rudrateswarar

rudrateswarar

Wednesday, June 19, 2013

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

                                                        ஓம் நமசிவாய 

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 

"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" 

அவதார தலம் -பெருமங்கலம் 
முக்தி தலம்     -பெருமங்கலம் 
குரு பூசை திருநட்சத்திரம் - ஆனி , ரேவதி 

(01-07-2013 திங்கள் கிழமை )
 

சோழநாட்டின் காவிரி வடகரையின் பால் உள்ளது  திருப்பெருமங்கலம் அப்பதியில் வேளாளர் குலத்திலே சிறந்த ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர். ஏயர்கோன் என்பது அரசன் சேனைத்  தலைவனுக்கு கொடுக்கும் பட்டம் .

இவர் சிவபக்தியிலும் அடியார் பக்தியிலும் இளம் வயதிலேயே சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாற நாயனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருப்பணிகள் புரிந்தார். 

புதிய நாண்மதிச் சடைமுடியார் திருப்புன்கூர்க் 
கதிகமாயின திருப்பணி அநேகமுஞ் செய்து 
நிதியமாவன நீறுகந்தார் கழல் என்று 
துதியினாற் பரவித் தொழு தின்புருகின்றார்


அங்கனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்வியுற்று ஆண்டவனை ஏவுபவனும் ஒரு தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் காதால் கேட்டபின்னரும் நான் உயிரோடு இருக்கின்றேனே பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவ அதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவதும் போவதுமாகத் திரிவதா ? மூவரும் தேவரெல்லாம் தொழும் தேவதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலை செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று பலவாறு எண்ணி மனம் வெதும்பி கோபத்தால் புழுங்கினார். 

இதனைக் கேள்வியுற்று தன்பிழையினை உணர்ந்த சுந்தரர் விமலரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளவேண்டிக் கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் சேர்க்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை அருளினார்  அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று அவர்  வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி உன்னை வருத்தும் சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது எனக் கூறினார். 

அதுகேட்ட கலிக்காமர் வழிவழி அடியவனான என் வருத்தத்தை நீர் வலிந்து அடிமை கொண்ட அவ்வன் தொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் இந்நோய் என்னை வருத்துதலே நன்று என்றார். சிவபெருமான் வன்தொண்டர் முன் தோன்றி நம் ஏவலாலே ஏயர்கோனுக்கு உற்றசூலையை நீ சென்று தீர்ப்பாயாக  எனப் பணித்தருளினார். நம்பியாரூரும் பணிந்து விரைந்து தாம் சூலை நோய் தீர்க்க வரும் செய்தியை கலிக்காமர்க்கு சொல்ல ஒருவரை அனுப்பினார். அதனைக் கேட்ட கலிக்காமர் வன்தொண்டன் வந்து நீக்குமுன் என்னை நீங்காத பாதகச்சூலையை  தன் உற்ற இவ்வயிற்றினோடும் சேர்த்து கிழிப்பேன் என்று உடைவாளால் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.

கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்த பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக் கேட்டு தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி பரிசனங்களை ஏவினார். அவர்களும் ஆரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் கலிக்காமருடைய சூலையை நீக்கி அவருடன் இருப்பதற்கு விரும்பி வந்திருக்கின்றேன் அவர் எங்கே? என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியாரின்  ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வந்து வணங்கி சுவாமி அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்றனர். அதுகேட்ட ஆரூரர் தீங்கேதுமில்லை என்றீர்கள் ஆயினும் என் மனம் தெளிவு பெறவில்லை.ஆதலால் அவரை நான் உடனே காணுதல் வேண்டும் என்றார். அது கேட்டு அவர்கள் கலிக்காமர் உடலைக் காட்டினர். கலிக்காமர் குடல்  சரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் நிகழ்ந்தது நன்று யானும் இவர் போல் இறந்து அழிவேன் என்று குற்றுடைவாளைப் பற்றினார். அப்பொழுது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர் பெற்றெழுந்து கேளீரைக் காணப் பெற்றேன் என்று சுந்தரர் கை வாளைப் பற்றிக்கொண்டார் கலிக்காமரை ஆரூரர் மண்மிசை விழுந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர். 

நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் அவரின் இசைவு பெற்றுத் தம்முடைய ஊரான பெருமங்கலக்குடிக்கு திரும்பினார். அங்கு பற்பல  திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.


                                      போற்றி ஓம் நமசிவாய 


                                            திருச்சிற்றம்பலம் 

1 comment: