rudrateswarar

rudrateswarar

Friday, June 21, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 3

                                     ஓம் நமசிவாய

குரு நமசிவாயர்


அண்ணாமலைக்கு வா என்று அழைத்து அண்ணாமலையாரால் ஆட்கொள்ளப்பட்ட  ஞானதபோதர் குகை நமச்சிவாயர் .அவர் ஒரு சிவயோகியாக,சித்தராக சமாதி  அடைந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.

அவருக்கு இளம் நமச்சிவாயர் என்றொரு சீடன் இருந்தார். அவர் தன் குருவின் அருகிருந்து பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் ஊஞ்சலிட்டு அதில் நித்திரை கொள்வது வழக்கம்.இளம் நமசிவாயர் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருப்பார் அப்போது ஒருநாள் திடீரென குரு அருகில் இருந்தபோதும் 'குலுக்' என்று நகைத்தார். ''நமச்சிவாயா என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.அதற்கு சீடர்  நமச்சிவாயர், ''ஐயனே திருவாரூரில் தியாகேசப்பெருமானின் திருவீதி உலா வரும்போது, நாட்டியப் பெண்கள் ஆடிக் கொண்டு வர அவர்களில் ஒருத்தி கால் இடறி விழ அங்கிருந்த அனைவரும் நகைக்க யானும் நகைத்தேன்'' என்றார்


பிறிதொருநாள் தம் குரு அருகில் இருந்தபோது தம் ஆடையைப் பற்றி பரபர என தேய்த்தார். ''ஏன் இவ்வாறு ஆடையைப்பற்றித் தேய்த்தாய் " என்று குகை நமச்சிவாயர் கேட்ட போது. ''பெருமானே! தில்லை பொற்சபையிலே திரைச் சீலை இட்டிருந்தார்கள்.அதனருகே குத்து விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அதன் திரியை ஓர் எலி பற்றி இழுக்க விளக்குச் சுடர் திரைசீலையில் பட்டு தீப்பற்றிக்கொள்ள அங்கிருந்தவர்கள் தீப்பரவாமல் தடுக்க சீலையைக் கசக்க யானும் கசக்கினேன்'' என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும் வேண்டி வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர் காலடிபடாத இடத்தில் இட்டு வருக''என்று கட்டளை இட்டார்.அதை சீடர் நமச்சிவாயர் ஏற்றுக் கொண்டு மனிதர் காலடி படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து, அதனை தாமே குருபிரசாதமாக உட்கொண்டார்.குரு இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, ''அன்பனே! காலடிபடாத இடத்தில் வைத்தணையோ?'' என்று கேட்டார். அதற்கு பதிலாக ''அய்யனே, அதனை தக்க இடத்தில் வைத்தேன் '' என்று பணிவாக விடையளித்தார்.

மாணவனின் அருஞ்செயல்களை கண்ட குகைநமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்ததறிந்து அவரை அவர்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பவேண்டும் என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றி பாடினார்.

''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் --------

என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த இளம்நமச்சிவாயர்  ''சுவாமி! மீதி வெண்பாவையும் முடிக்கலாமே'' என்றார். அப்போது குகை நமச்சிவாயர்  ''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள வெண்பாவை நீயே முடிப்பாயாக!'' என்றார். ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே! குருவாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார். அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன், ஆதலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடு!'' என்றார். அப்போது மாணவர், ஆசிரியர் கட்டளைக்கு கட்டுப்பட்டு,
-----''சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ
வையா நமசிவாயா''
-- என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி தெளிவாக அறிந்துகொண்ட ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை காண்டல் அரிது ஆகையால் இன்றுமுதல் நீ குருநமச்சியாயமூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று தழுவிக்கொண்டு ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக் கட்டுதல் கூடாது
எனவே நீ அம்பலவாணர் எழுந்தருளிருயிருக்கும் திருத்தில்லை எனும் சிதம்பரத்திற்குச் செல் என்று கட்டளையிட்டார் அப்போது குருநமச்சிவாயர் குருவை நோக்கி, ''ஐயனே! குருவின் திருவடிப்பணி செய்யும் பேற்றினை இழந்து,குரு தரிசனம் இழந்து வேறொரு நகருக்கு எவ்வாறு செல்வேன்'' என்றார்.

குகை நமச்சிவாயர் சீடரை நோக்கி, ''நீ சிதம்பரம் சென்று பொன்னம்பலத்தின் முன் நின்று கூத்தப்பெருமானை வணங்கி நில் அங்கே பெருமான் நம்மை போல் தரிசனம் கொடுத்தால் இரு இன்றெல் இவ்விடம் வந்து சேர் '' என்று சொல்ல.சீடர்,''நன்று! என்று கூறி பத்துப்பாடல்களால் குரு வணக்கம் செலுத்த குருவிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற ஆணை பிறந்தது. குருநமச்சிவாயர் தனியே சாயங்கால நேரத்தில் புறப்பட்டுக் கிழக்குதிசை நோக்கி நடந்தார். இருள் வந்தது.தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பசி மேலிட, உண்ணாமுலையம்மையை  நினைத்து
அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும்போற்றிசெயநின்னடியாருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா


எனறு குருநமச்சிவாயர் பாடிய நேரத்தில், அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப்பொங்கல் செய்து பொன்தாம்பாளத்தில் இட்டு நிவேதித்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய் அர்ச்சகர் வீடு சேர்ந்தனர்.அதனை உண்ணா முலைத் தாயார் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்தார்.

விடிந்தபின் கதவைத் திறந்து பார்க்க பொற்றாம்பாளம் காணப்படவில்லை. அர்ச்சகர்கள்  திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்'' என்று கருதினர். அப்போது ஒரு சிறுவன் ஆவேசமாக  ''நமச்சிவாய மூர்த்தி தில்லைக்கு செல்லும் வழியில் ஒரு ஆலமரத்தின் கீழ் இருக்க அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக் கொண்டு வரவும்! என்றான்
 
மறுநாள் குருநமச்சிவாயர் எழுந்து குருவைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்ற திருநகரினைக் கண்டார் அங்கு அம்மையும்,அப்பனும் அர்த்தநாரீஸ்வரராக  எழுந்தருள அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதலமாகும் அங்கு ஐயாயிரம் கொண்டான் என்ற புனிதத்தீர்த்தத் தில் நீராடி பூசை முடித்து சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது. அன்னை பராசக்தியை நோக்கி,
தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான்தளர்தல் நீதியோ -வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா


என்று ஒருவெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று ''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாட வேண்டும்'' என்று கூற குருநமச்சிவாய மூர்த்தி,

மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா


என்று  சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும் பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் தியானத்தில் இருக்கும் போது பசிக்க  அப்போது,


நன்றிபுனை யும் பெரியநாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''


என்று பாடினார்.அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து, குருநமச்சிவாய ரைப்பார்த்து, ''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்க கூடுமோ?  உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
உடனே, குருநமச்சிவாயர்''அன்னையே பாலகாசியில் பாலாம்பிகை இது விருத்தகாசி  நீர் பெரிய நாயகி இறைவனும் பழமலை நாதர் எனவே யான் அவ்வாறு சொன்னேன்'' என்றார். அது கேட்ட அம்பிகை இனிய வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!'' எனவும் உடனே குரு நமச்சிவாயர் பின்வரும் வெண்பா பாடி மகிழ்ந்தார்.

முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர்இடம்தாளே மூவாமுலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா...


அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு வந்தார். புவனகிரிக்கு வந்து ஆனந்தத் திருநடனம் புரியும் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கினார்.

                                                              அற்புதங்கள் தொடரும்



                           போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment