rudrateswarar

rudrateswarar

Thursday, June 6, 2013

பிள்ளையார் பிறந்த கதை

                                   ஓம் நமசிவாய


பிள்ளையார் பிறந்த கதை

பிள்ளையார், மூத்த பிள்ளையார் ,கணபதி , விநாயகர் என்று நாம் வழிபடும் வினை தீர்க்கும் கடவுளின் பிறப்பு பற்றி பலவிதமான கதைகள் உண்டு அதுவும் வடநாட்டில் பிள்ளையாருக்கு சொல்லும் கதை அசிங்கமான ஒன்று.
பார்வதிக்கு குழந்தை ஆசையாம்  சிவபெருமான் முற்றும் துறந்தவர். எனவே பார்வதி தனது உடலை தேய்த்து அந்த
(அழுக்கு)  சக்தியிலிருந்து ஒரு குழந்தை உருவாக்கியதாகவும் அந்த குழந்தையை அவர் குளிக்க செல்லும்போது காவலுக்கு நிறுத்தியதாகவும் அப்போது சிவபெருமான் அங்கு வந்து பார்வதியை பார்க்க செல்ல முயல அந்த குழந்தை தடுத்து சிவனுடன் போரிட்டு உயிரிழந்து அதன் பின் யானையின் தலையை கொய்து வந்து பொருத்தியதாகவும் கூறுவர். இதை எந்த ஒரு பக்தனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் .விநாயகர் அழுக்கிலிருந்து தோன்றியவரா? கடவுள்கள் சண்டையிட்டுக் கொள்வார்களா?.அப்படி சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் கடவுளா ? கதை தவறு .


           அதை தவறை திருத்திக்கொள்ள உண்மையான புராண உண்மையை உலகறியச் செய்ய சீர்காழி வள்ளல் ஆளுடைய பிள்ளையார் சம்பந்தர் சுவாமிகள் தமது முதல் திருமுறை பதிகத்தில் இந்த முட்டாள்தனமான கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே பாடல்கள் பாடியுள்ளார் .இன்னும் 1400 ஆண்டுகள் ஆகியும் நாம் அதை கற்று உண்மை உணரவேண்டாமா?
அதுவும் சிறந்த ஆன்மீகவாதிகள் என்று சொல்வோரும் ஆன்மீக சொற்பொழிவாளர் என்று சொல்வோரும் இந்த உண்மை அறியாமல் பேசுவதும் கூறுவதும் தவறு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்


இனி திருமுறைகளில் அருளியுள்ள விளக்கம் காண்போம் 

முதல் திருமுறை பதிகம் 123   பாடல் 5,6 திருவலிவலம்


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
.

உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ ஆண்  யானை வடிவம் தாங்கி அடியவர் தம் இடர் போக்கும் கணபதிநாதன் தோன்ற  அருள் புரிந்த ஈசன் ,மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்தவர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறைவனாவார்.

இந்த பாடலில்  உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம் கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது
பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக் கொண்டு. 
கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளல் தன்மையினர் 

பாடல்-6

தரைமுதல்  உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல் உமையொடு விர வதுசெய்து
நரைதிரை கெடுதகையது  அருளினன் எழில்
வரைதிகழ் மதில்வலி வலம் உறை இறையே.


               அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள் புரிபவனாவான்.

இந்த பாடலில் மற்றும் ஒரு செய்தியாக ஏன் புணர வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல விநாயகர் அவதாரம் பற்றியும் வருகிறது .பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகர   தாம் போகியாயிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப்பாடலில் உமையம்மை  பெண் யானையாக, இவர் ஆண் யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது. 
புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தல் . தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினார்  என்பதாகும். 



முதல் திருமுறை பதிகம் 77 பாடல் 3 
திருஅச்சிறுப்பாக்கம்


காரிருள் உருவ மால்வரை புரையக் 
  களிற்றினதுஉருவுகொண்டு அரிவைமேல்ஓடி
நீர் உரு மகளை நிமிர்சடைத்தாங்கி 

    நீறணிந்து  ஏறுஉகந்து  ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார் 

    பிணியிலர்கேடிலர் பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம்மடிகள்  

 அச்சிறுபாக்கமது   ஆட்சிகொண்டாரே. 

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண்யானை வடிவு கொள்ள தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். கங்கையை மேல் நோக்கிய சடையினில் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பு இறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன் மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.
இறைவர், உமையம்மை  பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது.
கார் இருள் உருவம் மால்வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரிய மலையையும் ஒத்த. 
அரிவை - பெண்யானையாகிய உமாதேவி. இது `பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு` நடந்தமையைக் காட்டுவது. 
நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தால் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட்கூட்டம்.

 இன்னும் என்ன தெளிவு வேண்டும் விநாயகப் பெருமானின் அவதாரம் பற்றி .இனியாவது பிழையான புராணம் சொல்லாமல் இருப்போமாக.

                           போற்றி ஓம்  நமசிவாய


                                 திருச்சிற்றம்பலம் 

4 comments:

  1. யாழ்ப்பாணத்து வரதபண்டிதர் செய்தருளிய பிள்ளையார் புராணத்தில் மேற்சொன்ன கதை தெளிவுற உள்ளது.

    ReplyDelete
  2. யாழ்ப்பாணத்து வரதபண்டிதர் செய்தருளிய பிள்ளையார் புராணத்தில் மேற்சொன்ன கதை தெளிவுற உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அந்த யாழ்பாணதத்து வரதபண்டிதரின் புராணம் கிடைக்குமா

      Delete
  3. அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண்யானை வடிவு கொள்ள தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். ...karumam..

    ReplyDelete