rudrateswarar

rudrateswarar

Thursday, April 11, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை -2

                                     ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தின் மேன்மை -2


இன்றைய ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர்ப் பெருமணம்  பதியிலே ஞானசம்பந்தப் பெருமானுக்கும் நம்பாண்டார் நம்பி என்பாருடைய  புதல்விக்கும் திருமணச் சடங்கு தொடங்கியது .தேவியார்  திருக்கரம் பற்றி அக்கினி வலம் வந்தார் அப்போது இனி இவளுடன் சிவன்தாள் 
சேர்வன் என்று திருவுள்ளத்து  எண்ணினார் . திருக்கோவிலடைந்து  பிறவிப்பிணி தீர திருவடிநீழல் சேரும் பருவம் இதுவே என்று  இனியபதிகம்  கல்லூர்பெருமணம்  என்று தொடங்கி பாடினார் .சிவபெருமான் திருவருள்  புரிந்து "ஞானசம்பந்தா நீயும் நின் மனைவியும் நின் திருமணம் கண்ட புண்ணியசீலர்களும் யாவரும் நமது சோதியில்  புகுந்து வருக" என்று அருள் புரிந்தார் .அதுசமயம் ஆங்கு ஓர் அற்புத சோதி தோன்றியது  அதில் ஒரு வாயிலும்  தோன்றியது.பிள்ளையார்தம் திருமணத்திற்கு  வந்த அனைவரும் பிறவிப்பிணி தீர  இச் சோதியில் புகுமின் என்றார் .
திருமணத்திற்கு வந்த சிலர்  அச்சோதியை  கண்டு பயந்தனர் அவர்களுக்கு மெய்யறிவு 
ஊட்ட நமசிவாய மந்திரத்தின் மேன்மையை  எடுத்தியம்பும்  முகமாகவும் அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம்  நமச்சிவாய  என்ற திருவைந்தெழுத்தே  எனும் விளக்கும் முகமாகவும்  ஞான  மெய்ந்நெறி நமசிவாயவே என்று கூறி நமசிவாயப்பதிகம் பாடி  அனைவரையும் 
சிவசோதியில் கலக்க வைத்து கிடைத்தற்கு  அ ரிய சிவமுக்தி பெற வைத்தார் 


திருமுறை 3 பதிகம் 49 

                               திருச்சிற்றம்பலம்




































காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாதன் நாமம் நமச்சிவாயவே



நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.


நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்து 
அக்கு மாலைகொ டங்கையலெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.


இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமநண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.


கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.


மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.


நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.


இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.


போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.


கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.


நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.


                                 திருச்சிற்றம்பலம் 


                        போற்றி ஓம் நமசிவாய

சிவனடிமைவேலுசாமி


No comments:

Post a Comment