rudrateswarar

rudrateswarar

Friday, June 28, 2013

அமர்நீதி நாயனார் புராணம்

                                                  ஓம் நமசிவாய


அமர்நீதி நாயனார் புராணம்
 
 
        "அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்"


அவதார தலம்  - பழையாறை
முக்தி தலம்      -திருநல்லூர் 
குருபூசை திருநட்சத்திரம்  -ஆனி பூரம்
 13-07-2013 சனிக்கிழமை



சோழநாட்டிலே பழையாறை என்னும் மிகப்  பழமையான சிவமணம்கமழும் திருப்பதியிலே அமர்நீதியார் பிறந்தார்.இத்தலம் மாதரசி மங்கையர்க்கரசியார் அவதரித்த புண்ணிய பூமியாகும் 

வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார் களுக்கு பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். 

சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.



சிவனடியார்க்கு திருவமுது , ஆடை, கீழாடை , கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டு களைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு வந்து அங்கு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்கு அருள் புரிய சிவபெருமான் திருவுளங்கொண்டார். ஒரு நாள் இறைவர் மறையவர் குலத்துப்  பிரம்மச்சாரி கோலங்கொண்டு கையில் இரு கோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்து உணவுண்ண அழைத்தார் .பிரம்மச்சாரியார் அதற்கிசைந்து  காவிரியில் நீராடி வருவதாக கூறிச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக் கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.மறையவராக வந்த மணிகண்டர் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் திரும்பி வந்தார். 

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர். 



ஈரத்தை மாற்றும்பொருட்டு முன்னர் நாம் உம்பால் தந்த கோவணத்தை கொண்டு வாரும் என்று கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் அதைக் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காண வில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல,நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.இதனைக் கேட்ட இறைவர் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே  நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது இத்தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நாயனார் தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து,அதற்கு ஈடாகத்தம்மிட முள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோது அது நிறை போதாமல் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட இறைவரது  கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய எல்லாப்பொருள் களையும் வைத்தார் அப்பொழுதும் தராசு தட்டு மேலே சென்றது

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ. 


பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்த அப்பொழுதும்  கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் 'நாங்கள் செய்த அன்பினில் இறைவரது திருநீற்று நெறியிலே அடிமைத்திறம் சிறிதும் தவறாது இருந்தது உண்மையெனில்  இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தராசுத்தட்டின் மேல் தாமும் மனைவி மைந்தருடன் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க வென்று
மழைத்த டம்பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்.


அடியாராக வந்த இறைவர், திருநல்லூரில்  பொருந்திய அம்மையப்பராக விடைமேல் வந்து திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவானந்தப் பெரு வாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.


இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர். அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று. ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர் தம் உடைமையே அனைத்துமென்றும்  அவர் வேண்டுவதெல்லம் இல்லையெனாது கொடுப்பதும் மகேசுவரராகப் பூசித்தலும் அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் இறைவனைத் தொழு முன் அவர்களைக் கும்பிடுவதும் ஆகிய இவை எதற்கு என்பதர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது. 

நாயனாரது குருபூசை நாளில் நாமும் அத்தகைய தொண்டு செய்து பெருவாழ்வு பெறுவோமாக .அமர்நீதியாரும் மாதரசி மங்கையர்க்கரசியாரும் பிறந்த மண்ணாகிய பழையாறை அரன் ஆலயம் திருப்பணி செய்ய திருவருள் கூட்டுவிக்க பிரார்த்திப்போமாக 



                                போற்றி ஓம் நமசிவாய 


                                  திருச்சிற்றம்பலம் 

Wednesday, June 26, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 4

                                         ஓம் நமசிவாய

அண்ணாமலையார் அற்புதங்கள்- 4

அப்பர் சுவாமிகள் அண்ணாமலையாரை தொழ என்ன என்ன நன்மைகள் என்று தமது ஐந்தாம் திருமுறையில் அருளியுள்ளார் 

பாடல் எண் : 1
பட்டி ஏறுகந்து  ஏறிப் பலஇ(ல்)லம்
இட்ட மாக இரந்துண்டு உழிதரும்
அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.


அடங்காத ஏற்றினை அடக்கி எருதினை வாகனமாக கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் முக்திபேறடைய  என்றும் தடை  இல்லை 

பாடல் எண் : 2

பெற்றம்  ஏறுவர் பெய்பலிக்கு  என்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.


ஈசன் கபாலமேந்தி மனைகளிலிடும் பிச்சையேற்பவர் ஆவர் தனக்குச் சுற்றமான உமையம்மையோடு வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார்  நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் 

பாடல் எண் : 3

பல்லில் ஓடுகை யேந்திப் பல இ( ல் )லம்
ஒல்லை சென்று உணங்கல்கவர் வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.


பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை பெறுபவர் அவர்தம் உள்ளங்களை  கவர்பவராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .

பாடல் எண் : 4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன்று என்கொலோ
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.


பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் அவர்தம் உள்ளங்கவர்ந்து ஓடிப் போய் விட்டனர் ஆதலால் செய்வது இனி என்ன ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ இகவாழ்க்கைஇன்னல்களும் ஆறாத் துயர்களும் பின் பிறவிப்பிணியாகிய நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் .

பாடல் எண் : 5

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நமது உள்ள வினைகளே.


தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏற்றினால்  அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடி வந்து ஆட்கொள்வார் ஆடியும் பாடியும் உருகியும் திருவண்ணாமலையைக் கைதொழ நமது நிகழ்வினைகள் யாவும் நம்மைவிட்டு ஓடிப்போகும் .

பாடல் எண் : 6

கட்டி யொக்கும்  கரும்பின் இடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்தி அண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன்கு ஆகுமே.


கரும்பின் கட்டி போன்று இனிமையுடையவர் சிவபெருமான். துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .

பாடல் எண் : 7

கோணிக் கொண்டையர்வேடமுன்கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப் பொன்னன் அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.


சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நடனம் ஆடுபவரும் உயர்ந்த பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் இப்பிறவி யின் பொருட்டு சார்ந்த பிராரத்தம் ஆகிய 
பெரு வினைகள் போகும் .

பாடல் எண் : 8

கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.


திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைக்கால் கொண்டு மாய்த்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளால் தொழ இவ்வுயிரைபற்றி நின்று துன்புறுத்தும் நம் மேலை(பழைய) தீவினைகள் நம்மைவிட்டு நீங்கும் .

பாடல் எண் : 9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்  அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும்  கருத்தனே.


மாலைச்செவ்வண்ணம்  போன்ற மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் (காலை,பகல் ,மாலை ) வணங்கவும் , அத்திருவண்ணாமலையைச் சிந்தித்து  துயில் எழுவார் வினைகளையும்  , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய சிவபெருமான் தீர்ப்பான் .

பாடல் எண்  10

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும்  நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையு மாண்பின்அண்ணாமலைகைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.


பிரமனும் திருமாலும் காண இயலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையுகின்ற  மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கை தொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .அண்ணாமலை ஈசனின் திருநாமத்தையும் திருமலையையும் உணர்த்துவதாகும் 
                                 


                              போற்றி ஓம் நமசிவாய 
                                     

                                   திருச்சிற்றம்பலம் 
 

மாணிக்கவாசகர் குருபூசை

                                                      ஓம் நமசிவாய


மாணிக்கவாசகர் குருபூசை
  
             ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி


அவதார தலம்- திருவாதவூர் 
முக்தி தலம்    - தில்லை
குருபூசை திருநட்சத்திரம் - ஆனி மகம்
12-07-2013 வெள்ளிகிழமை  


மாணிக்கவாசகர்  பாண்டிய நாட்டில் அமாத்தியர் மரபில் வாதவூரில் சம்புபாதசரிதர்  சிவஞானவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் திருவாதவூரர் என்று பெயரிட்டனர் இவர் 16 வயதிலேயே கல்வி கேள்வி ஒழுக்கம் ஆற்றல் அறிவு இவற்றில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சரானார்  அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டம் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த வாதவூரர் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவவழிபாடு கொண்டு ஐந்தெழுத்து ஓதி வரலானார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப் பட்டு, அமைச்சர் வாதவூரரிடம் பொன்னை  கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரப்  பணித்தான்.வாதவூரர் திருப்பெருந்துறை சென்றடைந்தார். அங்கே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்த வாதவூரர் அங்கேயே தங்க தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் உண்டு மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளத்திற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழமாக  காட்சியளித்த வாதவூரர், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுள் உருவமாக்கி உருகி வணங்கினார்.பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில்
குருவடிவு எடுத்து அமர்ந்திருந்த இறைவன் முன் சென்று வாதவூரர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரர் கேட்க, சிவஞான போதம் என்றார். சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். திருவடி தீட்சை பெற்றதும் உள்ளம் உருகி பாடலானார் அவருடைய பாடல் கேட்ட இறைவன் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மணியானவை நீ மாணிக்கவாசகன் என்று அருளி ஆசி வழங்கி மறைந்தார் .தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு,சிவன் தம்மை ஆட்கொண்ட இங்கு சிவகைங்கரியம் செய்ய எண்ணி குதிரை வாங்க கொண்டுவந்த பொருள் கொண்டு ஆத்மநாதருக்கு ஆலயம் அமைத்து கும்பாபிசேகம் செய்தார் வாதவூரரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் வாதவூரர்.பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் கொடுத்து கையோடு வாதவூரரை அழைத்துவரக்கட்டளையிட்டான்.

குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி வாதவூரர் அதனைக் குருவிடமே கொடுத்து விட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திரத்தன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.சொன்ன நாளும் அருகில் வந்தது. ஆனால்குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்து மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்பட வில்லை  என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன் என்று கூறிப் பாண்டியன் வாதவூரரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்த அதற்கும் வாதவூரர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். வாதவூரர் சிவனை தஞ்சம் அடைந்தார்.உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் காரணப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்ல அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் சிறப்பைக் கூறி, இவை இனி உன்னுடையவை என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். குதிரை வாங்க கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார்.கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்தி எனும் பிட்டு விற்கும் ஒருவள் மட்டும் வீட்டில்  யாருமில்லாமலும், ஏவலர் ஒருவரும் இல்லாமல் வருந்திக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட பெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார்.

அன்றைக்கு பார்த்து வந்திக்கு எல்லாப்பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி அடைபடாமல் உடைந்தே கிடக்கிறது.கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட உடைப்பு சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். அவன் மீது பட்ட பிரம்படி உலகத்திலுள்ள அனைத்துயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும் பட பாண்டியன் கலங்கிப் போனான்.அப்போது வானில் ஓர் அசரீரி கேட்டது அது இறைவர்  சிவபெருமானே மன்னா  வாதவூரரின் பொருட்டு யாமே இத்திருவிளையாடல் புரிந்தோம் என்று சொல்லியது . மன்னன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், பல சிவத்தலங்களை தரிசித்து பாடித் துதித்துப் பின் தில்லை திருச்சிற்றம்பலம் வந்தார். 

அங்கு சிவபிரான் அவர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரர் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும் என்று கூறினார் திருவாதவூரர்.அதற்கு ஒப்புக் கொண்ட அந்தணர் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் பாவை பாடிய நீர் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவை பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு, கோவிலின் கனக சபையில் வைத்து மறைந்தார். அப்பொழுது தான் மாணிக்கவாசகருக்கு வந்தது இறைவன் என்று உணர்ந்தார் .தில்லை அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் இந்த நூல்களின் பொருள் என்ன? என்று வாதவூரரை பார்த்து கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரர் கூத்தனின் தில்லையம்பலத்தைக் காட்டி பொருள் இதுவே என்று கூறி உள்ளே சென்று மறைந்தார்.இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பப் பேற்றினை பெற்றார் மாணிக்கவாசகர் என்பது இறைவனால் சூட்டப்பெற்ற பெயராகும் .
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

தேவார முதலிகள் மூவரும் இறைவனை தொழுது போற்றி பாடினார்கள் .ஆனால் மாணிக்கவாசகர் ஒருவர் மட்டும் அழுது அழுது பாடினார் 

அற்புதங்கள்
1.சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடி படும் படியும் நடந்து கொண்டது.
2.பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணை பேசவைத்து புத்தர்களின் கேள்விகளுக்கு அப்பெண்ணையே விடையளிக்க வைத்தது .
3.தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றது.
4.எல்லாரும் காண கனகசபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது. 
5.திருப்பெருந்துறையில் சிவத்தோடு கலந்த தன்மை பெற்றதனால் பூசைபேறு பெற்றது
6.புத்தர்களை தருக்கத்தில் வென்று அவர்களை ஊமையாக்கி பின் பேசவைத்து சைவராக்கியது                                                                                                                                                                                                                                                                                                                                           போற்றி ஓம் நமசிவாய



                                   திருச்சிற்றம்பலம்  

Tuesday, June 25, 2013

திருமுறைகளின் மகிமை

                                                     ஓம் நமசிவாய


திருமுறைகளின் மகிமை

புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே 
         புத்த னார்தலை தத்தெனத் தத்துமே
கனலில் ஏடிடப் பச்சென்று இருக்குமே
        கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில்ஆண்பனை பெண்பனைஆக்குமே   
         பழைய என்புபொற் பாவைய தாக்குமே
சிவன ராவிடம் தீரெனத் தீருமே
         செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே. 



தலைகொள் நஞ்சமு தாக விளையுமே     
       தழல்கொள் நீறு தடாகம தாகுமே   
 கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே 
       கோளராவின் கொடுவிடம் தீருமே  
 கலைகொள் வேதவனப்பதி தன்னிலே 
       கதவு தானும் கடுகத் திறக்குமே
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே    
       அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே. 



வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே  
        வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே மங்கைபாகனைத் தூது நடத்துமே 
         மருவி யாறு வழிவிட்டு நிற்குமே 
செங்க லாவது தங்கம தாக்குமே 
       திகழும் ஆற்றிட்டுச்செம்பொன் எடுக்குமே   
 துங்கவான் பரிசேரற்கு நல்குமே 
        துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே. 



பெருகும் வைகை தனையடைப் பிக்குமே   
          பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே 
நரியெ லாம்பரி யாக நடத்துமே 
          நாடி மூகை தனைப்பேசு விக்குமே 
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே
          பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே 
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே 
          வாத வூரர் வழங்கிய பாடலே.



                             போற்றி ஓம் நமசிவாய


                                   திருச்சிற்றம்பலம்   

Sunday, June 23, 2013

1008 திருமுறை போற்றி திரட்டு -3

                                                       ஓம் நமசிவாய 

 

1008 திருமுறை போற்றி திரட்டு -3

 

இமையோர் பெருமானே போற்றி
எழில்சேர்உமையாள் மணவாளா போற்றி
எமையாளும்தீயாடி போற்றி
சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி
தூயசீர்ச்சங்கரனே போற்றி
சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி

அருச்சுனர்க்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி
தூயமலைமேலாய் போற்றி
மயானத்தாய் வானோர்தலைமேலாய்போற்றி
தாள் போற்றி நிலைபோற்றி
நின்றவா நின்ற நிலைபோற்றி
கோணாது நின்ற குறிபோற்றி
காலன்உரத்தில் உதைத்த உதை போற்றி
காமன் அழகழித்த கண்போற்றி
முயலகன்தன் மொய்ம்பைஅடங்க மிதித்தஅடி போற்றி   
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி
தோளிருபதும்நெரியமெத்தனவே வைத்தவிரல் போற்றி 710  
அயன்சிரத்தை­­­வெட்டிச் சிரித்த விறல்போற்றி
பூமாலைபோனகமும்நற்கோலம்ஈந்தநலம்போற்றி
மிக்கஅ தீந்த விறல்போற்றி
செங்கைத் திறத்த திறல்போற்றி
வரமன் றளித்தவலி போற்றி


மாகாளி கோபந் தவிரஎடுத்த நடத்தியல்பு போற்றி

கோயில்கடைகாவல் கொண்டவா போற்றி
முடிகவித்துவானாள வைத்த வரம்போற்றி
ஏழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி
அடுகளிற்றைப்போகஎடுத்துரித்துப்போர்த்த  போற்றி
வியந்தகுணம்எட்டிலங்கவைத்தஇறைபோற்றி
மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி


காளத்தி போற்றி கயிலைமலை போற்றி
காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி 
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும்அமிர்தேபோற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க் கணியோய்போற்றி 730

தீர்வில் இன்சுவைத்தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி
விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப்புணர்ந்தோய்போற்றி
செம்மைக் காணியாகிய அரனே போற்றி
பெண்ணோடாணெனும்பெயரோய்போற்றி
தீப மாகிய சிவனே போற்றி

மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி பொற்பாதம் போற்றி 


போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி 
சொல்லுவதறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி 
வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய்போற்றி   எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி 
தில்லையம்பலத்து ளாடும் சேவடி போற்றி
படிமிசைகமரில் வந்திங்கமுது செய்பரனே போற்றி 
துடியிடை பாகமான தூய நற் சோதி போற்றி 
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி 755


தென்தில்லை மன்னினுள் ஆடி போற்றி
வேட்கள நன்னகர் மேயாய் போற்றி
நெல்வாயில் வளர் நிதியே போற்றி
கழிப்பாலை உரை கரும்பே போற்றி
நல்லூர் பெருமண நம்பா போற்றி 760
மயேந்திரப்பள்ளி மன்னா போற்றி
தென்திருமுல்லை வாயிலாய் போற்றி
கலி காமூர் வளர் கண்ணே போற்றி


சாய்க்காடு இனிதுறை சதுரா போற்றி
பல்லவனீசர பரனே போற்றி
வெண்காடு உகந்த விகிர்தா போற்றி
கீழைத்திருக்காட்டு ப்பள்ளியாய் போற்றி
குருகாவூர் உரை குணமே போற்றி
காழியுள் மேய கடலே போற்றி
கோலக்காவின் கோவே போற்றி
வேளூர் மேவிய வித்தகா போற்றி


கண்ணார்கோயில் வாழ் கனியே போற்றி
கடைமுடிப் பரம நின் கழல்கள் போற்றி
நின்றியூர் வளரும் நிதியே போற்றி
திருப்புன்கூர் அமர் திருவே போற்றி
நீடூர் நிருத்த நின் நீளடி போற்றி
அன்னியூர் வளர் அரனே போற்றி
வேள்விக்குடி வளர் வேதா போற்றி
எதிர்கொள்பாடி எம்மிறைவா போற்றி


மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
கருப்பறியலூர் காப்பாய் போற்றி
குரங்குக்கா கோவே போற்றி
வாழ்கொளிப்புத்தூர் வாழ்வே போற்றி
மன்னிப்படிக்கரை மணியே போற்றி
ஓமாம்புலியூர் ஒருவனே போற்றி
கானாட்டுமுல்லூர் கடவுளே போற்றி


நாரையூர் நன்னகர் நலமே போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
பந்தணைநல்லூர் பசுபதி போற்றி 790
கஞ்சனூர் ஆண்ட கற்பகமே போற்றி
கோடிக்கா உண்ட கோவே போற்றி
திருமங்கலக்குடி தேனே போற்றி
பனந்தாள் தாலவனேச்சரனே போற்றி
ஆப்பாடி பதி அமலா போற்றி


சேய்ஞலூர் உறையும் செல்வா போற்றி
திருந்துதேவன்குடி தேவா போற்றி
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூரில் கோடீச்சரா போற்றி
இன்னம்பர் ஈச நின் இணையடி போற்றி
புறம்பயம் பதிவாழ் புண்ணியா போற்றி
விசயமங்கை வேதியா போற்றி


திருவைக்காவூர் உறை சிவனே போற்றி
வடகுரங்காடுதுறையாய் போற்றி
பாங்கார் பழனத்து அழகா போற்றி
சீரார் திருவையாறா போற்றி
நெய்த்தானத்து நெய்யாடியே போற்றி
பெரும்புலியூர் பெருமானே போற்றி
மழபாடி வைரத்தானே போற்றி
பழுவூர் மேவிய பண்பா போற்றி


கானூர் மேய செங்கரும்பே போற்றி
அன்பில் ஆலந்துறை அரசே போற்றி
வடகரை மாந்துறை வல்லான் போற்றி
திருப்பாற்றுறை உறை தேவே போற்றி
ஆனைக்கா உறை ஆதீ போற்றி
பைஞ்ஞிலி அண்ணல் நின் பாதம் போற்றி
பாச்சிலாச்சிராம பரனே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி


வாட்போக்கி மலை உரை வாழ்வே போற்றி
கடம்பந்துறை வளர் கடலே போற்றி 821
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
கற்குடி மாமலை கண்ணுதல் போற்றி
மூக்கீச்சரத்து முதல்வா போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
நெடுங்களம் இனிது அமர் நிமலா போற்றி


மேலைத் திருக்காட்டுப்பள்ளியாய் போற்றி
ஆலம்பொழில் உறை அரனே போற்றி
திருப்பூந்துருத்தி தேசிகா போற்றி
கண்டி வீரட்டக் கரும்பே போற்றி
சோற்றுத்துறை வளர் தொல்லோய் போற்றி
வேதிகுடி உறை விசய போற்றி
தென்குடித்திட்டை தேவே போற்றி
திருப்புள்ளமங்கை திருவே போற்றி


சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி
கருகாவூர் உறை கடம்பா போற்றி
திருப்பாலைத்துறை செல்வா போற்றி
நல்லூர்ப் பெருமண நற்பதம் போற்றி
ஆவூர் பசுபதீச்சரனே போற்றி
சத்திமுற்றச் சதுரா போற்றி
பட்டீச்சரம் உறை பரமா போற்றி
பழையாறை  வடதளியாய் போற்றி


வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
குடமூக்கு அமர் கும்பேசா போற்றி
கீழ்க்கோட்டத்து எம் கூத்தா போற்றி
குடந்தைக்காரோணத்தாய் போற்றி
நாகேச்சரம் வாழ் நாதா போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
தென் குரங்காடுதுறையாய் போற்றி 850
நீலக்குடி உறை நிருத்தா போற்றி

வைகல் மாடக்கோயிலாய் போற்றி
நல்லம் நடம்பயில் நாதா போற்றி
கோலம்பதுறை கோவே போற்றி
ஆவடு தன் உறை அமரா போற்றி
துருத்தி ஈச நின் துணையடி போற்றி
அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
மயிலாடும் துறை மணியே போற்றி
திருவிள நகர் உறை திருவே போற்றி


பறியல் வீரட்டப் பரமா போற்றி
செம்பொன்பள்ளி செல்வா போற்றி
நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
தலைச்சங்காடு அமர் தத்துவ போற்றி
ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
கடவூர் கால வீரட்டா போற்றி
கடவூர் மயானக்கடவுளே போற்றி

வேட்டக்குடியின் மேயாய் போற்றி
திருதெளிச்சேரி சிவனே போற்றி
தருமபுரம் வளர் தத்துவா போற்றி
நள்ளாறுடைய நாதா போற்றி
கோட்டாறு அமரும் குழகா போற்றி
அம்பர் பெருந்திருக்கோயிலாய் போற்றி
அம்பர் மாகாளத்து அரனே போற்றி
மீயெச்சூர் உரை விண்ணவ போற்றி


மீயெச்சூர்  இளங்கோயிலாய் போற்றி
திலதைப்பதி வாழ் திலகமே போற்றி
பாம்புர நன்னகர் பரமனே போற்றி
சிறுகுடி விரை முடி செல்வா போற்றி
விண்ணிழி வீழிமிழலையாய் போற்றி 880
வன்னியூர் மேவிய மைந்தா போற்றி
கருவிலி அமரும் கண்ணே போற்றி
பேணுபெருந்துறைப் பெம்மான் போற்றி


நறையூர் சித்தீச்சரனே போற்றி
அரிசிற்கரைப் புத்தூரா போற்றி
செழுமலர் சிவபுரத்தரசே போற்றி
கலையநல்லூர் கடவுளே போற்றி
கருக்குடி அண்ணல் நின் கழல்கள் போற்றி
திருவாஞ்சிய அம்பலர் தேவே போற்றி
நன்னிலத்து பெருங்கோயிலாய் போற்றி
கொண்டீச்சரத்து கோவே போற்றி


திருப்பனையூர் வளர் தேவே போற்றி
விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
புகலூர் மேவிய புண்ணியா போற்றி
புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
இராமனதீச்சரத்து இறைவா போற்றி
பயற்றூர் உறையும் பண்பா போற்றி
செங்காட்டங்குடி சேவகா போற்றி

மருகல் பெரும நின்மலரடி போற்றி
சாத்தமங்கை சம்புவே போற்றி 900
நாகைகாரோணம் நயந்தாய் போற்றி
சிக்கல்நகர் வளம் செல்வா போற்றி
கீழ்வேளூர் ஆல்  கேடிலி போற்றி
தேவூர் ஆதி நல்தேனே போற்றி
பள்ளி முக்கூடல் பரனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

ஆரூர் அறநெறி அப்பா போற்றி
பரவையுன்மண்டளி பரனே போற்றி
விளமர் உக ந்த வித்தகா போற்றி
கரவீர சங்கரனே போற்றி
பெருவேளூர் உறை பெரும போற்றி
தலையாலங்காடு அமர்ந்தாய் போற்றி
குடவாயில்  மன்னிய குருவே போற்றி
சேறை செந்நெறி செல்வா போற்றி

நாலூர் மயான நாடகா போற்றி
கருவாய்க் கரைபுத்தூரா போற்றி
திரு இரும்பூளைத் தேவே போற்றி
அரதைப் பெரும்பதி  அமர்ந்தாய் போற்றி
அவளிவள்  நல்லூர் அரசே போற்றி 920
பரிதிநியமப்  பரனே போற்றி
வெண்ணி வாழ் நிமலா நின் மெல்லடி போற்றி
பூவனூர் புனித நின் பொன்னடி போற்றி

பாதாளீச்சரப் பரமா போற்றி
திருக்களர் மேவிய  தேவா போற்றி
ஓங்கு சிற்றேமத்து ஒருவா போற்றி
உசாத்தானத்து அமர் உறவே போற்றி
இடும்பாவனத்து உறும் போற்றி
கடிக்குளத்து உறை கடலமுதே போற்றி
தண்டலை நீள்நெறி தாயே போற்றி
கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி  

வெண்டுறை மேவிய வேதா போற்றி
கொள்ளம்புதூர் கோவே  போற்றி
பேரெயில் பெருமநின் பெய்கழல்போற்றி
கொள்ளிக்காடு அமர் கொற்றவ போற்றி
திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
நெல்லிக்கா உறை நித்திய போற்றி
நாட்டியத்தான்குடி நம்பி போற்றி

திருக்காறாயில் தியாகா போற்றி
கன்றாப்பூர் நடுநெறியே போற்றி
வலிவலம் வந்தருள் வரதா போற்றி
கைச்சினம் மேவிய கண்ணுதல் போற்றி
கோளிலி உறையும்  கோவே போற்றி
திருவாய்மூர் அடிகள் நின் மலர்ப்பதம் போற்றி
மறைக்காடு உறையும் மணாளா போற்றி
அகத்தியான்பள்ளி அய்யா போற்றி

கோடிக்கோயில் குழகா போற்றி
திருவிடைவாய் வளர் தேவா  போற்றி
கோணமாமலை குடிகொண்டாய் போற்றி
அண்ணல் கேதீச்சரத்து அடிகள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
ஆப்பனூர் வளர் அய்யா போற்றி
திருப்பரங்குன்றில் செல்வா போற்றி
ஏடகத்து எந்தை நின் இணையடி போற்றி

கொடுங்குன்று அமரும்  கோவே போற்றி
திருப்புத்தூர் திருத்தளியாய் போற்றி
திருப்புனவாயில் என் செல்வா போற்றி
மால்செய் இராமேச வாழ்வே போற்றி
ஆடானை உறை ஆதீ போற்றி
கானப்பேர் உறை காளையாய் போற்றி
பொருப்பமர் பூவனத்து அரனே போற்றி
சுழியல் வளர் துணைவா போற்றி

குற்றாலத்து உறை கூத்தா போற்றி
நெல்வேலி உறை செல்வா போற்றி
அஞ்சைகளத்து உறை அப்பா போற்றி
அவினாசி வளர் அரனே போற்றி
முருகன்பூண்டி முதல்வா போற்றி
திருநணா வளரும் திருவே போற்றி
கொடிமாடச்செங்குன்றாய் போற்றி
பாண்டிக்கொடுமுடி பழையோய் போற்றி

கருவூர் ஆனிலை கண்மணி போற்றி
நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
பெண்ணாகடத்து பெரும போற்றி
கூடலையாற்றூர் கோவே போற்றி
எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
திருத்தினை நகர சிவனே போற்றி
சோபுரம் மேவிய சொக்கா போற்றி
அதிகை வீரட்டத்து அழகா போற்றி

நாவலூர் மேவிய நம்பா போற்றி
முதுகுன்று அமர்ந்த முனிவா போற்றி
நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி
கோவல் வீரட்டக்  கோமான் போற்றி
அறையணிநல்லூர் அரசே போற்றி
இடையாறு இடையமர் ஈசா போற்றி
வெண்ணைநல்லூர் உறை மேலோய் போற்றி
துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி

வடுகூர் அடிகள் மாடளி போற்றி
திருமாணிக்குழி வளர் தேவா போற்றி
பாதிரிப்புலியூர் பரமா போற்றி
முண்டீச்சரத்து முதல்வா போற்றி
புறவார் பனங்காட்டூரா   போற்றி
திருஆமாத்தூர் அமர் தேவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

கச்சி மேற்றளி உறை கடலே போற்றி
ஓணகாந்தன்தளியாய் போற்றி
கச்சி அனேகதங்காவதா போற்றி
கச்சிநெறிக்காரைக் காடாய் போற்றி
குரங்கணில் முட்டம்  குழவினாய் போற்றி
மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி

திருவல்ல மேவிய  தீவண்ணா போற்றி
மாற்பேறால் உமை மணாளா போற்றி
திருவூறல் வளர் தேவே போற்றி
இலம்பையங்கோட்டூர் ஈசா போற்றி
விற்கோலத்து உறை வீரா  போற்றி
ஆலங்காட்டு எம் அடிகள் போற்றி
பாசூர் அமர்ந்த பசுபதி போற்றி
வெண்பாக்கத்து உறை விமலா போற்றி

கள்ளில் மேய கனியே போற்றி
காளத்திநாத  நின்கழல் இணை  போற்றி
ஒற்றியூர் உடை ஒருவ போற்றி
வலிதாய உறை வல்லான் போற்றி
வடதிருமுல்லை வாயிலாய் போற்றி
வேற்காட்டு வேத வித்தகா போற்றி
மயிலைக் கபாலீச்சரத்தாய் போற்றி
வான்மியூர் அமர்ந்த வாழ்வே போற்றி

கச்சூர் ஆலக்கோயிலாய் போற்றி
இடைச்சுரம் இருந்த எழில்வண்ண போற்றி
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
அச்சிறுப்பாக்கம் அமர்ந்தாய் போற்றி
வக்கரை அமர்ந்த வரதா போற்றி
அரசிலி நாதா அய்யா போற்றி
இரும்பை மாகாளத்து இறைவா போற்றி
கோலக்கோகர்ணக்  கொழுந்தே போற்றி

திருப்பருப்பதத்து தேவே போற்றி
இந்திர நீல மலையாய் போற்றி
அனேகதங்கா வதம் அமர்ந்தாய் போற்றி
கேதார கிரி கிழவோய் போற்றி
கயிலைமலையானே போற்றி


                         போற்றி ஓம் நமசிவாய

                                            திருச்சிற்றம்பலம்

Friday, June 21, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 3

                                     ஓம் நமசிவாய

குரு நமசிவாயர்


அண்ணாமலைக்கு வா என்று அழைத்து அண்ணாமலையாரால் ஆட்கொள்ளப்பட்ட  ஞானதபோதர் குகை நமச்சிவாயர் .அவர் ஒரு சிவயோகியாக,சித்தராக சமாதி  அடைந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.

அவருக்கு இளம் நமச்சிவாயர் என்றொரு சீடன் இருந்தார். அவர் தன் குருவின் அருகிருந்து பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் ஊஞ்சலிட்டு அதில் நித்திரை கொள்வது வழக்கம்.இளம் நமசிவாயர் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருப்பார் அப்போது ஒருநாள் திடீரென குரு அருகில் இருந்தபோதும் 'குலுக்' என்று நகைத்தார். ''நமச்சிவாயா என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.அதற்கு சீடர்  நமச்சிவாயர், ''ஐயனே திருவாரூரில் தியாகேசப்பெருமானின் திருவீதி உலா வரும்போது, நாட்டியப் பெண்கள் ஆடிக் கொண்டு வர அவர்களில் ஒருத்தி கால் இடறி விழ அங்கிருந்த அனைவரும் நகைக்க யானும் நகைத்தேன்'' என்றார்


பிறிதொருநாள் தம் குரு அருகில் இருந்தபோது தம் ஆடையைப் பற்றி பரபர என தேய்த்தார். ''ஏன் இவ்வாறு ஆடையைப்பற்றித் தேய்த்தாய் " என்று குகை நமச்சிவாயர் கேட்ட போது. ''பெருமானே! தில்லை பொற்சபையிலே திரைச் சீலை இட்டிருந்தார்கள்.அதனருகே குத்து விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அதன் திரியை ஓர் எலி பற்றி இழுக்க விளக்குச் சுடர் திரைசீலையில் பட்டு தீப்பற்றிக்கொள்ள அங்கிருந்தவர்கள் தீப்பரவாமல் தடுக்க சீலையைக் கசக்க யானும் கசக்கினேன்'' என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும் வேண்டி வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர் காலடிபடாத இடத்தில் இட்டு வருக''என்று கட்டளை இட்டார்.அதை சீடர் நமச்சிவாயர் ஏற்றுக் கொண்டு மனிதர் காலடி படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து, அதனை தாமே குருபிரசாதமாக உட்கொண்டார்.குரு இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, ''அன்பனே! காலடிபடாத இடத்தில் வைத்தணையோ?'' என்று கேட்டார். அதற்கு பதிலாக ''அய்யனே, அதனை தக்க இடத்தில் வைத்தேன் '' என்று பணிவாக விடையளித்தார்.

மாணவனின் அருஞ்செயல்களை கண்ட குகைநமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்ததறிந்து அவரை அவர்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பவேண்டும் என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றி பாடினார்.

''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் --------

என்று பாடி நிறுத்தினார். அருகிலிருந்த இளம்நமச்சிவாயர்  ''சுவாமி! மீதி வெண்பாவையும் முடிக்கலாமே'' என்றார். அப்போது குகை நமச்சிவாயர்  ''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள வெண்பாவை நீயே முடிப்பாயாக!'' என்றார். ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே! குருவாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார். அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன், ஆதலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடு!'' என்றார். அப்போது மாணவர், ஆசிரியர் கட்டளைக்கு கட்டுப்பட்டு,
-----''சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ
வையா நமசிவாயா''
-- என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி தெளிவாக அறிந்துகொண்ட ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை காண்டல் அரிது ஆகையால் இன்றுமுதல் நீ குருநமச்சியாயமூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று தழுவிக்கொண்டு ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக் கட்டுதல் கூடாது
எனவே நீ அம்பலவாணர் எழுந்தருளிருயிருக்கும் திருத்தில்லை எனும் சிதம்பரத்திற்குச் செல் என்று கட்டளையிட்டார் அப்போது குருநமச்சிவாயர் குருவை நோக்கி, ''ஐயனே! குருவின் திருவடிப்பணி செய்யும் பேற்றினை இழந்து,குரு தரிசனம் இழந்து வேறொரு நகருக்கு எவ்வாறு செல்வேன்'' என்றார்.

குகை நமச்சிவாயர் சீடரை நோக்கி, ''நீ சிதம்பரம் சென்று பொன்னம்பலத்தின் முன் நின்று கூத்தப்பெருமானை வணங்கி நில் அங்கே பெருமான் நம்மை போல் தரிசனம் கொடுத்தால் இரு இன்றெல் இவ்விடம் வந்து சேர் '' என்று சொல்ல.சீடர்,''நன்று! என்று கூறி பத்துப்பாடல்களால் குரு வணக்கம் செலுத்த குருவிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற ஆணை பிறந்தது. குருநமச்சிவாயர் தனியே சாயங்கால நேரத்தில் புறப்பட்டுக் கிழக்குதிசை நோக்கி நடந்தார். இருள் வந்தது.தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பசி மேலிட, உண்ணாமுலையம்மையை  நினைத்து
அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும்போற்றிசெயநின்னடியாருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா


எனறு குருநமச்சிவாயர் பாடிய நேரத்தில், அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப்பொங்கல் செய்து பொன்தாம்பாளத்தில் இட்டு நிவேதித்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய் அர்ச்சகர் வீடு சேர்ந்தனர்.அதனை உண்ணா முலைத் தாயார் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்தார்.

விடிந்தபின் கதவைத் திறந்து பார்க்க பொற்றாம்பாளம் காணப்படவில்லை. அர்ச்சகர்கள்  திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்'' என்று கருதினர். அப்போது ஒரு சிறுவன் ஆவேசமாக  ''நமச்சிவாய மூர்த்தி தில்லைக்கு செல்லும் வழியில் ஒரு ஆலமரத்தின் கீழ் இருக்க அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக் கொண்டு வரவும்! என்றான்
 
மறுநாள் குருநமச்சிவாயர் எழுந்து குருவைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்ற திருநகரினைக் கண்டார் அங்கு அம்மையும்,அப்பனும் அர்த்தநாரீஸ்வரராக  எழுந்தருள அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதலமாகும் அங்கு ஐயாயிரம் கொண்டான் என்ற புனிதத்தீர்த்தத் தில் நீராடி பூசை முடித்து சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது. அன்னை பராசக்தியை நோக்கி,
தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான்தளர்தல் நீதியோ -வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா


என்று ஒருவெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று ''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாட வேண்டும்'' என்று கூற குருநமச்சிவாய மூர்த்தி,

மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா


என்று  சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும் பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் தியானத்தில் இருக்கும் போது பசிக்க  அப்போது,


நன்றிபுனை யும் பெரியநாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''


என்று பாடினார்.அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து, குருநமச்சிவாய ரைப்பார்த்து, ''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்க கூடுமோ?  உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
உடனே, குருநமச்சிவாயர்''அன்னையே பாலகாசியில் பாலாம்பிகை இது விருத்தகாசி  நீர் பெரிய நாயகி இறைவனும் பழமலை நாதர் எனவே யான் அவ்வாறு சொன்னேன்'' என்றார். அது கேட்ட அம்பிகை இனிய வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!'' எனவும் உடனே குரு நமச்சிவாயர் பின்வரும் வெண்பா பாடி மகிழ்ந்தார்.

முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே!
அத்தர்இடம்தாளே மூவாமுலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா...


அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு வந்தார். புவனகிரிக்கு வந்து ஆனந்தத் திருநடனம் புரியும் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கினார்.

                                                              அற்புதங்கள் தொடரும்



                           போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்