rudrateswarar

rudrateswarar

Thursday, March 21, 2013

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்

                                                          ஓம் நமசிவாய 

 
 கடவுளுக்குகண்கொடுத்தவர்கள் 

     

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர்

திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து வைக்காமலும் வெறுமனே மந்திரம் சொல்லாமலும் தமது கண்மலரை தோண்டி எடுத்து இறைவரை அன்புடன் அர்ச்சித்து வழிபட்டார்

அவருடையஅன்புக்கு மகிழ்ந்த பெருமான் வெளிப்பட்டு கண்ணை மலராக அர்ச்சித்த படியால் கண்ணன் என்ற நாமம் சூட்டி சக்ராயுதம் கொடுத்தருளினார்

 
திருக்காளத்தியில் திண்ணன் மிக்க அன்புடன் சிவபெருமானை ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்பு மிகுதியில் வழிபட்டார் அவர் ஈசன்பால் உள்ள அன்பினால் வாயையே குவளையாக  கொண்டுநீரும் தலையை பூக் கூடையாகவும் மாமிசத்தை சுட்டு தன் வாயால் சுவை பார்த்து நெய்வேத்தியம் எனவும் படைத்தார்

அவருடையஅன்பை சிவகோசரியார் எனும் அவ்வாலய சிவாச்சாரியார்க்கு உணர்த்தும் பொருட்டு  தன் கண்ணில் குருதி வழியும் படி செய்தார் வேட்டைக்கு சென்ற திண்ணனார் திரும்பி வந்து பார்த்து மனம் பதைத்தார் யார் இக்காரியம் செய்தது என்று தேடுகிறார் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்தும் இரத்தம் நின்ற பாடில்லை உடனே எதையும் யோசிக்காமல் ஊனுக்கு ஊன் மருந்து என்று கண்டேன் என்று கூறி தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமான் கண்ணில் அப்பினார் உடனே இரத்தம் நின்றது அப்போது நன்று நன்று என்று ஆனந்தத்தில் துள்ளினார் ஆனால் உடனே அடுத்த கண்ணிலும்குருதி  வழிய ஆரம்பித்தது

உடனேதாமதிக்காமல் இதற்கு மருந்து தெரிந்து கொண்டேன் எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறது அக்கண்ணை எடுத்து அப்புவேன் என்று தனது இடது காலை தூக்கி அடையாளமாக பெருமானின் கண்மீது வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணை தோண்ட முயற்சித்த அக்கணம் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் நில்லு கண்ணப்ப என்று மும்முறை திருவாய் மொழிந்தருளினார்

அப்போது மாலயன்வானவர் பூமாரி பொழிந்தனர் காளத்தியப்பர் கண்ணப்பா நீ என் வலப்பாகத்தில் என்றும் மாறாது நிற்பாய் என்று அருள் புரிந்தார் இதைவிட வேறு பேறு என்ன இருக்கமுடியும்

ஆனால் திருமால் கண்ணனாயினார் ,இவர் கண்ணப்பராயினார் காரணம் திருமால் சக்கரம் வேண்டி பயன் கருதி கண்ணை அளித்தார் இவர் பயன் கருதாமல் அன்பின்   மிகுதியால் கண்ணை இடந்தார் அதனால் இவர் பெருமை அவர் பெருமையினும் பன்மடங்கு உயர்ந்தது

நமது சமயக்குரவர் நால்வர் பெருமக்களும் கண்ணப்ப நாயனாரை போற்றி துதித்தனர்



                         போற்றி ஓம் நமசிவாய


                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment