rudrateswarar

rudrateswarar

Friday, June 14, 2013

அருணகிரி நாதர் குரு பூசை

                                                             ஓம் நமசிவாய

அருணகிரி நாதர் குரு பூசை

குருபூசை நாள் - உத்தராயணத்து ஆறாவது பௌர்ணமி  

திருவண்ணாமலை அருணகிரிநாதர் பிறந்த தலம் தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை.  இவருக்கு ஆதியம்மை என்ற மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியையே மகனாக நினைத்து சேவை செய்து வந்தார்  . அருணகிரி இளமையிலே கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரி நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது.  எந்நேரமும் காமத்தில் மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தையும் இழந்து குஷ்ட நோயும் வந்து சேர்ந்தது. அந்நிலையிலும் இவருக்குப் பெண் தேவைப் பட்டது . மனைவி அவரை வெறுத்து நீங்கினார் இவர் சகோதரியார் கோபத்துடன் வருத்தம் மேலிட கடுஞ்சொல் பகர,தன் தீயசெயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பமே  உருக்குலைந்து விட்டதை எண்ணி வீட்டை விட்டு  வெளியேறி கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்று அவருக்கு குமரக் கடவுளைப் பற்றியும் ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும், தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றி வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். உடல் பிணி ஒருபுறம் தமக்கையாரின் சுடு சொற்கள் ஒருபுறம் என்று குழப்பத்தோடு இருந்ததால்  அருணகிரிக்கு தியானம் வாய்க்கவில்லை.  தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை என்ன செய்யலாம்? அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்  திருவண்ணாமலைக் கோபுரவாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேல் ஏறி அதிலிருந்து குதித்து தம் உயிரை விட முற்பட்டு  கீழே குதித்தபோது முருகப்பெருமான் அடியவர் வேடம் கொண்டு இரு கரங்களில் அவரைத் தாங்கிபிடித்தார் .அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார் .அருணகிரி 12 ஆண்டுகள் தியானத்தில் கழிக்க முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அருணகிரி வியப்பின் உச்சியிலிருக்க, முருகன் தன்  வேலால் அவர் நாவிலே எழுதி திருப்புகழ் பாடச்சொல்லி அருளினார்.அருணகிரியார் தயங்கி நிற்க முத்தைத் தரு பத்தித் திருநகை என அடி எடுத்துக் கொடுத்தார் . அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். பிறகு வயலூர் வா என்று சொல்லி மறைந்தார் 

வயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், "கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின் அறுபடை வீடுகளையும் தரிசித்து தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும் சொல்லாழமும் இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு தலந்தோறும் சென்று வரும் வேளையில் திருச்செந்தூரில்  முருகப்பெருமானின் திரு நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க அவர்  அருணகிரிநாதரை வணங்கி தம்மைமுருகனடி சேர்க்குமாறு வேண்ட அருணகிரிநாதரும் முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து ஆதியம்மை யாரை தமக்குள் ஐக்கியமாக்கினார். பின்னர் விராலி மலையில் காட்சி அளித்த முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அட்டமாசித்தி அளித்து அருள் புரிந்தார்.

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்த  வில்லிபுத்தூரார் என்ற புலவர் பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற தவறினால் தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இப்போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர் இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமக்கும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும் தாம் பாடும் அந்தாதிக்கு  வில்லிபுத்தூரார் பொருள் கூறினால் தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும் தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை தாம் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக்கொள்ள இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதற்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் தோல்வியடைந்தார் தோல்வி அடைந்த போதும் வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல் இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால் "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார்.


அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரிடம் ஆசி  பெற்றான் இருவருக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிற்று.அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான்.
சம்பந்தாண்டான் சாமர்த்தியமாக மன்னா முருகனடிமை என்று சொல்லிக்கொள்ளும்  அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் சக்தியால் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வியுற்றால்  ஊரை விட்டே ஓடவேண்டும் என்று சவால் விட்டான். சம்மதமே என்று சொன்னான் மன்னன். அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் அப்பன் முருகன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையில்  அவரும் சம்மதம் சொல்லி விட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேலை  மனதில் தியானித்து திருப்புகழ் பாட 16 கால் மண்டபத்தில் முருகன் மயில் மீது  அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அனைவரும் பார்க்க தோன்ற, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானம் கொண்டு வெளியேறினான். 

சில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரியாரை  வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்த சம்பந்தாண்டான் மன்னனிடம் சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வை மீண்டும் பெறலாம் பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி எவராலும் கொண்டு வர இயலாது என கூறினான். மன்னனும் அருணகிரிநாதரிடம் தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என வேண்ட அவரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன் சகாக்களை அழைத்து மானிட உருவில் சொர்க்கலோகம் செல்ல இயலாது என்றும் அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வரும் படி  கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார். அருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள்  அருணகிரி நாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். அவன் மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து  அவரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்த்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் "கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு" அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.
 

அருணகிரியார் இயற்றியவை  திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தர் அந்தாதி , வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.


                               போற்றி ஓம் நமசிவாய 


                                    திருச்சிற்றம்பலம் 


   


No comments:

Post a Comment