rudrateswarar

rudrateswarar

Wednesday, April 10, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை -1

                                  ஓம் நமசிவாயா


ஐந்தெழுத்தின் மேன்மை -1


திருஞான சம்பந்தருக்குத் தக்க பருவத்தில் உபநயனம் செய்ய எண்ணினார் அவரின்  உலகியல் தந்தை சிவபாத இருதயர். சிவஞானம் உணரப்பெற்று பிறப்பினை  
எய்தாப் பெருமையுடைய பிள்ளையாருக்குச் சீர்காழியில் செய்யப்பெறும் உபநயனச் 
சடங்கில் வழிவழி வரும் தன்மையில்  மறை நான்கும்தந்தோம் என வேதியர்மொழிந்தனர்  அவர்களுக்கு புண்ணியமே வடிவான 
சம்பந்தர் ஒப்பற்ற நிலையில் எண்ணற்ற 
புனித வேதங்களை ஓதி அவற்றின்  அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறினார் .வேதியர்கள் தங்களுக்கு  ஏற்பட்ட  வேத ஐயங்களை கேட்டுத் தெளிந்தனர்.
பின் அவர்கள் மனம் தெளியும்படியாய்  பழைய  முதன்மை பெற்ற  எல்லா  மந்திரங்களும் தோன்றுதற்கு காரணம்  சிவபெருமானின் ஐந்தெழுத்தேயாகும் என 
உபதேசித்து அந்தியில் ஓதும் மந்திரமாவது  
ஐந்தெழுத்தே என்று திருப்பஞ்சாக்கரப்பதிகம் பாடி மேலும் ஐந்தெழுத்தின்  மேன்மைகளை  உலகுக்கு உணர்த்தியருளினார் . அம்மறையவர்கள் அத்திருப்பாட்டினை சிரமேல் தாங்கி வணங்கினர் 

பதிகப்பலன்

ஆயுள் முழுதும் எந்தக்குறையும் இன்றி வாழவும்,தேவர்களுக்கு ஒப்பான வாழ்வு
பெறவும்  பாராயணம்  வேண்டிய பதிகம்

மூன்றாம் திருமுறை பதிகம் 22

                                         திருச்சிற்றம்பலம்  

பாடல் எண் : 1

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 2

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 3

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 4

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்து 
அல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 5

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 6

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 7

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 8

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 9

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 10

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.

பாடல் எண் : 11

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே.
                                               திருச்சிற்றம்பலம் 
                                           
                                    போற்றி ஓம் நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி 

No comments:

Post a Comment