு போன்று உள்ளூர் தமிழாசிரியர்க ளை கொண்டு நடத்தலாம் நாம் அழைத்தால் போதும் அவர்கள் மறுக்க மாட்டார்கள் 

16.கொஞ்சம் நல்ல ஒரு அணியாக இருந்தீர் களானால் 12 ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய குடமுழுக்கு நடத்தலாம் 

17.கோ சாலை பசுக்களை பராமரிக்க உதவலாம் 
மேற்சொன்ன இந்த சிவ கைங்கரியங்கள்  நடந்தாலே அந்த ஊர் செழிக்கும்.நம்முடைய   குழந்தைகளை மேற்சொன்ன செயல்களுக்கு  ஊக்குவிக்கலாம் 
தமிழகம் இந்த ஆண்டு வறண்டு போக இதுவும் ஒரு காரணம் கடவுள் பக்தி மக்களி டம் குறைய குறைய வறுமை  தாண்டவ மாடும் எவ்வளவு கோயில்கள் பராமரிப் பில்லாமல் இருக்கின்றன இது நம் சொத்தில்லையா?  நம் மூதாதையர் 
சேர்த்து வைத்ததில்லையா ? புதிய கோவில்கள் பாஸ்ட் புட்  கோவில்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்  இந்த ஜென்மத்தில் அது  போன்று ஒரு கோவில் நாம் கட்ட முடியுமா ?
சிவதொழில் 
மேற்சொன்ன எல்லாப் பணிகளையும் தொழிலாக காசு பண்ணும் கூட்டம் இருக்கிறது அவர்கள் ஒரு 25 ரூபாய் சாமி  படத்தை 350 ரூபாய்க்கு விற்கிறார்கள் யாத்திரை வழி நடத்துவது  கட்டணத்துடன்   பயிற்சி வகுப்பு நடத்துவது  தனக்கென  ஒரு  குரூப் சேர்ப்பது அதற்கு செலக்ட் செய்ய  ஜாதகம் போட்டோ கேட்டு வாங்கி 
பிளாக்மெயில்  செய்வது ஏதாவது ஒரு வழியில் கவர்ச்சியான அறிவிப்பு கொடுத்து நாங்கள் இப்படி செய்வோம்  அப்படி செய்வோம் என்று  கூறுவார்கள்  சிவனை மிஞ்சி  எவனும் இல்லை குரு என்பவர் உண்மையான ஆன்மீகம் 
என்ன என்று எடுத்து கூறி வழிகாட்ட  வேண்டும் அதை விடுத்து மரத்தடி ஜோதிடர்  மாதிரி வழிநடத்துவது ஆன்மீகம் அல்ல  ஜோதிடர்களை குறை  சொல்வது நம் நோக்கம் அல்ல ஜோதிடம் என்பது வான சாஸ்திரம் அதை மக்களும் எதற்கு பயன் படுத்த வேண்டுமோ அதற்கு பயன்படுத்த வேண்டும் தொட்டது  தொண்ணூறுக்கும் ஜோதிடம் கேட்டால் அவர்கள் தெரிகிறதோ  இல்லையோ கதை ஒன்று உருவாக்கி காசு பார்ப்பார்கள் ஆன்மீகத்தை முழுநேர  தொழிலாக கொண்டவர்கள் இருக்கிறார்கள்

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம்  
ஆன்மீகத்தை தலைப்பாக கொண்ட ஒரு வலைப்பூவில் கடன் தரக்கூடாத நாட்கள் என்று அவர் குரு உபதேசம் செய்தார்  என்று எழுதப்பட்டிருந்தது இவ்வளவுக்கும் அவர்  ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர்  இந்த கடன் தரக்கூடாத நாட்கள் பற்றி நமது வாசன் பஞ்சாங்கத்திலும் மற்ற பஞ்சாங்கத்திலும் ஆண்டு தோறும் வருகிறது இதோ அந்த பாடல்


ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை,
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும்  
மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே


இது ஜோதிட கிரக சிந்தாமணியில் உள்ள பாடலாகும்

பரணி,கார்த்திகை,திருவாதிரை,ஆயில்யம்,
மகம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை,
பூரம், பூராடம்,பூரட்டாதி  இந்த 12 நட்சத்திரத்திலும் கடன் வாங்கியவர் மட்டுமல்ல கொடுத்தவரும் பயணம் 
போனவரும் நோயில் படுத்தவரும் மீள மாட்டார் என்கிறது  இதையே கோளறு பதிகத்தில் சம்பந்த சுவாமிகள் 2 ஆவது பாடலில் ஒன்பதோடு ஒன்று ஏழு   பதினெட்டொடு ஆறும் உடனாய நாட்கள் என்று அருளியுள்ளார் 

ஆனால் அவர் இந்த விஷயத்தை தன்  குருநாதர் கண்டுபிடித்து  சொன்னது  போல  அவர்  வெளியிட்டிருக்கிறார்  அப்படி என்றால் குரு எப்படி சிஷ்யன் எப்படி? எப்படி மக்களை திசை திருப்புகிறார்கள் என்று பாருங்கள்
மேலும் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார் என்கிறார் 

மீண்டும் மீண்டும் அடியேன் வலியுறுத்துவது ஆன்மீகம் என்பது பரிகாரம் செய்வதோ பணத்திற்காக மந்திரம் ஜெபிப்பதோ அல்ல. ஆன்மா கடைத்தேற என்ன வழியை நால்வர் அருளி உள்ளார்களோ அதை பின்பற்றுவது தான் அதனால் தான்  நாலு பேர் போற வழியில் போங்கள் என்று பெரியவர்கள் சொன்னார்கள் அந்த நால்வர் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் சுவாமிகள் 

ஆன்மீக தொண்டுக்கு உதாரணம் 

1.சிவாயநமஹ என்ற திருப்பெயர் கொண்ட திரு .லட்சுமி நாராயணன் அவர்கள்  தீபம் திருக்குழு என்ற அமைப்பின் மூலம் விளக்கெரியாத கோவில்களை கண்டு பிடித்து அங்கு தீபம் ஏற்றி வைக்கிறார் பிரதிபலன் ஒன்றும்  எதிர்பார்க்காமல் நமிநந்தி அடிகள் போல அவருடைய  செல் எண்  9884126417 அவர் பணியில் 
உங்களையும் இணைத்து கொள்ளுங்கள் 


2.பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு ஆடியோ சி .டி க்களை இலவசமாக விநியோகம்  செய்து வருகிறார்  சிவ .சுப்பிரமணியம் அவர்கள் அவருடைய செல் எண்  9841087040 http://www.shivasevagan.blogspot.in/

மக்கள் கேட்டு பயனுற வழங்குகிறார்
இதுபோல உண்மையான இறைஅடியார்கள் இன்னும் வருவார்கள்


                                     

                          போற்றி  ஓம் நமசிவாய


                                      
                              திருச்சிற்றம்பலம் 

Friday, March 29, 2013

அப்பர் பெருமான் காமெடி பாத்திரமா ?

                                                      ஓம் நமசிவாய            



அப்பர் பெருமான் காமெடி பாத்திரமா ?

திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் அப்பர் சுவாமிகள் வேடத்தில்  சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்திருப்பார் அந்த  வேடம் எப்படி காமெடி வேடமாகும் நகைச்சுவை என்பது சிரிக்க வைக்கும்  படியாகவும் சிந்திக்க வைக்கும் படியாகவும் 
இருக்க வேண்டும் கோடானுகோடி மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும்  மகா மட்ட மான கேவலப்பிழைப்பாக இருக்க கூடாது.   அப்பர் சுவாமிகள் எவ்வளவு உயர்ந்தவர் எவ்வளவு அடிமைத்தனத்தோடு சிவத் தொண்டு ஆற்றியவர் .சைவர்களின் குருவான அவரை நக்கல் நையாண்டி செய்ய எப்படி துணிவு வந்தது இந்த நடிகனுக்கு அவர் பெருமையை அறியாத சிறு மதி படைத்த ஜென்மம் விவேக் .ஆட்டைக் கடித்து  மாட்டைக் கடித்து விவேக் இன்று கில்லாடி என்ற படம் மூலம் சைவர்களை கடிக்க வந்திருக்கிறார் உடனடியாக  அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் இல்லை யேல் படம் தடை செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்ய அடியார்கள் திருக்கூட்டம் தயங்காது. செய்யும் கண்டனம் ஓங்கி ஒலிக்கட்டும் . சைவ நெறி பரவட்டும் 


செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே



                                                          
                                                                சிவஞான போதம் 12ஆம் சூத்திரம்

சிவவேடத்தையே  சிவன் என்றும் ஆலயம் என்றும்  பாவிக்கவேண்டும் மேற்சொன்ன சிவஞானபோத 12ஆம் சூத்திரத்தில் உள்ள சாராம்சம்.

சைவம் அநாதி சிவன் அநாதி கேட்க ஆளில்லை  மத உணர்வை  கொச்சைப் படுத்தி  எடுத்த இந்த படம் படுதோல்வியை சந்திக்கும் இது சிவன் மேல் ஆணை 



                                      போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 



Thursday, March 28, 2013

ஆன்மீகம்

                                             ஓம் நமசிவாய 

 

ஆன்மீகம்

        
ஆன்மீகம் எனும் வார்த்தை இப்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை ஆன்மீகம் என்றால் கடவுளைப் பற்றி பேசுவது என்று எண்ணுகிறோம் கடவுளைப் பற்றி என்றால் கடவுளிகம் என்றோ கடவுளிசம் என்றோ தானே சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட் பேசுவது கம்யூனிசம் மார்க்சிஸ்ட் பேசுவது மார்க்சிசம்


நாம் கடவுளைப்பற்றி பேசுவதை ஏன் ஆன்மீகம் என்கிறோம்? ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பத்திரிகை ஆன்மீக நிகழ்ச்சி என்று எல்லாமே ஆன்மீகம் தான் ஏன்? ஆன்மீகம் என்பது ஆன்மா (உயிர்) பற்றியது ஆன்மாவை மீட்டு எடுக்கும் ஒரு இயல் இகம் ஆன்மீகம் கடவுளைப் பற்றி பேசுவதற்கும் உயிர் எனும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம் ? கடவுளை நாம் வணங்கு வதோ அல்லது வழிபடுவதோ இந்த ஆன்மா தான் செய்த கர்ம வினைகளை தீர்த்து உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே சொத்து வேண்டும் பணம் வேண்டும் கார் வேண்டும் பங்களா வேண்டும் இன்னும் பிற உலக சுகங்களுக்காக அல்ல.


ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ? ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே. பெயரை நீக்கி பிணம் என்று பேரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன?


ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும்


பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார் அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார் இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரமன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்


பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும். விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்


சூரசம்காரம் செய்யும் முன் தேவர்களுக்கு முருகப்பெருமான் திருசேய்ங்கலூரில் சிவ பூஜை செய்து காட்டினார் அவர் தேவ சேனாபதி அல்லவா ?தலைவர் அல்லவா? அவர் பூஜை செய்த பிறகு தேவர்களிடம் கேட்டார் உங்கள் கஷ்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா ? என்றார் நீங்கள் சிவபூஜை செய்ய மறந்ததால் என்றுகூறி சிவாம்சமான முருக பெருமான் சிவபூஜை செய்து காட்டினார் தலைவன் என்பவன் தான் காட்டிய வழியில் தானே நடந்து காட்ட வேண்டும் என்று தலைவனுக்கான இலக்கணத்தையும் உணர்த்தினார்


ஆதலால் ஆன்மீகம் என்பதாவது இறைவனை வணங்கி ஆன்மாவை உலகத் தளைகளில் இருந்து மீட்டு எடுக்கும் செயலாகும்


இன்று ஆன்மீக இயக்கங்கள் என்ன செய்கின்றன முன்னோர் வழி செல்லாமல் புது புது மந்திரம் கண்டு பிடிப்பது புது புது இறை மார்க்கங்களை புகுத்துவது என்று சுய நலநோக்கிலும் பணம் பண்ணும் நோக்கிலும் செல்கின்றன


மூல முதல்வன் மூல விக்கிரகமாக உள்ளே வீற்றிருக்க சிறு தேவர் வழிபாட்டை பிரதானமாக்கி இறைவனை இரண்டாம் நிலைக்கு கொண்டு வருவது மிகவும் வருத்தம் உதாரணம் திருநள்ளாறு. தர்பாரண்யேஸ்வரரை வணங்க விடாமல் இலவச தரிசன பக்தர்களை சனி தரிசனத்தோடு கோவில் நிர்வாகமே வெளியே அனுப்புகிறது சனைச்சரன் என்ற அவருக்கு ஈஸ்வர பட்டம் வேறு கொடுத்து சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள்.மூல கருணா மூர்த்தி அவர் இருக்க சனி ,ராகு ,கேது இவர்கள் என்ன செய்ய முடியும் .இது கடவுளை நம்பாதவர்கள் செயல்,இவர்கள் போலிகளால் ஏமாற்றப்படுவார்கள் நம்பி செய்யும் எந்த காரியமும் வீண்போகாது அது இறை வழிபாட்டுக்கும் சேர்த்து தான்


சமீப காலமாக சிவமூர்த்தங்களில் ஒன்றான பைரவர் பூஜை போய் சொர்ண பைரவர் பூஜை பிரபலமாகி விட்டது அவருடைய மூல மந்திரம் என்று நூற்றுக்கணக்கில் ஜெபம் செய்யவேண்டுமாம் தினம் ஒரு திருமுறை படியுங்கள் அதில் உள்ள மந்திரசக்தி பலன் தெரியும் .சம்பந்தர் அப்பர் இவர்கள் சைவத்தின் இரு கண்கள் என்பார் சேக்கிழார். இவர்கள் வாக்கினை மதிக்காதவர்கள்
சைவர்களா ? இவர்களுக்கு சிவன் தெய்வமும் அல்ல.


ஆராய்ச்சி என்று இவர்களாக கிளப்பி விட
வேண்டியது ரொம்ப ஆழமா உள்ளே சென்று பெயரில் சொர்ணம் வைத்துள்ள இவரை வழிபட்டால் பணம் கொட்டும் என்று கவர்ச்சி விளம்பரம் வேறு. கேவலம் பணத்திற்காகவா ஆன்மீகம் .ஆன்மீகம் என்ற சொல்லின் அர்த்தமே அடிபட்டுவிட்டதே


ஆன்மீகம் புத்தக வடிவிலும் இணைய வடிவிலும்வியாபாரம்ஆகிவிட்டது

இன்னொருவேதனையானவிஷயம் பரிகாரம் பண்ணுவதற்கு கோவிலுக்கு செல்வார்கள் ஆனால் இறைவனை தொழவேண்டும்
நம்மை படைத்து நமக்கு இது காறும் வாழ்வு
கொடுத்தற்கு நன்றிகடன் செலுத்த செல்வ தில்லை ஒவ்வொரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்க்க கடவுள் என்ன கார்பரேட் கம்பெனி முதலாளியா?


கடவுள் கடந்தும் இருக்கிறார் உள்ளாகவும் இருக்கிறார்

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ என்பார் மாணிக்கவாசகர் நம் வினைக்கு ஏற்ப என்ன நமக்கு உண்டோ அதை தருவார் ,நம் கடன் (இறை)பணி செய்து இருப்பதே . அப்போ வேலை வெட்டிக்கு போகவேண்டிய தில்லையா ?பணி என்பதில் அதுவும் அடக்கம் இப்படி ஆளுக்கொரு காரணம் வைத்து கடவுள்களின் எண்ணிக்கையை பெருக்கி மாற்றார் நகைக்கும்படி செய்கிறார்கள்


இது எப்படி இருக்கிறது தெரியுமா? சைவமாக இருந்த மக்கள் அசைவம் சாப்பிட ஆசைப் பட்டு உக்கிரதெய்வங்களை உருவாக்கி ஆடு கோழி மாடு என்று பலியிட்டு தான் சாப்பிட, சாமி கோர உருவத்தோடு இருப்பதால் அவருக்கு அசைவம் படைக்கபடவேண்டும் அப்போது தான் அவர் சாந்தி பெற்று கேட்டதை கொடுப்பார் என்று ஒரு கிளை விதியை உருவாக்கி கொண்டார்கள்


ஒரு உயிரை பலி கேட்பவர் இறைவனாக இருக்க முடியாது இறைவன் உயிர்களை காபந்து பண்ணுகிறவர் . அவரவர் வினைக் கேற்ப பலன் முன்பின் இருக்கலாமே தவிர உயிர்களிடத்தில் பலி கேட்கும் அளவுக்கு கடவுள் ஒன்றும் கொடுமைக்காரன் அல்ல
                                       
                                          

                       போற்றி ஓம் நமசிவாய 
                                          


                                                    
                            திருச்சிற்றம்பலம் 

Wednesday, March 27, 2013

தினமலர் நாளிதழுக்கு கண்டனம்

                                                         ஓம் நமசிவாய

 

தினமலர் நாளிதழுக்கு கண்டனம்  

தினமலர் நாளிதழ் தங்களின்  இணைய தளத்தில் உள்ள ஆன்மீக வகுப்பறை என்ற தலைப்பில் நாயன்மார் குருபூஜை என்பது என்ன? தலைப்பில்  நாயன்மார்  குருபூஜை என்பது  அவர்களின்  ஜென்ம நட்சத்திரத்தில் அதாவது அவர்களின் அவதார தினத்தில்  என்று   வெளியிட்டிருக்கிறார்கள் 
அது தவறான தகவல்  குரு  பூஜை என்பது நாயன்மார்களின் முக்தி தினம் என்பதே சரி



நாயன்மார் குருபூஜை என்பது என்ன?
டிசம்பர் 06,2012
சிவனை முழுமுதற்கடவுளாக வழிபட்ட 63 அருளாளர்களை நாயன்மார் என்பர். இவர்களின் ஜென்மநட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் குருபூஜை நடத்துவர். பகலில் அபிஷேக ஆராதனையும், இரவில் புறப்பாடும் நடக்கும். இப்போது பல கோயில் களில் நாயன்மார் குருபூஜையே இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.


அடியேன் இதை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் அவர்களின் பத்திரிகையை இகழ்வதோ  குற்றம் கூறுவதோ  அல்ல ஆனால் சைவ சமய தகவல்கள் புராணங்கள் தவறில்லாமல் வெளியிடவேண்டும் என்பதற்காகவே. ஏனெனில் சைவம் எமது வாழ்வியல் நெறி .  எம்போல சிவனடியார்கள் மனம் இதனால் வேதனைப்படுகிறது சிவன் அநாதி சைவம் அநாதி அதற்காக கேட்பாரில்லையா? வேற்று மதத்தில் இப்படி உண்மைக்கு மாறான தவறுகளை ஏற்று கொள்வார்களா? அதற்கு கண்டனமே இந்த பதிவு .மக்களை ஆன்மீகத்தின் பால் திருப்புவது பெரும் பாடாகிறது இதில் கருத்துக்குழப்பம் வந்தால் எப்படி இருக்கும்  இதில் தவறான தகவல் அறிந்தால் யார் சொல்வது உண்மை அவ்வளவு பெரிய பத்திரிகை பொய் சொல்லுமா? என்ற சந்தேகம் கொள்ள வாய்ப்பாகும். இனி வரும் காலத்தில் இது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் 

                                 

                                      போற்றி ஓம் நமசிவாய
                                           

                                 திருசிற்றம்பலம்

தினத்தந்திக்கு ஒரு கண்டனம்

                                                        ஓம் நமசிவாய



தினத்தந்திக்கு ஒரு கண்டனம்

 

அருள் தரும் ஆன்மீகம் என்ற இணைப்பு   புத்தகத்தில் (26-03-2013) தவறான தகவலை  அளித்துள்ளார்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த பதிவு

 

1.  சந்திரனுக்கு இரண்டு தலங்கள் 

கடைசிப்பக்கத்தில் திருநாவுக்கரசரும்  
அப்பூதியடிகளும் திங்களூரை சொந்த  ஊராக  கொண்டவர்கள் என்று உள்ளது 
அப்பூதியடிகள் அவர்கள் திங்களூரை  சேர்ந்தவர் என்பதில் தவறில்லை ஆனால் திருநாவுக்கரசு சுவாமிகள் திருஅவதாரம்  செய்தது திருமுனைப்பாடி நாட்டில்
திருவாமூர்  தற்போதைய கடலூர் மாவட்டத்தில் உள்ளது 
 
அடியேன் இதை  சுட்டிக்காட்டுவதன் நோக்கம் அவர்களின்  பத்திரிகையை  இகழ்வதோ குற்றம் கூறுவதோ  அல்ல. 
ஆனால் சைவ சமய தகவல்கள் புராணங்கள் 
தவறில்லாமல் வெளியிட வேண்டும்  
என்பதற்காகவே.ஏனெனில்  சைவம்  எமது  வாழ்வியல் நெறி . 

ஏற்கெனவே இது போன்ற தவறு கண்டு
அடியேன் தினத்தந்தியின்  சென்னை  அலுவலகத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளேன்    
 
இனி இது போல் வராது என்று உறுதியளித் தார்கள்.வரும்  பிரசுரங்களை  தணிக்கை  செய்யாமல்வெளியிடுகிறார்கள். எம்போல  சிவனடியார்கள் மனம்  இதனால்  வேதனைப் படுகிறது. சிவன் அநாதி சைவம் அநாதி 
அதற்காக கேட்பாரில்லையா?வேற்று  மதத்தில் இப்படி உண்மைக்கு மாறான 
தவறுகளை ஏற்றுக்கொள்வார்களா?   அதற்கு கண்டனமே இந்த பதிவு மக்களை ஆன்மீகத்தின்பால் திருப்புவது  பெரும் பாடாகிறது இதில்  கருத்துக்குழப்பம் வந்தால் எப்படி இருக்கும்  இதில் தவறான  தகவல்  அறிந்தால் யார் சொல்வது உண்மை  அவ்வளவு பெரிய பத்திரிகையில் தவறாக  வெளியிடுவார்களா? என்ற சந்தேகம் கொள்ள வாய்ப்பாகும்.  இனி வரும் காலத்தில் இது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக்  கொள்ள வேண்டும் என்று 
வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் 
 
                                   

                   போற்றி ஓம் நமசிவாய 
 
                                 
                          திருசிற்றம்பலம்         

Tuesday, March 26, 2013

தவ முதல்வர் சம்பந்தர்

                                                       ஓம் நமசிவாய



தவ முதல்வர் சம்பந்தர்

                          
தவம் சிவத்தைக் காட்டும் சம்பந்தர் தவ முதல்வர் என்று  சேக்கிழார் பெருமான் கூறுகிறார் எப்படி?  அவர் தவம் செய்தார் எங்கு எப்போது என்று பெரியபுராணத்தில்  எங்கும் சொல்லப்படவில்லை


சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை  அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்


பிறகு எப்படி  சேக்கிழார் பெருமான் தவமுதல்வர் சம்பந்தர் என்று கூறினார் 
தவம் என்றால் என்ன?  தவம்  என்றால் ஐம்புலனடக்கம் செய்து காட்டில் இறைவனை  தியானித்து இருப்பது  என்பர்  புலனை அடக்கி விடலாம்    புலன்  அடங்கி விடும் ஆனால்  மனத்தை அடக்கமுடியுமா  
மனத்தை வெல்வது முடியாத காரியம் 
அதை வென்று விட்டால் தவத்தில் வென்றவராகலாம் மனதை வெல்ல முடியாமல் மிகப்பெரிய தவ முனிவர் என்று சொல்லும் விசுவாமித்திரர்  பட்ட கதை நமக்கு தெரியும் திருஞானசம்பந்தர் சுவாமிகள் தலங்கள்தோறும் சென்று இறைவனை தொழுது பதிகம்  பாடி வரும் நியமத்தில் திருவொற்றியூர் பெருமானை தரிசனம்செய்து இருந்தார் 

திருமயிலையிலே சிவநேசர் எனும் பெரும் வணிகர் இருந்தார் சிவபெருமானின்  மேல் உள்ள மாறா அன்பினால் சிவநேசர் எனப் பெற்றார் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து அரனடியே சிந்தித்து இருப்பார் அவர்  சம்பந்தப்பெருமான் சிவஞானம் பெற்றதை யும் பரசமய இழி செயல் கண்டித்து சைவமே மெய் சமயம் என்று நிலைநாட்டிய தன்மை யினையும் அடியார்கள் சொல்லக்கேட்டு ஞானசம்பந்தர் திருவடிகளில் அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன்  இரவும் பகலும் அவரை புகழ்வதும் அன்பர்களிடம் கேட்பது மாக  இருந்தார்

குபேரனை ஒத்த என்று சொல்லும் அளவுக்கு செல்வம் இருந்தும் மகப்பேறு இல்லாமல் போய்விடுமோ என்று இருந்த காலத்தில் 
அவர் செய்த சிவதொண்டின் பயனாக பூமகள் போன்று ஒரு பெண் பிறந்தாள் தன் மகளின் அழகையும் அவளின் மேன்மையான பண்புகளையும் கண்டு இன்பத்துடன் இவளை  மணம் செய்து கொள்ளும் மணமகனே இந்த அளவற்ற  செல்வங்களுக்கெல்லாம் உரிமையுடைய வன்  ஆவான் என்று கூறினார் 

அத்தகைய நாளில் பாண்டிய நாட்டில் சமணர்களை வாதில் வென்றதும் 
பாண்டியனுக்கு வெப்பு நோய் நீக்கியது திருநீற்றின் மேன்மையை உலகுக்கு  உணர்த்தியது  எல்லாம் கேட்ட  சிவநேசர் ஞானசம்பந்தர் இருந்த திசையை வணங்கி சுற்றமும் மற்றவரும் கேட்கும் வண்ணம் எனது மகள் பூம்பாவையையும் எனது பெருஞ் செல்வத்தையும் சீர்காழிப்பிள்ளையாருக்கு  தந்தேன் என்று கூறினார்  அப்படிப்பட்ட சூழ் நிலையில் நச்சுப்பாம்பு ஒன்று தீண்டி பூம்பாவை இறந்து விட்டாள் மிகவும் துயருற்று அவளின் சாம்பலை ஒரு குடத்தில் இட்டு வைத்திருந்தார் 

திருவொற்றியூரில் பிள்ளையார் தரிசனம் முடித்து மயிலைக்கு வருகிறார் என்ற செய்தி கேட்ட சிவநேசர் நகர் முழுதும் அலங்கரித்து அவரை வழிமேல் சென்று நிலத்தில் விழுந்து வணங்கினார் அப்போது சிவநேசரின் அடிமைப்பண்பு  குறித்தும் அவர்  மகள் அரவம் தீண்டி இறந்ததையும்  சம்பந்தரிடம் அடியார் பெருமக்கள் கூறினர் அது கேட்ட பிள்ளையார் திருக்கபாலீஸ்வரம்  சென்று வணங்கி போற்றி தொழுது இருந்து  சிவநேசரிடம் உமது மகளுடைய எலும்பு 
சாம்பல் உள்ள குடத்தினை கொண்டு வந்து கோயில் வாசலில்  வையும் என்றார் 

அந்த குடத்தினருகே சென்று பூம்பாவை என்று அழைத்து இறைவனிடம் தொழுது மட்டிட்ட என்ற திருப்பதிகம் பாடி உயிர்ப்பித் தருளினார்  பூம்பாவை உருவம்  பெற்று திருமகளை போன்ற பேரழகுடன்   குடத்தினுள் இருந்து தோன்றினார் 

பூம்பாவையின் அழகை கூந்தல் , நெற்றி, புருவம், கண்கள், நாசி, வாய், காது,கழுத்து, முகம்,கைகள்,கொங்கை,கொப்பூழ்,முடி
நேர்த்தி,அல்குல்,தொடை,முழந்தாள் , கணுக்கால்,குதிகால்,பாதம் என்று பதினான்கு 
பாடல்களில் சேக்கிழார்  விவரிக்கிறார் 

காரணம் அவருடைய  நோக்கம் பூம்பாவை என்னும் பெண்ணை வர்ணிப்பதல்ல 

பிரமன்தான் படைத்த திலோத்தமையின் 
அழகில் மயங்கி  அவள்  அழகை  நான்கு முகங்களாலும் கண்டு மகிழ்ந்தான்  அவளை விட மேலான நல்ல தன்மைகள் பூம்பாவையாரிடம் விளங்க சிவபுண்ணிய  
விளைவாகிய பதினாறு வயதுடைய  சீர்காழித் தலைவரான ஞானசம்பந்தர்  நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின் 
அருட்பெருக்கையே ஆயிரம் முகங்களால் காண்பார் ஆனார்

இந்த ஒப்பு நோக்கும் விதத்திலேயே 
பூம்பாவையின் அழகை வர்ணித்துள்ளார் 
இத்தகைய பேரழகுடைய பெண்ணை அவர் நிராகரித்தார் என்பதற்காக 

சிவநேசர் சம்பந்தரின்  திருவடியின் மேல்  வணங்கி நின்றார் உமது மகளை  இல்லத் துக்கு அழைத்து செல்லுங்கள் என்றார் 
சிவநேசரோ அவளை தாங்கள்  மணம் புரிந்து அருளுங்கள் என்றார் அது கேட்ட சம்பந்தர் பெருமானார் நீங்கள் பெற்ற  மகள் பாம்பு தீண்டி இறந்து கபாலீசரின்அருளால்  நாம் உயிர்ப்பித்ததால் நீர் சொல்வது 
சரியல்ல என்றார்

அளவற்ற ஆண்டுகளை  தன் ஆயுளாக கொண்ட பிரமன் தான் படைத்த 
திலோத்தமையின் அழகில் மயங்கினான்  ஆனால் பதினாறு வயது உள்ள சம்பந்தர் தான் 
உயிர்ப்பித்த பெண்ணை மகள் என்று கூறுகிறார்

இந்த கூற்றே அவரை தவமுதல்வர் என்று 
சொல்ல வைத்தது பதினாறு  வயது கட்டிளம்  காளையான சம்பந்த சுவாமிகள்   தன் மனம் 
அடக்கிய தன்மையே அவரை  தவமுதல்வர்  ஆக்கியது அதற்கு  ஈடு இணை வேறில்லை 

                                                  


                      போற்றி ஓம் நமசிவாய 

                                                                      

                           திருச்சிற்றம்பலம்        

Friday, March 22, 2013

காரைக்கால் அம்மையார் புராணம்

                                                      ஓம் நமசிவாய 

காரைக்கால் அம்மையார் புராணம் 
                                  
                                           
           "பேயார்க்கும் அடியேன்" 


பிறந்த தலம் - காரைக்கால் 
முக்தி தலம்  - திருவாலங்காடு 
குருபூசை திருநட்சத்திரம் -பங்குனி சுவாதி 
                               29-03-2013 வெள்ளிகிழமை 


தந்தை தாய் இல்லாத பிறப்பிலியாகிய இறைவன் எம் அம்மை என்று சொல்லிய பெருமைக்கு உரியவர்   
 
காரைக்காலிலே வணிகர் தலைவராய் தனதத்தர் என்பவர் இருந்தார் . அவருக்கு பெண்மகவு பிறந்தது அக்குலம் தழைக்க வந்த அம்மகவுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர் தளிர்நடை பயிலும் நாள் தொட்டு பரமன் மேல் ஆராக்காதல் கொண்டு  விளையாடும் போதும் சிவநாமம் மொழிவார் திருத்தொண்டர்களை கண்டால் அன்போடு தொழுவார் இப்படி வளர்ந்து மங்கைபருவம் அடைந்தார்


நாகையில் வணிகர் குலத்தில் நிதிபதி என்பவர் தனது புதல்வர் பரமதத்தனுக்கு அம்மையாரை மணம் பேசி முடித்தனர் எல்லாவகை சீரோடும் சிறப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது
தனதத்தர் தனது சம்பந்தியின் அனுமதியோடு தன் மகளுக்கு தன் மாளிகை அருகிலேயே தனிக்குடித்தனம் வைத்தார் பரமதத்தன்


வாணிபம் செய்து தன் திருமனைவியாருடன் இனிது வாழ்ந்தார் அப்படி வாழுங் காலத்தில் வாணிபஞ்செய்யுமிடத்தில் இருந்தபோது அவரை காண வந்தவர்கள் இரண்டு இனிய மாங்கனிகளை தந்தார்கள் அவர் அவற்றை பணியாட்கள் மூலம் இல்லத்துக்கு கொடுத்தனுப்பினார் அம்மையாரும்  அக்கனி களை வாங்கி வைத்தார் அவ்வமயம் ஒரு திருத்தொண்டர் அங்கு வந்தார் இறைஅடியவ ரைக் கண்டதும் அவருக்கு அமுதளிக்கும் பொருட்டு இருந்தார் அதற்கு சிறிது கால தாமதமாகும் என்று கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை படைத்தார் மூப்பும் பசியும் மிக்க அடியவர் உண்டு களித்து அம்மையாரை வாழ்த்திச் சென்றார்
 

பரமதத்தரும் உணவருந்தும் பொருட்டு உச்சி
வேளையில் வந்தார் அவருக்கு அம்மையார் அன்னத்தோடு பருப்பு நெய் மற்றும் மாங்கனி படைத்தார் அக்கனி உண்ட பரமதத்தர் அதன் சுவையில் விரும்பி இன்னொரு கனியை எடுத்து வருமாறு அம்மையாரிடம் கூறினார்
இதை கேட்டதும் அம்மையார் இன்னொரு கனியை அடியவருக்கு அளித்து விட்டோம் கணவர் கேட்கிறார் என்ன செய்வது என்று மனம் தளர்ந்தார் கலங்கினார் சிவபெருமானை நினைந்து தேவ தேவா உன்னடியார்க்கு ஒரு கனியைப் படைத்து விட்டேன் கணவர் இவ்வாறு மறு கனியை
கேட்பார் என்று எண்ணவில்லை என் செய்வேன் கருணைக்கடலே அடியார் அல்லல் போக்கும் அருட்கடலே என்று தம்மை மறந்து அவரை நினைந்துருகினார் இறைவன் திருக்கருணையினால் அவர் திருக்கரத்தில் அதிமதுரக் கனி ஒன்று வந்தது அதைக் கணவனுக்கு தந்தார் அவர் அதை உண்டு அமுதினும் இனிய சுவையை கண்டு
அம்மையாரிடம் நான் அனுப்பிய கனி இது அன்று. மூன்றுஉலகத்திலும் இப்படிப்பட்ட கனி கிடைப்பது அரிது இது எப்படி உனக்கு கிடைத்தது ? என்று கேட்டார்


அம்மையார் திருவருளை வெளிப்படுத்து வதும் தவறு பொய் உரைப்பதும் தவறு என்று முன்னிலும் கலங்கினார் முடிவில் உண்மையை உரைப்பது என்று நடந்ததை கூறியருளினார் திருவருளை தெளியாத பரமதத்தன் அம்மையாரை நோக்கி சிவபிரான் அருளால் வந்தது உண்மையா யின் இன்னும் ஒரு கனி தருவித்து கொடு
என்றார் . அம்மையார் அரனாரை சிந்தித்து இன்னொரு கனி தாரும் இல்லையேல் எனது மொழி பொய்மையாகும் அருட்கடலே எனை ஆட்கொள்ளும் என்று வேண்டினார்
மணிகண்டர் திருவருளால் மாங்கனி வந்தது அதை கணவன் கையில்தந்தார் அவர் வாங்கியதும் அக்கனி மறைந்தது


இச்செயல் கண்ட பரமதத்தன் நடுநடுங்கி அம்மையாரை தெய்வம் என்று எண்ணி தன் சிறுமையை நினைந்து வருந்தினான்
தெய்வமாகிய அவர் தனக்கு தொண்டு செய்வதா என்று கருதி பிரிந்து வாழ்வதே தக்கது என்று முடிவெடுத்தான் கடல் கடந்து வாணிபம் செய்வதாகக் கூறி புறப்பட்டார் தான் தெய்வமாக எண்ணி மனதால் வழிபடும்
அம்மையாருக்கு மன வணக்கஞ் செலுத்தி கலமேறி புறப்பட்டான்
 

அயல்நாட்டில் வாணிபத்தில் பெறும் பொருள் ஈட்டி தாய்நாடு வந்து காரைக்கால் வராமல் பாண்டிநாடு சென்று தங்கி பண்டங்களை விற்று பெரும் தனவந்தனான் அவ்வூர் வணிகன் தன் மகளை மணம் செய்து வித்தான் பரமதத்தன் தனது புது மனைவி யுடன் வாழ்ந்தாலும் காரைக்காலில் உள்ள அம்மையாரிடம் அச்சம் கொண்டே இருந்தார் குபேரன் போல் அளவற்ற நிதி குவிந்தது இளைய மனைவி கருவுற்று பெண் மகவைப் பெற்றாள் அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரின் திருநாமம் சூட்டினார்
 

அங்கே காரைக்காலில் அம்மையாரின் உறவினர்கள் பரமதத்தன் பாண்டி நாட்டில் இருப்பதை அறிந்து அம்மையாரை அழைத்து கொண்டு கணவனுடன் சேர்க்கும் பொருட்டு சென்று ஒரு சோலையில் தங்கி அம்மையா ருடன் வந்திருப்பதை ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்கள் அச்செய்தி கேட்ட பரமதத்தன் தமது  இளைய மனைவியை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தார் கணவனை கண்டு இளம் பெண்மான் போல் நின்ற அம்மையின் அடியில் பணிந்து உமது திருவருளால் வாழ்வேன் இக்குழந்தைக்கு உமது திருநாமம் சூட்டியுள்ளேன் அருள் செய்யும் என்றான்


அது கண்ட அம்மையார் ஒதுங்கினார் சுற்றத்தினர் பரமதத்த இது என்ன புதுமை மனைவியை வணங்குகிறாய் உன் செயலின் உட்பொருள் யாது என்று வினவினார்கள்
பரமதத்தன் ஐயன்மீர் இவர் மானுடமல்லர் இவர் நற்தெய்வமாகும் இதை நான் முன்னமே அறிவேன் அதனால் தான் என் மகளுக்கு இத்தெய்வத்தின் பெயரை சூட்டியுள்ளேன் ஆதலால் அடி பணிந்தேன்
நீவிரும் அடிபணியுங்கள் என்றான் சுற்றத்தினர் அதுகேட்டு அதிசயித்தனர்
அது கேட்ட அம்மையார் கொன்றை அணிந்த இறைவன் கழல் போற்றி ஒன்றிய சிந்தையுடன் உரைக்கின்றார் கணவனுக்காக சுமந்த இந்த அழகு தசைப்பொதியை கழித்து உன்பால் உள்ளவர்கள் போற்றும் பேய் வடிவம் எனக்கு அருளும் என்று இறைவனைத் துதித்தார் அப்போது அம்பலவாணர் திருவருளால் என்பு வடிவாகி விண்ணும் மண்ணும் போற்றும் பேயுருக் கொண்டார் மலர்மழை பொழிந்தது வான துந்துபி ஒலி உலகமுழுதும் நிறைந்தது சுற்றத்தினர் இந்த அற்புதம் கண்டு தொழுது அஞ்சி ஓடி விட்டார்கள் அம்மையார் ஒருங்கிணைந்த மெய்ஞான உணர்வுடன் உமாபதியை அற்புத திருவந்தாதி என்ற திருநூல் பாடித் துதித்தார் பொற் பதம் போற்றும் நற்கணங்களில் நானும்
ஒன்றானேன் என்று மகிழ்ந்தார் பின்னர் இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம் பாடியருளினார்


முக்கண் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலையை சென்று நேரில் தரிசிக்க நினைத்தார் அம்மையாரின் பேயுருக் கண்டு வியந்து கண்டவர்கள் அஞ்சி ஓடுகின்றார்கள் அவ்வுரு கண்டவர்கள் தாங்கள் நினைத்ததை கூறுகின்றார்கள் அதை கேட்ட அம்மையார் அண்டர் நாயகர் என்னை அறிவார் அறியாத இம்மாக்களுக்கு நான் எவ்வுரு கொண்டிருந் தாலென்ன என்றார் மனவேகத்தினும் மிக விரைவாக கயிலை அருகில் சென்றார் பரமன் இருக்கும் மலையை பாதத்தினால் மிதிக்க அஞ்சி தலையால் நடந்து சென்றடைந்தார் . அம்பிகை அது கண்டு அதிசயித்து தேவதேவரே தலையினால் என்பு வடிவுடன் வரும் இவ்வுருவின் அன்பு தான் என்னே என்று வினவினார்
 

உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை. பெருமை மிக்க இவ்வடிவத்தை நம்பால் வேண்டிப்பெற்றனள் என்று கூறி அருகில் வந்த அம்மையாரை நோக்கி பிறப்பில்லாத புண்ணியர் "அம்மையே " என்று இந்த உலகம் உய்ய அழைத்தருளினார்


அங்கணன் அம்மா என்று அழைத்ததும் அம்மையார் அப்பா என்று பங்கய பாதமலரின் மேல் பணிந்தார் அவரை நோக்கி இறைவர் " நம்பால் வேண்டுவது யாது? என்று அருள் புரிந்தார் அம்மையார் அடிபணிந்து கேட்கின்றார் அறவாழி அந்தணரே உம்மிடம் ஒருபோதும் நீங்காத இன்ப அன்பு வேண்டும் , பிறவாமை வேண்டும் ஒருக்கால் பிறப்புண்டேல் உம்மை ஒருபோதும் மறவாமை வேண்டும் என்று வேண்டினார் இறைவர் அவ்வரங்களை அளித்து தென் திசையில் தொண்டை வளநாட்டிலே பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் நமது திருநடனத்தினைக் கண்டு கொண்டிரு என்று கருணை புரிந்தார்


கயிலையில் பெருமானிடம் விடை பெற்று திருவாலங்காடு அருகில் வந்து கால் வைக்க அஞ்சி தலையால் நடந்து சென்று பெருமானின் ஊர்த்துவ தாண்டவக்காட்சியை கண்டு இன்புற்று மூத்த திருப்பதிகங்கள் இரண்டு பாடியருளினார் இறைவன் திரு நடனம் என்றும் காணும் பேற்றை நடராஜர் அருகில் அம்மையாரை நாம் காணலாம்


அம்மையப்பர் இல்லாதவரும் உலகுக்கே அம்மையப்பராகவும் உள்ள அரனார் அம்மையே என்று அழைக்க பெற்று அவருடைய திருநடனத் திருவடியின் கீழ் என்றும் இருக்க பெற்ற அம்மையாருடைய
பெருமையை அளக்க அகில உலகத்திலும் ஆளில்லை இதை சேக்கிழார் பெருமான்



மடுத்தபுனல் வேணியினார் அம்மையென மதுரமொழி 
கொடுத்தருளப் பொற்றாரைக் குலவியதாண் டவத்திலவர் 
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை 
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா  
  
   
என்று கூறுகின்றார் 
     பெருமையை அம்மையார் விரும்பவில்லை 
பெருமை தானே  வந்து தான்  சிறப்படையும் பொருட்டு அம்மையாரை சார்ந்தது என்ற  அழகு உள்ளத்தை உருக்ககூடியது  
                                            
                                                    அம்மை அடிமலர் வாழ்க 
அம்மையாரின் குரு பூசை அன்று ஆலயம் 
சென்று அவர் பெற்ற அந்த  நற்பேறு நமக்கும் கிட்டும் பொருட்டு அரனார் பாதம் பணிவோம் 
                                          


                       போற்றி ஓம் நமசிவாய 

                                              

                             திருச்சிற்றம்பலம்     

Thursday, March 21, 2013

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு

                              ஓம் நமசிவாய 



சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு


1. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்
மே 7முதல் மே 21 வரை  15 நாட்கள் 
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகத்தின் சார்பில் மே 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 15 நாள் இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகத்தின் சார்பில் சைவ சித்தாந்தப் பயிற்சி கடந்த 1987ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 27ஆவது ஆண்டாக இந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த இலவசப் பயிற்சியில் சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை முன்னாள் பேராசிரியர்களும், பிற சித்தாந்த அறிஞர்களும் பாடங்களை நடத்துகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை முன்னாள் பேராசிரியர் ஆ.ஆனந்தராசன் இந்த வகுப்பின் இயக்குநராக உள்ளார். சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளை அறிய விரும்புவோருக்குப் பொது நிலை வகுப்பும், அடிப்படைகளை முன்பே கற்றவர்கள் மேலும் விரிவாகப் பயில்வதற்கு சிறப்பு நிலை வகுப்புகள் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்பில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வகுப்பு நடைபெறும் 15 நாள்களும் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்களைத் தங்களது முகவரி எழுதிய உறையுடன் தலைவர், சைவநெறிக்கழகம், 809/8, பிரதான சாலை, விக்கிரமசிங்கபுரம்- 627 425'' என்ற முகவரிக்குக் கடிதம் எழுதி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சைவநெறிக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி எண் :9780480891,   9994146395

 

2.  கோவையில் கௌமார மடத்தில் 

மே 10முதல் மே 20 வரை     11நாட்கள் 
கோவை சின்னவேடம்பட்டி சிரவை ஆதீனம் கௌமார மடாலயத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இலவச சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
 

இது தொடர்பாக தென்னக சைவ சமயப் பேரவைச் செயலர் ச.த. ஆறுமுகம் வெளியிட்ட செய்தி:
  

கோவை சிரவை ஆதீனம் கௌமார மடாலயமும், தென்னக சைவ சமயப் பேரவையும் இணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. மொத்தம் 60 மாணவர்கள்சேர்க்கப்படுவார்கள். மாணவர்களுக்குப் பயிற்சிக் காலம் முழுவதும் உணவும் தங்குமிடமும் திருமடத்தால் ஏற்பாடு செய்யப்படும். மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

சைவ சமயக் கோட்பாட்டின் இலக்கணம் என்று போற்றப்படும் சைவ சமய வாழ்வியல் வழிபாடுகள் என்ற தலைப்பில் பாடங்களுடன் செய்முறைப் பயிற்சியும் நடத்தப்படும்.

            சைவ சமயத்தில் வாழ்வியல் வழிபாடுகள் என்ற தலைப்பில் திருமணங்கள், புதுமனை புகுவிழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, நீத்தார் நினைவு நாள் உள்ளிட்ட அனைத்து சைவ சமய விழாக்கள் மற்றும் வழிபாடுகள் குறித்த பாடங்களுடன் செய்முறைப் பயிற்சியும் கற்றுத் தரப்படும். அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சுய முகவரியிட்ட ரூ.5 அஞ்சல் உறையுடன் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதினால் விண்ணப்பம், விதிமுறைகள் அனுப்பி வைக்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப். 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். செயலர், தென்னக சைவ சமயப் பேரவை, 129-5, கருணாநிதி நகர், பீளமேடு முதன்மைச் சாலை, சவுரிபாளையம் அஞ்சல், கோவை -28.

அலைபேசி எண் :  9994457586

விருப்பமுள்ள சிவநேய செல்வர்கள் இந்த இலவச வகுப்புகளில் கலந்து கொண்டு  பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

                                          



                          போற்றி ஓம் நமசிவாய

                                                


                              திருச்சிற்றம்பலம் 

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்

                                                          ஓம் நமசிவாய 

 
 கடவுளுக்குகண்கொடுத்தவர்கள் 

     

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர்

திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து வைக்காமலும் வெறுமனே மந்திரம் சொல்லாமலும் தமது கண்மலரை தோண்டி எடுத்து இறைவரை அன்புடன் அர்ச்சித்து வழிபட்டார்

அவருடையஅன்புக்கு மகிழ்ந்த பெருமான் வெளிப்பட்டு கண்ணை மலராக அர்ச்சித்த படியால் கண்ணன் என்ற நாமம் சூட்டி சக்ராயுதம் கொடுத்தருளினார்

 
திருக்காளத்தியில் திண்ணன் மிக்க அன்புடன் சிவபெருமானை ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்பு மிகுதியில் வழிபட்டார் அவர் ஈசன்பால் உள்ள அன்பினால் வாயையே குவளையாக  கொண்டுநீரும் தலையை பூக் கூடையாகவும் மாமிசத்தை சுட்டு தன் வாயால் சுவை பார்த்து நெய்வேத்தியம் எனவும் படைத்தார்

அவருடையஅன்பை சிவகோசரியார் எனும் அவ்வாலய சிவாச்சாரியார்க்கு உணர்த்தும் பொருட்டு  தன் கண்ணில் குருதி வழியும் படி செய்தார் வேட்டைக்கு சென்ற திண்ணனார் திரும்பி வந்து பார்த்து மனம் பதைத்தார் யார் இக்காரியம் செய்தது என்று தேடுகிறார் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்தும் இரத்தம் நின்ற பாடில்லை உடனே எதையும் யோசிக்காமல் ஊனுக்கு ஊன் மருந்து என்று கண்டேன் என்று கூறி தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமான் கண்ணில் அப்பினார் உடனே இரத்தம் நின்றது அப்போது நன்று நன்று என்று ஆனந்தத்தில் துள்ளினார் ஆனால் உடனே அடுத்த கண்ணிலும்குருதி  வழிய ஆரம்பித்தது

உடனேதாமதிக்காமல் இதற்கு மருந்து தெரிந்து கொண்டேன் எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறது அக்கண்ணை எடுத்து அப்புவேன் என்று தனது இடது காலை தூக்கி அடையாளமாக பெருமானின் கண்மீது வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணை தோண்ட முயற்சித்த அக்கணம் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் நில்லு கண்ணப்ப என்று மும்முறை திருவாய் மொழிந்தருளினார்

அப்போது மாலயன்வானவர் பூமாரி பொழிந்தனர் காளத்தியப்பர் கண்ணப்பா நீ என் வலப்பாகத்தில் என்றும் மாறாது நிற்பாய் என்று அருள் புரிந்தார் இதைவிட வேறு பேறு என்ன இருக்கமுடியும்

ஆனால் திருமால் கண்ணனாயினார் ,இவர் கண்ணப்பராயினார் காரணம் திருமால் சக்கரம் வேண்டி பயன் கருதி கண்ணை அளித்தார் இவர் பயன் கருதாமல் அன்பின்   மிகுதியால் கண்ணை இடந்தார் அதனால் இவர் பெருமை அவர் பெருமையினும் பன்மடங்கு உயர்ந்தது

நமது சமயக்குரவர் நால்வர் பெருமக்களும் கண்ணப்ப நாயனாரை போற்றி துதித்தனர்



                         போற்றி ஓம் நமசிவாய


                             திருச்சிற்றம்பலம்

Wednesday, March 20, 2013

போற்றி ஓம் நமசிவாய

                                                     ஓம் நமசிவாய 



 போற்றி ஓம் நமசிவாய 
                

ஐந்தெழுத்து  எனும் அற்புத மந்திரம் இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும்.  வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டமுழுதும் தருவோய் நீ  எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணை வடிவான 
எம்பெருமான் சிவபரம்பொருளே 
        
அப்படிப்பட்ட மூலப்பரம்பொருளின் மூல மந்திரம்  முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த 
ஸ்ரீகண்ட பரமேஸ்வரனைஅதிதெய்வமாக கொண்ட மிக எளிமையான நமசிவாய மந்திரம் அதற்கு மேல் மந்திரம் வேறில்லை 
  
அம்மந்திரத்தை தினம்108முறை  ஜெபிக்கவோ அல்லது 
நோட்டு புத்தகத்தில்எழுதியோ செய்யலாம்நேரம் 
வாய்த்தால் காலை மாலை என  இரு  வேலையும் ஜெபிக்கலாம் இல்லையென்றால்  மாலை 4.30முதல் 7.30வரை 
நித்ய பிரதோஷ காலத்தில்கண்டிப்பாக செய்யவேண்டும்  
நேரம்இல்லை என்று சாக்கு தேவையில்லை 
அதிபட்சம் 6 நிமிடம் ஆகலாம் தவிர பட்ச பிரதோஷம் வரும் திரயோதசி அன்று சிவாலயம் 
சென்று  பூஜையில்கலந்து கொண்டு  ஐந்தெழுத்தை  அங்கு  ஜெபிக்கவோ  எழுதவோ செய்யலாம் இதன்  இம்மை  நன்மைகள் கண்கூடாக  தெரியும்
    இதைப் படிக்கும் அன்பர்கள் தயவு கூர்ந்து சிலபேருக்காவது இம்மகிமையை  எடுத்துசொல்லி அவர்களை 
நல்வழிபடுத்துங்கள் 
    கஷ்டங்களுக்காக மதம் மாறி அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள் 
ஆனால்நம் சமயத்திலே ஜெபம்,வழிபாடு செய்வதில்லை 
ஏனெனில் முறையாக வழிகாட்டுதல்  இல்லாமையும் போலிகளுமே காரணம்  இதற்கு நீங்கள் எந்த கட்டணமோ பெரிய பூஜையோ காணிக்கையோ பரிகாரமோ  மந்திர தந்திரமோ அஞ்சன மையோ  எதுவும் தேவையில்லாமலே சகல பிரச்சினைகளிலும் இருந்து மீளலாம்  நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் இல்லையென்றால் இரவு தூங்கி காலைகண் விழிப்போமா 
நம் ஜீவனே சிவனாகும்
   
இந்த ஆன்மீக விழிப்புணர்வு நம்மால் சில 
பேருக்காவது வந்து நல்  வழி  காட்ட திருவருள்கூடி உள்ளதால் அடியேன் அதற்காக படிவம் 
அச்சடித்து கடந்த ஒருவருட  காலமாக  வழங்கி வருகிறோம் அதனால் பயன் பெற்றோர் ஏராளம்  எனவே இச்சேவையை 
பயன்படுத்தி பயன்பெறுங்கள்  உங்கள் ஊரிலும் இச்சேவைபெற அழையுங்கள் 
இப்படிவம் பெறுபவர்கள் தயவு செய்து அதை வேறுஉபயோகத்திற்கு (விபூதிமடிக்க)பயன்படுத்தாமல் சரியான நோக்கத்திற்கு பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டுகிறோம் 
                                                   
                                                        
                                       போற்றி ஓம் நமசிவாய 
                                               திருச்சிற்றம்பலம் 

Saturday, March 16, 2013

அடியார் பெருமை

                                              ஓம் நமசிவாய 

 

அடியார் பெருமை 

         

சிவனடியார்கள் சிறப்பு பற்றி திருத்தொண்டத் தொகை புனையவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரம் புரிந்தார்.அதுவே  மிகப்பெரிய அடியார்களுக்குப் பெருமை நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி
அதை மூலமாக வைத்தே தெய்வ சேக்கிழார் அவர்கள் பெரியபுராணம் நமக்களித்தார்
 

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தமக்கென வாழாமல் சிவத்தையே சிந்தித்தும் அடியார் தொண்டும் சிவாலய கைங்கரியமும் வாழ்க்கையின் உன்னத இலட்சியம் என வாழ்ந்து காட்டியவர்கள்


உலக அறம் பற்றி கவலை கொள்ளாமல் சிவ புண்ணியத்தையே சிந்தித்தனர் அதனால் தான் பிள்ளைக்கறி சமைக்கவும் ,தன் மனைவியையே அடியாருக்கு கொடுக்கவும் மகன் பிணத்தை மூடி வைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கவும் ,திருமணம் அன்று மகள் கூந்தல் அரிந்து கொடுக்கவும் , கண்ணையே பெயர்த்து வைக்கவும்,தனக்கு இல்லாவிட்டாலும் கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு கொடுக்கவும் ,சிவவேடத்துக் காக உயிர் கொடுக்கவும் தந்தையே ஆனாலும் சிவபூசைக்கு தடை நேர்ந்தால் காலை வெட்டவும் கூடிய செயற்கரிய செயல்கள் அவர்களால் செய்ய முடிந்தது
 

உலக அறம் மாறுபடும் நாம் பார்த்து மாற்றிக் கொள்ளலாம் உதாரணமாக 15 வருடங்க ளுக்கு முன் மிதிவண்டியில் இரண்டு பேர் பயணம் செய்தால் முன்பகுதியில் விளக்கு இல்லையென்றால் அபராதம் போடுவார்கள் இப்பொழுது இல்லை 20 வருடங்களுக்குமுன் வானொலி பெட்டிக்கு உரிமம் பெற வேண்டும் இப்பொழுது இல்லை .இன்னொன்று நாம் யாரையாவது கொலை செய்யலாம் என்று நினைத்தால் குற்றமாகாது ஆனால் அப்படி நாம் எண்ணிவிட்டாலே அந்த செயல் முடிந்ததாக கடவுளிடம் நமக்கு தண்டனை கிடைக்கும் அது தான் உலக அறத்துக்கும் சிவ அறத்துக்கும் உள்ள வேறுபாடாகும் மனைவி தவிர மற்ற பெண்களை தவறான
கண்ணோட்டத்தில் நோக்கல் அடுத்தவர் களின் துன்பம் கண்டு இன்புறுவது என இன்ன பிற செயல்களைப் பட்டியலிடலாம்.
 

செயற்கரிய செய்தோர் பெரியோர் என்பது பெரியோர் வாக்கு அப்படிப்பட்ட உயர்ந்த அடியவர் பெருமையை உலகுக்கு கூற
இறைவனே தன் நிழலாகவே உள்ள சுந்தர மூர்த்திசுவாமிகளை அனுப்பினார் என்றால் எவ்வளவு பெருமைக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள் .
 

நமது அவ்வை பிராட்டியார் அவர்கள் பாடல் மூலம் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் திருவிளையாடல் திரைப்படத்தில்  இடம் பெற்ற பாடலைக் காண்போம்


பெரியதுகேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிதுபெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன்கரிய மால் உந்திவந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியிற்சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!


  
பாடலின் பொருள் பெரியது எது ? என்று முருகப்பெருமான் கேட்க அவ்வைப் பிராட்டியார் கூறுவதாக கேள்விபதிலாக
 
இந்த உலகம் மிகப் பெரியது அப்போ இந்த உலகம் தான் பெரிதா? இல்லையில்லை அதை பிரமன் படைத்தான் அப்போ பிரமன் தான் பெரியவனா? இல்லையில்லை பிரமன் திருமாலின் உந்தியில் (தொப்புள்) வந்தவன் அப்போ திருமால் பெரியவனா? இல்லையில்லை திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன் அப்போ கடல் தான் பெரிதா? இல்லையில்லை அந்த அலைகடலும் குறுமுனி அகத்தியர் கையில் அடக்கம் அப்போ அகத்தியர் தான் பெரியவரா? இல்லையில்லை அகத்திய முனி கும்பம் எனும் மண் பானையில் பிறந்தவன் அப்போ மண்ணாகிய பூமி தான் பெரிதா ? இல்லையில்லை இந்த பூமி ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனுக்கு ஒரு தலைதாங்கற அளவு தான் அப்போ ஆதிசேடன்கிற பாம்பு தான் பெரிய ஆளா? இல்லையில்லை அந்த பாம்பு உமை யம்மையின் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கிறது அப்போ உமையம்மை தான் பெரியவரா? இல்லையில்லை உமையம்மை இறைவன் சிவபெருமானின் இடப்பக்கத்தில் ஒடுக்கம் அப்போ சிவபெருமான் தான் பெரியவரா? இல்லையில்லை பெருமானே அடியார் பெருமக்களின் உள்ளங்களில் அவர்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறார் என்றால் அவ்வளவு மகிமை வாய்ந்த அடியவர்கள் நாயன்மார்கள் பெருமையை என்ன வென்பது என்பது தான் பாடலின் பொருள் 
 
சூரியனின் வெய்யில் வெப்பம் நம் மீது பட்டால் நாம் தாங்கிக்கொள்ளுவோம் ஆனால் சூரிய ஒளி பட்டு சூடேறியுள்ள சுடுமணல் மீது நாம் காலூன்றி நிற்க இயலுமா? அப்பொழுது சூரியனைவிட மணல் உயர்ந்ததா என்றால் இல்லை அது போல இறைவனின் அருள்பெற்ற இறை அடியார்கள் உயர்ந்தவர்கள் அவர்களை குருவாக ஏற்று அவர்களை வணங்கி போற்றினால் இறைவன் குரு மூலம் நமக்கு அருளுவான்
      
எனவே இறை அடியார்களாகிய நாயன்மார் களின் குரு பூசை நாளில் நாமும் அவர்கள் தாள் பணிந்து இறைவன் அருளுக்கு உகந்தவர்களாவோம் 

                          

                   போற்றி ஓம் நமசிவாய


             திருச்சிற்றம்பலம் 

                                            

1008 திருமுறை போற்றி திரட்டு -2



                                       ஓம் நமசிவாய

1008 திருமுறை போற்றி திரட்டு -2

                                                                        (336-690)

முன்பாகி நின்ற முதலே போற்றி 337
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி 340
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 360

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி 380
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
ஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 400

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி 420
எதிரா உலக மமைப்பாய் போற்றி
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 440

முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி 460
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநுறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 480



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி      
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி      
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்போற்றி
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி  
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி   500 
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி    520

குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வேபோற்றி என்வைப்பேபோற்றி 
முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி 
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி 
விரி கடலுலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே  போற்றி 
கருமுகிலாகிய கண்ணே  போற்றி 
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி  

அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி  540
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
 
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்போற்றி
வெளியிடைஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
  
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றுஓர் பற்று இங்கு அறியோன்போற்றி 560

குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி 
தென்னாடுடைய சிவனே போற்றி   

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவாபோற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன்போற்றி
களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்றுஇங்குஅருளாய்போற்றி

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி    580
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன்போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவியகண்ணேபோற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
 
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்புஅமர்பூவணத்துஅரனேபோற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிதுஆகிய தெளிவே போற்றி 600

தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளே  போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 620
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
புயங்கப் பெருமான் போற்றி போற்றி
புராண காரண போற்றி போற்றி
சய சய போற்றி
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி
வான விருத்தனே போற்றி                 640

எங்கள் விடலையே போற்றி
ஒப்பில் ஒருத்தனே போற்றி
உம்பர் தம்பிரான் போற்றி
தில்லை நிருத்தனே போற்றி
எங்கள் நின்மலா போற்றி போற்றி
போற்றிஓம்நமச்சிவாயபுயங்கனேமயங்குகின்றேன்
போற்றிஓம்நமச்சிவாயபுகலிடம்பிறிதொன்றில்லை
போற்றிஓம்நமச்சிவாயபுறமெனைப்போக்கல்கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி.

போற்றியென் போலும்பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றி
நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின்கருணைவெள்ளப் புதுமதுப்புவனம்
காற்றியமானன் வானம் இருசுடர்க்கடவுளேபோற்றி
என்னைக் கண்டு கொண்டருளு போற்றி
விடவுளே உருக்கியென்னைஆண்டிடவேண்டும்போற்றி
உடலிது களைந்திட்டொல்லை உம்பர்தந்தரளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
சங்கராபோற்றி மற்றோர் சரணிலேன் போற்றி 660
வெண் நகைக்கரிய வாட்கண் மங்கையோர் பங்கபோற்றி
மால்விடை யூர்தி போற்றி
இழித்தனன் என்னை யானே எம்பிரான்போற்றிபோற்றி
பழித்தனன் உன்னை என்னைஆளுடைப் பாதம்போற்றி
பிழைத்தவைபொறுக்கைஎல்லாம்பெரியவர்கடமைபோற்றி
ஒழித்திடு வ்வாழ்வு போற்றி உம்பர்நாட்டெம்பி ரானே.
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல்மங்கை கூறவெண் நீற போற்றி
செம்பிரான்போற்றி
தில்லைத்திருச்சிற்றம்பலவபோற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி 
வானோர் குருவனே போற்றி
எங்கள் கோமளக் கொழுந்து போற்றிவருக என்றென்னைநின்பால்வாங்கிடவேண்டும்போற்றி
தருகநின் பாதம் போற்றி
தீர்ந்தஅன் பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்மைஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ்சயின்று வானோர்க்கமுதம்ஈ வள்ளல்போற்றி
ஆர்ந்தநின்பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.
போற்றி இப்புவனம் நீர்தீக் காலொடு வானமானாய் 
போற்றி எவ்வுயிர்க்கும்தோற்றமாகிநீதோற்றமில்லாய்
போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாய் ஈறின்மையானாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே                                 
செங்கணா போற்றி ! திசைமுகாபோற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி !
ஏழ் இருக்கைஇறைவனே போற்றியே போற்றி. 690

           போற்றி ஓம் நமசிவாய 

               திருச்சிற்றம்பலம்